சைபீரியாவுக்கு அனுப்பப்பட்ட செர்யோஷாவுக்காக ஆலப்புழையில் ஒருத்தி துக்கம் காத்து

சைபீரியாவுக்கு அனுப்பப்பட்ட செர்யோஷாவுக்காக ஆலப்புழையில் ஒருத்தி துக்கம் காத்து

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காவது -அடுத்த சிறு பகுதி

டிரைவர் இல்லாமல் இருட்டில் நிறுத்தி இருந்த ஆட்டோ ரிக்‌ஷாக்களையும்,   விளக்குக் கம்பத்தின் அடியில் உறங்கும் தெரு நாய்களையும், சகலரும் குத்த வைத்து எழ, மூத்திர ஈரம் விரியத் தொடங்கிய முடுக்குச் சந்துகளையும் நின்று நின்று பார்த்து அரை மணி நேரம் கழித்து அம்பாசடர் டாக்சி ஒன்று வந்தது. நம்பிக்கை இல்லாமல் திலீப் நிறுத்தச் சொல்லிக் கையசைத்தான். வண்டி சற்று தூரம் கடந்து போய் நின்றது.

 

சவாரி வரச் சம்மதம் சொன்னார் அந்த ஓட்டுனர்.  சிவப்போ அல்லது மற்றச் சிந்தனைகளோ இல்லாத அந்த வண்டியோட்டி மொத்தமாக முப்பது ரூபாய் தேவை என்றும் அதில் பத்து ரூபாயை இப்போதே தர வேண்டும் என்றும் நிபந்தனை போட்டார்.

 

மிகப் பெரிய கொம்பன் மீசை வைத்த, தலை கலைந்த ஓட்டுநர் அவர்.  குரலில் முரட்டுத் தனம் வழிந்தது. இருக்கட்டும், ரெண்டு பேர் உண்டே, என்ன செய்து விட முடியும்? அதுவும் ஆஜானுபாகுவான சோவியத் வீராங்கனை இவன் கூடவே உண்டு.  போகலாம் என்றான் திலீப். ஏறிக் கொண்டார்கள்.

 

இருட்டான ஏதேதோ தெருக்களில் வண்டி ஊர்ந்து போக, திலீப் கையை இறுகப் பற்றிக் கொண்டாள் நடாஷா. பயமா இருக்கு என்று காதில் சொன்னாள். எதிரே கடந்து போன லாரி ஹெட் லைட் வெளிச்சத்தில் அவள் உரித்த வெள்ளைப் பூண்டு போல் அழகாகத் தெரிந்தாள்.

 

பிடி விடாத கைகள் இன்னும் இறுகி இருக்க, வண்டி நின்றது.

 

இருங்க, வீட்டுக்காரி கிட்டே பணத்தை கொடுத்துட்டு வந்துடறேன்.

 

பத்து நிமிடத்தில் இடுப்பில் குழந்தையும் பின்னால் டிரவுசர் வாரைத் தூக்கிப் பிடித்தபடி ஓடி வரும் சட்டை இடாத சின்னப் பையனும் பின் தொடர டிரைவர் வந்தார். அவர் வீட்டுக்காரி ஒரேயடியாக புகார் சொல்லும் குரலில் அதிவேகமாக மலையாளத்தில் சொல்லியபடி திலீப்பையும் நடாஷாவையும் ஆதரவு கோருவது போல் பார்த்தாள். போ, வரேன் என்று கையசைத்து வண்டியைக் கிளப்பிய டிரைவர் மேல் பயம் விலகிப் போக, திலீப்   பேசத் தொடங்கினான். நாளை யாரையெல்லாம், எங்கே போய்ச் சந்திக்க வேண்டும் என்று விசாரித்தான் நடாஷாவை.  கார் டிரைவர் இல்லாமல் இருந்தால் வேறு ஏதும் பேசியிருப்பான். அப்படித்தான் அவன் நினைத்தான். வேண்டித் தான் இருந்தது இதுவும் கூட.

 

செர்யோஷாவை உளவாளி எனக் குற்றம் சாட்டி, தேசத் துரோகத்துக்கான உச்ச பட்ச தண்டனை கொடுத்து சைபீரியாவுக்குக் கொண்டு போய்விட்டார்கள் என்று மட்டும், தகவல் சொன்ன நடாஷா அதற்கப்புறம் அழவில்லை.

 

ஆலப்புழையில் நடாஷா தங்கியிருக்கும் விடுதி எது என்று சொல்லாலமேயே சரியாக அங்கே போய்ச் சேர்ந்து விட்டது டாக்சி.

 

நீ அம்பலப்புழை எப்படிப் போவே? நடாஷா கேட்டாள்.

 

அலைச்சல் தான். லாரியாவது கிடைக்காதான்னு நம்பிக்கை.

 

இங்கேயே ஓட்டல் ரூம்லே இருந்து காலையிலே போகறியா?

 

வேறே வினையே வேணாம். இவர்கள் எல்லாம் ஏற்கனவே திலீப் நடாஷாவோடு தினம் பத்து நிமிடம் அவசரமான சிருங்காரச் செய்கைகளில் ஈடுபடுவதாக நினைக்கிறவர்கள்.  ஐரோப்பிய மதாம்மாவும் கறுத்த இந்திய உதவியாளனும் ஒருவரை ஒருவர் ஈர்க்கத் தொடங்கி இருக்கும் நேரம் இது.

 

கற்பனை செய்ய மாட்டான் திலீப். நிறையச் செய்தாகி விட்டது. விட்டுப் போனால் அகல்யா அழுவாள். இந்தித் திரைப்படங்களில் காதல், கல்யாணம், ஏமாற்றம், தியாகம், சோகம் எல்லாம் பாட்டுகள் மூலம் உணர்த்தப்படும். திலீப்புக்கு அவற்றை ரக வாரியாகப் பட்டியலிடப் பிடிக்கும் ஆனால் இன்றைக்கு அதைச் செய்ய மாட்டான். அசதி கண் இமை வரை தளும்பி நிற்கிறது.

 

நான் எப்படியாவது பார்த்துக்கறேன். போயே ஆகணும்.

 

திலீப் இறங்க முற்பட, அவன் மடியை இறுகப் பற்றி உட்கார்த்தினாள் நடாஷா.

 

நீ பஸ் பிடிக்க அலைஞ்சு கஷ்டப்பட வேணாம். டாக்சியிலேயே போயிடு. நான் இன்னும் பத்து ரூபா அதிகமாப் போட்டுத் தந்துடறேன்.

 

டிரைவரிடம் சின்ன இங்கிலீஷ் வாக்கியங்களாக அவள் பேச, அவர் ஏனோ தலையாட்டி முடியாது என மறுத்தார்.  நடாஷா லட்சியம் செய்யவில்லை.  இது அதிக பட்ச கட்டணம், இதற்கு மேல் இந்த ராத்திரி இவர் சம்பாதிக்க முடியாது என்று அவள் அறிவாள். அவள் பேசிக் கொண்டே போனாள்.

 

பாக்கி இருபது ரூபா தரணும் தானே, கூட பத்து ரூபாய் சேர்த்து முப்பதாகக் கொடுத்திடறேன்.

 

நடாஷா அவளுடைய கைப்பையில் தேட, வேண்டாம் என்று கையமர்த்தினார் அந்த டிரைவர்.

 

அடுத்து அவர் செய்தது  நம்ப முடியாததாகப் போனது திலீப்புக்கும் நடாஷாவுக்கும்.

 

மன்னிக்க வேணும். உங்க கிட்டே அதிகப் பிரசங்கித் தனமா முப்பது ரூபா கேட்டுட்டேன். பதினைந்து ரூபாயே அதிகம். வீட்டுக்காரி திட்டறா. இப்படி சம்பாதிக்கறது உடம்புலே ஒட்டாதாம். அதான் சின்னப் பையன் சட்டை போட முடியாம இருக்கு. போட்டா அஞ்சு நிமிஷத்துலே தோல் பொசுங்கிப் போவுது.

 

அவர் நிறுத்தி, திலீப்பைப் பார்த்தார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன