தடாகங்களையும் வாய்க்கால்களையும் எதிர்பார்த்து லீட்ஸ் வழி லண்டன்

பரிசோதகர் டிக்கட்டைப் பரிசோதிக்காமலே இறங்கி விட்டதில் அவருக்கு மகா ஏமாற்றம். ஒரு குளிர் பானமும் ஒரு தகரக் குவளை லாகர் பியரும் என்று முசாபர் கேட்டு வாங்கிக் கொண்டிருக்க, அமேயர் பாதிரியார் கழிப்பறைக்கு நடந்தார்.

 

அங்கே தாழ்ப்பாள் போட்டிருக்கக் கூடாது. உள்ளே எப்படி இருந்தாலும் சரிதான். பாதிரியார் உடுப்பு நனையாமல் ஜாக்கிரதையாக நிற்க வேண்டும்.

 

அவர் வேண்டுதல் எல்லாம் செவிசாய்க்கப்பட, வெளியே வந்தபோது அவரை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்த முசாபர் குளிர் பானத்தை அவரிடம் நீட்டினான்.

 

கொச்சு தெரிசாவின் பாட்டி, இந்தியப் பெயர் வரும், தீப்ஜோத் என்றோ என்னமோ, அந்தக் கிழவி என்னை படி ஏற்றாமல் விரட்டி விட்டாள். அது நான் இவளைப் பெண் கேட்டுப் போனபோது.

 

அவன் பழைய நினைவுகளில் ஆழ்ந்து பியரை உறிஞ்சிக் கொண்டே பேசினான். குளிர்பானத்தை இப்போது குடித்து அது இன்னும் அரை மணி நேரத்தில் நெளிய வைக்கும் என்று பட, அமேயர் பாதிரியார், அதையும் முசாபர் பக்கத்தில் வைத்தார்.

 

மெட்காப் இறந்து அவனைப் புதைத்த கல்லறை ஈரம் உலர்வதற்குள் நான் கொச்சு தெரிசாவை மணம் செய்து கொண்டேன்.

 

அவன் பெருமையோடு சொல்ல, அமேயர் பாதிரியாருக்கு அது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. என்னதான் ஆப்ரகாமிய வேரில் வருகிறவன் என்றாலும், அமேயர் பாதிரியாரின் கோவிலில் பூசை வைத்துப் பரலோகம் போன ஒருத்தனின் நினைவுக்கு மரியாதை இல்லை, இந்த முசாபிர் சொன்னது.

 

அவர் அமைதியாக ரயில் ஜன்னலுக்கு வெளியே தடாகங்களையும், வாய்க்கால்களையும் எதிர்பார்த்து இருக்க, வெறும் தரையும் கட்டிடங்களின் நெரிசலுமாக லீட்ஸ் வந்து விட்டது.

 

அவருடைய தோல்பையையும் உரிமையோடு எடுத்துத் தோள்பட்டையில் மாட்டிக் கொண்டு முசாபர் கேட்டான் –

 

அச்சா, நான் உங்க கிட்டே பாவமன்னிப்பு கேட்கலாமா?

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன