கல்யாணக்காரி மேல் மையலுற்றுக் கவிதைகள் எழுதிய பாவம்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்காம் நாவலில் இருந்து-

அவனை ஏனோ பிடித்துப் போனது. நானூறு வருஷமாக அவரிடம் யாரும் உதவி என்று கேட்டதில்லை. இன்றைக்கு இந்த மனுஷன் அவரைப் பாதிரியார் ஆக்கியிருக்கிறான்.  அலமாரியில் கடற்படை மேலதிகாரியின் சலவை உடுப்புகள் கிட்டாமல் எதையோ அணிந்து வந்திருப்பதால், அவருக்கே தான் யாரென்று குழம்புகிறது. நேரம் வேறே விரைந்து கொண்டிருக்கிறது. அவர் மறுபடி உறங்கப் போக வேண்டும்.

 

சொல்லலாமா? அவன் கேட்டான்.

 

முதல்லே உன் பேரைச் சொல்லு.

 

முசாபர்.

 

முழுப் பெயர் அதுதானா?

 

முசாபர் உல்ஹக் ஸபர்.

 

ஸபர் குடும்பப் பெயரா?

 

புனைப்பெயர். கவிதை எழுத வச்சிக்கிட்டது.

 

கவிதை எல்லாம் எழுதுவியா?

 

ஆமா?

 

அப்புறம் எப்படி பாவமன்னிப்பு கிடைக்கும்னு எதிர்பார்க்கறே?

 

இப்போ எழுதறதில்லே.

 

என்ன மாதிரி கவிதைகள்?

 

உருதுவிலே காதல் கவிதைகள்.

 

யார் மேல்?

 

கொச்சு தெரிசா மேல்.

 

அதுக்குத் தான் மன்னிப்பு வேணுமா?

 

அதுக்கும். அந்தக் கவிதைகளை எழுதிய போது மெட்காஃப் உசிரோடு இருந்தான்.

 

யார் மெட்காஃப்?

 

கொச்சு தெரிசாவோட முதல் கணவன்.

 

கல்யாணக்காரி பற்றி காதல் கவிதை எழுதறது தப்பு இல்லையா?

 

அதுக்குத்தானே நீங்க மன்னிப்பு தரப் போறீங்க?

 

காதலுக்கா, கவிதைக்கா?

 

ரெண்டுக்கும் தான்.

 

காதலை மன்னிச்சுடறேன். மற்றதைப் பற்றிக் கடவுள் தான் தீர்ப்பு சொல்லணும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன