Comrade GR and Guha’s book குஹாவின் புத்தகம், கேசவ் வரைந்த ஓவியம் (தோழர் ஜி.ராமகிருஷ்ணனோடு நடத்தலும்)

காலையில் நடேசன் பூங்காவில் நடக்கும்போது, மூத்த நண்பர் – இவர் வங்கி பொது மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர் – ‘ரெண்டு கோடி, மூணு கோடி’ என்று படு சாதாரணமாகிக் கொண்டிருக்கு’ என்று பணப் புழக்கத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டு போனார். கொஞ்சம் பின்னால் இருந்து வேகமாக நடந்து வந்த இன்னொருவர் ‘என்ன சார், கோடி கோடின்னு கோடி காட்டறீங்க’ என்றார் சிரித்தபடி. வங்கி ஜி.எம் ‘ஆமா, நீங்க கொடி காட்டறீங்க, நாங்க கோடி காட்டறோம்’ என்றபோது அருகில் நடந்து வந்த அந்த இன்னொருவர் தெரிந்த முகமாகவே மனதில் பட்டார். ஆனாலும் காலை நடைக்கு மூக்குக் கண்ணாடி அணிந்து போவதில்லை என்பதால் மசங்கலாகத் தெரியும் உருவத்தை வைத்து நீங்கதானா என்று கேட்க இல்லை என்று அவர் சொல்லி விட்டால்… பேசாமல் நடந்தேன்.

‘இவர் எழுத்தாளர்… எட்சட்ரா எட்சட்ரா..’ என்று பேங்க் ஜெனரல் மேனேஜர் என்னை விவரமாக மற்றவரிடம் அறிமுகப்படுத்த, நடந்தபடியே கை குலுக்கல். உபசார வார்த்தைகள்.

நான் அப்படியே நடந்திருக்கலாம். ஆனாலும் வாய் சும்மா இருக்காதே..

வந்தவரிடம், ‘சார் நீங்க..’ என்று இழுத்தேன். ஜி.எம் சட்டென்று இடை வெட்டினார்.

‘என்ன முருகன், காம்ரேட் ஜி.ஆர் தெரியலியா?’

நான் பார்த்ததுமே அவரை அன்புக்கும் மதிப்புக்கும் உரிய மார்க்சிஸ்ட் கட்சி தமிழ்நாட்டு மாநிலச் செயலாளர் தோழர்,ஜி ராமகிருஷ்ணன் என்று தான் நினைத்தேன். ஆனாலும் கண்ணாடி இல்லாமல் தவறாக அடையாளம் கண்டு கொண்டு..

வேணாம் என்று விட்டது சரிதான்.. அதோடு நிறுத்தியிருக்கக் கூடாதா..

தோழர் ஜி.ஆரை நாளைக்குப் பார்க்கும்போது முதல் வணக்கம் சொல்ல வேண்டும்..

நடேசன் பார்க்கில் காலை நேரத்தில் கண்ணில் படுகிறவர்களின் சிறு பட்டியல் இது –

இரண்டு பத்திரிகையாளர்கள், வங்கி பொது மேலாளர், துணைப் பொது மேலாளர், திரை-சின்னத்திரை இயக்குனர், சின்னத்திரை அம்மா நடிகையர் இருவர், ஒரு திரைப்பட நடிகர், காமேஷ் ராஜாமணி இசைக்குழு அக்கார்டியனிஸ்ட் – பாடகர்.. அப்புறம் என் அருமை நண்பர், அப்பாவாகவே அவதரித்து நாடக மேடையில் நகைச்சுவை பொழியும் .. பெயர் எல்லாம் அப்பாலே சொல்றேன்.
—————————————————————————————–

நித்தம் எனைவரையும் நின்கை வலிக்குமே
அத்தாநில் நான்வரையத் தூரிகைதா சித்தேநீ
பாசமொடு கண்ணன் பரிமாறிக் கொண்டானாம்
கேசவ் கரத்தில் குழல்.

(இரா.மு 27.5.2013)
————————————————————————————-

மறக்க முடியாத டி.எம்.எஸ்.

நெருங்கிய நண்பரை இழந்த சோகம் மனதில் ஒரு நிமிடம் தலை தூக்குகிறது.

அவருடைய தனிப்பாடல்களே போதும் அவரை எப்போதும் நினைக்க வைக்க. எம்.ஜி.ஆராகவும், சிவாஜியாகவும், இன்னும் தமிழ்த் திரையில் யார் யாரோவாகவும் அவர் குரல் மூலம் இன்னும் பல காலம் இனம் காணப்பட்டுக் கொண்டிருப்பார்.

கூடப் பாடுகிறவர்களை அனுசரித்துப் பாடுகிறதில் அவர் தனிதான்.

‘தங்க நிலவே நீ இல்லாமல் தனிமை காண முடியுமா’ என்று கிட்டத்தட்ட அபஸ்வரமாகப் பாடிய பாரதி விஷ்ணுவர்த்தனோடு இவ்வளவு இசைந்து டி.எம்.எஸ் தான் பாடி இருக்க முடியும்.

அஞ்சலி.
————————————–

ராமச்சந்திர குஹாவின் ‘இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு’ (கிழக்கு பதிப்பகம் வெளியீடு) படித்துக் கொண்டிருக்கிறேன்.

ஆர்.பி.சாரதி சார் (நண்பர் பா.ராகவனின் தந்தையார்) சரளமாக மொழிபெயர்த்திருக்கிறார். மராத்தி பெயர்கள் கொஞ்சம் படுத்துகின்றன – மிருணாள் கோர் போல (கோரே!)

சம்யுக்த விதாயக் தள், மகேந்திர சிங் திக்காயத், சௌதிரி சரண் சிங், பிந்த்ரன் வாலே, லோங்கோவால், தம்தமி தகசல் என்று 70-களிலும் 80-களிலும் அநாயசமாகப் புகுந்து புறப்படுகிற வரலாற்று நூலில் சுவாரசியம் எந்த இடத்திலும் குறையவில்லை.

ராமானந்த் சாகர் தூர்தர்ஷனில் ‘ராமாயணம்’ மெகா சீரியலை 1980-களில் தொடங்கியபோது, நாடே ஞாயிறு காலை நேரங்களில் டெலிவிஷன் முன்னால் உட்கார்ந்து விட்டது என்பதை அழகாகப் பதிவு செய்திருக்கிறார் குஹா.

‘இந்துக்கள் வணங்கும் பல கடவுள்களில் ஒரு வராக மட்டுமே கருதப்பட்டு வந்த ராமர், இத்தொடரின் உதவியால் அக்கடவுளர் அனைவரிலும் முக்கியமானவராகவும், கவர்ச்சிகரமானவராகவும் ஆகிவிட்டார்’ என்கிறார் ராமச்சந்திர குஹா

ராமானந்த் சாகர் தூர்தர்ஷனில் காட்டித்தான் ராமனைப் பெருங்கடவுள் ஆக்கினாரா என்ன? வால்மீகியும், கம்பனும், துளசிதாசும், துஞ்சத்து எழுத்தச்சனும் பாடிய, இந்தியக் கலாச்சாரத் தொடர்ச்சியின் உருவகம் அன்றோ ராமபிரான்?

இந்தப் பத்தியை கிழக்கு தாராளமாக வெட்டியிருக்கலாம்.

கொஞ்சம் எல்லோரும் சிரமம் பார்க்காம, ராமச்சந்திர குஹாவின் புத்தகத்தை ஒரு தடவை படிச்சுடலாமே.. நல்ல புத்தகம்.. நண்பர்கள் வாங்கினால் (என்) பதிப்பாளருக்கும் நல்ல புத்தகம் விற்பனையாகும் நிறைவு கிடைக்கும்…

குஹா புத்தகத்துக்குத் திரும்ப வரேன்.. அவர் புத்தகத் தலைப்பு ‘இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு. கிழக்கு வெளியீடு

அவர் இந்தப் புத்தகத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொள்கிறார். அத்தியாயம் 25 வரை சொல்லப்படுவது 1947 – 1990 வரையான காலகட்டத்து நிகழ்ச்சிகள். அத்தியாயம் 26 க்கு அப்புறம் 1990க்குப் பிந்தைய நிகழ்வுகள்.

இருபத்தைந்தாம் அத்தியாய முடிவில் அவர் சொல்றார் – ‘ இந்த அத்தியாயத்தோடு இந்தப் புத்தகம் வரலாறு என்பதிலிருந்து மாறி, வ்ரலாற்று ரீதியாக எழுதப்படும் பத்திரிகையாளரின் கட்டுரைகள் என்று ஆகிறது’.

இந்தத் தன்னிலை விளக்கத்தை முன்கூட்டியே சொல்லி இருந்தால் – முழுப் புத்தகத்தையும் வரலாற்று ரீதியான கட்டுரைகள் என்று குறிப்பிட்டிருந்தால் – நான் ஏன் என்று கேட்டே இருக்க் மாட்டேன்.

1947- வரை இது வரலாற்றுப் புத்தகமாக இருக்கிறது என்றால், வரலாற்றுப் புத்தகத்துக்கும், கட்டுரை – புனைகதைக்கும் இருக்கும் வேறுபாடு நினைவு வர வேண்டும். வரலாறு நடந்ததை நடந்தபடி சொல்லுதல். எனக்குப் பிடித்ததை, விருப்பப்பட்ட மாதிரி சொல்ல இல்லை அது.

1984-க்கு அப்புறம் தொலைக்காட்சி என்ற ஊடகம் இந்திய சமூக வாழ்க்கையில் ஆழமாக ஊடுறுவியது. ராமானந்த் சாகர் ‘ராமாயணம்’ தொலைக்காட்சித் தொடராக வந்தது. நாடு முழுக்க அது ஈர்ப்போடு பார்க்கப்பட்டது.

இது வரலாறு. குஹா வரலாற்றை எழுதியிருந்தால் அங்கே நிறுத்தி இருக்க வேண்டும்.

பத்தோடு பதினொன்றாக அதுவரை இருந்த ராமன் என்ற தெய்வத்தை பெருந்தெய்வம் ஆக்கியது ராமானந்த் சாகரின் டிவி ராமாயணம் – இது குஹாவின் வரலாற்று ரீதியான, ஆசிரியர் பார்வையிலான சொல்லாடல்.

இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன