ஷாமியானா பணிய வேண்டாமா வாசல்லே?துக்கம் ’ஜாரிச்சு நூதன்,திலீப் குமார்னு படா படா ஸ்டார்ஸ் வில் கம்

வாழ்ந்து போதீரே – அரசூர் நாவல் வரிசையில் நான்காம் நாவல் இது. நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி


அவள் சொல்லி விட்டுப் போனவள் திரும்பி வந்தாள்.

 

வாசல்லே ஒரு ஷாமியானா பணிய வேண்டாமா? அகல்யா கேட்டாள்.

 

ஷாமியானா? புரியாமல் பார்த்தான் திலீப்.

 

பந்தல்.

 

எதுக்கு?

 

எதுக்கா? நாலு அண்டை அயல் பிராமணா குளிக்கறதுக்கு முந்தி வந்து எட்டிப் பார்த்துட்டு ஓடற கதையா என்ன?

 

வேறே என்னவாம்?

 

என்ன கேள்வி கேட்டாறது. நினைவில்லையா? நிறை சுமங்கலி. கல்யாணச் சாவு

 

அப்பா போயாச்சே. அப்புறம் என்ன சுமங்கலி?

 

அவர் காணாமல் தான் போனார். சௌக்கியமா எங்கேயோ இருக்கார்.

 

அதுக்கும் ஷாமியானாவுக்கும் என்ன சம்பந்தம்? திலீப் புரியாமல் கேட்டான்.

 

அது இருக்கட்டும். அம்மா பெரிய லாவணி ஆர்டிஸ்ட். மகாராஷ்ட்ரா பூரா தெரிஞ்சவா, சீஃப் மினிஸ்டர் வரலாம். உங்க பெரியப்பா. செண்ட்ரல் மினிஸ்டர் வருவார். கூடவே அதிகாரிகள் வரலாம். அப்புறம் உங்க தலைவர் கூட.

 

நிமிர்ந்து பார்த்தான் திலீப். உண்மைதான். அவனுடைய மராத்தி அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்வது இந்த சந்தர்ப்பத்தில் முக்கியமானது.  மராத்திக்காரி அம்மா இறந்து போனாள். அவனுக்குள் கொஞ்சமாவது அவளுடைய மராத்தி ரத்தமில்லையா ஓடுகிறது?

 

முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தல் நேரம். லாவணி ஆட்டக்காரி, மராத்தியப் பெண்மணி, ஷாலினிதாய்க்கு ஏக புத்ரன் திலீப். மராத்தியன் திலீப். திலீப் மோரே. இந்த வார்டில் போட்டியிடத் தகுதி. அம்மா இறக்க, திலீப்புக்கு கட்சி வேட்பாளர் அருகதை கிட்டும்.

 

சுறுசுறுப்பு தொற்றிக் கொண்டது. புதுசாக வந்து சேர்ந்த ஒரு எடுபிடியிடம்  ஷாமியானா என்று சொல்ல அவன் சரியென்று சொல்லி, வந்த வேகத்தில் சைக்கிளைத் திருப்பி குலை தெறிக்க ஓட்டிப் போனான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன