சிவன் கோவிலில் கொடியேற்றம், எழுநள்ளிப்பு பற்றி கூட்டெழுத்தில் எழுதிய லிகிதம்

வாழ்ந்து போதீரே நாவலில் இருந்து (அர சூ ர்      நாவல் – 4)

இவர் சிரிக்கறது அந்த சோடா குப்பி திறந்த மாதிரித் தான் இருக்கும். சண்டை போட்டா என்ன? மனுஷர் நயத்துக்கும் என்ன குறைச்சல். ஆம்படையான், பொண்டாட்டின்னா மனஸ்தாபமும், மனம் விட்டுப் பேசறதும் சகஜமாச்சே. இல்லாமலா,  சரி இது எதுக்கு. கருத்தான் ராவுத்தர் கதை இருக்கு பாதியிலே விட்டுட்டேனே.

 

இவர் சிரிச்சபடிக்கு கருத்தான் ராவுத்தர் போட்ட லெட்டரைக் கொடுத்து என்னையும் படிக்கச் சொன்னார். என்னத்தைப் படிக்க?  பெட்டி வண்டி வரிசையாப் போகிற மாதிரி கூட்டெழுத்தா இருக்கு எல்லாம். அதைப் படிச்சுப் புரிஞ்சுக்க கஷ்டப் படறதை விட இவர் கூடச் சேர்ந்து சிரிச்சுட்டுப் போகலாம்.  அதுவும் பத்து நாள் உம்முனு உத்தரத்தைப் பாத்துண்டு பிரமை பிடிச்ச மாதிரி உக்காந்துட்டு. அர்த்தமே இல்லே. ஆனா தப்பு கிடையாது.

 

ராவுத்தரை பத்தி என்னத்தைச் சொல்லிச் சிரிக்க. பாவம் அந்தப் பொம்மனாட்டி எப்படி துடிச்சிருப்பான்னு கேட்டேன். இவரானா அதெல்லாம் இல்லைங்கறார். கருத்தான் ராவுத்தரோட பீவி பட்டணத்துப் பொண்ணு தானாம். கல்யாணம் முடிஞ்சுதான் பெங்களூர்லே புக்காத்துக்குப் போனாளாம். ஒரு மணி நேரத்திலே சமுத்ரக் கரையிலே இருந்து தைரியமா, தன்னந்தனியா ஜட்கா பிடிச்சு வந்து சேர்ந்துட்டாளாம். மிடுமிடுக்கியாக்கும் அந்தப் பொண்ணு. பார்க்கணும் அவளை.

 

சரி, கோவில்லே உல்சவக் கொடி ஏத்தினது எழுதியாச்சு. அதுக்கு முந்தி, போன வாரம் எழுத விட்டுப் போன ஒரு விஷயம் இருக்கு.

 

இங்கே சிவன் கோவில்லே ஓதுவார் ஒருத்தர், காளையார்கோவில்லே இருந்து வந்தார்னு சொன்னா எல்லோரும். ஊர்ப் பெயரே காளையார்கோவில். அங்கே கோவில். அதை எப்படிப் பிசகு நேராம சொல்றதுன்னு இவரைக் கேட்டேன். காளையார்கோவில் கோவில்லே இருந்த ஓதுவார்னு சொல்லணுமாம்.  சரி அந்த மாதிரி ஓதுவார். என்னாக்க,  தேவாரம் பாடி சுவாமியை பரவசப்படுத்தறவர், இங்கே கோவில்லே இருந்து ஊழியம் பண்ணச் சொல்லி எல்லோரும் கேட்டுண்டு காளையார்கோவிலை விட இன்னும் ரெண்டு ரூபா மாசாமாசம் கூடுதலாகவே தரலாம்னு சொல்லி அவரை இங்கே வரவழைச்சு சேர்த்தானது.

 

கருத்து மெலிஞ்ச மனுஷர். ஒரு ஜாடைக்கு எங்க கிட்டாவய்யன் அண்ணா மாதிரி இருக்காராக்கும். கிட்டா அண்ணா மாதிரி கணீர்னு குரல். முன்னே எல்லாம் விருச்சிக மாசம் பிறக்கும் போது மூணு அண்ணாவும் சபரிமலைக்கு விரதம் இருக்க மாலை போடறபோது கிட்டா அண்ணா இப்படித் தான் குரலை உச்சாணிக் கொப்புக்கு உசத்தி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பான்னு ராகமா சரணம் விளிப்பார். கேட்டு அப்படியே கரைஞ்சு போய் நிப்போம். நானும் நாணிக் குட்டியும் தான். கிட்டா அண்ணா குரிசைப் பிடிச்சுண்டு கண்ணூர்லே சாப்பாட்டுக்  கடை போட்டு வேறே என்னமோ பாடிண்டிருக்கார். நாணி பெருந்தன்கோட்டுக்கு கல்யாணம் கழிச்சுப் போனவள் போனவள் தான்.

Oct 18 2024

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன