மரப்பலகை ஆசன ரயிலில் ப்ராட்ஃபோர்டிலிருந்து லண்டனுக்கு ஒரு பயணம்

ஹதிம் தாய்னா என்ன அச்சன்?

 

முசாபர் கேட்டபடியே எதிர் இருக்கையில் உட்கார்ந்து, மேலே போட்டிருந்த ஓவர்கோட்டைக் கழற்றி அடுத்த இருக்கையில் வீசினான்.

 

சின்ன வயசிலே நான் பார்த்த சினிமா.

 

இதை மட்டும் சொல்லி விஷயத்தைக் கடந்து போவதில் அவசரம் காட்டினார் அமேயர் பாதிரியார்.  பேச்சை மாற்றவோ என்னமோ, முசாபர் கால்டர்டேல் தாண்டி இந்த ரயிலில், அதுவும் அவர் இருக்கும் ரயில் பெட்டியில் ஏறி நொடியில் தலை காட்டிய மாய வினோதத்தைப் பற்றி ஆர்வத்தோடு விசாரித்தார் அவர்.

 

சினிமா போன்ற போதைப் பொருட்களை விலக்கச் சொல்லி அவர் வாரந் தோறும் ஞாயிறன்று காலைப் பிரார்த்தனை நேரத்தில் குரிசுப்பள்ளிக்கு வந்த விசுவாசிகள் கவனமாகக் கேட்டு அதன்படி நடந்து, தீர்க்க காலம் ஆசீர்வதிக்கப்பட பிரசங்கம் செய்தவர். அது போன வாரம் வரை நடந்த விஷயம்.

 

உங்களை எப்படி தனியா லண்டன் போக விட்டுட்டு நான் வேலையைப்  பார்த்துட்டு இருக்கறது அச்சா? இங்கே  பிராட்போர்டில் ஒரு சிநேகிதன் கொச்சு தெரிசாவின் மீனும் வறுவலும் விற்கும் கடையை எடுத்து நடத்த விருப்பம்னு சொன்னான். பிராட்போர்ட் காஜியாரை உங்களுக்குத் தெரியுமே. அவரோட இளைய சகோதரன் தான். சச்சரவும் சங்கடமும் தராத பேர்வழி.

 

முசாபர் மனசுக்குத் திருப்தியான காரியம் செய்த களிப்பில் கண்கள் பளபளக்கச் சொன்னான். அவனைப் பார்க்க அமேயர் பாதிரியாருக்கு ஏனோ அனுதாபமும், பிரியமும் சேர்ந்து எழுந்து வந்தன. நேற்று சாயந்திரம் வழியில் வைத்துப் பார்த்தபோது லண்டன் பயணம் பற்றிச் சொன்னதை நினைவு வைத்து வந்திருக்கிறான் பாவம்.

 

மந்தையில் இல்லாத ஆட்டுக் குட்டியானால் என்ன, நேசம் வைக்க மனசு மட்டும் போதுமே. நல்ல சிந்தனை கொடுத்த கர்த்தர் வாழ்த்தப்படட்டும்.

 

பாதிரியார் குரிசு வரைந்தபடி முசாபரைப் பார்த்துச் சிரித்தார்.

 

ஆமா, நான் என்ன வேலையா அங்கே போறேன், எத்தனை நாள் தங்குவேன் இதெல்லாம் தெரியாமல் நீயும் பயணம் வச்சது என்ன, முசாபரே?

 

அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை அச்சா. பாருங்க, நான் துணிமணி கூட எடுத்து வரலே. எல்லாம் அங்கே சமாளிச்சுப்பேன். நண்பர்கள் எதுக்கு இருக்காங்க? கொச்சு தெரிசா இல்லாம போறதுதான் ஒரே குறை. அவ லண்டனை எவ்வளவு அணு அணுவா ரசிப்பா தெரியுமா? நீங்கதான் விசா வாங்க நாம் போனபோது பார்த்தீங்களே. கொச்சு தெரிசாவுக்கு உங்களைப் பிடிக்கும். உங்களுக்கு ஒரு உதவின்னா அவள் செய்யணும். இல்லே நான் செய்யணும். செய்யறேனே.

 

முசாபர் மிக எளிதாக இந்த உறவுச் சமன்பாட்டை விளக்கிவிட்டு ரயில் ஜன்னல் வழியே பராக்குப் பார்க்கத் தொடங்கினான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன