எமிலி மந்திரவாதம் மூலம் கேக்குகளை வரவழைத்துத் தின்னக் கொடுத்தபோது

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காவது – நூலிலிருந்து அடுத்த சிறு பகுதி இங்கே

நேற்றைய நிகழ்ச்சிகளில் ஒரு சிறு தவறு.

 

பெண் அதிகாரி  எமிலியைக் கூர்ந்து பார்த்தபடி சொன்னாள்.

 

நேற்றைக்கு முதல் நிகழ்ச்சியில் பள்ளிக்கூடப் பிள்ளைகள் கடவுளின் மூத்த சகோதரியுடைய பிரதிநிதியான எமிலியைச் சந்திக்க வந்திருந்தார்கள். இந்த சந்திப்புக்காக அதிகாலையில் புறப்பட்டு வந்ததால் வீட்டுப் பாடங்களை எழுத முடியாமல் போனதென்று அந்தப் பிள்ளைகள் சொன்னார்கள்.

 

எமிலியின் மந்திரவாதத்தால் வீட்டுக் கணக்குகளையும், ஆங்கிலப் பாடப் பயிற்சியையும் எழுதித் தர முடியுமா என்று அவர்கள் கேட்டார்கள். அது தன்னால் முடியாது என்று வருத்தத்துடன் சொன்னாள் எமிலி.

 

அச்சு மை வாடை அடிக்கும் பாடப் புத்தகங்களும், கிடை மட்டத்தில் நான்கு வரிகளாகக் கோடுகள் இட்ட ஆங்கிலப் பயிற்சி நோட்டுகளும், செங்குத்தான, கண்டிப்பு நிறைந்த மூன்று கோடுகளோடு  வரும் கணிதப் பயிற்சிப் புத்தகமும், பாட்டுகளும், மனனம் செய்த சிறு கவிதைகளை ஒப்பிப்பதுமாக இருக்கும் பள்ளிக்கூட உலகத்துக்கு அவள் திரும்பப் போக ஆசைப்பட்டாள்.

 

வீட்டுக் கணக்கு செய்யாமல் போய் மைதானத்தைச் சுற்றி ஓடி வரத் தண்டனை விதிக்கப்படும் மகிழ்ச்சி அவளுக்கு வேண்டி இருந்தது.

 

நேற்று அந்தப் பிள்ளைகளின் சிநேகிதியாக எமிலி முனைப்போடு இருந்து கைகளைப் படகு ஓட்டுவது போல் வீசி வீசி அசைத்து வெட்டவெளியில் இருந்து வரவழைத்த ரொட்டித் துண்டுகளையும் கேக்குகளையும் ஆர்வமும் கூச்சலுமாக அவர்கள் சாப்பிட்டார்கள். அவர்களோடு சேர்ந்து எமிலியும் அவற்றை ரசித்து உண்டாள்.

 

அங்கே தான் தவறு.

 

பெண் அதிகாரி கனிவு பொங்கச் சொன்னாள். அவள் தொடர்ந்தாள் –

 

நாட்டில் பசியும் பட்டினியும் இல்லாமல் செய்வது அல்லது இருப்பதைக் கொண்டு மன நிறைவடைய வழிப்படுத்துவது என்பதெல்லாம் அரசாங்கத்தின் பொறுப்பு. கேக்குகளையும் ரொட்டித் துண்டுகளையும் எமிலியின் மந்திரவாதம் உருவாக்கிக் கொடுப்பது சர்க்காரின் நடைமுறையில் குறுக்கிடுவதாகும். புரியவில்லையா? ஆகாரம் எதுவும் இனி மந்திரவாதத்தால் வரவழைக்காதே.

 

சரி என்று தலையசைத்துக் கேட்டுக் கொண்டாள் எமிலி.

 

அடுத்து, இது உன் மாமனைப் பற்றியது. கிராமத்தில் வற்புறுத்தி கோழிகளைக் காணிக்கையாகத் தரச் சொல்கிறாராம். தராமல் போனால், அவர்களை ஆடும் பறவை சபிக்கும் என்றும் மிரட்டுவதாக அறிகிறோம்.

 

இதற்குத் தான் என்ன செய்ய வேண்டும் என்று புரியாமல் எமிலி பார்த்தாள்.  அவரை ரத்தம் உறிஞ்சிக் கொல்லும் செடிகளுக்கு நடுவே விட்டிருக்கிறார்கள் என்று ஏனோ தோன்ற அவள் பார்வையில் மருட்சி தெரிந்தது.

 

கவலைப்பட வேணாம். உன் தாய்மாமனை எச்சரித்தாகி விட்டது. இன்று கடவுளின் சகோதரியோடு உரையாடும்போது அவர்கள் கேட்டால் சொல்லவே இந்தத் தகவல்.

 

அதிகாரி அவள் கன்னத்தில் செல்லமாகத் தட்டி விட்டு வெளியே நடக்க, அம்மா என்று அழைத்தாள் எமிலி. திரும்பி நின்றபடி அவள் எமிலியை நோக்கினாள்.

 

நான் வீட்டுக்கு போகணும். எமிலி முறையிட்டாள்.

 

எதிர்பார்த்தது தான்.  அந்தப் பெண் அதிகாரி விறைப்பாக நின்றாள்.

 

கடவுளின் சகோதரி வந்து சேர்ந்ததும் நீ வீடு திரும்பலாம்.

 

இல்லை, நேற்று இரவில் இருந்து எனக்கு உடம்பு சுகமில்லை.

 

எமிலியின் குரலில் அவசரமும் பிடிவாதமும் தென்படத் தொடங்கியிருந்தன.

 

டாக்டரை வரச் சொல்கிறேன். நாளைக்கு முழுக்க ஓய்வெடுக்கலாம். ஞாயிறு.

 

நைச்சியமாகச் சொன்னாள் பெண் அதிகாரி.

 

இல்லை, வயிறு வலிக்கிறது. இப்போதும் கூட.

 

எமிலி அவசரமாகக் குளியல் அறைக்குள் போனாள். சற்று நேரத்தில் அங்கே இருந்து அம்மா என்று விளிக்கும் சத்தம்.

 

பெண் அதிகாரி அங்கே நடந்தாள்.  அட்டையில் செருகிய காகிதங்கள் மறுபடி கீழே சரிந்தன. சாவகாசமாக அவற்றை அடுக்கிக் கொள்ளலாம்.

 

ஐந்தே நிமிடத்தில் எமிலியைக் கைத்தாங்கலாக அழைத்து வந்து கட்டிலில் அமர்த்திய அதிகாரி, தொலைபேசியில் எண்களைச் சுழற்றிப் பேசியது –

 

இந்தப் பெண் குழந்தை பூப்படைந்தாள்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன