கடவுளின் மூத்த சகோதரி விடுப்பு எடுத்துக்கொண்ட போது

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காவது. அதிலிருந்து அடுத்த சிறு பகுதி

———————————————————————————————————————————

 

பறவை ஆடும் முன்றிலில் யாரும் இருக்க அனுமதி இல்லை. அவர்கள் அந்தக் காட்சியின் உக்கிரத்தால் இதயம் வெடித்து இறந்து போகலாம்.

 

எமிலி இந்த ஒரு வாரமாக வினோதமான இந்த இடத்தில் இருக்கவும் உறங்கவும் கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறாள். நந்தினியின் படுக்கை அறைக்குக் கொண்டு விடும் முன் நடை அது. கடவுளின் சகோதரியாக எப்போதும் நிறைந்திருக்கும் நந்தினியின் படுக்கை அறை கவனமாகப் பூட்டப்பட்டிருக்கிறது. முன் நடையில் ஒரு கட்டிலும், ஓரமாக பெரிய நிலைக் கண்ணாடியும், சுவரில் பதித்த அலமாரியில் ஒன்றிரண்டு கார்ட்டூன் புத்தகங்களுமாக எமிலிக்கு இருப்பிடம் அமைக்கப் பட்டிருக்கிறது.

 

அவள் சாப்பிடவும், குளிக்கவும், கழிப்பறையைப் பயன்படுத்தவும் மட்டும் இந்த இடத்தை விட்டுப் பத்து அடி கிழக்கிலோ மேற்கிலோ அந்தந்த அறையை நோக்கி நடக்க வேண்டும்.

 

இரவானாலும் படுக்கை அறை தவிர மற்ற அறைகள் எல்லாவற்றிலும் விளக்கு எரிகிறது. எமிலியின் வரவை எதிர்பார்த்து யாராவது ஊழியர் தூங்கி வழிந்தபடி நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார்.

 

நந்தினி இருக்கும் போது இங்கே இருபத்து நாலு மணி நேரமும் ராணுவம் காவல் செய்து கொண்டிருக்கும். கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்ட நேரம் இது.

 

நந்தினி ஆடும் பறவைகளின் நாட்டுக்கு அரசாங்க விருந்தினராகப் போயிருக்கிறாள். அவள் பிறந்த புண்ணிய பூமியுமாகும் அது. இரு வாரப் பயணம். வரும் திங்களன்று திரும்பி விடுவாள். அதுவரை எமிலி தான் அவளுடைய பிரதிநிதி.

 

உள்ளே வரலாமா?

 

எட்டிப் பார்த்துக் குரல் கொடுத்த பெண் அதிகாரியை எமிலிக்குப் பழக்கமில்லை. என்றாலும் அவளுடைய சிநேகிதமான சிரிப்பு எமிலிக்குப் பிடித்திருக்கிறது. எல்லாப் பெண் ராணுவ அதிகாரிகளும் எமிலியைப் பாரததும் நேசமாகச் சிரிக்கிறார்கள். அவர்களுக்கு அதற்கான பயிற்சி கொடுக்கப் பட்டிருக்கிறது என்று எமிலி நம்புகிறாள். அவள் இங்கே, கடவுளின் மூத்த சகோதரியின் திருமாளிகைக்கு இருக்குமிடத்தை மாற்றிக் கொண்டபோது, முதலில் அவளைச் சந்தித்தவர்கள் உயரமும், கனமும், காக்கி உடுப்பும், கண்டிப்புமான ஆண் அதிகாரிகள். எமிலி மிரண்டு அழுத தருணமது.

 

அப்புறம் தான் முழுக்கப் பெண் அதிகாரிகளே கடவுளின் சகோதரியுடைய சிறு விரலான எமிலியோடு தொடர்பு கொள்ள அனுப்பப் பட்டார்கள். இன்றைக்கு வந்திருக்கிறவள் போல, மூத்த, அம்மா, அத்தை, மாமி பிம்பங்களை எழுப்பும் பெண்மணிகள் அவர்கள் எல்லோரும்.  அத்தை உள்ளே வந்தாள்.

 

படுக்கையில் உட்கார்ந்து தேநீர் பருகிக் கொண்டிருந்த எமிலி, அந்தப் பெண் அதிகாரி வரும் போது நறுமணம் மிகுந்த வெளிர் நீலத்தில் பெண்கள் கைக்குட்டை ஒன்றை இடது கரத்தைச் சற்றே அசைத்து உருவாக்கினாள். வெள்ளை நிறத்தில் அது இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனாலும் நேர்த்தியான கைக்குட்டை தான் அது.

 

பெண் அதிகாரி சற்றே குனிந்து உடனே நிமிர்ந்து எமிலி கையில் இருந்து கைக்குட்டையை வாங்கிக் கொண்டு இடது கண்ணோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டு வணக்கமும் நன்றியும் சொன்னாள்.

 

அதிகாரிகள் தரையில் மண்டியிட்டு வணங்கிப் பேசுவது நந்தினிக்கு மரியாதை காட்ட மட்டும். என்றாலும், வீட்டில் இருக்கும் மூத்த பணிப்பெண்ணான சிஞ்சுவா அப்பனெ எமிலிக்கும் மண்டியிட்டு வணங்குகிறாள். இந்த வீட்டில் கட்டிலிலும் நாற்காலியிலும் அமரும் எல்லாத் தெய்வங்களுக்கும் மண்டியிட்டு வணங்கி ஊழியம் செய்ய அமர்த்தப் பட்டேன் என்றாள் சிஞ்சுவா, எமிலியிடம்.

 

எமிலி அந்தக் கிழவிக்காகக் கையைத் தட்டி வரவழைத்த சாக்லெட் துண்டுகளை அவள் நன்றியோடு வாங்கிக் கொண்டாள் தான். ஆனால் தனக்கு இனிப்பு அண்டக் கூடாது என்று டாக்டர் சொல்லி விட்டார் என்றும், பேரக் குழந்தைகளுக்கே இந்த சாக்லெட்கள் என்றும் சொல்லி எடுத்துப் போனாள்.

 

அது நேற்று நடந்தது. சிஞ்சுவா எடுத்துப் போன சாக்லெட் பொட்டலத்தை தெருக் கோடி குப்பைத் தொட்டியில் அவசரமாக வீசுவது எமிலி நேற்று ராத்திரிச் சாப்பாட்டுக்கு உட்கார்ந்தபோது  அவள் மனதில் காட்சியாக வந்தது. எமிலிக்குக் கோபம் ஏதுமில்லை. மந்திரவாதம் செய்த இனிப்புகளை வீட்டுக் குழந்தைகளுக்கு வழங்க வேண்டாம் என்ற ஜாக்கிரதை உணர்ச்சி கிழவிக்கு இருக்கலாம். எமிலிக்கு அது புரியும். இந்த அதிகாரிகளையும் அவள் அறிவாள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன