குரூரம் இல்லாம குசும்பு இல்லாம சொல்றேன் – வாழ்ந்து போங்கோ

வாழ்ந்து போதீரே – நான்காம் அரசூர் நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி இங்கே –

 

உடம்பிலே ரோகம் இருக்கும்போது கர்ப்பம் தாங்கினா உசிருக்கே அபாயமாகலாம்னு அந்த டாக்டர் தான் சொன்னாராம்.  கேட்டியா?

 

கேட்டேன்.

 

மனசே இல்லாம, கர்ப்பம் கலைக்கலாம்னாராம்.

 

ஆஹா. அவருக்கு, ரோகம் நிவர்த்தி பண்ண வந்த டாக்டருக்கு எதுக்கு மனசும் மத்தொண்ணும்?

 

அவரைத்தான் கேக்கணும். அவர் கலைச்சு விட தயார் தானாம். ஆனா அதுக்கு பொறுப்பான நபர் கையெழுத்து போடணுமாம்.  நான் போய்க் கையெழுத்துப் போட்டேன்.

 

இதுலே எவ்வளவு நம்பலாம்?

 

நான் குரலை உயர்த்தி அழுதுண்டே கேட்டேன். அடுத்த வீடு எதிர் வீட்டுலே எல்லாம் கேட்டிருக்கலாம். கேட்கட்டுமேன்னு ஒரு வீம்பு.  அவர் பதில் சொல்லலே. திரும்பக்  கேட்டேன் –

 

எவ்வளவு நம்பணும்?

 

அது நீ என் மேலே வச்சிருக்கற நம்பிக்கையைப் பொறுத்தது.

 

அவர் கெந்திக் கெந்தி நடந்து சுவரைப் பிடிச்சபடி என்னைப் பார்த்தார்.

 

நம்பித் தான் ஆகணும். கப்பல்லே வெள்ளைக்காரிச்சிகளோட கும்மாளம் அடிச்ச காலத்தை எல்லாம் விட்டு நெறைய நீங்கி வந்திருக்கார். நானும் சித்தாடைப் பொண்ணு இல்லே. வீட்டைப் பொறுப்பா நிர்வகிக்கறவ.  என் பிள்ளைக்கு இப்படித் திரும்பினா கல்யாணம், காட்சி, எங்களுக்குப் பேரன் பேத்தின்னு வந்துடும். என்னத்துக்கு அதுக்காக காத்துண்டிருக்கணும்? இப்படி ஒரு புருஷரோடு இன்னும் குடித்தனம் நடத்தணுமா? ஆத்துலே குளத்திலே விழுந்து ஒரேயடியாப் போயிடலாமா? எதுக்குங்கறேன். என்ன மாதிரி நினைப்பெல்லாம் வருது கோபத்திலே இருக்கற போது.

 

அவர் என்னைப்  பார்த்துச் சிரித்தார். ஞான் ஒண்ணு மனசு பொட்டி கரஞ்சு. கரைஞ்சு  போனேன்.

 

அவரை ஆரத் தழுவி  மடியிலே போட்டுண்டு சொன்னேன் –

 

புகையிலை கடைக்காரா, வேண்டாம்டா, கண்ணு இல்லியோடா நீ. இன்னமே இந்த மாதிரி காரியம் எல்லாம் வேண்டாம். தென்னை மரத்துக்குக் கீழே உட்கார்ந்து பால் குடிக்கற காரியம் இது.  சொன்னா கேள்டா. சமத்து இல்லே?

 

அவர் என் கிட்டே  சமாதானமா சொன்னார் –

 

சரி , சக்கரவர்த்தினி.

 

அவருடைய காதில் கேட்டேன் –

 

அமிர்தவல்லியை நீங்க வச்சுண்டில்லியே

 

இல்லே

 

அவ சந்தர்ப்பம் கொடுத்திருந்தா அவளோட படுத்துண்டு இப்படி எல்லாம் செஞ்சிருப்பேள் தானே?

 

நான் என்ன வைத்தியனா? ரோகிக்கு சிகிச்சை தரணும். கூட சுகிக்கக் கூடாது.

 

அமிர்தவல்லி இருக்கட்டும்.. உங்க சிநேகிதி மோகனவல்லி, அதான் கொட்டகுடித் தாசி.  கூடப் படுக்க வான்னு அவ கூப்பிட்டிருந்தா?

 

அவர் என்னை தீர்க்கமாகப் பார்த்தார்.

 

நிச்சயம் போயிருப்பேன்.

 

நான் ஒண்ணும் பேசாமல் தலையை முடிஞ்ச படி வெளியில் வந்தேன். தீத்தி இருந்த குங்குமத்துக்கு மேலே கோவில் பிரசாதமா வந்த குங்குமத்தை வச்சேன். மதுரை மீனாட்சி மஞ்சள் குங்குமம். இதமா வாசனை அடிக்கற அம்மன் குங்குமம் அது.

 

பத்து நாளா மனசுலே வச்சுப் புழுங்கி, சரியா பேசாம, சாப்பிடாம இருந்த விரதம் கலைஞ்சு இதோ எழுதிண்டிருக்கேன் எல்லாத்தையும்.

 

வாழ்ந்து போங்கோ. வாழ்ந்து போங்கோ எல்லோரும்.  வய்யலே. திட்டலே. மனசுலே  பிரியமும் இல்லாம, விரோதமும் இல்லாம, குரோதமும் இல்லாம, குரூரம் இல்லாம, குசும்பும் இல்லாம சொல்றேன். வாழ்ந்து போங்கோ.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன