24*7 and Navaloorஇருபத்துநாலு * ஏழும் நாவலூரும்

காலையில் எழுதியிருந்தேன் – பாவம், நாவலூரில் ஒரு பொண்ணு ஏழாம் மாடியில் இருந்து குதிச்சிருக்கு. முன்னாடி மாமல்லபுரம் பக்கம். அதுக்கு முந்தி ஐஐடி அருகே. துறை சார்ந்து மனவியல் நிபுணர்கள் ஆய்வு செய்யணும். சென்னையில் அதிகமா நடக்கற மாதிரி, அதுவும் பெண்கள் பாதிக்கப்படற மாதிரி தோணறது. ஆழ்ந்த அனுதாபங்கள்

என் 24*7 இது மாதிரியான அனுபவங்களின் அடிப்படையில் எழுதினது தான் (நன்றி – விகடன் சிறுகதைத் தொகுப்பு)

இருபத்துநாலு பெருக்கல் ஏழு
—————————————————
இரா.முருகன்

ரெட்டி எனக்கு ஈ-மெயில் அனுப்பியிருந்தான்.

‘நடுராத்திரியில் டெலிவிஷன் பெட்டிக்குள் இருந்து நாலைந்து பேர் இறங்கி வருகிறார்கள். உடனே அறையைக் காலி செய்துவிட்டு வெளியேறாவிட்டால் நாளைக்கு என் சாவு தலைப்புச் செய்தியாகப் படிக்கப்படும் என்று மிரட்டுகிறார்கள். ‘

நான் என் கண்ணாடிக் கூண்டிலிருந்து வெளியே பார்த்தேன். அடுக்கடுக்காக விரிந்த புரோகிராமர்களின் கம்ப்யூட்டர் வரிசைக்கு ரொம்பவும் பின்னால் நாலாவது சுற்றில் ரெட்டியின் தலை தெரிந்தது. மேல் கூரையை வெறித்துக் கொண்டிருந்தான் அவன்.

பத்து அடி நடந்தால் என் அறைக்கு வந்துவிடலாம். எதற்காக ஈ-மெயில் அனுப்பிவைக்க வேண்டும்? அப்புறம் ஈ-மெயில் சொன்ன விஷயம். ஏதாவது ஜோக் அனுப்ப உத்தேசித்துப் பாதி எழுதியதை ஞாபக மறதியாக அனுப்பிவிட்டானா?

கம்ப்யூட்டர் கம்பெனியில், அதுவும் உலகப் பிரசித்தியான நிறுவனத்தில் சீனியர் மேனேஜர் உத்தியோகம் பார்ப்பது மாதிரித் தொல்லை பிடித்த சமாச்சாரம் வேறு எதுவும் இல்லை. தலைக்கு மேலே உட்கார்ந்து முதலாளி வர்க்கம் ‘இருபது மில்லியன் டாலர் பிசினஸ் இந்த வருடம் பிடித்துக்கொண்டு வராவிட்டால் வயிற்றுக்குக் கீழே ஆப்பரேஷன் செய்து நீக்கிவிடுவோம்’ என்று உத்தரவு போட்டுக் கத்தரிக்கோலோடு காத்திருப்பார்கள். வாரம் ஏழு நாள் இருபத்து நாலு மணி நேரம் வெள்ளைக்காரத் துரைகளின் கழிப்பறையைக் கழுவி, கால் பிடித்து விட்டு சிஷ்ருஷை செய்தாலும் ஒரு டாலர் அதிகமாக பிசினஸ் பெயராது என்பது அவர்களுக்கும் தெரியும். இருப்பதும் கைநழுவிப் போகாமல் காப்பதற்காக மேற்படி கஸ்டமர் துரை, துரைசானிகளுக்கு உள்ளாடை துவைத்துப் போடுகிறது தவிர மற்ற சகலமான குற்றேவலும் செய்யத்தான் என்னை சீனியர் மேனேஜராக்கிக் கண்ணாடிக் கூண்டில் அடைத்து பெரிய ஹாலில் ஐநூறு புரோகிராமர்கள், பிராஜக்ட் லீடர், பிராஜக்ட் மேனேஜர் வர்க்கங்களுக்கு நடுவே உட்கார்த்தியிருக்கிறார்கள்.

இந்த ஐநூறு சகபாடிகளில் பெரும்பாலானவர்கள் கடைசி கட்ட இண்டர்வ்யூவில் நான் நேரில் ஒரு நிமிடமாவது சந்தித்துப் பேசித் தேர்ந்தெடுத்தவர்கள். ரெட்டியை ஆந்திராவில் விசாகப்பட்டிணத்திலோ, ராயலசீமையிலோ வைத்து டெலிபோனில் இண்டர்வ்யூ செய்த கம்பெனியின் தொழில் வல்லுனர்கள் பலமாக சிபாரிசு செய்த காரணத்தால் அவனைச் சந்திக்காமலேயே சரி என்று சொல்லிவிட்டேன். பையன் வேல¨க்குச் சேர்ந்து ஒரு மாதம் ஆகிறது. தினசர் ஹலோ சொல்வதோடு சரி. இன்றைக்கு சாயந்திரமாவது அவனைக் கூப்பிட்டுப் பேசவேண்டும் என்று நேற்று நடுராத்திரி வீடு திரும்பும்போது தீர்மானமெடுத்திருந்தேன். அவனே இப்போது ஈ-மெயில் அனுப்பியிருக்க்கறான். விஷயம் தான் என்னவென்று புலப்படவில்லை.

மேஜையில் இருந்த நாலு டெலிபோனில் இரண்டு ஒரே நேரத்தில் ஒலித்தது. சிவப்புத் தொலைபேசியை முதலில் எடுத்தேன். மும்பை தலைமை ஆபீசிலிருந்து படியளிக்கும் பெருமாளான கம்பெனித் தலைவர் மற்றும் நியூயார்க், லண்டன், ஸ்டாக்ஹோம் போல இண்டர்நேஷனல் தலைநகரங்களில் சொகுசு வாசம் அனுபவித்தபடி டெலிபோனில் லாடம் கட்டும் உப கடவுள்கள் குரல் ரூபமாக வந்து சேரும் மார்க்கம் இது.

“போன மாதம் அட்ரிஷன் பதிமூணு புள்ளி நாலு பெர்செண்ட். இந்த மாதம் அது பதிமூணு புள்ளி ஏழு. என்ன ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட் செய்து முடியைப் புடுங்கறே?”
போன மாதம் கால் கடுதாசி கொடுத்துவிட்டு ஓடினவர்களைவிட இந்த மாதம் இரண்டு பேர் அதிகம். மற்ற கம்பெனிகளில் கூடுதல் சம்பள ஆசை காட்டி இவர்களைத் தூண்டில் போட்டுப் பிடித்துப் போனதற்கு நான் என்ன செய்ய முடியும்?

தலைவர் வெடித்துச் சிதறி ஓய்ந்தபோது முகத்தைத் துடைத்துக்கொள்ள மேஜைப் பக்கம் பேப்பர் நாப்கின் தேடினேன். அங்கே வெகு கரிசனமாக யாரோ டாய்லெட் பேப்பர் சுருளை வைத்திருந்தார்கள். முகமும் பின்புறமும் ஒன்று என்றாகிப் போனபோது எந்தப் பேப்பரால் துடைத்தால் என்ன? டாய்லட் பேப்பரைக் கிழித்து முகம் துடைத்துக் கொண்டிருந்தபோது அடுத்த டெலிபோன் ஒரு வினாடி ஓய்ந்து அழிச்சாட்டியமாக மறுபடி சத்தம் போட்டது. எந்த கஸ்டமரோ? புழுத்த நாயே என்பதை அழகான ஆங்கிலத்தில் மரியாதையாகச் சொல்லப் போகிறான். போகிறாள்.

ஹலோ என்றேன் குரலில் செயற்கை உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு. “சார் நான் தான் கிருஷ்ணன் நம்பியார்”. வெளியே பார்த்தேன். பிராஜக்ட் மேனேஜர் நம்பியார் அவனுடைய குட்டி மரக்கூண்டில் தலையை மட்டும் குருவி மாதிரி எக்கிப் பார்த்துக்கொண்டு •போனில் பரபரத்தான். அவசரமாகப் பேச வேண்டுமாம். நடக்கச் சோம்பல் படுகிற நடுவயதுக்காரன். கையை அசைத்து உள்ளே வரச் சொன்னேன்.

“எங்கே இருந்து சார் பிடிச்சீங்க இந்த ரெட்டியை? ஒரே சல்யம் புள்ளிக்காரனோட”

நம்பியார் உள்ளே வந்ததுமே குற்றப் பத்திரிகை வாசித்தான். டெலிபோனில் ரெட்டியை ஆந்திராவில் தேடிப் பிடித்து இண்டர்வ்யூ நடத்திய குழுவில் அவனும் உண்டு என்பதை சவுகரியமாக அவன் மறந்து போனதை நினைவு படுத்தினேன்.

“சரி சார், நாங்க தான் சொல்றோம். நீங்க தீர விசாரிச்சு ஆளெடுக்க வேண்டாமா? பிளேட்டைத் திருப்பிப் போட்டான் அவன். அடுத்த உபகடவுள், கடவுள் பதவி உயர்வுகளுக்குச் சகல தகுதிகளும் உள்ளவன்.

“நம்பியாரே, பிரச்சனையை நாலு வரியிலே சொல்லிட்டு நட” நான் அவசரப்படுத்தினேன். டாய்லெட் போகணும். வெளியே இன்னும் எத்தனை பேர் ராஜினாமாக் கடிதாசு எழுதிக் கொண்டிருக்கிறார்களோ? உளவறிந்து கையைக் காலைப் பிடித்தாவது தடுக்காவிட்டால் அடுத்த மாதமும் டாய்லெட் பேப்பரில் முகம் துடைக்க வேண்டி வரும். அது முதலாளி பின்புறத்தில் ஒற்றி எடுத்ததாக இருக்கும்.

எண்டர்பிரைஸ் ஜாவா மொழி வல்லுனன் என்பதற்காக ரெட்டியை வேலைக்கு எடுத்திருக்கிறோம். பில்கேட்ஸ் அனுக்கிரகத்தோடு களம் இறங்கிய மைக்ரோசாப்டின் டாட் நெட் தொழில் நுட்பத்தை உலகில் பாதி கம்ப்யூட்டர் நிறுவனங்கள் தூக்கிக் கடாசிவிட்டு ஜாவுக்குக் கட்சி மாறியபோது ரெட்டி போன்ற வல்லுனர்களுக்கு மவுசு ஏறிவிட்டது. முகத்தைப் பார்க்காமலே குரலைக் கேட்டுத் திருப்திப்பட்டு, பயோடேட்டாவில் தகுதி விவரம் பார்த்துப் பரவசம் அடைந்து ஆளெடுக்க அதுவும் முக்கிய காரணம். வந்தவனை, கம்பெனி கெஸ்ட் ஹவுசில் தற்போதைக்கு ஹளேயங்காடி நாகப்பா பங்காரப்பாவோடு தங்க வைத்திருந்தோம். இந்த கன்னடக்கார ஹ.நா.பங்காரப்பா புதுசாச் சேர்ந்த இன்னொரு ஜாவா எக்ஸ்பர்ட்.

“ராத்திரி முழுக்க பங்காரப்பா தூங்க முடியலியாம் சார். ரெட்டி அவனை எழுப்பி உட்கார்த்தி ட்யூப் லைட்டை எல்லாம் துணி போட்டு மூடச் சொல்றானாம். அதிலேருந்து யாரோ இறங்கி வந்து அவன் தூக்கத்தைக் கெடுக்கறாங்களாம். “

ஆக ரெட்டி விஷயத்தில் ஏதோ தகராறு. காலையில் அவன் அனுப்பிய ஈ-மெயில் வேறு வயிற்றில் புளியைக் கரைத்தது. ஆள் தெரியாமல் உள்ளே நுழைத்திருக்கிறோமா?
“அப்புறம் இன்னொரு சேதி சார். ஜப்பான் ப்ராஜக்ட் இருக்கே, அதான் யோகுச்சி சான், யஷிகரோ சான் வகையறா. அவங்களுக்கு நவம்பர் எட்டு டெலிவரி வேணுமாம். சொன்னதுக்கு நாலு நாள் முந்தி. டோக்கியோவிலே யாரோ வாக்குக் கொடுத்தாச்சு”

“அதுக்கென்ன, செஞ்சாப் போச்சு” நான் ட்யூப் லைட்டாகச் சொன்னேன்.

“எப்படி சார்? அன்னிக்கு தீபாவளி. அந்த டீமிலே நாலு மதுரைக்காரங்க, நாலு கோயம்புத்தூர் பசங்க. மிச்சம் எட்டு பேரும் நாக்பூர் மராத்திப் பொண்ணுங்க. எல்லோருக்கும் ரெண்டு நாள் தீபாவளி லீவு போன மாதம் தான் அப்ளை செய்து நீங்க அனுமதிச்சிருக்கீங்க” நம்பியார் முகத்தில் அலாதி ஆனந்தத்தோடு சொன்னான்.

“அதை நான் கேன்சல் பண்ணிட்டேன்”. க்ரூப் ப்ராஜக்ட் மேனேஜர் எஸ்.ஆர்.ஆர் அறிவிப்பு கொடுத்தபடி உள்ளே நுழைந்தான். மும்பை கடவுளின் பூர்ண அனுக்கிரம் உள்ளவன் அவன். அவன் கூடவே கண்கலங்கிய படிக்கு வந்த நீனா ஒரு அழகான இளம் மராத்திப் பெண். அதைவிட முக்கியமாக, அவளும் ஜாவா மொழி எக்ஸ்பர்ட்.

“சார், எங்க அப்பா காலமானதிலே இருந்து ரெண்டு வருஷமா தீபாவளி இல்லே. இந்த வருஷமாவது துக்கத்தை மறந்து வீட்டோட தீபாவளி கொண்டாடலாம்னு ரயில் டிக்கெட் எடுத்திருக்கேன். இன்னிக்கு ராத்திரி வண்டி. போக விடுங்க சார், ப்ளீஸ்”

நீனா ஜாக்கிரதையான ஆங்கிலத்தில் சொல்லியபடி கெஞ்சியபோது, எஸ்.ஆர்.ஆர் தடியன் ஈவிரக்கமில்லாமல் சொன்னது இது – “ரெண்டு வருஷம் இல்லாத தீபாவளியை இன்னொரு வருஷம் ஒத்தி வைச்சா என்ன குறைஞ்சுடும்? ”

இவன் உள்ளூரில் காரும் பங்களாவும் வீடும் பெண்டாட்டி குழந்தைகளுமாகக் குளிரக் குளிர எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்னானம் செய்து பட்டாசு வெடித்து அல்வா சாப்பிட்டு ஏப்பம் விடும்போது அந்தப் பரிதாபப்பட்ட மராத்திப் பெண் வீட்டோடு சந்தோஷமாக இரண்டு நாள் இருந்துவிட்டு வர அனுமதிக்க மாட்டானாம்.

“டெலிவரியை ஷெட்யூல் பிரகாரம் தான் தரமுடியும்னு கஸ்டமர் கிட்டே சொல்லு” நான் சொல்லிக் கொண்டிருந்தபோதே சிவப்பு தொலைபேசி அதிகாரமாக ஒலித்தது. மும்பாயில் கடவுளுக்கு சுற்றுப் பிரகாரத்தில் பிரதிஷ்டையான ஒரு பரிவார தேவதை.

“டோக்கியோவில் இருந்து கரோஷி சான் தலைவர் கிட்டே பேசிட்டார். ஜப்பான் பிராஜக்ட் டீம் அடுத்த மாசம் தீபாவளியை வச்சுக்கலாம். இது அரச கட்டளை”.

என் பதிலுக்குக் காத்திருக்காமல் தொலைபேசி அந்தப் பக்கத்தில் பட்டென்று வைக்கப்பட, உள் விஷயம் ஏற்கனவே அறிந்த எஸ்.ஆர்.ஆர் விஷமமாகச் சிரித்தான்.

“போய் வேலையைப் பாரு. இல்லே கால் கடுதாசு கொடுத்துட்டு தீபாவளிக்கு ஊருக்குப் போ”. அவன் சொன்னபோது அழுதபடிக்கு என் மேசையில் வைத்திருந்த டாய்லெட் பேப்பர் சுருளைத் தரையில் வீசிவிட்டு நீனா வெளியே போனாள்.

என் கண்ணாடிக் கூண்டுக்கு வெளியே ஏழெட்டுத் தலைகள் தட்டுப்பட்டன. ரெட்டியின் பக்கத்து மேஜைகளில் உட்கார்ந்து வேலை பார்க்கும் ப்ரோகிராமர்கள் எல்லோரும். கூட்டமாகக் கிளம்பி வந்து பதற்றத்தோடு நின்று கொண்டிருக்கிறார்கள்.

“ரெட்டி எல்லோரையும் கம்ப்யூட்டரை ஆ•ப் செய்துட்டு உட்காரச் சொல்றான். இல்லாட்ட மணிக்கட்டுலே பிளேடாலே அறுத்துக்கிட்டுச் செத்துப் போயிடுவேன்னு பயமுறுத்தறான். எல்லா கம்ப்யூட்டர் டெர்மினல்லே இருந்தும் அடியாள் கும்பல் ஜீப்பிலே வந்து இறங்கி அவன் வீட்டுக்காரியையும் குழந்தையையும் பிடிச்சுட்டுப் போக ரெடியா இருக்காங்களாம். நாங்க அதுக்கு ஒத்தாசை பண்றோமாம்”.

நான் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்தேன். நம்பியார் திரும்ப கண்ணாடிக் கூண்டுக்குள் நுழைந்திருந்தான்.

“மும்பையிலே இருந்து ஹெச்.ஆர் தலைமை அதிகாரி என்னோட பேசினார் சார். உங்க லைன் பிஸியா இருந்ததாம். ரெட்டி விஷயம்தான். அவன் தலைக்கு வட்டுன்னு முந்தின கம்பெனியிலே துரத்திவிட்டுட்டாங்களாம். விசாரிக்காம சேத்துட்டீங்க”.

வட்டுன்னா? மலையாளத்தில் பைத்தியம். நம்பியாரும் மலையாளமும் நாசமாகப் போக.

“இங்கே ஏம்ப்பா கூட்டம் போடறீங்க? போய் வேலையைக் கவனியுங்க. அந்தக் கிறுக்கனை வீட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யச் சொல்றேன்”.

எஸ்.ஆர்.ஆர் சொல்லியபடி என்னைச் சந்திக்க வந்த குழுவை வெளியே துரத்திக்கொண்டு போனான். நம்பியாரும் என்ன இழவுக்கோ என்னைப் பார்த்துக் கட்டைவிரலை உயர்த்திக் காட்டியபடி வெளிநடப்புச் செய்தான்.

எல்லோரும் போக, ஒரு பையன் மட்டும் நின்றான். தெலுகுதேசப் பிரதிநிதிதான். ரஜினி சினிமா ரிப்பீட்டாகப் பார்த்து, தமிழும் சுமாராகப் பேசக்கூடியவன்.

“சார், ரெட்டி வந்ததுலே இருந்து ரெண்டு வாரம் நல்லாத்தான் வேலை பார்த்தான்.சகஜமாப் பேசினான். ஹைதராபாத்துலே கம்ப்யூட்டர் கம்பெனியிலே வேலை பார்த்திருக்கான் வெளிநாட்டு அசைன்மெண்டிலே ஆணி புடுங்க நியூயார்க் போயிருக்கான். அங்கே ராத்திரி வீட்டுக்குத் திரும்பற நேரத்துலே மக்கிங். அதான் சார், அடிச்சு உதச்சு வழிப்பறி செஞ்சதிலே ஆள் அப்செட் ஆயிட்டான். திரும்பி வந்து ஆஸ்பத்திரியிலே கொஞ்சநாள் அட்மிஷன். அப்புறம் உள்ளூர்லேயே வேலை”.

ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பி வந்து உள்ளூர் கிளையிலேயே ரெட்டி வேலைக்குப் போனபோது சக்கையாகப் பிழிந்து வேலை வாங்கியிருக்கிறார்கள். வெளிநாட்டில் கஸ்டமர் ஆபீசில் உட்கார்ந்து வேலை பார்த்து கம்பெனிக்கு மூணு மடங்கு அதிகம் வருமானம் தர அனுப்பினால் நஷ்டத்தை உண்டாக்கி விட்டுத் திரும்பி வந்தவனுக்கு கம்ப்யூட்டர் கசாப்புக்கடைகளில் இந்த மரியாதைதான் கிடைக்கும்.

அங்கே துரத்தி விடப்பட்டு எப்படியோ இங்கே வந்து சேர்ந்தபோது முதல் இரண்டு வாரம் எஸ்.ஆர்.ஆர் தினசரி பதினாறு மணி நேரம் உழைக்க வைத்திருக்கிறான்.

“ஏற்கனவே மைண்ட் அப்செட் ஆகியிருந்தவன் திரும்ப அதேபடி ஆகிவிட்டான். தினசரி ராத்திரி வழிப்பறிக் கூட்டம் டெலிவிஷன்லேயிருந்தும் லைட்டுலே இருந்தும் எறங்கி வந்து மிரட்டுதுன்னு சொல்லிப் பயப்படுறான். அவன் பொண்டாட்டியையும் கைக்குழந்தையையும் அவங்கதான் வலுக்கட்டாயமா மாமனார் வீட்டுக்குப் போக வச்சுட்டாங்களாம். ஊருக்குப் போய் அவங்களைத் திரும்ப அழைச்சு வந்துட்டா எல்லாம் சரியாப் போயிடும்னான். அதுவரை யாரையும் இங்கே கம்ப்யூட்டரை ஆன் செய்ய விடமாட்டானாம்.”

தெலுங்குப் பையன் தொடர்ந்தபோது சிவப்பு தொலைபேசி திரும்ப அதட்டியது. எடுத்துக் காதில் வைக்கும்போதே உஷ்ணத்தில் காது பொசுங்கியது.
“இருக்கற நல்ல ஆளை எல்லாம் போக விட்டுடறே. அப்புறம் ஸ்க்ரூ கழண்ட பசங்களை எங்கேயோ தேடிப் பிடிச்சு வேலைக்குச் சேர்த்துக்கறே. சீனியர் மேனேஜர் வேலைக்கே லாயக்கு இல்லாத ஆளய்யா நீ” கடவுள் எகிறினார்.

“சாரி சார். உடனே பத்திரமா ஊருக்கு அனுப்பி வைச்சுடறேன்”.

“நீ வேலையைப் பாருய்யா. நாய் வண்டியோ குதிரை வண்டியோ அவனே பிடிச்சுப் போய்க்கட்டும். ஒரு பைசா தரக்கூடாது சொல்லிட்டேன். “

பாத்ரூம் போய்விட்டு அடுத்த பிரச்சனையில் முழுகி முத்தெடுக்கக் கிளம்பினேன். கதவைத் திறக்கிறபோதே முட்டி மோதியபடி உள்ளே வந்தான் நம்பியார்.

“சார், தீபாவளிக்கு மட்டும் வேலை பார்த்தாப் போறாது. ஜப்பான்காரன் டெட்லைனை சந்திக்கணும்னா இன்னிக்கு ராத்திரியிலேருந்து தொடர்ந்து எல்லோருக்கும் சிவராத்திரிதான். கதவை இழுத்துப் பூட்டி இங்கே பொட்டி தட்டற பொண்ணு பையன் எல்லாரரையும் அடைச்சு வச்சுடலாமா? சும்மாவா? கை நிறையச் சம்பளம் வாங்கறாங்க இல்லே? உழைக்கட்டும். வாங்க, ஒரு மீட்டிங் போட்டு சொல்லிடலாம்”.

நான் ஒன்றும் பேசாமல் பாத்ரூமுக்கு நடந்தேன்.

நீனா சீட் பக்கம் நடந்தபோது தலையை நிமிர்த்திப் பார்த்தாள். அழுகை இன்னும் மாறாத குரலில் சொன்னாள் – “சார், லீவு இல்லேங்கிறார் பிராஜக்ட் மேனேஜர். நாங்க எல்லாரும் ரிசைன் பண்ணிட்டு ஊருக்குப் போறோம். இந்த வேலையே வேணாம். பப்ளிக் ஹாலிடே, ஞாயித்துக்கிழமை கூட வரச்சொல்றீங்களே. எதுக்கு உழைக்கணும்? யாருக்கு இதோட பலன் எல்லாம் போய்ச் சேருது? எங்களுக்கா?”

“நீனா, உனக்கும் உங்க டீம் மெம்பர்களுக்கும் நான் கொடுத்த ரெண்டு நாள் லீவுலே எந்த மாற்றமும் இல்லே. சாயந்திரம் ஊருக்குப் போயிட்டு தீபாவளி முடிச்சு உடனே வந்து சேருங்க. நான் கிளையண்டுக்குச் சொல்லிக்கறேன். காண்ட்ராக்ட் பிரகாரம் ஏற்கனவே ஒத்துக்கிட்ட ஷெட்யூலை மாத்தச் சொல்றது தப்புன்னு விவரமா லெட்டர் எழுதறேன். இந்த முடிவுக்கு நானே பொறுப்புன்னு மேலிடத்துக்கும் எழுதிடறேன். உங்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.”.

ரெட்டி சீட்டில் இருந்து எழுந்து வந்து ஹலோ சொன்னான்.

“சார், நானும் என் மகளும் இங்கே வெளியே இருந்தா கொன்னுடுவாங்க. உங்க அறையிலே வந்து உக்கார்ந்து வேலை பார்க்கறேன் சார். நாள் முழுக்க ராத்திரி முழுக்க கோட் அடிக்கச் சொன்னாலும் ரெடி. உங்க லேப்டாப்லே இருந்து அவங்க இறங்க மாட்டானுங்க. அப்புறம், உள்ளே லைட்டை மட்டும் போட்டுடாதீங்க.”.

அந்தக் கூண்டு வேணாம் ரெட்டி. அங்கே டெலிபோன்லே இருந்து இறங்குவாங்க.

நானும் இரண்டு நாள் லீவு போடப் போகிறேன். இவனைப் பத்திரமாக இவனுடைய வீட்டில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். ஆளைப் பார்க்காமலேயே வேலையில் சேர்த்ததால் இதற்கும் நான் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். அவனுடைய, நீனாவுடைய மற்ற துக்கம் துயரமெல்லாம் நான் ஆற்ற முடியாத விஷயங்கள். குறைந்த பட்சம் பரிவு காட்டவேண்டிய கடமையாவது எனக்கு உண்டு. நான் ஜப்பான் நாட்டில் தயாரித்த ரோபோ இல்லை. இனியும் அப்படி ஆக உத்தேசம் இல்லை.

என் கண்ணாடி அறையைப் பார்த்தேன். அந்நியமாகத் தெரிந்தது. நான் திரும்பி வரும்போது அதற்குள் நுழைய வேண்டிய அவசியம் இருக்காது. அநேகமாக அங்கே எஸ்.ஆர்.ஆர் உட்கார்ந்திருப்பான். சிவப்பு தொலைபேசியில் பேசிக்கொண்டிருப்பான். எல்லோருக்கும் சம்பளத்தில் இன்னும் இரண்டாயிரம் அதிகமாக்கி, கூடுதல் நேரம் வேலை வாங்க ஆலோசனையாக இருக்கும் அது. .

“முழு ஆபீசுமே கண்ணாடிக் கூண்டாக்கிட்டேன். கதவைப் பூட்டி வை. யாரும் வெளியே போகக் கூடாது, வாரம் ஏழு நாள், தினம் இருபத்துநாலு மணி நேரம் வேலை”. கடவுள் அவனுக்கு உத்தரவு போட்டுக்கொண்டிருப்பார்.

(இரா.முருகன்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன