முக்கியமாக உப்பையும் சர்க்கரையையும் இடம் மாற்றி ருசிக்கத் தருவதும், அவள் உண்ட கோழி மாமிசத்தை அவளே வாயில் இருந்து தன்னிச்சையாக எடுத்தலும், கதவில் மிகப் பெரிய தேளும் ஜன்னலில் கருஞ்சிலந்தியுமாக அவளை நோக்கி ஊர வைத்தலும், அவளை ஓவியக்காரன் வரைந்த ஓவியத்தில் அவள் தலைக்குப் பதிலாகக் காண்டாமிருகத் தலையை வைத்தலுமாக நான் நடப்பித்து, அவளுடைய அழுகையையும் பயத்தையும் ரசித்துப் பார்க்க ஆரம்பித்தேன்.
அவளுடைய வாடிக்கையாளரான நாசூர்ஜமீன் நாலாம் பாத்தியக்காரனோ, பண்ணையாரின் வைப்பாட்டி மகனோ வரும்போது சாக்கடையை மேலே தெளித்து அவர்களோடு முயங்கிக் கிடக்க வைத்தது மட்டும் எக்குத்தப்பாகி விட்டது. மூக்குச் செத்த அந்த தே பிள்ளைகள் அந்த வாடையே காமத்தை வர்திப்பதால் தினமும் புஷ்பலதை துர்நாற்றம் பூசி வரணும் என்ற நிபந்தனையோடு காதல் செய்த சத்தம் என்னை வெறுப்படைய வைத்தது.
எனினும் நான் எதிர்பார்த்தபடி என் வழியில் குறுக்கிடுவதை நிறுத்தினாள் என் சித்தி புஷ்பலதை. எப்படியாவது என்னைக் காரைக்காலில் இருந்து அகற்ற அவள் எத்தனையோ பிரயத்தனப்பட்டாள்.
போன வருஷம் ஆவணியில் கோகுலாஷ்டமிக்கு அடுத்த நாள் அவள் யாரும் அவளிடம் சொல்லாமலேயே என் கல்யாணத்துக்காக முயற்சி செய்ய ஆரம்பித்தாள். இங்கே கல்யாணம் என்பது நீண்ட சம்பந்தம் எனப் பொருள்படும். அதாவது, கணிசமான ஒரு காலத்துக்கு, மூன்று வருடம், ஐந்து வருடம், ஏழு வருடம் இப்படி என்னை வைப்பாட்டியாக வைத்துக்கொண்டிருக்க எழுதிக் கையெழுத்திட்டு ஒப்பந்தம் போடுவதைக் குறிக்கும்.
தாசிப்பெண் காலாகாலத்தில் எவனாவது மிட்டா மிராசு, பட்டாமணியத்துக்கு வைப்பாட்டி ஆகாமல் கிழவியாகிறது வரை சில்லறை ஆட்டம் ஆடிக் காசு சம்பாதிக்கப் பார்க்கிறாள் போல என்று ஊர் பேசிக் கொள்வதாக புஷ்பலதை என்னிடம் புகார் சமர்ப்பித்தாள். எல்லாம் புஷபலதையின் கற்பனையில் உருவான சொந்த சாகித்யமாகும்.
எனக்கு பதினைந்து வயது தான் ஆவதாகவும், இன்னும் படித்து, காஞ்சி கலாசாலையில் தனித்துப் போய் பரீட்சை தந்து ஜெயித்த பின்னரே என் கல்யாணம் பற்றி யோசிக்கலாம் என்றும் சொல்லும்போது மறக்காமல் ஜன்னலில் கருஞ்சிலந்தி கருப்பு வலை பின்னச் செய்தேன். பயப்படட்டும். நல்லதுதான்.
பிரியமும், பாசமும், கைலாச பதவி அடைந்த அக்காளின் ஒரே புத்ரி என்று என்மேல் பச்சாதாபமும் நிறைந்தவளாக புஷ்பலதை முழுக்க முழுக்க மாறி ஒரு வசந்த காலம் வந்து போனது. சித்தி மடியில் நான் படுத்திருக்க அவள் எனக்குப் பேன் பார்த்த அந்நியோன்யம் வெளிப்பட்ட தினங்கள் அவை.
பேனைப் பெருக்கி அட்டைப் பூச்சியாக்கி அவள் அலறுவதைப் பார்க்க வேண்டும் என்று ஒரு மனம் ஏங்கினாலும், அவ்விதம் செய்வதைத் தவிர்த்தேன். எனினும், முழுக்க நல்லவளான சித்தி அலுப்படைய வைத்தாள்.
அரேபியாவிலிருந்து அரண்மனைகளுக்கும், பிரபலஸ்தர் மற்றும் கணிகையர் வீடுகளுக்கும் பித்தளையிலும், வெங்கலத்திலும் வார்த்த கோல் விளக்குகளும், பாவை விளக்குகளும், அன்னப் பறவை விளக்குகளும் விற்றுப்போக வயதான ஓர் அரபு வியாபாரி காரைக்காலுக்கு வந்திருந்தபோது அவனுக்கு புஷ்பலதை வீட்டில் தான் விருந்து.
”விளக்கை அணைத்துக் காசு பார்க்கும் தாசி வீட்டில் விளக்கு விற்க நீர் மிகுந்த துணிச்சலோடு தான் வந்திருக்கீர்” என்று புஷ்பலதை அந்தத் தாடிக்காரக் கிழவனின் கையைத் தன் மார்பில் வைத்தபடி பகடி செய்தபோது நான் அடுத்த நாள் அதிநூதனமாகக் குருகுலக் கலாசாலையில் தனி இடத்தில் படுதா கட்டி சமஸ்கிருதப் பரீட்சை கொடுத்து ஜயிக்கப் படித்துக் கொண்டிருந்தேன். அந்தப் பரீட்சை அப்புறம் நான் தரவே முடியாமல் போனது.
அரபு வியாபாரியின் கையிடுக்கு அத்தரும் ஜவ்வாதும் புஷ்பலதையின் தாடையில் வாடையடிக்க அரபி, சீன மதுவகைகளை அவர்கள் குடித்துக் களிக்க, நான் சமஸ்கிருத வியாகரணப் பாடத்தில் மூழ்கி இருந்தேன்.
கோழிக்கறியும், முகலாய பாணி பிரியாணியும் எனக்கு சாப்பிட வேலைக்காரி மூலம் கொடுத்து விட்டாள் புஷ்பலதை. நான் அவ்வளவு கனமாக உணவு கழித்தால் உறங்கி விடுவேன் என்ற பயத்தால் வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.
புதுப் பழங்கள் மாதுளை, பலா, மா, கருப்பு திராட்சை, பச்சைப் பசேல் என்று கொடி முந்திரி என வரிசையாக அரபிக் கிழவன் கொண்டு வந்து நிறைத்திருந்ததைக் கூழாக்கி எனக்கு ஒரு சிறு கும்பாவில் வைத்து புஷ்பலதையே எடுத்து வந்தாள். அதுகளைக் குடித்தும் உண்டுமான பிறகு தெம்பாகப் படிக்கலாம் என்றாள் அவள்.
நான் பழ உணவு செய்ததும், ஒரே மட்டாக கிறங்கித் தலை சாய்த்ததும், எங்கே எப்போது யாரோடு என்ற போதமே இல்லாமல் சுருண்டு படுத்து நித்திரை போனதும் நினைவில் பதியவில்லை.
ஆடி ஆடிப் போகும் கப்பலும், பக்கத்தில் அரபுக் கிழவனின் தாடி நாற்றமுமாக கண் விழிக்க, அவன் பழச்சாறு எனக்கு ஒரு மடக்கு பருகத் தந்தான். மறுபடி உறங்கிப் போனேன்.
விழித்துக்கொண்டு பார்க்க, அடக்க முடியாமல் மூத்திர உபாதை எனக்கு. எதிர்பார்க்காதபடி, என் அருகில் புஷ்பலதையின் தோழிப்பெண் மரதகதத்தாள். மரகதம் இல்லையாம் அவள். மரதகம். அப்படித்தான் சொல்லிக்கொள்வாள். அவள் இங்கே எங்கே வந்தாள்?
“புஷ்பாம்மா என்னையும் சீதன வெள்ளாட்டியாக ஒங்களோடு அரபுநாட்டுக்கு அனுப்பியிருக்காங்கள்” என்றாள் அந்தக் கேடுகெட்டவள்.
என்றாலும் கப்பலில் கழிவறை எங்கே இருக்கிறது என்று காட்டி அற்பசங்கை முடித்து வர துணையாக வந்தாள் மரதகம். நல்ல பசி என்பதால் அவள் சுட வைத்துக் கொடுத்த ரொட்டி, பழக்கூழ், வெண்ணெய், பேரீச்சம்பழ இனிப்பு உருண்டை, கோழிக்குஞ்சு அல்வா என்று அவள் ஊட்டிவிடப் பசித்திருந்து விழுங்கினேன்.
”ஏடி, என்ன ஆச்சு நான் எப்படி இந்தக் கேடு கெட்ட கப்பலில் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறேன்? அரபுக் கிழவன் என் இடுப்பைக் கோர்த்து தூங்கியிருந்த விஷமம் எப்படி நிகழப் போச்சு?”
என்னைக் கிழவனுக்குக் கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறாளாம் புஷ்பலதை. இதை மட்டும் மரதகம் முழுக்கச் சொன்னாள்.
புஷ்பலதைக்கு உடல் முழுக்கக் கொப்புளம் புறப்பட்டு நாலு நாள் சோறு, தண்ணீர் கூட கொள்ள முடியாமல் பட்டினியில் சாகவும் சாபமிட்டேன். செத்திருப்பாள் . அவளுடைய வாடிக்கையாளர்கள் எல்லோருக்கும் நோய் பிடித்து அல்லாடி உயிரை விடட்டும்.
நான் ஏதோ சாதித்தது போல் கப்பலில் சுற்றி வந்தேன். தாடிக்கிழவன் புவிஸி புவிஸி என்று பிதற்றியபடி பின்னாலேயே வந்தான். அவன் கைகள் நண்டு போல் முன்னால் நீண்டு என் தோளை அணைக்க வந்தன.