ஆல்பர்ட் கோமகன் நடு இரவில் அருளி நடந்தது-வைதிகர்கள் வாழ்த்தப்படட்டும்

வாழ்ந்து போதீரே – அரசூர் வரிசையில் நான்காம் நாவல். அதிலிருந்து அடுத்த சிறு பகுதி இதோ-

கூடத்தில் சரவிளக்கு பாதிக்கு மட்டும் வெளிச்சம் வர எரிந்து கொண்டிருந்தது. ஆல்பர்ட் பிரபு தினசரி மிடுக்காக நடந்து வலது புறம் திரும்பும் இடத்தில் போட்டு வைத்த பெரிய மர மேஜையைச் சுற்றி மூன்று வேலைப்பாடமைந்த நாற்காலிகள்.

 

மேஜையும் நாற்காலிகளும் ஆல்பர்ட் பிரபு காலத்து மரவேலைப் பொருட்கள் போல் தோன்றவில்லை அவருக்கு. அவருடைய சந்ததியினர் வாங்கி வைத்திருக்கலாம்.

 

குடியும், சதா பெண் மோகமுமாக அலைந்து ஐவேசு சொத்தை எல்லாம் கரைத்த அந்த அயோக்கியர்கள் மேஜை வாங்கியா போட்டிருப்பார்கள். ஆல்பர்ட் பிரபு அவர்களுடைய அரைக்குக் கீழே புழுத்துத் தொங்கவும் வலிக்க வலிக்க அறுந்து விழவும் சபித்த பிற்பாடே அவருடைய சந்ததி அவரோடு முடிந்த விவரம் நினைவு வந்தது.

 

மூன்று மர நாற்காலிகளில் இரண்டில் பாதிரியார்கள் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒருத்தர் ஏற்கனவே ஆல்பர்ட் பிரபு சந்தித்திருந்த பிரஞ்சுக் காரர். இன்னொருத்தனுக்கு முழுக்க இந்தியக் களை. ஆனாலும் பாதிரி உடுப்பு. இங்கிலாந்தில் பூசை வைக்கிறவன் இல்லை போல. இந்தியாவில் இருந்து வந்திருப்பானோ?

 

அந்த வைதிகன் எங்கே இருந்து வந்திருந்தாலும், இப்படி ஆல்பர்ட் பிரபு மாளிகையில் சர்வ சுதந்திரத்தோடு இருந்து சௌக்கியப்பட அவனுக்காகி இருக்கிறது. இருக்கட்டும். கருத்த பாதிரிகள் வாழ்த்தப்படட்டும்

 

மூன்றாவது நாற்காலியில் அந்த இந்தியப் பேராசிரியன், அவன் தான் வீட்டில் சட்டமாக குடி வந்தது மட்டுமில்லாமல், ஆல்பர்ட் பிரபுவின் ராத்திரி நேர சஞ்சாரங்களை ஒரு பொருட்டாக மதிக்காத மனுஷன். மந்திரவாதியோ என்னவோ. ஆல்பர்ட் பிரபுவை மந்திரத்தால் ஒரு சிறு மரச் செப்பில் அடைத்து தேம்ஸ் நதியில் மிதக்கவோ அமிழ்ந்து போகவோ கொண்டுபோய் விடக்கூடும். மரச் செப்புகள் இன்னும் கிடைக்கின்றனவா என்று அவருக்குத் தெரியவில்லை.

 

பிரபு இந்த மூன்று பேருக்கும் அருகில் போய் நோட்டமிட்டார். மூவரும் மேஜையில் தலை வைத்து அசந்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். பக்கம் பக்கமாக எழுதி அடுக்கிய ஏதோ அவர்கள் அருகில் இருந்தது. இங்கிலீஷில் தான் எல்லாம்.

 

ஆல்பர்ட் பிரபு காலத்துக்கு அப்புறம் நிறைய நல்லது நடந்திருக்கிறது. முக்கியமான ஒன்றுண்டு. இந்தியாவுக்குள் புனிதமான அடியெடுத்து நுழைந்து, மேன்மை தாங்கிய ஆங்கிலேயப் பேரரசு அங்கே ஜனங்களுக்கு எல்லாம் இங்கிலீஷ் கற்றுக் கொடுத்துக் கடைத்தேற்றியதே அது. அப்படி நடக்காமல் இருந்தால் இந்த மூன்று பேரும் சட்டமாக உட்கார்ந்து இங்கிலீஷ் என்ற தேவ மொழியில் கத்தை கத்தையாக எழுதிக் குவிக்க முடியுமா என்ன?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன