Kamal Hassan meets Neela.Padmanabhanநீல பத்மனாபனைச் சந்திக்க வந்த கமல்ஹாசன்

நீல பத்மனாபன் – 75

23 செப்டம்பர் 2013 திங்கள்

விழா அமைப்பு – சென்னை பல்கலைக்கழகம், தமிழ் இலக்கியத் துறை

இடம் பல்கலைக்கழக பவளவிழா மணி மண்டப அரங்கு

நேரம் மாலை 3 மணி

நிகழ்ச்சி நிரல்
——————-
பேச்சாளர்கள் –

நிகழ்வு – ‘நீல பதமனாபனுடன் ஒரு நாள் – ஆவணப்படம் திரையிடல்’

கருத்தாக்கம், இயக்கம், உருவாக்கம் கமல்ஹாசன்; உதவி – இரா.முருகன்

‘கலாகௌமுதி’ வாரப் பத்திரிகையில் (மலையாளம்) இந்தச் சந்திப்பு – ஆவணப்படத் தயாரிப்பு பற்றி நண்பர் எழுதிய கட்டுரை.

மொழியாக்கம் இரா.முருகன். (மொழியாக்கம் பகுதி மட்டும்)

நீல.பத்மனாபனைச் சந்திக்க வந்த கமல்ஹாசன் (கலாகௌமுதி)
—————————————————————————-
வெள்ளை வேட்டியும் சட்டையும் அணிந்தவர். பாரதியார் மாதிரி ரெண்டு பக்கமும் முறுக்கிய மீசை. சட்டை காலரோடு எப்போதும் தாடி சிநேகிதமாக உரசிக் கொண்டிருக்கும். நிதானமான நடை. திருவனந்தபுரத்தில் கிள்ளிப்பாளையம் பைபாஸில் இருக்கப்பட்ட வீட்டில் இருந்து இறங்கி சாலைக் கடைத்தெரு வழி ஸ்ரீகண்டேசுவரம் போய் முக்கண்ணனான பகவானைத் தொழுது அருகிலேயே இருக்கும் துர்க்கா தேவியையும் கும்பிட்டு விட்டு அவர் வீட்டுக்குத் திரும்பும்போது சாயந்திரம் விடைபெற்றுப் போயிருக்கும்.

இந்தப்படிக்கு ஓர் இலையைக் கூட வேதனைப் படுத்தாமல் நடக்கவும், ஓர் எறும்பைக் கூட தொல்லைப்படுத்தாமல் வாழவும் ஆசைப்படுகிற நீல.பத்மனாபனை சந்திப்பதற்காக மட்டும் ஒரு மகாப் பிரபலமானவர் அவர் வீட்டுக்கு வந்தார். சாட்சாத் கமல்ஹாசன்!

காற்றும் கிளியும் கூட அறியாமல், நதிக்கும் கடலுக்கும் கூடத் தெரியாமல் கமல்ஹாசன் திருவனந்தபுரம் வந்தார். திருநெல்வேலியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வந்து சேர்ந்து நட்சத்திர ஹோட்டலில் ராத்தங்கினார். காலையில் நீல.பத்மநாபனின் வீட்டுக்கும் வந்து சேர்ந்தார். யாரும் கமல்ஹாசன் வந்ததைப் பார்க்கவில்லை. அவர் வருகையைப் பற்றி யாருக்கும் தெரியாது.

எதற்காக நீல.பத்மநாபனை சந்திப்பதற்காக மட்டும் கமல் திருவனந்தபுரம் வந்தார்?

கமல்ஹாசனுக்கு நீல.பத்மநாபனோடு நீண்ட நாளாகவே பழக்கம் உண்டு. நல்ல வாசகர் அவர். எழுத்தாளரும் கூட. தமிழ் இலக்கியத்தை ஆர்வத்தோடு படிப்பதையும் புதிய சிந்தனைப் போக்குகளை அதே ஆர்வத்தோடு அவதானிப்பதையும் வழக்கமாகக் கொண்டவர்.

க.நா.சுப்ரமண்யம், தி.ஜானகிராமன், நீல.பத்மநாபன் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளை விரும்பி வாசிக்கும் நடிகர் கமல். சாகித்ய அகாதமி நீல.பத்மநாபனைப் பற்றித் தயாரித்த ஆவணப் படத்தின் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தான் நீல பத்மநாபனும் கமலும் முதல் முறையாக நேருக்கு நேர் பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டார்கள்.

ஆவணப் படத்தின் வெளியீட்டு விழாவில் சொற்பொழிவுகளுக்கு முக்கியத்துவம் தருவதை விட எழுத்தாளர் நீல.பத்மநாபனை முன்னிறுத்திக் கௌரவிக்க வேண்டியது அவசியம் என்று கமல் தன் உரையில் குறிப்பிட்டார்.

எழுத்தாளனின் காலம் முடிந்த பிறகு இல்லை, உயிரோடு இருக்கும்போதே அவனுடைய எழுத்தின் மேன்மைகளைப் பாரட்ட வேண்டுமென்றும், அவனைத் தக்க விதத்தில் கௌரவிக்க வேண்டும் என்றும் கமல் பேசினார். இருபது நிமிட நேர ஆவணப்படத்தை முழுவதும் பார்த்து ரசித்த பிறகே கமல் பேச எழுந்தார்.

நீல.பத்மநாபனின் ‘தலைமுறைகள்’ நாவலைத் தமிழ்த் திரைப்படமாக இயக்கும் கௌதமன் தான் சாகித்ய அகாதமி தயாரித்த நீல.பத்மநாபன் பற்றிய ஆவணப் படத்தின் இயக்குனர். தமிழில் பிரபலமான இயக்குனர் அவர்.

கமலோடு நீல.பத்மநாபனுக்கு ஏற்பட்ட நட்பு மெல்ல ஆழமடைந்தது. நீல.பத்மநாபனின் இளைய மகள் லண்டனில் வசிக்கிறார். மகளுடைய இரண்டாம் பிரசவ நேரம். முதல் பிரசவம் போல் அதுவும் சிசேரியனாக இருக்கும் என்று எதிர்பார்த்து அந்த நேரத்தில் மகள் அருகில் தான் இருக்க வேண்டியது அவசியம் என்று உணர்ந்த நீல.பத்மநாபனின் துணைவியார் லண்டன் போகத் தீர்மானித்தார். அவர் லண்டன் போன பிற்பாடு தனியாக இருக்க வேண்டியிருக்கும் என்பதால் தானும் மனைவியோடு லண்டன் போக முடிவு செய்தார் நீல.பத்மநாபன். அவர் லண்டனில் போய் இறங்கியபோது தான் உலகத்தையே நடுக்கிய லண்டன் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. அதன் தீவிரத்தை அருகில் இருந்தே உணர நீல.பத்மநாபனுக்கு வாய்ப்புக் கிட்டியது.

வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்த இரண்டு நாள் கழித்து கண்ணூரில் இருந்து ஓர் இளைஞர் லண்டனின் இருந்த நீல.பத்மநாபனைத் தொலைபேசியில் அழைத்தார். அவர் நீல.பத்மநாபனின் லண்டன் தொலைபேசி எண்ணை சிரமப்பட்டுத்தான் கண்டுபிடித்தாராம். கமல்ஹாசன் எழுதிய தமிழ்க் கவிதையை நீல.பத்மநாபன் மலையாளத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்று கமல் விரும்புகிறார் என்பதை அவர் தெரிவித்தார். சினிமா நட்சத்திரம் எழுதிய கவிதை இல்லையா? பார்க்கலாம் என்று நீல.பத்மநாபன் பட்டும் படாமலும் பதில் சொன்னார்.

விரைவில் நீல.பத்மநாபனின் லண்டன் விலாசத்துக்கு தமிழ்ப் பத்திரிகை ஆனந்த விகடனின் பிரதி ஒன்று தபாலில் வந்து சேர்ந்தது.

விகடனில் கமல் எழுதிய கவிதை நீல.பத்மநாபனுக்குப் பிடித்திருந்தது. லண்டன் குண்டுவெடிப்பு பற்றிய கவிதை அது. குண்டு வெடிப்பு நிகழ்ந்து சில மணி நேரத்துக்குள் எழுதிய படைப்பு அது. லண்டனில் அந்த சம்பவம் நிகழ்ந்து தான் நேரடியாக அனுபவித்ததை இன்னும் தீவிரத்தோடு தொலைவில் இருந்து கமல் கவிதையாக்கியிருந்த விதம் நீல.பத்மநாபனுக்கு ஆச்சரியமளித்தது. ஆழமான பொருள் கொண்ட அக்கவிதை அவரைக் கவர்ந்தது.

கவிதைக்கு ஒரு குணமுண்டு. தேவையில்லாத சொற்களையும் வாக்கியங்களையும் தவிர்த்து விடலாம். எழுத்து மொழியைக் கூர்மைப்படுத்தக் கவிதை எழுதுகிற வழக்கம் நீல.பத்மநாபனுக்கு உண்டு. ‘கவிதை தீப்பொறியாக இருக்க வேணும். க.நா.சு, நகுலன் கவிதைகள் போல’ என்கிறார் அவர்.

கமல்ஹாசன் எழுதிய தமிழ்க் கவிதையை விரைவில் மொழிபெயர்த்து கண்ணூர் இளைஞருக்கு அனுப்பி வைத்தார் நீல.பத்மநாபன். இரண்டு வாரங்கள் அந்த மொழிபெயர்ப்பு ஒரு மலையாள வாரப் பத்திரிகையில் பிரசுரமானது. ஞானபீட விருது கிட்டிய மகிழ்ச்சி அப்போது கமல்ஹாசனுக்கு ஏற்பட்டது. குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய சிறந்த தமிழ் எழுத்தாளரான நீல.பத்மனாபனால் தன் கவிதை மொழிபெயர்க்கப்பட்டது விலை மதிக்க முடியாத கௌரவம் தரும் நிகழ்ச்சியாகும் என்று கமல்ஹாசன் நீல.பத்மநாபனிடம் தெரிவித்தார்.

‘எனக்குத் தெரிந்த மலையாளத்தில் நான் மொழிபெயர்த்தேன். அவ்வளவுதான். கவிதை எழுதியவர் கமல்ஹாசன். அதற்குண்டான எல்லாப் பெருமையும் அவருக்கே உரியது’ என்றார் நீல.பத்மநாபன். மலையாள மொழிபெயர்ப்பைப் படித்த பல முக்கியமான மலையாள எழுத்தாளர்கள் கமல்ஹாசனோடு தொடர்பு கொண்டு அவரைப் பாராட்டினார்கள்.

லண்டனில் இருந்து பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானத்தில் நீல.பத்மநாபன் சென்னைக்குத் திரும்பினார். அவருடைய ஒரு மகள் சென்னைவாசி. இரண்டு நாள் அவர் இல்லத்தில் இருந்த பிறகு நீல.பத்மநாபன் திருவனந்தபுரம் வந்து சேர்ந்தார். வீட்டுக்குள் நுழையும்போதே தொலைபேசி அழைப்பு மணி. கமல்ஹாசன் தான்.

நீங்கள் சென்னைக்கு வந்தும் நாம் சந்திக்க முடியாமல் போய்விட்டதே என்று ஆதங்கத்தோடு சொன்னார் கமல். நீல.பத்மநாபனின் எல்லா நாவல்களயும் தான் படித்திருப்பதாகவும் நேரில் சந்தித்து சிறிது நேரமாவது உரையாட பெருவிருப்பம் உண்டென்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

திருவனந்தபுரம் வரும்போது நீல.பத்மநாபன் வீட்டுக்கு வந்து அவரைச் சந்திக்க விரும்புவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார். சினிமாக்காரர் சொல்லாயிற்றே என்று நீல.பத்மநாபன் அதை அவ்வளவாக முக்கியமானதாக எடுத்துக் கொள்ளவில்லை.

கனிமொழி எழுதிய கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவுக்குக் கமல்ஹாசன் திருவனந்தபுரம் வந்தும் நீல.பத்மநாபனை சந்திக்கவில்லை. நீல.பத்மநாபனும் அவருக்கு தொலைபேசி அழைக்கவில்லை.

இதற்கப்புறம் கமல்ஹாசன் யூனிட்டில் இருந்து சிலர் திருவனந்தபுரம் வந்தார்கள். தீபாவளி நேரத்தில் கமல்ஹாசன் பிறந்த நாள் தொடர்பாக விஜய் டி.வி வழங்கும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் நீல.பத்மநாபன் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் விருப்பத்தைத் தெரிவித்தார்கள். கமல் எழுதிய கவிதைகள் பற்றிப் பேசவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

‘நான் இயல்பாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதைத் தவிர்த்து விடுவேன். தொலைக்காட்சியில் பேட்டி காண்கிறவர்கள் அவர்கள் பேட்டி எடுக்கும் எழுத்தாளர் எழுதிய எதையுமே படிக்காமல் அபத்தமாகக் கேட்கிற கேள்விகளைக் கேட்டால் தற்கொலை செய்து கொள்ளத் தோன்றும்’ என்கிறார் நீல.பத்மநாபன்.

இரா.முருகன் தமிழில் குறிப்பிடத் தகுந்த ஓர் எழுத்தாளர் ஆவார். முருகனின் படைப்புகள் நீல.பத்மநாபனுக்குப் பிடித்தமானவை. இரா.முருகன் ஒரு கம்ப்யூட்டர்காரர். நல்ல சம்பளம் வாங்குகிற அதிகாரி. எழுத்தில் தீராத ஆர்வம் கொண்டவர். இரா.முருகன் நீல.பத்மநாபனை அவ்வப்போது தொலைபேசியில் அழைத்து உரையாடிக் கொண்டிருப்பார். இவர்கள் லண்டனில் இருக்கும்போதும் தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்தன.

இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு தினம் இரா.முருகன் நீல.பத்மநாபனைத் தொலைபேசியில் அழைத்தார்.

‘மய்யம் என்ற பெயரில் கமல்ஹாசனுக்கு ஒரு இணையத் தளம் உண்டு. அதில் உங்களோடு ஒரு கலந்துரையாடலைத் தரவேண்டும் என்று கமல்ஹாசன் விரும்புகிறார். அவரே நேரில் வந்து உங்களை பேட்டி காணுவார். அதை அவருடைய யூனிட் வீடியோ படமாகப் பதிவு செய்யும். பேட்டியின் பகுதியாக உங்கள் படைப்பு ஏதாவது ஒன்றை நீங்கள் படிப்பதையும் பதிவு செய்ய உத்தேசம். உங்களுக்கு வசதியான நாள் எது என்று கமல்ஹாசன் விசாரிக்கச் சொன்னார். அந்த தினத்தில் அவர் திருவனந்தபுரம் வந்து உங்களைச் சந்திப்ப்பார்’ என்று இரா.முருகன் சொன்னார்.

இந்தத் தொலைபேசி அழைப்பு நீல.பத்மநாபனுக்கு சரியாகப் புரியவில்லை. பாலு மகேந்திரா போன்ற திரைப்பட இயக்குனர்கள் தமிழ் எழுத்தாளர்களின் படைப்பை திரைப்படமாக்குவது போல் தன் படைப்பு ஒன்றை திரைப்படமாகத் தயாரிக்க கமல்ஹாசன் உத்தேசித்திருக்கிறார் என்றும் அது குறித்து விவாதிக்கவே தன்னைக் காண திருவனந்தபுரம் வர விரும்புகிறார் என்றும் நீல.பத்மநாபன் கருதினார். தொலைபேசி உரையாடல் தெளிவில்லாமல் இருந்ததால் அவர் இப்படி நினைத்தார்.

என்றாலும் அந்தத் தொலைபேசி உரையாடலைப் பற்றி திரும்பவும் யோசித்த நீல.பத்மநாபன் இது வேறே ஏதோ விஷயம் என்று புரிந்து கொண்டார். இரண்டு நாள் கழித்து இரா.முருகன் மீண்டும் நீல.பத்மநாபனுக்குத் தொலைபேசினார். மய்யம் இணையத் தளத்தில் மிகப் பிரபலமான தமிழ், மலையாள எழுத்தாளர்களை நேரில் சந்தித்து உரையாடி அவற்றின் ஒளித் தொகுப்புகளை வழங்கக் கமல் திட்டமிட்டிருப்பதாகக் கூறினார் அவர். இதற்காகத் தான் நீல.பத்மநாபனை சந்திக்கக் கமல்ஹாசன் வருகிறார். அவரோடு நானும் வரலாம் உங்களைக் காண என்றார் இரா.முருகன். முருகன் வந்தே ஆகவேண்டும் என்று நீல.பத்மநாபன் பிடிவாதமாகச் சொன்னார்.

மார்ச் நாலாந்தேதி தான் திருவனந்தபுரத்துக்கு வருவதாகக் கமல்ஹாசன் பிறகு அறிவித்தார். திருநெல்வேலியில் ஒரு தமிழ் இலக்கியவாதியை சந்தித்த பிறகு திருவனந்தபுரத்துக்கு வருவதாகச் சொன்னார். இரண்டு நாள் கழித்து கமல்ஹாசன் யூனிட்டில் ஒருவர் நீல.பத்மநாபனுக்குத் தொலைபேசினார். அவர்கள் நாலாந்தேதி காலை ஏழு மணிக்கு நீல.பத்மநாபனுடைய வீட்டுக்கு வரலாமா என்று கேட்டார்கள். ஆனால், ஏழு மணி கொஞ்சம் அசௌகரியமான நேரம் என்று சொன்னார் நீல.பத்மநாபன். அவர் தினசரி தியானம் செய்கிறவர். தியானமும் யோகாப்பியாசமும் முடிந்து காலை உணவு சாப்பிடும்போது பகல் பதினொரு மணி ஆகிவிடும். சினிமாவோடு தனக்கு அவ்வளவு தொடர்பில்லை, மன்னிக்க வேண்டும் என்று அடக்கத்தோடு கூறினார் நீல.பத்மநாபன்.

சினிமா, டிவி சீரியல் இதிலெல்லாம் வெகு நாள் முன்பாகவே நீல.பத்மநாபன் விரக்தி அடைந்திருந்தார். ஓர் எழுத்தாளன் தன் படைப்புகள் மூலமே உயிர்த்திருக்கிறான் என்பது அவருடைய நம்பிக்கை.

‘இப்போதெல்லாம் மக்கள் விரும்பிப் பார்ப்பது திரைப்படங்களையும் தொலைக்காட்சித் தொடர்களையும் தான். எனக்கும் வயதாகி விட்டது. இலக்கிய உலகத்தில் எத்தனையோ இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களைத்தான் நீங்கள் பேட்டி காண வேண்டும். நான் ஐம்பது வருஷமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். யாரும் கவனித்ததில்லை. என்னுடைய நாவல் சினிமாப் படமாகிறது என்ற செய்தி பத்திரிகையில் வந்த பின்னர்தான் என்னைக் கண்டதும் பேச ஆர்வம் காட்டுகிறார்கள். சினிமாவாகிற கதை என்ன என்று இவர்கள் கேட்கிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன