”புவிசி உன் புதுப் பெயர் பெண்ணே.. உன்னை ஆகமட்டும் மாற்றி பெயர், ஊர், அடையாளம் எல்லாம் வேறே இப்போ.. ”.
— — — —
அந்த அயோக்கிய கிழவன் சொன்னதாக மரதகம் இன்னமும் நிறையக் கூறினாள். அசங்கியம் என்பதால் அவற்றை இங்கே குறிப்பிடாமல் தவிர்த்தேன்.
நானதைக் கேட்ட அடுத்த வினாடி என் சாபம் புறப்பட, அவன் அழுகிப் புழுத்த பெருச்சாளியை எலிப்பொறியோடு அணைத்து முகர்ந்தபடி சொர்க்கம் கண்டதாக ஆர்பரித்தான். அவனைச் சுற்றி எழுந்த துர்க்கந்தத்தை மேலும் அதிகப்படுத்தும் விதமாக கப்பல் சமையல்காரர்களான பாலித்தீவு பையன்களைத் துரத்திப் போனான். அவனுடைய கூப்பாடுகள் பொறுக்க முடியாமல் கப்பல் தலைமை மாலுமி அவனை உள்ளே கப்பல் கொட்டடியில் தனியாக அடைத்துப் போட்டதாக என்னிடம் சொன்னான். பெரும் பணக்காரனான அரபிக் கிழவனை அப்படித் தண்டிக்க முடியாது என்பதால், ஒரு மணி நேரத்தில் அவன் வெளியே வந்துவிட்டான் என்றாள் மரதகம்.
அடுத்த தினம் கப்பல் அரேபியா வந்து சேர்ந்தது. என்னை கூட்டமாக வேலைக்காரிகளும் சிப்பந்திகளும் வந்து கூட்டிப் போனார்கள். யாருக்கும் நான் பேசிய தமிழோ, இங்கிலீஷோ, இந்துஸ்தானியோ புரியவில்லை. அவர்கள் பேசிய சீன, பாரசீக மொழிகள் எனக்குப் புரியவில்லை.
நானும் என் சித்திகளை உபயோகித்து, அவர்கள் பேசியது எனக்கு உடனே அர்த்தமாகவும், நான் பேசுவது ஒரு நிமிடம் கழித்து அவர்களுக்குப் புரியவுமாக, ஒரு மூங்கில் குழலின் இரண்டு வசமும் கேட்கவும், பேசவுமாக ஒரு கருவி செய்தேன். அதற்கு அப்புறம் பேசுவது புரிய ஆரம்பித்தது. கொஞ்ச நாளில் குழலுக்குத் தேவையே இல்லாமல் நாங்கள் நேரடியாகப் பேச, கேட்க, பதில் சொல்ல, உரையாட ஆரம்பித்தோம்.
இதற்கிடையில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை சாயந்திரமும் புதன் நடுராத்திரியிலும் என்னை அவனோடு இருக்கக் கிழவன் கூப்பிட்டு அனுப்புவான்.
வந்துபோன ஒரு ஞாயிறு சாயந்திரம் என்னை இழுத்துவர நான்கைந்து முரட்டு காப்பிரிச்சிகளையும் அரபுக் கிழவன் அனுப்பி வைத்தான். அவன் ரத்தினக்கற்கள் மற்றும் வைரங்களை வாங்கி அழகாகச் செதுக்கி மினுமினுக்க வைத்து விற்பனை செய்து பெரும் பணம் ஈட்டுகிறவன் என்றும் அரேபியா மட்டுமின்றி, ஜாவா, சயாம், பாலி, சாவகம் எங்கும் பெயர் பெற்ற வியாபாரி என்றும் என் உடம்பு சல்லாபம் கேட்டு பிச்சைக்காரனாக நிற்பது அவனளவில் அரிதான ஒன்று என்றும் காப்பிரிச்சிகளும் அரேபிய பணிப்பெண்களும் என்னிடம் சொன்னார்கள்.
என்றாலும் என்னைத் தூக்கிப் போக வலுக்கட்டாயமாக முயன்ற காப்பிரிச்சிகளின் உடம்பில் பெரும் கொப்புளங்களை உருவாக்கி விட்டேன். அவர்கள் அலறிப் பயந்து தரையில் உருண்டு என்னைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டு விழுந்து வணங்கிப் போக மற்றத் தோழிகளும் கலபிலவென்று சத்தமிட்டு ஓடிப் போனார்கள்.
அவர்கள் ஒவ்வொருவர் உடலில் இருந்து கொப்புளங்கள் அடுத்த இரண்டு மணி நேரத்திலோ அல்லது அடுத்த நாளோ நான் நிச்சயித்தபடி காணாமல் போக, அவர்களுக்கு என் மேல் இரண்டு விதமாக பயம் உண்டானது.
என்னோடு வம்பு வளர்த்தால் சுகக்கேடு உண்டாகலாம் என்பது முதல் பயம். அப்படி ஏற்பட்டால் எப்போது அது நீங்கும் அல்லது அப்படியே ஆயுளுக்கும் இருந்து விட வேண்டுமா என்பதும் தெரியாது. இது அடுத்த பயம்.
அவர்களுடைய பயத்தை அடிப்படையாக வைத்து சதா என்னை ஆராதிக்கும் மனநிலையில் அவர்களை வைத்திருக்க முடிந்தது.
Excerpts from my forthcoming novel RAMOJIUM -Karaikal Bhuvani 1698 chapter portions