Sujatha – Renukaஎன் பெருமை எனக்கு

நேற்றிலிருந்து திரும்பவும் அழையா விருந்தாளியாக மைக்ரேன்.

நோவோடு வாழப் பழகி விட்டது. காலையில் வாக்கிங் போனபோது சிநேகிதர்கள் கவலையோடு விசாரித்தார்கள்- கலகலன்னு பேசுவீங்களே.. என்னாச்சு?

தலைவலி ஒரு பக்கமாக தலையோட்டைக் கெல்லி எடுக்க பிரயத்தனம் செய்ய, நான் செய்வது ‘பேசாதிருந்தும் பழகு’ .

ஏற்றுக் கொண்ட ஒரு கடமைக்காக சுஜாதா சார் எழுதிய சில சிறுகதைகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதாவது எத்தனையாவது தடவையாகவோ.. இது வேலை நிமித்தம் என்று சாக்கு.

’ரேணுகா’ கதை முதலில் படிக்க எடுத்தது. சின்னச் சின்ன வாக்கியங்கள். அந்தக் கதை தொடங்குகிற சாம்பல் பூசிய காலைப் பொழுதில் இருந்து அது முடிகிற அர்த்தராத்திரி வரையான சம்பவங்களை நகர்த்திப் போக அவர் மேற்கொண்ட, குரலை உயர்த்தாத, கதையில் நம்மைக் கரைய விடுகிற straight-faced narration.. பளிச்சென்று கன்னத்தில் அறைகிற முத்தாய்ப்பு..

பிரபலமாக இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக இலக்கிய அங்கீகாரம் மறுக்கப் பட்டவர் அவர்.

தம்பி சுதாகரின் புத்தகத்தை வெளியிட்டுப் பேசும்போது சுஜாதாவின் அறிவியல் கதைகளைப் பற்றிக் குறிப்பிட்டேன். அடுத்துப் பேசிய நண்பர் அறிவியல் கதைகள் இலக்கியம் ஆகாது என்று அபிப்பிராயம் தெரிவித்ததோடு, பெருமையாக வேறு சொன்னார் – நான் சுஜாதா எழுதிய எதையும் படித்தது கிடையாது.

சுஜாதா காலமான போது அவர் வீட்டில் அஞ்சலி செலுத்தி விட்டு மற்ற எழுத்தாள, கலையுலக நண்பர்களோடு சுஜாதா பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை எனக்கு ஒரு பத்திரிகை அலுவலகத்தில் இருந்து மொபைல் அழைப்பு – சார் உங்க கட்டுரையை முடிச்சு அனுப்பிடுங்க.. இஷ்யு க்ளோஸ் பண்ணனும்..

தகனத்துக்குக் கூடப் போகாமல் அழைப்புக்கு மதிப்புக் கொடுத்து விரைவாக வீட்டுக்கு வந்தேன். குளிக்கக்கூட நேரம் இல்லாமல் லேப் டாப் முன் உட்கார்ந்தேன். சுஜாதா நினைவுக் கட்டுரை எழுதி முடித்து இமெயிலில் அனுப்பி விட்டு ஒரு பாட்டம் அழுதேன்.

அன்றைக்கு கட்டுரைக்காக என்னைத் துரத்திய நண்பர் தான் சுஜாதா எழுதிய எதையும் படிக்காதவர். போகட்டும், அவர் பெருமை அவருக்கு.

சுஜாதா எழுதிய எல்லாவற்றையும் நான் படித்திருக்கிறேன். முக்கியமாக, ‘ரேணுகா’வை. அவருடைய அன்புக்கும் விமர்சனத்துக்கும உரிய சீடனாக இருந்திருக்கிறேன்.. இருக்கிறேன் – என் பெருமை எனக்கு.

One comment on “Sujatha – Renukaஎன் பெருமை எனக்கு
  1. Packirisamy N சொல்கிறார்:

    //அழையா விருந்தாளியாக மைக்ரேன்//

    If you are interested, please try this.

    To get rid of migraine, close the right nose and slowly breathe using the left nose, for about 10 minutes. This works for me.

    Regards
    Packirisamy N

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன