ஆல்பர்ட் பிரபு இருநூறு வயது சிநேகிதிகளின் பட்டியல் இடும் நேரம்

வாழ்ந்து போதீரே – அரசூர் வம்சம் நான்கு நாவல் வரிசையில் நான்காவது நாவல். அதிலிருந்து அடுத்த சிறு பகுதி இங்கே-

இப்படி யார் யாரையோ வீட்டுக்குக் கூப்பிட்டு அரிசி வடித்துக் கொட்டித் தின்ன வைத்து ராத்திரி முழுக்க விளக்கைப் போட்டுக் கொண்டு கூட்டாலோசனை செய்து கொண்டிருக்கிறவன் தான் காரணம்.

 

இந்த வீட்டுக்குள் அவன் வந்தது முதலே ஆல்பர்ட் பிரபுவை மதிக்கிறதுமில்லை. கண்டு கொள்வதும் இல்லை.  வீட்டுச் சொந்தக்காரர், நானூறு வருஷம் முன் மகா பிசகாக ஏதோ செய்து சமுத்திரத்தில் கப்பல் முழக மரித்தாலும் இன்னும் கடைத் தேறாத ஆவி என்பதெல்லாம் மூத்திரம் போவது போல அற்பக் காரியம் அவனுக்கு.

 

வேறு எதற்காக இல்லாவிட்டாலும் இந்த ஆவி சமாசாரத்துக்கு பக்கிங்ஹாம் அரண்மனை ராணி கூடப் பயப்படுவாள். என்னத்துக்கு அந்த அம்மாள் நினைவு?

 

வாசலை ஒட்டித் தணிந்த நிலைப்படி இருந்த அறையில் விளக்கு எரிகிறது. ஆல்பர்ட் பிரபு பார்த்துப் பார்த்து வடிவமைத்து, ஷாண்லியர் விளக்கு போட்டால் தலையில் முட்டும் என்று மெழுகுவர்த்தி நிறுத்தி வைக்க செப்புக் கிண்ணம் சுவரில் மாட்டிய அருமையான அறை. மெழுகுவர்த்தி வைக்க வந்த பணிப் பெண்களான எமிலி, ரீத், ஹன்னா, ரொபர்ட்டா, கிரேசி, டெய்சி, ஹெலன், கிளாரா, எடித், மரியா, ரூத், ரீகன், ஹென்றியெட்டா, சாரா, ஜூலியா, லியன், கரோலின், விர்ஜீனியா, சூஸன், ரேஷல், வொயலட் என்று எத்தனை பேரை சுவரில் சாய்த்து நிறுத்தி வைத்து சுகம் கொண்டாடி இருக்கிறார் அவர். லாரன்ஸா, கானரில், லில்லி, காதரின், நான்சி, ஷார்லெட், லோலா, ஈவா, ரெபக்கா, ஜென்னி, ஸ்டெல்லா, மேகி, ஏஞ்செலா, ரோஸ், சில்வியா, பார்பரா, ஆட்ரி, லிண்டா, எலிஸா, நவோமி, செல்மா, இசபெல், ஓபல், எம்மா என்று அவரோடு சுகித்த உறவுக்கார, அண்டை அயல் பெண்களையும் மறந்து விட முடியுமா? தினமும்  இதில் யாராவது ஒருத்தியின் பிரத்யேக வாடையோடு தான் ராத்திரி முழுக்க இங்கே மெழுகு வர்த்தி எரிந்து கொண்டிருந்தது.

 

அவர்கள் எல்லோரும் கல்லறைக்குப் போய் எலும்பும் பொடிபொடித்து அந்திம நித்திரையில் இருக்கிறார்கள். தினசரி அலைவது ஆல்பர்ட் துரைக்கு மட்டுமே விதிக்கப்பட்டது. தாமதமானாலும் அவர் நடந்து போய்த் தான் ஆக வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன