தனக்குத் தெரிந்த ஒரே விவிலிய வாக்கியம் சொல்லி மௌனமாக நின்ற நேரம்

வெளியே இறங்கிய நிமிடத்திலிருந்து பசி பசி என்று ஜபிக்கத் தொடங்கி விட்டாள் நடாஷா.  இன்னும் பனிரெண்டே மணி நேரம். காலையிலே பசியாறிக்கலாம். பொறுத்துக்க முடியாதா?

 

திலீப் அவள் முன்பு சொன்னதைப் பத்திரமாக வைத்திருந்து மகிழ்ச்சியோடு திருப்பிக் கொடுக்க, அவனை இடுப்பில் கை வளைத்துத் தூக்கி ஒரு தடவை தட்டாமாலை சுற்றி, நூலகத்தின் புல் தரையில் போட்டாள்  நடாஷா. சைக்கிள்களில் வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த நூலகரும் மற்ற ஊழியர்களும் பலமாகக் கைதட்டி ஆர்பரித்து இந்திய சோவியத் கூட்டுறவை வாழ்த்தி, சைக்கிள் மணி ஒலித்துப் போக, திலீப் அவளைப் பார்த்த பார்வையில் முதல் முறையாக ஆசை தெரிந்தது. வேண்டி இருந்தது இதுவும் அவனுக்கு.

 

மகாத்மா காந்தி பெயரைச் சூட்டிக் கொண்ட மெயின் ரோடு தூங்கப் போய்க் கொண்டிருந்ததால் வீதியை ஓரமாகக் கீறிப் பிளந்து செல்லும் சிறு சந்துகள் ஒன்றில் புகுந்தான் திலீப்.  அவன் ஏமாற்றமே அடையத் தேவை இல்லாமல் ஊணு ரெடி என்ற பெயர்ப்பலகை வைத்த சாப்பாட்டுக் கடை திறந்திருந்தது.

 

என்பதால் தனித் தனியாகத்தான் சாப்பிடும் வழக்கம்.

 

கடை உள்ளே நுழையும் போது சுவரில் குத்துச் சண்டைக்காரர்கள் இருவர் பொருதும் பெரிய புகைப்படம். தெய்வ உருவங்களை மட்டுமே  கண்ணாடியும் மரச் சட்டமும் இட்டுச் சிறைப் பிடித்துச் சுவரில் மாட்டியிருக்கும் உணவு விடுதிகளில் ஒரு மாறுதலுக்காக வைத்த இந்தக் குத்துச் சண்டைப் படத்தை ரசித்தான் திலீப்.

 

இங்கே வேணாம், வேறே எங்காவது போகலாம் என்றாள் நடாஷா.

 

ஏன், நீதானே பசி பசின்னு கத்திட்டிருந்தே? திலீப் பொறுமை இழந்து கேட்டான்.

 

ஓங்கி அடிச்சு படத்திலே வலது பக்கம் நின்னு குத்துச் சண்டை போடறானே அது பார்க்க வேணாம்

 

ஏன் அவனைப் பிடிக்கலேன்னா இன்னொருத்தனைப் பாரு. இல்லே என்னப் பார்த்துக்கிட்டு சாப்பிடு.

 

திலீப் அவள் மறுபடி அவனை நெருங்கி ஆக்கிரமிப்பாள் என்று ஆசை பொங்கி வரக் காத்திருக்க நடாஷா குனிந்து அவன் காதில் அவசரமாகச் சொன்னாள் –

 

அவன் செர்யோஷா. என் பாய் ப்ரண்ட். விட்டுட்டுப் போயிட்டான் ராஸ்கல்.

 

சாப்பிடுவதாகப் பெயர் பண்ணிவிட்டு எழுந்தாள் நடாஷா. அவளுக்காக திலீப் போடச் சொல்லிக் கேட்டு வாங்கிய முட்டை தோசையைக் கூட விள்ளல் விள்ளலாக எடுத்துக் கொறித்து விட்டு அப்படியே வைத்து விட்டாள் அவள்.  தொடர்ந்து கண்ணீர் பெருக்கியபடி இருந்தவளை நேசமாகத் தோளில் தட்டி தனக்குத் தெரிந்த ஒரே பைபிள் வாசகத்தைச் சொன்னான் திலீப் –

 

இதுவும் கடந்து போகும்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன