தோட்ட வீட்டில் நீத்தார் நினவஞ்சலி அச்சடிக்கும் மத்தாயு மாப்பிள்ள

அரசூர் நாவல் வரிசையில் நான்காவது -வாழ்ந்து போதீரேயில் இருந்து அடுத்த சிறு பத்தி –

என்ன யோசனை?

 

அவன் சொல்லி முடிப்பதற்குள் சிரித்தபடி குளியலறைக் கதவு அடைத்துத் திரும்ப உள்ளே போனாள். அவனுக்கு வேண்டித்தான் இருந்தது.

 

அவர்கள் அங்கிருந்து கிளம்பும்போது மழை சிறிதும் இல்லாத, சூரியன் மித வெப்பமாகப் படியும் காலை ஒன்பது மணி. நாலு வழி சந்திப்பில் பஸ்ஸும், லாரியும், ஒன்றிரண்டு கார்களும், ரிக்‌ஷா வண்டிகளும் இடத்தை அடைக்க, போக வழி தெரியாமல் நின்றான் திலீப்.

 

அவனை கிட்டத்தட்ட பாதுகாப்பாக நெருக்கி அணைத்துக் குழந்தை போல செலுத்திக் கொண்டு திடமாக அடியெடுத்து வைத்துப் போனாள் நடாஷா.

 

எரணாகுளம் லோக்கல் வரும் நேரம். ரயிலிலேயே போகலாமா?

 

June 21 2024

 

திலீப் கேட்டான்.

 

அவள் பஸ் ஏறுவதில் ஆர்வம் காட்டினாள்.

 

ரயிலில் போனால் பாதை முழுக்க பச்சைப் பசேல் என்று செடியும் கொடியும் தூரத்தில் காயலும் கடலுமாக இருக்கும்.

 

அவள் தோளில் மாட்டியிருந்த காமிராவைப் பார்த்தபடியே திலீப் சொன்னான்.

 

நடாஷா சம்மதித்தாள். ஆனாலும் பஸ்ஸில் தொங்கிக் கொண்டு போகிற கூட்டத்தில் கலக்க அவள் முகத்தில் ஆவல் இன்னும் இருந்தது.

 

இந்த மொழி மட்டும் புரிந்தால் நானும் படியில் நின்று சந்தோஷமாக திருவனந்தபுரம் கூட நாள் முழுக்கப் பயணம் போவேன் என்றாள் அவள்.

 

ரயில் பிரயாணமாக, ஏகத்துக்கு சோவியத் யூனியலில் போயிருக்கிறாளாம். நாலு நாள் தொடர்ந்து போகும் மாஸ்கோ – விளாடிவெஸ்டாக் டிரான்ஸ் சைபீரியன் ரயிலில் வருடம் நாலு தடவையாவது போய், ஒவ்வொரு பயணத்திலும் இருநூறு பக்கம் கவிதை எழுதி மாஸ்கோ திரும்பியதும் கொளுத்தி விடுவது தனக்கு வழக்கம் என்றாள் நடாஷா.

 

அரசாங்க விரோதக் கவிதையாக இருக்கலாம் அதெல்லாம் என்று நினைத்தான் திலீப். அல்லது லட்சணமான வாலிபனை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு காமமுறும் பெண் பற்றி.  இறக்கியே விடாத யட்சி. மிக வலுவானவள்.

 

ரயில் ஓட்டுகிறவரையும் பின்னால் கடைசிப் பெட்டியில் மலையாள தினப் பத்திரிகை படித்தபடி உட்கார்ந்திருந்த கார்டையும் தவிர ஆள் கூட்டம் இல்லாமல் ரயில் வந்து நின்றது.  முந்திய ரயில் நிலையங்களில் கூட்டமெல்லாம் இறங்கி இருக்கக் கூடும் என்றான் திலீப். கூட்டமில்லாத ரயிலில் நடாஷாவைக் கூட்டிப் போகத் தான் முன்கூட்டியே திட்டம் ஏதும் போடவில்லை என்று அவளுக்கு ஏதாவது ஒரு விதத்தில் விளக்கத் தோன்றியது அவனுக்கு.

 

போன வாரம் உனக்குக் கொடுத்த நூற்றம்பது ரூபிளுக்குக் கணக்கு சொல்லு.

 

வண்டியில் ஏறி அமர்ந்ததும், நடாஷா கேட்க, திலீப் ரூபிள் எதுவும் தன்னிடம் இல்லை என்றான்.

 

சரி, ரூபாய்க் கணக்கு?

 

நீ கொடுத்த பணத்தில் வெடிக்கார குறூப் வயிற்றுப் போக்கில் படுத்து சிகிச்சை செய்யக் கொடுத்த வகையில் இருபது ரூபாயும், காயலில் இந்த ஒரு வாரத்தில் நாலு தடவை படகில் போன வகையில் எண்பது ரூபாயும் செலவாக, மீதம் இருக்கும் ஐம்பது இன்றைய செலவுக்கு வைத்துக் கொள்ளப்பட்டது.

 

எரணாகுளத்தில் வருஷம் 1880-களில் அச்சு யந்திரம் வைத்து தோத்திரப் பாடல்களும், நம்பூதிரிகள் பற்றிய நகைச்சுவைக் கதைகளையும் பிரசுரித்த குடும்பத்தில், இரண்டு பெரியவர்களைச் சந்திக்கிற திட்டத்தில் இருப்பதாக நடாஷா சொன்னாள்.

 

அவர்களிடம் அபூர்வமான பழைய புத்தகங்கள் இருக்கும் பட்சத்தில் அவற்றைப் பத்திரமாகப் புகைப்படம் எடுக்கவும், மதியச் சாப்பாட்டுக்கும் பணம் தர வேண்டியிருக்கும் என்றாள்.

 

அந்தப் பழைய அச்சு யந்திரம் கல்லுக் குண்டாட்டம் அங்கே இருந்து அதை விற்கவும் தயார் என்று பெரியவர்கள் சம்மதித்தால் எவ்வளவு செலவாகும் என்று கேட்டாள் அவள்.

 

உனக்கென்ன ப்ராந்தா என்று திருப்பிக் கேட்டான் திலீப். அவனை   முதுகில் ஓங்கித் தட்டிச் சிரித்தாள் நடாஷா.

 

இந்தப் பேய்க்கு வாழ்க்கைப்பட்டது வேண்டித் தான் இருக்கிறது. அதுவும் அகல்யாவோடு இன்னும் இன்னும் என்று இழைந்துச் சேர்ந்து தேடி உணர்ந்து சுகம் கொண்டாடி, அது கிட்டாது காய்ந்திருக்கும் போது.

 

எரணாகுளத்தில் நடாஷா சந்திக்க வேண்டிய இரண்டு முதியவர்களும் மாமன், மைத்துனன் உறவில் வந்த சிரியன் கிறிஸ்துவர்கள் என்பதும் உள்ளூர் மற்றும் மாவட்ட அளவு கிறிஸ்தியானி சமூக அமைப்பில் செல்வாக்குள்ள இல்லத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களின் பரம்பரை வீடு ரயில் நிலையத்துக்கு அடுத்துத் தான் என்பதும் நடாஷாவுக்கு மகிழ்ச்சி அளித்தது.

 

அலைச்சல் இல்லாமல் மிச்சமாகும் நேரத்தை உருப்படியான பேச்சுகளில் செலவழிக்கலாம். திலீப்புக்கு இதில் எல்லாம் சிரத்தை இருக்குமா தெரியவில்லை. அவனும் குறிப்பெடுக்க, கேள்வி கேட்க ஒத்தாசை செய்தால் நிறையத் தகவல் சேகரிக்கவும், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க இவர்கள் வழி காட்டுதலில் செயல் திட்டம் வகுக்கவும் முடியும்.

 

இரண்டு முதியவர்களும் மாப்பிள்ளை என்று முடியும் குலப் பெயரோடு இருந்தார்கள். வெர்கீஸ் மாப்பிள்ளையை மட்டும் தான் சந்திக்க முடிந்தது. அவருக்கு மைத்துனன் உறவான மத்தாயு மாப்பிள்ளை சாயந்திரம் ஒரு மணி நேரம் மட்டும் விழித்திருந்து மற்றப் பொழுதுகளில் உறக்கத்தில் இருப்பவர் என்று தெரிந்தது.  மாலை ஆறு மணிக்கு அவர் எழுந்ததும் அவரிடம் உபரி தகவல் பெற்றுக் கொள்ளலாம் என்றார் வெர்கீஸ்.

 

தின்ணென்று நீண்ட நடாஷாவின் செழுமையான கைகள் திலீப் கண்ணை மயக்க,  அகல்யா அகல்யா என்று பிடிவாதமாக உதடு அசைய, நடாஷாவின் அண்மை தொடர்ந்து வசீகரித்துக் கொண்டிருந்தது.

 

போய்ச் சேர எட்டு மணி ஆகிவிடும் என்று கணக்குப் போட்டான் திலீப். அகல்யா என்ன செய்து கொண்டிருப்பாள்?

 

காலை பத்து மணிக்கு ஆபீஸில் மராத்தியும் இங்கிலீஷுமாக அறிக்கை, பத்திரிகைக் குறிப்பு, விளக்கம், பத்திரிகைத் தலையங்கம் என்று மாய்ந்து மாய்ந்து டைப் அடித்துக் கொண்டிருப்பாள்.

 

திலீப் போல அவள் மனமும் சஞ்சலப்படுமோ? சஞ்சலப்படுத்த, யாரெல்லாம் அங்கே உண்டு? என்ன உயரம் இருப்பார்கள் அவர்கள்?

 

சாயா, பிஸ்கட் உபசாரம் முடிந்து, வெர்கீஸ் மாப்பிள்ளை பேசத் தொடங்கினார் –

 

ஆயிரத்து எண்ணூத்து முப்பதில் மலையாளம் அச்சு யந்திரத்துக்கு ஏறியது. அப்போதெல்லாம் சதுர எழுத்து தான். முப்பதே வருஷத்தில் அது வட்டெழுத்து ஆகி, எழுத்துச் சீர்திருத்தமும் வந்தாகி விட்டது. சதுர எழுத்து அச்சுக்களை வடிவமைக்க நாங்களே பவுண்டரி நடத்தினோம். என் பாட்டனார் காலத்து அச்சுகளும் யந்திரமும் இன்னும் பத்திரமாக இந்த வீட்டில் உள்ளன.

 

வெர்கீஸ் மாப்பிள்ளை தன் பேச்சை தானே அனுபவித்துச் சொல்லிப் போனார்.

 

அதோ அங்கே தோட்ட வீட்டில் அந்தப் பழைய அச்சு யந்திரத்தை  வைத்திருக்கிறோம். 1874-ல் ஜெர்மனியில் வாங்கிக் கப்பலில் வந்தது. போட்டோ வேணாமே. நீங்கள் பார்த்து, வேணுமென்றால் ஓவியம் வரைந்து கொள்ளலாம்.

 

சடசடவென்று இறகடிக்கும் சத்தம்.

 

கூட்டமாகப் பறந்து வந்த மயில்கள். அவை வெர்கீஸ் மாப்பிள்ளை வீட்டுத் தோட்டத்தில் ஒருசேர இறங்கின. ஆடாமல், அகவிச் சத்தம் எழுப்பாமல் அவை எதற்கோ காத்திருப்பது போல, மண்ணில் கால் பதித்து நின்றபடி  இருந்தன.

 

நடாஷா கேமராவில் அவற்றைப் பகர்த்த நினைத்து தோளில் இருந்து காமராவை எடுத்தபடி திலீப்பைப் பார்க்க அவன் கண் மூடி இருந்தான். முன்னால் நகர்ந்த மயில்கள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தன.

 

சாவு வரும் நேரம். இவை சாவின் அடையாளம். இறப்பின் பிரதிநிதிகள்.

 

வெர்கீஸ் மாப்பிள்ளை மயில்களைச் சுட்டிய படிக்குத் தனக்குத் தெரிந்த ரகசியத்தைப் பகிரும் எக்காளத்தோடு சொல்ல உள்ளே இருந்து நடுவயதுப் பெண் ஒருத்தி ஓட்டமும் நடையுமாக வந்தாள்.

 

மேலே உயர்ந்து நடுங்கும் குரலில் அவள் அறிவித்தது –

 

மத்தாயு அச்சன் கண் நிலைகுத்தி சுவாசம் நின்று போனது.

 

ஆணோ?

 

அப்படியா என்ற அர்த்தத்தில் வெர்கீஸ் மாப்பிள்ளை ஆதரவாகக் கேட்டார். நான் சொன்னது சரியாப் போச்சா என்று திருப்தி தெரிவிக்கும் முகக் குறிப்பு. அதில் சந்தோஷம் கீறியிருந்தது.

 

வந்த பெண் இன்னும் சொல்ல விஷயம் உண்டு என்பது போல் நின்றாள்.

 

அப்புறம் என்ன?

 

வெர்கீஸ் மாப்பிள்ளை விசாரித்தார்.

 

தோட்ட வீட்டுக்குள் பழைய அச்சு யந்திரத்தில் இருந்து சத்தம் வந்து கொண்டிருக்கிறது. நிற்க மாட்டேன் என்கிறது.

 

மத்தாயு தனக்கான நீத்தார் அறிவிப்பு அடிச்சுக்கிட்டிருக்கான். சரம பத்ரம்.

 

அவர் சொல்லி விட்டுச் சிரிக்க ஆரம்பித்தார்.

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன