கரும்புத் தோட்டத்திலே சிசுவுக்குப் பாலூட்ட விடாமல் அடிக்கும் கங்காணி

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுப்பில் நான்காவது நாவல் -அடுத்த சிறு பகுதி


நந்தினி அவன் தோளை ஆதரவாகத் தழுவி அவனையும் கட்டிலுக்கு இழுத்தாள். டெலிபோன் டைரக்டரியில் கடைசியாகப் படித்த பெயரை நினைவுக்குக் கொண்டு வர முயன்றபடி வைத்தாஸ் அவளோடு சரிந்தான்.

 

எமிலி நாலு நாளாக பழைய காலத்தைக் கனவாகக் காண்கின்றாளாம். அவள் இருந்திராத காலம். அவளுக்கு ஏற்பட்டிருக்காத அனுபவங்கள் அதெல்லாம்.

 

அவன் அணைப்பில் இருந்தபடி நந்தினி சொன்னாள். அணைக்காத ஒற்றை விளக்கில் அவள் கண்கள் வெற்றிடத்தில் நிலை கொண்டிருப்பதை வைத்தாஸ் கண்டான்.

 

நந்தினி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் குரலும் மொழியும் மாறி விட்டிருந்தது. அது ஆண் குரல்.  இந்திய மொழிகள் சேர்ந்து நந்தினியின் குரலாக எழுந்து வர, ஒற்றை விளக்கும் அணைந்து, பொதியாக அழுத்தும் இருட்டு.

 

கரும்புத் தோட்டத்தில் இந்த நாள் காலை நடந்தது இது. கேட்டு கொள்ளணும்.

 

நான் ஆஜர் பட்டியல் சரி பார்க்க நடந்து போனேனா, என் பக்கத்தில் ஏதோ நொய்நொய் என்று சத்தம். என்னடா என்று திரும்பிப் பார்க்க ஒரு சிசு அழுது கொண்டிருந்தது. ஓரமாக நிழலில் ஒரு சாணிச் சுருணையை விரித்து அதைக் கிடத்தி விட்டு அதைப் பெற்றுப் போட்டவள் பிடுங்கின கரும்பை தோகை வெட்டிக் கொண்டிருந்தாள். கரும்பு யந்திரத்தில் போட வாகாக இதைச் சதா செய்யாவிட்டால் யந்திரம் ஓய்ந்து போய்விடும். மேனேஜர் துரை கத்துவான்.

 

பிறந்து நாலைந்தே மாசம் ஆன அந்த சவலைக் குழந்தை குரலைக் கேட்டதும் அந்தப் பெண்பிள்ளை கையில் எடுத்த தோகையையும் அரிவாளையும் அந்தப்படிக்கே தரையில் வைத்துவிட்டு நிழலுக்கு ஓடி வந்து குழந்தையை வாரி எடுத்தாள். முலையை எடுத்து அதுக்குக் கொடுக்க ஆரம்பிக்கிற வரைக்கும் பார்த்துக் கொண்டு ஒரு ஓரமாக நின்றேன் நான்.

 

அப்புறம் ஓங்கி அந்தப் பிரம்பால் அவள் முலை மேலேயே ஓங்கி அடித்தேன்.

 

திருட்டு முண்டே. வேலை நேரத்தில் என்ன சீராட்டிக் கொண்டு கிடக்கே? வரும்போதே இதையெல்லாம் முடிச்சிருக்கலாமில்லையா வேலைக்கு இடைஞ்சல் இல்லாமல்?

 

நான் சத்தம் போட அவள் என் காலில் விழுந்து குழந்தையையும் கிடத்தினாள்.

 

சாமி பால் பத்தாம அழுகிறான் பிள்ளை. பசி நேரம். நொய்க் கஞ்சி கொடுத்தா வாந்தி பேதியாவுது. வேறே வழி இல்லாம லயத்துலே இருக்கப்பட்ட காப்பிரிச்சி கிட்டே எல்லாம் கையேந்தி பால் பிச்சை வாங்கிட்டு இருக்கேன். இன்னிக்கு யாரும் தானம் தரலை. பிள்ளை உசிரு போகுது.

 

திரும்பக் குழந்தையை வாரியெடுத்த அவளை முடிக்க விடாமல் திரும்ப மார்க் காம்பிலேயே பிரம்பால் அடித்தேன். குழந்தை பிடிவாதமாகப் பிடித்த காம்பை விட்டு விட்டு வீரிடும்படி அதன் உதட்டிலும் அடி விழுந்திருக்க வேண்டும்.

 

அந்தப் பக்கம் தலையில் கரும்பு சுமந்து போன ஒரு கிழட்டு காப்பிரிச்சியைக் கூப்பிட்டு குழந்தையைப் பறித்து எறியச் சொன்னேன். அவள் நான் சொன்னது புரியாத பாவனையோடு அந்தச் சிசுவை வாரியெடுத்து ஓரமாக வைத்துவிட்டு அங்கே இன்னொரு காப்பிரிச்சிக்குக் கண்காட்டியபடிக்கு திரும்ப வந்தாள்.

 

தேவிடிச்சி போய் வேலையைப் பாருடி நாயே என்று நான் சத்தமாகச் சொல்லியபடி அடிவாங்கின பொம்பிளையை முறைக்க, அவள் எனக்குப் பின்னால் பார்த்து ரெண்டு கையையும் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட்டாள். நான் என்ன விஷயம் என்று பின்னால் நோக்கினேன்.

 

அங்கே இளம் வயசில் இன்னொரு காப்பிரிச்சி அந்தக் குழந்தையை நெஞ்சோடு அணைத்து அதுக்குப் பால் புகட்டிக் கொண்டிருந்ததைப் பார்க்க எனக்கே கண் நிறைந்து போனது.

 

அந்தக் கரகரப்பான ஆண் குரல் தேய்ந்து மறைய வைத்தாஸ் நந்தினியின் கையை இறுகப் பற்றிக் கொண்டான். உடலெங்கும் நடுங்கியது அவனுக்கு.

 

மங்கலாக விளக்கு மறுபடி எரிந்தது. மின்சார ஜெனரேட்டர் இயங்கும் ஒலி.

 

நாலு நாளாக கனவிலே வர்ற கரும்புத் தோட்டத்தைப் பற்றித்தான் பேசிட்டிருந்தா எமிலி. தமிழச்சி குழந்தைக்குப் பாலூட்டிய அந்த ஆப்பிரிக்கப் பெண் அவளுடைய பாட்டிக்குப் பாட்டி என்று தெரியுமாம். முலையில் அடிச்ச, இதயமே இல்லாத அந்த அரக்கன் தான் யாருன்னு தெரியலையாம். தினசரி கனவில் வந்து தொந்தரவு கொடுக்கும் அவனுடைய தலைமுறையே நசிக்க மந்திரம் போடலாமான்னு கேட்கிறாள்.

 

வைத்தாஸுக்கு அந்தக் கங்காணியைத் தெரியும். தமிழும் தெலுங்கும் சரளமாகப் பேசிய அந்தக் கொடூரனின் அசுர வித்து அவன்.

 

வைத்தாஸ் பதில் சொல்ல நினைத்தான்.  மக்கள் தலைவருக்கு அந்தத் தகவல் தேவைப்படலாம். கடவுளின் சகோதரிக்கு அது நியாயம் வழங்கத் துணை செய்யும் விவரமாக இருக்கலாம். இந்த வினாடி நந்தினிக்கு அது வேண்டாம்.

 

அவன் தழுவிய வேகத்தில் நந்தினி நிலைகுலைந்தாள். ஆதி மனிதன் அடுத்து வந்த பெண்ணோடு முதல் முறை ஆவேசத்தோடு இணை சேர்ந்த நேரமாக அந்த இரவு ஊர்ந்தது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன