அரபிக் கிழவனைத் தவிர எல்லோருக்கும் ஏதோ சந்தர்ப்பத்தில் கொப்புளங்களைப் பரிசளித்தேன். அரபு வீட்டு மாமன் உறவில் ஒரு கேணன் என்மீது இத்தனைக்கும் மேல் காமம் கொண்டு ஆலிங்கனமும் உபசாரமும் வேண்டுமென்று கோரிக்கை வெளியிட அவன் மேல் கொப்புளங்கள் உருவாகச் செய்து அந்த எரிச்சலில் உடை எல்லாம் களைந்து ஓட வைத்து அரபுக் கிழவனுக்கும் மற்ற ஆண்களுக்கும் சங்கடத்தை உருவாக்கினேன். பெண்கள் வெகுவாக ரசித்த காட்சி அது.
அரபுக் கிழவனுக்கு நான் பெரிய இடைஞ்சலாகப் போனது அப்படித்தான். என் பக்கமே வராமல், வந்தால் எங்கே தனக்கும் கொப்புளங்கள் அனுபவப்படுமோ என்று பயந்து ஒளிந்தான் அவன். எனக்கு உண்டு, உறங்கி, பேசி இருக்க நிறைய நேரம் கிடைத்தது. நான் இதுதான் சாக்கென்று அரபு மொழியையும், பாரசீக மொழியையும் படித்துத் தேர்ச்சி அடைந்தேன். கணிதத்திலும் அரபு எண்கள் அடிப்படையில் கணக்கு எழுதுவதில் தேர்ந்தேன்.
அரபிக் கிழவனின் வியாபார ஸ்தலத்தில் கோணாமாணா என்று எழுதி வைத்த கணக்குகளை சீர் செய்து, கிழவனின் சொந்தக்காரர்கள் அவனிடம் பொய்யாக கணக்கு காட்டி பதினாயிரக் கணக்கில் மதிப்புள்ள தொகையை அவர்கள் உபயோகத்துக்கு எடுத்துப் போனதை அவனுக்குக் காட்டினேன்.
அவர்களை சிறைக்கு அனுப்பி, வராதது என்றிருந்த தொகையை வசூலித்து அவன் என்னைக் கையுயர்த்தித் தொழ, செழிப்பையும் நன்மையையும் கொண்டு வந்தேன். அதற்கு அப்புறம் அவன் மனதில் கூட என்னோடு இணை விழையவில்லை என்று தோன்றுகிறது.
நான் ஊருக்குத் திரும்பப் போகணும் என்று சொன்னபோது மனதே இல்லாமல் சம்மதித்தான். என் மேல் கொண்ட மையல் காரணமில்லை அதற்கு. அவன் கொண்டாடும் தெய்வமாக நான் அப்போது மாறியிருந்தேன்.
எனக்குக் காணிக்கையாக விலையுயர்ந்த நவரத்தினக் கற்களையும், தங்க நகைகளையும், உலர் திராட்சை, பாதாம், அக்ரூட் போன்றவற்றையும் நல்ல சீனப் பட்டு வஸ்திரங்களையும், பாரசீகக் கம்பளங்களையும் அளித்தான். என் சித்தி புஷ்பலதை கையகப்படுத்திக்கொண்ட என் தாயாரின் சொத்தை விட மூன்று மடங்கு எனக்கு இங்கே கிடைத்தது.
நாகைத் துறைமுகத்திலிருந்து வந்திருந்த வண்ண மயில் என்ற வர்த்தகக் கப்பலில் என்னை அவன் ஏற்றி விட்டபோது அவன் கண்கள் கலங்கித்தான் இருந்தன. அந்த அரபுக் கிழவன் என்னை உறங்க வைத்து உடல் முழுக்கக் கண்டு களித்த குற்றத்துக்காக அவன் பற்கள் இரண்டை என்றென்றைக்குமாக விழ வைத்ததை அவனிடமோ வேறு யாரிடமுமோ நான் என்றும் சொல்லப்போவதில்லை.
நான் தேவையான போது பனிக்கட்டி தரும் யந்திரம் ஒன்றை உருவாக்கி அவனுக்கு அளித்தேன். அது சித்து வேலை இல்லை. விக்ஞான பூர்வமாக அமைக்கப்பட்ட சக்கரங்களும், நீர் நிறைத்து வைக்கப் பித்தளை உருளைகளும், துடிக்கும் இயக்கமும் கொண்ட யந்திரப் பெட்டியாகும்.
என்னை விடுவித்ததற்காகவும், வலுக்கட்டாயமாக உறவு கொள்ளாததற்குமான நன்றியாக கிழவனின் மாளிகையில் ஒரு அறையையே குளிரூட்ட வைத்துக் கொடுத்திருப்பேன், நான் தகுந்த விக்ஞான அறிவு பெற்றிருந்தால். விக்ஞானம் படிப்பிக்க வந்திருந்த வாத்தியார் என் அம்மா மேல் மையல் கொண்டு அவளைக் கர்ப்பிணியாக்கி ஓடிப் போகாதிருந்தால் அது நடந்தேறி இருக்கக் கூடும்.
வண்ண மயில் கப்பலில் என்னோடு வேலைக்காரி மரதகமும், குஜராத்தி மொழி பேசும் ஓர் ஏலம், கிராம்பு, லவங்க மொத்த வியாபாரியும், சீன பட்டு விற்பனை மொத்தக் கொள்முதலாகச் செய்யும் பெரும் வணிகரும், எங்கள் பாதுகாப்புக்கு எட்டு வீரர்களும் பயணமாகிறார்கள்.
கப்பலை அரேபியக் கிழவர் விலைக்கு வாங்கி விட்ட விவரம் பயணம் தொடங்கியபோது தான் அறிந்து கொண்டேன். அரேபியாவில் புறப்பட்ட தினத்துக்கு பதினைந்து நாள் சென்று கப்பல் நாகப்பட்டிணத்தை அடையும் என்று எங்களுக்குச் சொல்லப்பட்டது. அங்கிருந்து காரைக்கால் தரை மார்க்கமாக பனிரெண்டு கல் தொலைவுதான்.
இன்றைக்கு கடலில் மூன்றாம் நாள். காலைச் சாப்பாடாக பாதாம் பருப்பு, அரிசி ஏடு என்று போட்டுக் காய்ச்சிய பாயசம், தீயில் வதக்கிய குப்பூஸ் என்ற அராபிய ரொட்டி, தேனும் சர்க்கரையும் கலந்து வைத்த மாம்பழக்கூழ், கோதுமையும் ஜீனியும் பசுநெய்யும் இட்டுக் கிண்டிய அரேபியா ஹல்வா என்று இன்றும் சாப்பிட்டு, காரசாரமான காரைக்கால் உணவுக்கு நாக்கு ஏங்குகிறது. சிறு மீன்களை வறுத்து வைத்தது சாப்பிட அவ்வளவு சுவையாக இல்லாமல் போய்விட்டது.
கப்பல் மேல்தளத்தில் யாரோ ஓடும் சத்தம் கேட்கிறது. என்ன என்று பார்த்துவிட்டு மேல்தளத்தில் காற்று வாங்கிவரக் கிளம்புகிறேன். திரும்பி வந்து, இந்த எழுத்து – யாருக்கென்றில்லாத லிகிதத்தைத் தொடர ஆசை.