கோவையில் முதுபெரும் தமிழறிஞர் திரு கோபாலய்யர் அவர்களைச் சந்தித்தேன்.
தமிழ், வடமொழி, ஆங்கிலம் என்று மும்மொழியிலும் நல்ல புலமை. தேர்ந்தெடுத்த வாசிப்பு. அவற்றை எல்லாம் நல்லாசிரியராக ஆயிரக் கணக்கான மாணவர்களுக்குக் கற்பித்த அனுபவம்.
எல்லாவற்றோடும் கூட, கேள்வி ஞானத்தால் வளர்த்துக் கொண்ட இசையறிவு. இதுவரை 270-க்கு மேற்பட்ட தமிழ், வடமொழி கீர்த்தனங்களை இயற்றியுள்ளார். அவற்றில் சிலவற்றை திரு.நெய்வேலி சந்தானகோபாலன் இரண்டு ஆண்டுகள் முன் சுவாமி தயானந்த சரசுவதி அருளாசியோடு கோவையில் இசைக் கச்சேரி நிகழ்த்தி கோபாலய்யருக்குச் சிறப்புச் செய்திருக்கிறார்கள்.
திரு.நா.மகாலிங்கம், கவிஞர் புவியரசு ஆகியவர்களின் நண்பர்.
வயது 86.
‘இதுதான் விழாவில் வெளியிட்ட கீர்த்தனைத் தொகுப்பு’
என்னிடம் காட்டுவதோடு நிற்காமல் புத்தகத்தைத் திறந்து, கட்டிலில் நிமிர்ந்து உட்கார்கிறார்.
‘மதுரை மீனாட்சி பற்றி இது காம்போதியிலே எழுதினேன்.’
பாடத் தொடங்குகிறார். குரல் சற்றும் பிசிறடிக்காமல் காம்போதி கம்பீரமாக வருகிறது.
நடுவில் நிறுத்துகிறார். பொருள் விளக்குகிறார்.
‘அம்பாள் மலர்னு நினைச்சு வண்டைக் கையில் பிடித்து மூடிக் கொள்ளும் முன்னாடி அது பறந்து போறது. வண்டுக்குப் பயம். அம்பாளைப் பார்த்து இல்லே… ரெண்டு நாள் முந்தி தான் அது மாலை மயங்கும் நேரத்தில் ஒரு தாமரைப் பூவில் தேன் குடிக்க உட்கார்ந்தது. கொஞ்ச நேரத்தில் தாமரை இதழ் மூடிண்டுடுத்து.. ராத்திரி முழுக்க பூவுக்குள்ளே சிறை.. விடிஞ்சு சூரிய வெளிச்சம் வந்து, தாமரை மலரந்ததும் வண்டு தப்பித்துப் பறந்தது. அதெல்லாம் நினைவுக்கு வந்துடுத்து வண்டுக்கு. ஏன்னா, அம்பாளோட முகத்தைப் பார்த்ததும் தாமரை மாதிரி இருந்ததாம்’.
பாட்டைத் தொடர்கிறார்.
’அம்பாள் மெல்ல சிரிக்கிறாள். அது திசையெல்லாம் ஒலிக்கறது’
பாரதிதாசன் சொன்னாரே ‘கங்குலில் ஏழு முகிலினமும் வந்து கர்ச்சனை செய்து கண்டதுண்டோ’.
கோபாலய்யர் முடிக்கிறார் -’எங்கள் மங்கை நகைத்த ஒலியதுவாம்.. அவள் மந்த நகையிங்கு மின்னுதடா’.
பாரதி ‘தராசு’ கதையில் இந்த வரியை ‘ அவள் வாயில் குறுநகை மின்னலடா’ன்னு மாற்றியிருப்பதை ஒரு வினாடி தொட்டுவிட்டு காம்போதி தொடர்கிறது.
அடுத்து கல்யாணி. அபூர்வமான பூர்வி கல்யாணி. சாருகேசி. பாடி முடித்த கையோடு எம்.கே.டியின் ‘காந்தியைப் போல் ஒரு சாந்த சொரூபனை’.
நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.
பாட்டைத் தொடர்ந்து பேச்சு. பக்கத்தில் வைத்திருந்த புத்தகக் குவியலில் ஏதோ புத்தகத்தைத் தேடுகிறார் கோபாலய்யர்.
‘அப்பாவுக்கு இப்போ அப்பப்ப ஞாபக சக்தி தப்பிடறது. என்னையே யாருன்னு கேட்டார் ஒரு தடவை.. சாப்பிட வைக்க, நடக்க வைக்க கொஞ்சம் சிரமம் தான்’
அன்புச் சகோதரி கவிதாயினி-ஓவியர் ஜெயா ரவி சொல்கிறார். கோபாலய்யரின் கடைக்குட்டி மகள்.
’ஆ.. கம்பன் வரிகள்.. மருதம் வீற்றிருக்கும்..’
நான் தொடங்குகிறேன் –
தண்டலை மயில்கள் ஆட
தாமரை விளக்கம் தாங்க
கொண்டல்கள் முழவின் ஏங்க
குவளைக்கண் விழித்து நோக்க
ஒரு வினாடி அடுத்த அடியை நினைத்து தாமதிக்கிறேன். சட்டென்று கோபாலய்யர் குரல்.
தெண்டிரை எழிநி காட்ட
தேம்பிழி மகரயாழின்
வண்டுகள் இனிது பாட
மருதம் வீற்றிருக்கும் மாதோ.
இவருக்கா ஞாபக மறதி?
புத்தகக் குவியலில் ஒரு புத்தகத்தை எடுத்து என்னிடம் தருகிறார். ஆங்கிலத்தில் ராஜாஜி எழுதிய மகாபாரதம்.
’எத்தனை தடவை படிச்சாலும் அலுக்காத இதிகாசமாச்சே இது’
அவர் உற்சாகமாகச் சொல்ல, நான் கூறுகிறேன் – ‘வியாசர் விருந்துன்னு அவர் தமிழ்லே எழுதினது இன்னும் எளிமையா, சுவையா இருக்குமே’.
‘ஆமா, ஆமா.. ஜெயா.. ஜெயா’
ஜெயா ரவி விரைந்து வருகிறார். அவரும் நல்லாசிரியர் தான்.
‘கண்ணு, உங்க ஸ்கூல் லைப்ரரியில் வியாசர் விருந்து இருக்குமே.. கொஞ்சம் எடுத்துண்டு வந்து கொடேன்.. படிக்கணும் போல இருக்கு’.
ஜெயா ரவி சிரிக்கிறார் -’அப்பா இனிமே அந்த புத்தகம் கைக்கு வந்து சேரும் வரைக்கும் என்னை விடமாட்டார் அண்ணா’.
‘அப்பா, நீங்க ஹெட்மாஸ்டரா இருந்த செட்டிகுளம் பள்ளியிலே இருந்து ஆண்டு விழாவில் தலைமை ஏற்றுப் பேச கூப்பிட வந்திருக்காங்க’
கோபாலய்யரின் மகன் வந்து சொல்கிறார்.
’வருஷா வருஷம் நானே வந்தா போர் அடிக்காதா பாவம் குழந்தைகளுக்கு’
சிரித்தபடி மெல்ல முன்னறைக்கு நடக்கிறார் அவர்.
எப்படி அலுக்கும்? அவருக்கு நான் மாணவனாக இருந்திருந்தாலும் இதையே தான் சொல்லியிருப்பேன்.
வாசல் அறையில் அவரைக் கைத்தாங்கலாக வந்தவர்களோடு பேச அமர்த்தி விட்டு, சகோதரி ஜெயா ரவியோடு வெளியே நடக்கிறேன்.
வெளியேயும் ஒரு பெருமழை ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாகப் பொழிந்து கொண்டிருக்கிறது.