எமிலி ஆந்த்ரோசா என்ற சிறுமியும் மாந்த்ரீக நிகழ்வுகளும்

வாழ்ந்து போதீரே -அரசூர் நான்கு நாவல் வரிசையில் இறுதி நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி

================================================================================

திலீப் துள்ளி எழுந்து விழித்துக் கொண்டான். கனவு ஏதும் இல்லை. டெலிபோன்.

 

டெலிபோன் ஓசை மட்டும் நிஜம். இருட்டில் சத்தம் வழி காட்ட, ஓடிப் போய் எடுத்தான்.

 

திலீப் மோரே கிட்டே பேச முடியுமா?

 

அகல்யா குரல்.

 

ஏய் அகல், நான் தான். என்ன ஆச்சு? இப்போ இப்போ நீ இப்போ.

 

அவனுக்குக் குரல் பதற்றத்தில் சீராக எழும்பவில்லை.

 

நீங்க வரணும், கேட்டேளா. உங்க அம்மா உடம்பு நிலைமை கொஞ்சம் கவலைப்படற மாதிரி.

 

அவ போயிட்டாளா?

 

திலீப் கேட்டான். பதில் இல்லை. திரும்பவும் கேட்டான்.

 

அம்மா போய்ட்டாளா?

 

அகல்யா குரல் ஒரு வினாடி விம்மலோடு தீனமாக ஒலித்து, தொலைபேசி இணைப்பு துண்டிக்கப் பட்டது.

—————————எமிலி ஆந்த்ரோசா என்ற சிறுமியும் மாந்திரீக நிகழ்வுகளும்

எமிலி ஆந்த்ரோசா அழ ஆரம்பித்தாள். குளிர்ச்சியான அறை. நடுவிலே, மிக உயரமான கட்டில். அதில் தான் அவள் படுத்திருக்கிறாள். பழைய கட்டிலை அகற்றி விட்டு இந்தக் கட்டிலை அறையில்  சேர்த்தார்கள். இரவு சிறு ஏணியைக் கட்டிலில் சார்த்தி வைத்துத்தான் அவளைக் கட்டிலில் ஏறிப் படுக்கச் செய்தார்கள்.

 

இவ்வளவு உயரமாக இருந்தால் நடுராத்திரி நான் மூத்திரம் போக எப்படி இறங்குவது? குளிர் அதிகம் என்பதால் அடிக்கடி போக வேண்டியிருக்கு. என்ன செய்யணும் நான்?

 

எமிலி கேட்டபோது ராணுவ அதிகாரிகள் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் எல்லோரும் பெண் அதிகாரிகள்.

 

சிறுநீரை எல்லாம் பூவாக்கி கட்டில்லே போட்டு வச்சா?

 

பெரிய பெரிய எறும்புகள் வரும். என்னை அரிச்சு முழுக்க கடிச்சு தின்னுடும்.

 

எறும்புகள் நகராம இருக்க நீ மந்திரம் செய்வியே.

 

எறும்புகள் என் கனவில் வந்து மிரட்ட, நான் படுக்கையை நனைச்சுடுவேனே.

 

ஒண்ணுக்குப் போகாமலே இருக்க மந்திரம் செய்ய முடியாதா?

 

அவர்கள் எல்லோரும் ஒரே கணத்தில் கேட்கத் தலையைப் பலமாக ஆட்டி மறுத்தாள் எமிலி ஆந்த்ரோசா.

 

வயத்த வலிக்கும். சின்னப் பொண்ணு தானே நானு?

 

அவளைப் பத்து வயதுச் சிறுமியென அதிகாரம் செய்யவும் முடியவில்லை. ஆயிரம் வருடம் சேர்ந்து செழித்த தெய்வத் தன்மை சிலநாள் குடியேறிய, கடவுளின் சகோதரியுடைய சுண்டுவிரலாக, பொழுது தோறும் மகிமைப் படுத்தவும் முடியவில்லை. ரொம்ப வற்புறுத்தினால் அழுகிறாள். சிறுமி தானே.

 

அவள் படுக்கையை உயரம் தணிக்கவும் குளிர்சாதனத்தை அவ்வப்போது நிறுத்தி வைத்து மீண்டும் இயக்கி தூக்கம் கெடாமல் பார்த்துக் கொள்ளவும், இன்னும் கனமான கம்பளிப் போர்வை போர்த்தி விடவும் ஒரு பெண் உதவியாளரை உடனடியாக நியமிக்க முடிவானது. இது போன ஞாயிறன்று நடந்தது.

 

ஆடும் பறவை நிறைந்திருக்கும் கடவுளின் சகோதரியுடைய வீட்டு முகப்பில் இந்தப் பெண் உறங்க முடியுமானால், எந்தத் தொந்தரவும் எட்டிப் பார்க்காது

 

அந்த இடத்தைக் கடக்கவே எல்லோரும் பயப்படுகிறார்கள். ஆடும் புனிதமான பறவை தீமையை இனம் கண்டு சர்வ நாசம் விளைவித்து ஒழிக்க மாபெரும் வல்லமை கொண்டது என்று குக்கிராமங்களிலும் நம்பிக்கை வந்திருக்கிறது.

 

ஊரூராகப் போய் ஊர்ப் பொதுவில் இருந்து கானம் பாடி, உணவும் உடுப்பும் வாங்கிப் போகும் நாடோடிப் பாடகர்கள், ஆடும் புனிதமான பறவை பற்றிப் புனைந்த பாடல்கள் எங்கும் மக்களால்  விரும்பிக் கேட்கப் படுகின்றன.

 

அழகும் கால் நகங்கள் குத்திக் கிழித்து இருதயத்தைக் கீறி எடுத்து முறித்துப் போடும்  வலிமையும் கொண்ட பறவை எங்கும் உபாசிக்கப் படுகிறது.

 

கடவுளின் மூத்த சகோதரியும், அவள் தன் சுண்டு விரலளவு மேன்மையும் சக்தியும் தற்காலிகமாகக் குடியேற்றக் கிள்ளிக் கொடுத்த சிறுபெண் எமிலியும் வழிபடப் பட வேண்டியவர்கள் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.

July 28 2024

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன