நானூறு வருடம் பழையது, எனவே புனிதமானது

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காவது நாவல். அதிலிருந்து அடுத்த சிறு பகுதி இதோ –

ஆல்பர்ட் பிரபு கம்பீரமும், பொறுப்பும் கருணையும் இடைகலந்த குரலில் சத்தம் தாழ்த்தி அவனிடம் சொன்னார் –

 

நான் கொச்சு தெரிசா இல்லை. லார்ட் ஆல்பர்ட். நானூறு வருஷமா உலவறேன். இது என் வீடு.

 

அப்போது அவருடைய கையை இறுகப் பற்றிக் கொண்டு அவன் சொன்னது –

 

நல்லது. நீங்க எனக்கு பாவமன்னிப்பு தரணும். நானூறு வருஷம் பழையவர். அதுனாலே புனிதமானவர். பழையது எல்லாம் பரிசுத்தம் ஆனது.

 

பாவ மன்னிப்பு தர இந்த வீட்டுலே ஒண்ணுக்கு ரெண்டு பாதிரிமார் இருக்காங்களே. ஒருத்தர் பிரஞ்சுக் காரர், மற்றவர் இந்தியர்.

 

அமேயர் பாதிரியார் ப்ரஞ்சுக்காரர் . அவரோடு தான் இங்கே வந்தேன்.

 

அவர் கிட்டேயே கேட்கலாமே.

 

அவர் கோவில்லே பூசை வைக்கிறதை நிறுத்தச் சொல்லியிருக்காங்க.

 

யாரு?

 

டயோசிஸ்லே, மறை மாவட்ட நிர்வாகம் அவரை தாற்காலிகமா குரிசுப்பள்ளி ஊழியத்தை விட்டு ஒதுங்கி இருக்கச் சொல்லுது. அவிசுவாசின்னு சந்தேகப்படுது. விளக்கம் கேட்டிருக்கு.

 

இருக்கட்டுமே, பாதிரியார் பாதிரியார் தானே?

 

ஆமா, ஆனா அவர் வத்திகனுக்குப் போயிட்டு இருக்கறவர்.

 

அவிசுவாசி எதுக்கு வாடிகன்போகணும்?

 

அவர் அவிசுவாசி இல்லே, அழுத்தமான இறை ஊழியர்னு விளக்கிக் கடிதம் எழுதத் தான் அவங்க மூணு பேரும் உக்காந்திருக்காங்க.

 

இப்போ உறங்கிட்டிருக்காங்க.

 

தொடர்ந்து எட்டு மணி நேரம் லத்தீனில் பேசி, எழுதி வந்த களைப்பாக இருக்கும்.

 

நீயும் உறங்க வேண்டியதுதானே? நான் இங்கே காலாற நடக்கக் கூட இடம் விடாம நீங்க எல்லோரும் கெடுத்திட்டீங்க.

 

ஆல்பர்ட் பிரபு அலுத்துக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன