“வேம்பு அண்ணாவரே, நேற்றைக்கு கடையிலே காணோம் எங்கே போயிருந்தீங்க?”
மீன் தலைகளை தனியாக ஒரு பாத்திரத்தில் இட்டு வேம்புவிடம் கொடுக்கப் போனபோது அவர் அடுப்பு பக்கம் நகர்ந்திருந்தார்.
“நானா, ஊரே ஓடிக்கிட்டு இருக்கே, நானும் அங்கே தான் போனது. சீக்கிரம் வரலாம்னு பார்த்தேன். ரொம்ப நேரமாயிடுச்சு’ என்றார், தலைகளை வெண்ணெய் விட்டுப் பொறிக்க கூடுதல் வெப்பம் உண்டாக்க ஒரு விறகைத் அடுப்பில் திணித்தபடி.
”நான் கூட நேத்தைக்கு தங்கம் வாங்கப் போயிருந்தேன். தனசேகரன் செட்டியார் வேண்டப்பட்ட ஆளாக இருக்கறதாலே நாலு பவுன் வாங்கினேன். மத்தவங்களுக்கு எல்லாம் ஆளுக்கு ரெண்டு பவுன் தான் கொடுத்தார். அதுவும் பவன் ஒண்ணு பத்து வராகன் பணத்துக்கு. எனக்கு பவுனுக்கு எட்டு வராகன்லே கொடுத்தார். அடுத்த வாரம் இன்னும் கொஞ்சம் வாங்கணும். வீட்டுலே பீவி போர்ச்சுகீசியப் பணம் ரியல் சேர்த்து வச்சிருக்கு. அதையும் தங்கமாக்கணும்” என்றபடி பால் குவளையை வைத்து விட்டு எழுந்தார் அபுசாலி ராவுத்தர்.
லூசியா, வேம்பு சொன்னபடி, மீன் குழம்புக்காக மிளகு விழுதையும் உப்பையும் எடுத்து அடுப்புச் சட்டியில் கொதிக்க வைத்தபோது, பூண்டு போடாதது நினைவு வர, அவசர அவசரமாக அலமாரியைத் திறந்து எடுத்து, சன்னமான துண்டுகளாக வெட்டி, இரும்புச் சட்டிக்குள் போட்டாள்.
“எல்லோரும் ஆளுக்கு ஒண்ணு ரெண்டு பவன் வாங்கினா சரிதான். லட்சுமி பூஜைன்னு ரொம்ப வருஷமா கொண்டாடறதுதானே இப்படி அப்போ அப்போ பொன் வாங்கிச் சேர்த்து வைக்கிறது. ஆனா இப்போ ஏன் திடீர்னு எல்லோருக்கும் தங்கத்துலே ஆசை?” அல்வாரிஸ் அபுசாலியைக் கேட்டார்.
”ஆல்வா, மிளகு ராணிக்கு உடம்பு சரியில்லே. மனசும் சரியில்லே. நல்லது நினைச்சு செய்யறாங்களோ என்னமோ, ஊரெல்லாம் கோபப்பட வச்சுட்டாங்க. எங்கே பார்த்தாலும் சதுர்முக பசதியைக் கட்டு, கோவிலைக் கட்டுன்னு கிளம்பி தேசத்திலே நடக்கிற ஒரே காரியம் இப்படி கட்டுறதுதான். மிளகு வித்து வர்ற பணம், வரிப் பணம் எல்லாம் இதுக்கே போச்சுன்னா மத்த காரியத்துக்கு என்ன செய்யன்னு அவங்க மகன் ராஜகுமாரர் கேட்கறது சரியாகத்தான் இருக்குமோ” என்றார் அபுசாலி குடையை ஊன்றிக் கொண்டு.
”அவர் யோக்யதைக்கு அம்மாவை கேள்வி கேக்கறது தப்பு இல்லீங்களா?” அல்வாரிஸ் கேட்டார். ”அம்மா கல்யாணம் செஞ்சுக்கலே. குடும்பம் கிடையாது. ஊரோடு வற்புறுத்தித்தான் அண்ணன் மகனை தத்து எடுத்துக்கிட்டாங்க. அந்த நன்றி கூட வேணாமா? தேசத்துக்காக உழைச்சே ஓடாகறாங்க அம்மா. அவங்களைக் கேட்க இவர் யாரு? வெறும் வளர்ப்பு மகன்”. அல்வாரிஸ் பொரிந்து தள்ளி விட்டார்.
“அவர் கேட்க இல்லேன்னா ஊரில் மத்தவங்க கேட்காமல் இருப்பாங்களா? ஐம்பது வருஷத்துக்கு மேலே ராணியா இருந்தாச்சு. கொஞ்சம் விலகி இளையவங்களுக்கு சந்தர்ப்பம் இப்போ இல்லேன்னா வேறெப்போ தர்றதாம்?’ என்றார் அபுசாலி. ”நான் சொல்லலே, ஊர்லே பேச்சு” என்று ஜாக்கிரதையாக பின்னொட்டு வைத்துப் பேசினார்.
காய்கறி கூடைகளோடு பொன்னையா வந்து நுழைந்தார். ”என்ன ஹொன்னய்யா, ஆறு மணிக்கு வரச் சொன்னா, ஆறரை மணிக்கு காய்கறி கொண்டு வரீங்களே” என்று அல்வாரிஸ் கேட்க, பொன்னையா, உறங்கிட்டேன் என்றார் அப்பாவியாக.
“நேத்து பூரா ஹொன்னாவர் நகைக்கடைகள்லே எல்லாம் தேடிப் போய் கடைசியா ஒரு கடையிலே மூணு பவன் பதினோரு சவரன் மேனிக்கு வாங்கிட்டு வந்தேன். நெல் விளையற நாலு குண்டு நிலத்தையும் கொடுத்துட்டு தங்கமாக மாற்றிக்க ஏற்பாடு செஞ்சிருக்கேன். இந்தம்மா சமணக் கோவிலும் இந்து கோவிலும் ஊர் முழுக்க கட்டவும் வேணாம், நாட்டுலே பணத்துக்கு மதிப்பு குறைஞ்சு ஒண்ணுமே இல்லாம போயிடுமான்னு எல்லோரும் பயப்படவும் வேணாம். கோவில் கட்டறது, பசதி கட்டறது எல்லாம் அவசியமா இப்போ?” என்றார் பொன்னையா.
லூசியாவுக்கு கொஞ்சம் போல் புரிந்தமாதிரி இருந்தது. நிறைய சேமித்து வைக்கிறவர்களுக்கு அந்தக் கவலை எல்லாம் வேணும். பணமாக இருந்தால் என்ன தங்கமாக இருந்தால் என்ன, வீடு நிலமாக இருந்தால் என்ன அதென்ன பிடிவாதம், எல்லாவற்றையும் கொடுத்து தங்க நகை ஏன் வாங்க வேண்டும்?
கையில் பிடித்திருந்த கடைசி மீன் அதானே என்று சொல்லியபடி தரையில் விழுந்து துள்ளியது. லூசியா அதை எடுத்தபோது கை நழுவி மார்க்கச்சில் நடுவாக விழுந்தது.
pic fish curry
ack keralatourism.org