பரிப்பு வட-யா பருப்பு வடையா? வெள்ளிமீன் பூச்சிகள் ஊரும் அலமாரி முன் விவாதம்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது- அடுத்த சிறு பகுதி

வாழ்ந்து போதீரே   அத்தியாயம்   முப்பத்தொன்று     

          

ராத்திரி ஏழரை மணிக்கு நகரம் உறங்கப் போயிருந்தது. எண் எழுதிய கதவுப் பலகைகளைச் சரியாக எடுத்து வைத்துக் கடைகளை அடைக்கும் வேலை தெருவெங்கும் மும்முரமாக நடக்க, வீதிக் கோடி நூலகத்தின் அறைகள் ஒவ்வொன்றாக இருள் அணிந்தன.  தொடர்ந்து நூலகத்தின், மணிகள் அலங்கரிக்கும் பெரிய வாசல் கதவுகளும் அடைபட்டுக் கொண்டிருக்க, ஓரத்துப் படிகள் வழியே இறங்கிய கடைசி இரண்டு பேர் நடாஷாவும் திலீபும் தான்.

 

ஆறரை மணிக்கு அடச்சுடுவோம். புரட்சியை நிகழ்த்திக் காட்டிய சித்தாந்தம் ஜெயிச்சு உலகை ஆளும் சோவியத் பூமியில் இருந்து வந்திருக்கீங்க. அதான் ஏழு மணி வரை உங்களுக்காக திறந்து வைக்கறோம்.

 

உள்ளே போய் நடாஷா தன்னை யாரென்று அறிமுகப் படுத்திக் கொண்டபோது பெருமையும் பாசமுமாகச் சொன்னார் நூலகர்.

 

நூறு வருஷம் அதுக்கும் முந்திய பழைய புத்தகங்கள் இருந்தால், பார்க்கலாமா?

 

நடாஷா கேட்டபோது அப்படி எதுவுமே இல்லை என்று கடவுள் மேலோ கட்சித் தலைமை மீதோ சத்தியம் செய்யத் தயாராக இருந்தார் அவர்.  இந்தப் பதவி கட்சி அளித்த கருணைக் கொடை என்று சொல்லி, சுவரைப் பார்க்க நின்று, உடுத்த வேட்டியை மறுபடி இடுப்பில் இறுக்கிக் கட்டுவது அவருக்கு உகந்த செயலாக அப்போது இருந்தது.

 

பிற்பகல் இரண்டு மணிக்கு நடாஷாவும் திலீபும் நூலகத்துக்குள் போனது தொடங்கி அடுத்த சில மணி நேரத்தில் ஒரு நூறு தடவையாவது அவருடைய கைகள் சலிப்பில்லாமல் உடுதுணியை அவிழ்க்கவும் கட்டவுமாகச் செயல்பட்டன.  பின்னால் சுவர் இல்லாத இடங்களிலும் அது நடந்தேறியது.

 

அவருடைய கால்கள் தீக்குச்சி போல மெலிந்திருக்க, கைகள் தசை புடைத்து நல்ல வலிமையோடு காணப்பட இந்த உடற்பயிற்சியே காரணமாக இருக்கலாம்.

 

நடாஷா திலீப்பிடம்  நூலகத்தில் இருந்து புறப்படும் போது சொன்னாள்.

 

அணிவகுப்பு மரியாதை போல அப்போது நூலகரும், உதவி நூலகரும், இன்னும் இருந்த இரண்டு ஊழியர்களும் சூழ்ந்திருந்து, ஒரே நேரத்தில் சாவி முடுக்கிய பொம்மைகளாக, இடுப்பு வேட்டியைத் திருத்தி அணிந்தபடி நடாஷாவுக்குப் பிரிவுபசாரம் சொன்னார்கள். நூலகர் மட்டும் அன்னிபெசண்ட் அம்மையாரின் படம் மாட்டிய சுவரைப் பார்க்கத் திரும்ப நின்றிருந்தார் அப்போது.

 

நடாஷா உள்ளே இருந்த ஐந்தரை மணி நேரத்தில். இங்க்லிஷ், பிரஞ்சு, தமிழ், சயாமிய மொழி, மலையாளக் காவியங்கள், நாவல்கள், வைத்திய சாஸ்திரம் என்று நூலகத்தில் பாதுகாக்கப்பட்ட நூல்கள் எல்லாவற்றையும் பொறுமையாகவும் கவனமாகவும்   அவர்கள் நடாஷாவுக்குக் காட்டினார்கள்.

 

அவள், புராதன நூல்கள் என்று எழுதியிருந்த அறையில், ஒட்டடையும் தூசியுமாக மூக்கில் பட்டுத் தும்மிக் கொண்டு ஒரு பழைய நாற்காலியில் உட்கார்ந்திருக்க, திலீப்பும் மற்றவர்களும் அலமாரிகளில் சரிந்து கிடந்த புத்தகங்களைத் தடி கொண்டு தாக்கி உள்ளே இருந்த பாச்சைகளையும் வெள்ளிமீன் பூச்சிகளையும் விரட்டி, தூசி துடைத்த பிரதிகளை நடாஷாவுக்குப் படிக்கக் கொடுத்தனர். எனினும் அவை எல்லாம் 1940-க்குப் பிறகு பிரசுரமானவையாகவே இருந்தன.

 

நடாஷாவுக்குச் சாயாவும் பருப்பு வடையும் அன்போடு அளித்தார் நூலகர். மாஸ்கோ நகரில் இருந்து வரும் சிவப்புச் சிந்தனையாளர் குடும்பத்துப் பெண் அவள். ஒரே கொடியில் பூத்த சிவந்த மலர்கள் அவர்கள் எல்லாரும். மராத்திக்காரன் என்றாலும் திலீபும் புரட்சியாளனே. அந்த மண்ணில் போன தலைமுறை வரை முற்போக்கான சிந்தாகதி ஆழமாகச் சால் விட்டுப் போனது. மறுபடியும் அது அங்கே வரும். அதுவரை ஒரே கூட்டுப் பறவைகள் மின்விசிறிகள் கீழ் அமர்ந்து சாயாவும் பரிப்பு வடையும் கழித்திருக்கலாம் என்றார் நூலகர்.  ஒரே கூட்டுப் பறவைகள் மின்விசிறிக்குக் கீழே இருந்து பரிப்பு வடையும் சாயாவும் சாப்பிடும் அந்த உருவகம், அவசரமாகப் பிடித்ததால் சரியாக உருவாகாமல் போனதை உணர்ந்த அவர், வேட்டியை மறுபடி இடுப்பில் அவிழ்த்து அணிந்தபடி, ஒரே மனம் கொண்ட பல இனத்தவர் என மாற்றினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன