வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காவது. அதிலிருந்து அடுத்த சிறு பகுதி
கைக்குட்டையை மரியாதை விலகாமல் காக்கிச் சட்டைப்பையில் இட்டு புன்னகையோடு நின்ற அதிகாரியை எதிரே இருந்த நாற்காலியில் அமரச் சொல்லிக் கேட்டுக் கொண்டாள் எமிலி. அவள் இதற்காகவே காத்திருந்தது போல் அந்த நாற்காலியில் உட்கார்ந்து, கையில் பிடித்திருந்த கிளிப் செருகிய அட்டையில் மேலாக இருந்த காகிதத்தை அவசரமாகப் படிக்கத் தொடங்கினாள்.
இரவு நன்றாக உறங்கினீர்களா என்பதில் தொடங்கி, காலை உணவு, தேநீரின் சுவை வரை கேள்வியாக்கப்பட்டுக் கேட்டு உறுதி செய்யப்படும் தகவல் தொகுப்பு அது. நந்தினியிடம் நேரம் எடுத்து அக்கறையோடு கேட்டு அவள் தலையசைக்க நீண்டு முடியும் இந்தச் சடங்கு எமிலிக்குக் காகிதத்தில் தட்டச்சு செய்து அதை சைக்ளோஸ்டைல் செய்து எடுத்த கேள்வித் தொகுப்பாகியது.
அவசர அவசரமாக ஒவ்வொரு கேள்வியாக அதிகாரி கேட்க, பள்ளிக்கூடத்தில் அட்டண்டென்ஸ் எடுக்கும்போது உள்ளேன் ஐயா என்று பதில் சொல்வது போல் ஒவ்வொரு கேள்விக்கும் ஆம் என்று பதில் சொன்னாள் எமிலி. எழுந்து நிற்கவில்லை என்பது தான் வேற்றுமை.
கேள்விகள் முடிந்ததும், இன்றைய நிகழ்ச்சிகளின் விவரம் படிக்கப் பட்டது.
காலை ஒன்பது மணிக்கு, அதாவது இன்னும் ஒரு மணி நேரத்தில், கோழிப் பண்ணை வைத்திருப்போர் சங்க நிர்வாகிகளோடு சந்திப்பு. பதினோரு மணிக்கு, ஆப்பிரிக்க உடுப்புகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் பிரதிநிதிகளோடு உரையாடல், நடுப்பகல் விருந்து நாட்டுப்புற இசைக் கலைஞர்களோடு, பிற்பகல் மூன்று மணிக்கு கடவுளின் மூத்த சகோதரியோடு மின்குழாய்த் தொடர்பு மூலம் உரையாடுதல், மாலை ஐந்து மணிக்கு, ஜப்பானிய முரசுகள் முழக்கும் இசை நிகழ்ச்சி, எட்டரை மணிக்கு இரவு உணவு. உறக்கம்.
இந்த நிகழ்ச்சிகளின் உங்கள் பங்களிப்பு என்ன?
கேள்வி புரியவில்லை என்றாள் எமிலி.
விளக்குகிறேன் என்று சொல்லிப் பெண் அதிகாரி எழுந்திருந்தாள். அவளுடைய கையில் பிடித்திருந்த அட்டையில் செருகிய க்ளிப் நெகிழ்ந்து, காகிதங்கள் அறையெங்கும் பறந்தன.
இது உங்கள் வேலை தானே?
கண்டிப்பான ஆசிரியை போல், ஆனால் முகத்தில் சிரிப்பு மாறாமல் கேட்டாள் அதிகாரி. இல்லை என்று அவசரமாக மறுத்தாள் எமிலி. போனால் போகட்டும் என்ற முக பாவத்தோடு அதிகாரியை ஏறிட்ட அவள் தரையில் கிடந்த காகிதங்களைப் பார்க்க, அவை சற்றே எழும்பிப் பறந்து அதிகாரி கையில் பிடித்த அட்டையில் மறுபடி ஒட்டியபடி நின்றன.
நன்றி. ஆனால் நான் வைத்திருந்த ஒழுங்கு அமைப்பு குலைந்து போய்விட்டது.
அதிகாரி புகார் செய்யும் குரலில் சொன்னாள். காகிதங்களை மறுபடி அட்டையில் செருகத்தான் எமிலியால் முடியும். முன்னால் இருந்த வரிசையில் அடுக்குவது கடவுளின் சகோதரியால் ஒருவேளை செய்ய முடியுமாக இருக்கலாம். அதற்கான மந்திரவாதம் படித்துத் தேர்ச்சி அடைவதற்குள் எமிலி வயதான மூதாட்டி ஆகி விடக் கூடும். கைகளிலும் கால்களிலும் நடுக்கம் ஏற்பட, முகத்தில் தோல் சுருங்கிய கிழவி.
எமிலி எதிரே இருந்த நிலைக் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டபோது அங்கே அழகான ஓர் இளம்பெண் தென்பட்டாள். சே, இவள் நானில்லை என்றாள் அவசரமாக எமிலி. ஆனாலும் மனதில் மகிழ்ச்சி ஊற்றாகப் பெருகி இருந்தது. இதை லட்சியமே செய்யாமல் காகிதங்களை அடுக்கிய பெண் அதிகாரி, சற்று எம்பி, கட்டிலில் எமிலி அருகே அமர்ந்தாள். கடைசியில் இருந்த காகிதத்தை முன்னால் வைத்துக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தாள்.
இன்றைய நிகழ்ச்சிகளில் நீ செய்யப் போகும் சிறு மந்திரவாத நற்செயல்கள் என்னவாக இருக்கும்?
அவள் சிரித்தபடி கேட்க, எமிலி அவள் கையை அன்போடு பற்றி முத்தமிட்டாள். பெண் அதிகாரி இறுக்கம் தளர்ந்து, மெல்ல எமிலியின் தலையில் வருடினாள். அந்தக் கணத்தில் அம்மாவும் பெண்ணுமாக அவர்கள் ஆன அந்த மந்திரவாதத்தை எமிலி செய்யவில்லை தான்.