முத்தம்மா டீச்சர் – கேவா கலர் தமிழ்ப் படம் – வாலண்டினா தெரஸ்கோவா

முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம் – அத்தியாயம் 2

 

 

தெரசாள், முத்தம்மா, அழகு மீனா, ராசாத்தி, சாந்தா, போதும்பொண்ணு, செல்வி..

 

ஒரு கூட்டமே தரை டிக்கெட்டில்.

 

ராசாத்தியின் அவ்வா அலமேலம்மாக் கிழவி புகையிலைக் கட்டையை வாயில் அடக்கிக் கொண்டு தடுப்புச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறாள்.

 

தடுப்புக்கு அந்தப் பக்கம் களவாணிப் பயல்கள். சினிமா கொட்டகைக்கு வருவதே குட்டிகளைப் பக்கத்தில் வைத்துப் பார்க்கத்தான். சமயம் கிடைத்தால் உரசியும் பார்ப்பார்கள். யாருமே எவனுமே யோக்கியமில்லை. காலம் கெட்டுக் கிடக்கிறது.

 

‘ஆட்ட பாட்டத்தைக் கொறச்சுக்கடி பேதியிலே போறவளே.. நீ எப்ப உக்காந்து வைக்கப் போறியோன்னு மனசு திக்கு திக்குன்னு அடிச்சுக்குது.. பெரியவ தெரண்டு ஆறு வருசமாச்சு .. அவளுக்கு இன்னும் ஒரு வழி பொறக்கலியேன்னு ராப்பூரா தூக்கம் இல்லே.. இவரானா ஒரு கவலையும் இல்லாம காக்கிப் பையை மாட்டிக்கிட்டு கடுதாசி கொடுக்கக் கிளம்பிடறாரு..சினிமா போறாளாம் சினிமா.. காசு என்ன கொட்டியா கிடக்குது .. தம்பி கையைப் பிடிச்சு ஆனா ஆவன்னா எளுத சொல்லித் தர்றது… வீடு கூட்டறது..நாயனா சட்டையிலே பொத்தான் தைக்கிறது..ஒண்ணாவது செய்ய வணங்குதாடி உனக்கு..’

 

‘எல்லாரும் படத்துக்குப் போறாங்க அம்மா.. தரை டிக்கெட்டு தான்.. நாலணா தான்.. ராசாத்தியோட் அவ்வா இருக்கில்லே.. அந்தக் கெளவியம்மா தொணைக்கு வருது..நாலணாக் கொடும்மா..’

 

அம்மாவிடம் பெயராத நாலணாவை நாயனா வந்ததும்தான் வாங்கிக் கொள்ள முடிந்தது.

 

போஸ்ட்மேன் பங்காருசாமிக்கு சின்ன மகள் முத்தம்மா செல்லம் தான்.

 

‘ஏண்டி புள்ளே முத்தம்மா.. உங்கம்மா ஒரு தாவணி போட்டு அனுப்ப மாட்டாளா.. அதும்பாட்டுக்கு நிக்குதே.. கண்ணுலே படலியா..’

 

முத்தம்மா போதும்பொண்ணு பின்னால் ஒண்டிக் கொண்டாள். கிழவி நேரம் காலம் தெரியாமல் உசிரை வாங்குவாள்.

 

‘எங்கேடி நிக்குது? இதுவா? கெளவி கண்ணுலே எருக்கம்பாலைத் தான் விடணும்..’

 

தெரசாள் முத்தம்மா கழுத்துக்குக் கீழே உற்றுப் பார்த்து விட்டு அழகுமீனா காதில் சொல்ல, ரெண்டு பேரும் பம்மிப் பம்மிச் சிரிக்கிறார்கள்.

 

தெரசாள் முத்தம்மாவுக்கு ரெண்டு வருசம் மூத்தவள். ராசாத்தி நாலு வருசம் போல மூப்பு. பெயிலாகிப் பெயிலாகி இந்த வருசம் முத்தம்மா கிளாஸ் தான்.

 

‘நம்ம சாதி சனமா இருந்துட்டு வேதத்துலே ஏறிட்டாங்க.. வேதத்துலே ஏறினா என்ன.. எருமை வளக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கா என்ன .. மாட்டை வித்தது தான் வித்தாங்க.. சொல்லிட்டு வித்தா வாங்கியிருந்திருப்போமில்லே.. ‘

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன