கென்சிங்டன் – ஏர்ள்’ஸ் கோர்ட் மாளிகையில் ஆல்பர்ட் பிரபுவின் ஆவி எழுந்து உலவும் நள்ளிரவு நேரம்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவது. அதிலிருந்து அடுத்த சிறு பகுதி

வாழ்ந்து போதீரே        அத்தியாயம்   முப்பத்தைந்து    

          

ஆல்பர்ட் மிடிங்டன் ரிச்சர்ட்சன் பிரபு நடுராத்திரிக்கு வழக்கம்போல் எழுந்து கொண்டார். அவர் உலவப் புறப்பட வேண்டிய நேரம் அது.

 

எழுந்ததும் தான் தெரிந்தது, அவர் கூடுதலாகவே உறங்கி விட்டிருந்தார் என்று. பொழுது புலர்ந்து கொண்டிருந்தது.

 

சலவை செய்த உடைகள் மர பீரோவில் இருப்பதை அவர் உறுதி செய்து கொள்ள வேண்டும். அவை எப்போதும் அணியத் தயாராக நானூறு வருடமாகப் புதியதாக இருப்பவை. தினசரி அவற்றை உடுத்தே அவர் நடப்பார்.

 

மர பீரோவில் அவருடைய துணிகள் கசங்கிக் கிடக்க, இரண்டு பாதிரியார் அங்கிகளும், கால் சராய்களும் உள்ளே உடுக்கும் துணிகளும் நடுநாயகமாகத் தொங்கிக் கொண்டிருந்தன.  கீழ்த் தட்டில் ஒரு பெரிய தோல்பெட்டி நாராசமாக பயண வாடையைக் கிளப்பிக் கொண்டு பாதி திறந்து கிடந்தது. அதைச் சுற்றி அழுக்கான, வியர்வை உலர்ந்த காலுறைகள். கசங்கிச் சுருண்ட கைக்குட்டைகள். புழுதி படிந்த இரண்டு ஜதை காலணிகளும் கூட அங்கே உண்டு. ஆக, நானூறு ஆண்டு பழமையுள்ள அலமாரியும்  பறிபோனது இன்று.

 

இது ஏர்ல் ஓஃப் ஃபோர்ட் லில்லியென்ற அல்லிக் கோட்டை பிரபுவான ஆல்பர்ட் ரிச்சர்டன் அவர்களின் சபிக்கப்பட்ட பொழுதாக இருக்கக்  கூடும்.

 

ஒரு ராத்திரி விடாமல் தினம் தூய்மையான ஆடைகளை அணிந்து, காலில் தூசு இல்லாமல் மின்னும் படியாகத் துலக்கிய பாதுகைகளையும் இட்டுக் கொண்டு அவர் நீள நெடுக நடக்க வேண்டும். கீழ்வீடு முழுவதும், படியேறி மாடியிலும், வெளியே சிறு தோட்டத்திலும் காலாற உலாவ வேண்டும். ஓர் அறையிலிருந்து மற்றொன்றுக்குள், ஜன்னலை விரியத் திறந்து பிரவேசிக்க வேண்டும்.

 

எதற்காக அதை எல்லாம் செய்ய வேண்டும்? இன்று அவரால் முடியாது. என்ன பயித்தியக்காரத் தனம்? செய்யச் சொல்லி யார் விதித்தது?

 

கோபம் தலையேற அவர் வெளியே வரும்போது கதவு அடித்துச் சார்த்திக் கொள்ளும். காற்றால் மரக் கதவும் ஜன்னலும் மூடியதாகவும் திறந்ததாகவும் நினைக்கிற மனிதர்களுக்கு அவ்வப்போது தன் உருவத்தைக் காட்டித் தருவார்.

 

எதற்காக? ஆல்பர்ட் பிரபுவின் அந்தரங்க உறுப்பு ரோமத்தை விட இழிவானவர்கள் அவர்கள். அவருக்கு அப்படி ஒரு உறுப்பு தற்போது, ஒரு நானூறு வருஷமாக இல்லை தான். ஆனால் என்ன? அவருடைய சரி சமானமாக இங்கே பிருஷ்டத்தை வைக்க எவனுக்குத் தகுதி உண்டு. இந்த நாட்டை ஆளுகிற பக்கிங்ஹாம் வம்ச ராணியம்மாள் கூட  இங்கே படியேற அருகதை இல்லாதவள். அவளை ஒரு நாள் அரண்மனைக்குப் போய்ப் பயமுறுத்தினால் என்ன?

 

ஏர்ல்ஸ் கோர்ட் வீட்டில் நாலடி நடக்கவே சோர்ந்து வருகிறது. அரண்மனைக்குப் பூச்சாண்டி காட்டப் போவதாவது ஒன்றாவது. ஆல்பர்ட் பிரபு போகத் தகுந்ததா அது. இந்த வீட்டின் கழிப்பறை அந்தஸ்து பெறுமா பக்கிங்ஹாம் அரண்மனை?

 

வீட்டு முன்னறையில் இரண்டு ஜோடி காலணிகளைப் பார்த்தார் ஆல்பர்ட் பிரபு.   புதியதாகத் தெரியும், நல்ல தோலில் செய்யப்பட்ட, ஆண்கள் அணியும் பாதரட்சை ஒரு ஜோடி. எந்த நிமிடமும் அடிப்பாகம் அற்று விழுந்து உபயோகிப்பவரைத் தரை தொட வைக்கும் நைந்த ஜோடி மற்றது.

 

ஆல்பர்ட் பிரபு புன்னகை புரிந்தார். அவருக்கு நைந்த இந்தக்  காலணிகளைத் தெரியும்.  பாதிரியார்களும் பிஷப்புகளும் அணிகிறவை அவை. நானூறு வருடமாக அப்படித்தான். இந்த வீட்டுக்குள் முன்னொரு முறை படியேறி வந்தவை. கூட இருக்கும் புதுச் செருப்புகளை அணிந்தவனையும் அவருக்குத் தெரியும்.

 

பாதிரியார் போன தடவை வந்தபோது கூடவே ஒரு செழிப்பான இந்தியப் பெண் வந்தாளே? அவள் என்ன ஆனாள்?

 

யாரும் எக்கேடும் கெட்டுப் போகட்டும். ஒரு நாளா, ரெண்டு நாளா, நானூறு வருஷமாகத் தினம் தினம் வழக்கமாக நடந்ததை இன்றைக்குத் தாறுமாறாக்கியது யாராக இருக்கும்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன