சந்திக்காமலே இறந்த மத்தாயு மாப்பிள்ளையும் ட்யூஷன் போகும் இளைய தலைமுறையும்

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காவது- அடுத்த  சிறு பகுதி இங்கே

நீ வா ராஜா. ஒண்ணும் தரவேணாம். அம்பலப்புழையிலே இறக்கி விடறேன்.

 

நடாஷா இறங்க, திலீப் மனதில் ஏனோ பயம். இந்த டிரைவர் கூட்டிப் போய்க் கழுத்தை நெறித்து விட்டால்? அல்லது பாலியல் ரீதியாக அவனைப் பலாத்காரம் செய்து விட்டால்? இருக்காது, அப்படிப்பட்டவராக இருக்கும் பட்சத்தில் சொந்தக் கதை சொல்லிக் கொண்டு துக்கத்தைப் பகிர்ந்திருக்க மாட்டார்.

 

அம்பலப்புழையிலும் எங்கே போக வேண்டும் என்று கேட்காமல், நேரே மயில்பிலி தூக்க ஆப்பீஸ் என்று அறியப்பட்ட  திலீப்பின் தங்குமிடமும் பணி செய்யும்  இடமுமான பழைய வீட்டருகே டாக்சி நின்றது.

 

ஆபீஸ் வாசலில் கோணலாகப் படுத்துக் கொண்டிருந்த வெடிவழிபாட்டுக் குறூப் எழுந்து உட்கார்ந்து திலீப்பை வாசல் பூட்டைத் திறக்க வேண்டாம் என்றான்.

 

உள்ளே சமையல் நடந்துட்டிருக்கு. நான் சொல்வேனே, கோவில் கொடிமரம் பக்கம் பறந்து போய் மூத்ரம் ஒழிச்ச வயசன், அவன் பறந்து பறந்து சுத்தி வந்துட்டிருக்கான். உம் மேல்  ஒழிச்சு வைக்கப் போறான். உ ள்ளே போகாதே.

 

குறூப், ஆபீஸ் இல்லேன்னு வயறு முட்டக் குடிச்சாச்சு போல.

 

சொல்லியபடி, திலீப் திறந்து உள்ளே போய்க் கதவைச் சார்த்திக் கொண்டான்.

 

மிக விரைவாக நித்திரை போனான் அவன். அலைச்சலின் அயர்வும், படித்தது, எழுதியது, போட்டோ எடுத்தது என்று உடம்பு வணங்கி வேலை பார்த்த அசதியும் கண்ணை மூட வைத்தது. சந்திக்காமலே மரணமடைந்த மத்தாயு மாப்பிள்ளையும், சேறு படிந்த பலகை மேலேறி டியூஷன் வகுப்பு போகும் அழகான இளம் பெண்களும், அகல்யாவும், அவன் மேல் பின்னிப் பிணைந்து கிடக்கும் நடாஷாவுமாக நிலை குழம்பி நினைவும் கனவும் இழைந்து நீண்டன.

 

வீட்டில் நடமாட்டம் இருப்பது போல் பிரமை. எழுந்து போக முடியாமல் காலை, கையைக் கட்டிப் போட்ட உறக்கம். சமையல் செய்யும் வாடையும், பெண்கள் சண்டை போடும் ஒலியுமாகக் கிடக்கும் வீடு. அது ஓய்ந்து முயங்கும் ஒலிகள். பக்கத்தில் எங்கேயோ. சணல் சாக்கில் கொட்டைப் புளி அடைத்து வைத்த வாடையும், போக வாடையும் மேலேறுகின்றன.  லகரியில் மெல்லக் கூவும் பெண். மூச்சு வாங்க இயங்கும் ஆண். ஒரு வயசன் கண் மூடிப் பறந்தபடி வருகிறான்.  சணல் மூட்டை மேல், உடம்பு மெலிந்த, பல் நீண்ட பழைய கால உடுப்பு களைந்த ஸ்திரியை சாய்த்து வைத்து போகம் செய்கிறவனின் பிருஷ்டத்தில் இடித்து மேலே உயர்ந்து போகிறான் வயசன்.  அவனுடைய கண் மூடியே இருக்கிறது.

 

டெலிபோன் மணி அடிக்கும் ஓசை. நிமிஷத்து நிமிஷம் அது வலுவடைகிறது. நின்று போய் உடனே தொடர்கிறது. திரும்ப நிற்கிறது. மேலும் வலுக்கிறது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன