என் அல்புனைவுக் கட்டுரைத் தொகுதிகள், ஸீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தால் ஏழு புத்தகங்களாக வெளியிடப்பட்டு வருகின்றன். அவற்றில் ஒன்று ‘இதுவும் அதுவும் உதுவும்’. நூலில் இருந்து கொஞ்சம்போல் இங்கே தருகிறேன்.
இது ஆபீசுவரி இல்லை. நாளது தேதிவரை மொத்தமே ரெண்டு ஆபிசுவரி தான் எழுதியிருக்கிறேன். முதலாவது, தோழர் ஈ.கே.நாயனாருக்கு. கண்ணூர் பய்யாம்பலம் மாயானத்திலிருந்து பெங்களூர் வந்து இறங்கியதும் மிச்சக் கண்ணீர் பார்வையை மறைக்க மாத்ருபூமி ஸ்டைல் இரங்கல் நடையில் எழுதியது. திண்ணைக்கு அனுப்பும் முன்பு ஒரு தடவை படித்தேன். ‘நல்லா வந்திருக்கு’ என்று மனம் நிறைய ஆனந்தம். ஆபிசுவரிக்கு இதைவிட அவமானம் கிடையாது. டெலிட் செய்துவிட்டு பய்யாம்பலம் பயணக் கட்டுரையாக்கி அனுப்பி வைத்தேன்.
ஆர்தர் சி கிளார்க் இறந்தபோது மனுஷ்யபுத்ரன் ஒரு சாயந்திரம் கூப்பிட்டு விடிகாலைக்குள் எழுதி அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டார். அது என் கல்யாண வெள்ளிவிழா நாள். ராத்தூக்கம் விழித்து மாஞ்சுமாஞ்சு எழுதி – அதைவிட முக்கியமாக வெள்ளிவிழா ராத்திரியில் கொண்டாட வேறே என்ன இருக்கு?- அனுப்பி வைத்தேன். சொன்ன சொல் காப்பாற்றிய நிம்மதி தான் அப்போது. ஆபிசுவரிக்கு ஒத்து வராத உணர்வு இந்த நிம்மதியும்.
இனிமேல் நானே போனால் கூட ஆபிசுவரி எழுத மாட்டேன் என்று சத்தியம் செய்தேன். சுஜாதா இறந்து போனார். மலர் வளையத்தோடு அஞ்சலி செலுத்தப்போய் சீனியர், ஜூனியர், சக எழுத்தாளர்களோடு சுஜாதா நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்தபோது பக்கத்தில் கனிமொழி அழுதபடி நின்றிருந்தார். அவரைப் பாதித்த துக்கம் என்னை பாதிக்காதபடிக்கு குமுதம் ரிப்போர்ட்டரிலிருந்து கூப்பிட்டு ‘ஃபாரம் ரெடி பண்ணனும். அனுப்புங்க’ என்று அடிக்கடி விரட்டிக் கொண்டிருக்க, சுஜாதா பற்றி உடனடி கட்டுரை எழுதி அனுப்பினேன். நினைவுக் கூட்டத்திலும் சொன்னேன் – சுஜாதா வாழ்க்கையைக் கொண்டாடும் கூட்டம் இது. Celebrating life is better than mourning a death.
இந்த வாரம் புதன்கிழமை விடிந்தபோது இன்னொரு இழப்பு.
காலை ஐந்தரை மணிக்கு கஸ்தூரி ரங்கன் காலமாகி விட்டார்.
இந்திரா பார்த்தசாரதி மொபைலில் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். தொடர்ந்து திருப்பூர் கிருஷ்ணனின் இ-மெயில். பிரமை பிடித்தமாதிரி ஒரு நிமிடம் இருந்தது.
அப்பாவோ பெரியப்பாவோ இறந்து போன துக்கத்தின் déjà vu நிழலிட்டது. கல்யாணச் சாவு. மனதைத் தேற்றிக் கொள்ளலாம். இது கணையாழிச் சாவு ஆச்சே. எல்லா சாவுச் செய்தியும், பேசி முடித்து வெதுவெதுவென்று வென்னீரில் குளித்து விட்டு சூடாக ரெண்டு தோசை சாப்பிட்டு ஆபீஸ் கிளம்புகிற அன்றாட நிகழ்வில் கிளைக்கதையாவது போல் இது இல்லை. ரெண்டு வரி ட்விட்டரீல் கீச்சு பதிவது மாதிரி அவ்வப்போது நமநமவென்று நினைவில் வந்து கொண்டே இருப்பது. வந்தது
சென்னைக்கு 75-ல் பேங்கு கிளார்க் வேலைக்கு வந்தேன். தி.நகர் ராமநாதன் தெரு கட்டைப் பிரம்மச்சாரி மடத்தில் நிழல்கள் ரவி இருந்ததற்கு ரெண்டு அறை தள்ளி ரூம் கிடைத்தது. அன்றைக்கு சாயந்திரம் கணையாழி ஆபீசுக்கு முதலில் போகணும் என்று மனசில் முடிபோட்டு வைத்துக் கொண்டு அப்புறம் தான் பக்கத்து வீட்டு ஜன்னலில் நடிகை கவிதாவை நோட்டமிட்டேன். அந்தப் பொண்ணு நடித்த காற்றினிலே வரும் கீதம் கலர்ப் படம் வெளியாகியிருந்த நேரம் அது.
சாயந்திரம் சீக்கிரம் திரும்பிய மற்ற பிரம்மசாரிகள் இன்னும் ஜன்னலே கதியாக தய்யர தய்யா என்று கவிதா தரிசனத்துக்குக் காத்து நின்றார்கள். நான் பஸ் பிடித்துப்போய் கணையாழி ஆபீஸ் என்று அனுமானம் செய்த, காலம் உறைந்து போன ஒரு கட்டிடத்தில் படியேறினேன். மவுண்ட் ரோடு ஈசானிய மூலையில் தர்பார் ரெஸ்டாரண்டை ஒட்டி நல்லதம்பி செட்டி தெருவில் இருந்த கட்டிடம்.
அது தீபம் பத்திரிகை ஆபீஸ். கணையாழியும் அங்கேதான் பிரசுரமாவதாக சொந்த ஊரில் நண்பர்கள் சொன்னதால் தீபம் நா.பாவிடம் கணையாழி சந்தா கட்ட முயன்று தோற்றேன். ஆனால் தீபம் சந்தாவும் நா.பா பரிச்சயமும் கிடைத்தது.
இதுக்கு இடையில் தான் எப்போதோ கவிதை எழுத ஆரம்பித்தேன். எண்பதுகளில் கணையாழி அலுவலகம் சென்னைக்கு மாறிய பிறகும் நான் கணையாழி, தீபத்தில் புதுக்கவிதையைத் தாண்டி வெளியே கால் வைக்கவில்லை.
தொடரும்