மூன்று நாள் நல்லெண்ண விஜயமாக புது நகர் வந்த உலுலூ அதிபர் டாக்டர் நந்தினி

சென்ற வாரம் குடியரசாகப் பிரகடனப்படுத்தப் பட்ட  ஆப்பிரிக்க நாட்டின் ஜனாதிபதியான டாக்டர் நந்தினி, மூன்று நாள் நல்லெண்ண விஜயமாக புதுதில்லி வந்து சேர்ந்தார். பாலம் விமான நிலையத்தில் அவரை வரவேற்ற வெளியுறவுத் துறை ராஜாங்க மந்திரி.

 

வைத்தாஸ் ரேடியோவை அணைத்தான்.

 

நந்தினி தொலைபேசியில் சத்தம் கூடுதலாகவே பேசிக் கொண்டிருந்தாள். பெரிய மூன்று தேசங்களுக்கு நடுவே தென்கிழக்காகக் குறுகி கிழக்கே நீண்டு வடக்கில் சற்றே விரியும் சுடுமணல் பரந்த நாட்டின் மக்கள் தலைவரிடம்,  அங்கே ஆட்சிக்கும் ராணுவத்திற்கும் தலைமை வகிக்கும் நிர்வாகத் தலைவர் கடலும், மலையும், பாலைவனங்களும் தாண்டி இருந்து பேசிக் கொண்டிருக்கிறார்.

 

நந்தினி பொறுமையாகவும், சில வாக்கியங்களை மெல்ல ஒரு முறைக்கு இரு முறையாகச் சொல்லியும் தன் முக்கியத்துவத்தை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறாள்.  அவளுடைய இங்க்லீஷ், மூக்கால் ஒலிக்கும் இந்திய மலையாள உச்சரிப்பை முற்றும் துறந்து ஏற்ற இறக்கத்திலும், சொற்களை வலிமைப்படுத்துவதிலும், மென்மையாக்குவதிலும் ஆப்பிரிக்கச் சாயலை முழுக்கப் பிரதிபலிக்கிறது.

 

வைத்தாஸின் சொந்த மொழி இந்த ஆப்ரிக்க ஆங்கிலம்.  அவன் முற்றிலும் பிரிட்டீஷ் இங்கிலீஷுக்கு மாறியிருக்க, நந்தினி அவன் உரித்த மொழிச் சட்டையை அணிந்திருக்கிறாள். அவளுக்குப் பாந்தமான உடை தான் அது.

 

நந்தினி முன்னால் நின்று டெலிஃபோனைப் பிடுங்குவது போல் பாவனை செய்தான் வைத்தாஸ். அவளுடைய கவனத்தைக் கவர நக்னனாக, அறையில் விரித்த ரத்தினக் கம்பளத்தில் உருண்டு கரணம் அடிக்கக் கூடத் தயார் தான் அவன்.

 

அரசாங்கத் தூதர் பிம்பத்தை இறக்கி வைத்து நந்தினிக்கு ஒரு முத்தம் கொடுத்துக் கட்டியணைத்துக் கலவி செய்யக் காத்திருக்கிறான் வைத்தாஸ். நந்தினி இன்னும், அண்மையில் குடியரசாகப் பிரகடனப்படுத்தப் பட்ட  ஆப்பிரிக்க நாட்டின் ஜனாதிபதி என்ற அந்தஸ்தில், மூன்று நாள் நல்லெண்ண விஜயமாக புதுதில்லி வந்து சேர்ந்த டாக்டர் நந்தினியாகவே இருக்கிறாள்.

 

சின்னக் குழந்தையைப் பேசாதே, நெருப்புப் பக்கம் போகாதே என்று எச்சரிப்பது போல் வாய்க்குக் குறுக்கே விரல் வைத்து அச்சுறுத்தியபடி தொலைபேசியில் தொடர்ந்தாள் நந்தினி.

 

குழந்தையோடு நேசத்தைச் சொல்லும் குறும்பு மிளிரும் கண் பார்வை இல்லை அவளிடம். குரலும், உறுதியாகச் சுழலும் கையும், அதிகாரத்தோடு அசையும் தலையும் அவள் தலைமை வகிக்கிறவள், அவளோடு இருக்கிறவர்களும் தொலைபேசியில் அழைப்பவர்களும் அந்த அதிகாரத்தை அங்கீகரித்துக் கீழ்ப் படிந்து அடங்கி ஆட்டுவிக்கப் படுகிறவர்கள் என்றும் நந்தினியின் காத்திரமான இருப்பை வலியுறுத்துகிறது. பத்திரிகைப் புகைப்படத்துக்கான, தொலைநோக்கு வாய்ந்த தலைவர்களின் இருப்பு இது. கருணையும், அன்பும், கண்டிப்புமான மக்கள் தலைவர் நந்தினி. கடவுளின் மூத்த சகோதரி.

 

இன்னும் ஐந்தே நிமிடம்.

 

அவள் பேசியபடி கையைக் குவித்து விரித்துக் காட்ட, வைத்தாஸ் தன் கரம் உயர்த்திக் குறும்பாக அதே சைகை செய்ய உத்தேசித்ததை ஒத்திப் போட்டான்.

 

சற்று முன்பு, அவளைப் பின்னால் இருந்து அணைத்துப்  பற்றிய போது நந்தினி அவசரமாகச் சொன்னது –

 

விடலைத்தனமாக நடக்காதே. நம்மை உலகம் பார்க்கிறது. வயதும் இன்னும் இருபதில்லை. தெய்வங்களும் தலைவர்களும் தடவி விளையாடுவதில்லை..

 

என்றால், அவர்கள் கருப்பினத் தீவிரவாதத்தின் போக்குகள் குறித்தோ, மூன்றாம் உலக நாடுகளின் புதிய அதிகாரக் கட்டமைப்புகள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சிக்கல்கள் பற்றியோ ஆழ்ந்த சிந்தனையை வெளிப்படுத்தும் கருத்துகளைப் பகிர்ந்து விவாதிக்க வேணுமா?

 

வைத்தாஸ் சிரித்தபடியே  கேட்டான். அந்தக் கரங்களை அவள் விலக்கவில்லை. ஆனாலும் அடுத்த தொலைபேசி அழைப்பு வந்து கொண்டிருப்பதாகச் சொல்லி நகர்ந்தவள் படுக்கையில் அமர்ந்து இன்னும் பேசிக் கொண்டிருக்கிறாள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன