ரா.கியை நான்கு மணி நேரம் வீடியோ பேட்டி எடுத்தோம். கேமரா தகராறு காரணமாக ஒளி ஒலி சரியாக வரவில்லை. இன்று காலை அது பற்றி ஆதூரத்தோடு பேசிக் கொண்டிருந்தோம்.
ஆறு மாதம் முன்னால் போன் செய்தார் ராகி. ‘என்ன ஆச்சு அந்த வீடியோ? நீங்க எல்லாம் வந்துட்டுப் போனதை அண்ணாநகர் டைம்ஸிலே எழுதியிருந்தேனே..’.
நான் சொன்னேன் – சார், அதை இன்னும் விரிவா ஒரு பேனல் டிஸ்கஷனா எடுக்க ஐடியா’.
‘எடுங்கோ ஆனா நான் இருக்கணுமே’ என்றார் ராகி.
நூறு வருஷம் இருப்பீங்க சார் என்றேன்.
மாட்டேன் என்று கிளம்பி விட்டார்.
அடிமையின் காதல் போல் வருமா? KH நூறு தடைவையாவது இதுவரை சொல்லியிருப்ப்பார் இன்றைக்கு சொன்னதையும் சேர்த்து.
————————————–
பிரஞ்சு சிற்பக்கலை மேதை ரோடினின் குறுகிய கால சீடன் ருமேனியனான கான்ஸ்டண்டைன் ப்ராங்கூஸி பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது திரும்ப ரா.கிக்கு வந்தார் கமல்.
அடிமையின் காதலை கிராபிக் நாவல் ஆகக் கொண்டு வரணும் சார்
பளபளப்பான அமர் சித்ர கதை மாதிரி இருக்காதோ?
புதுத் தலைமுறை ஓவியர்களை ஒவ்வொரு பேனலையும் போட வைக்கணும்.
ஆஸ்ட்ரிக்ஸ் மாதிரி பிரமாதமா வருமா சார்?
நான் கேட்க, ரோடினுக்கே திரும்பப் போய்விட்டார் அவர்.
————————————————
ராக்கி நெனப்பு
(கு.ப.ரா கவிதை)
ரா.கிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
கோடேவெயிலு காலுங்கீளே
கொளுத்திச் சுட்டுப் பொசுக்க
பாட்டை வெளியே போன ராக்கி
அங்கே வந்து ஒதுங்ணா!
வேத்துக் கொட்டி வெள்ளேச்சேலே
மேலே ஓட்டிப்போயி
அள்ளிச் சொருவியிருந்த மயிரு
அவுந்து மேலே கொட்டி
நேத்து தாண்டா அவளே கிட்டே
பாத்து சொக்கிப் போனேன்!
கள்ளிப் பசப்பிப் பேரைக் கேட்டா
குனிஞ்சு நின்னு சிரிச்சா!
அடபோடா – நீ யென்ன
கண்டே அந்த அளவே?
பொளுதே மறந்தேன் போக்கை மறந்தேன்
பெறப்பெக் கூட மறந்தேன்
மொடவன் பேலே மரத்துங்கீளே
பாவிமய மாயம்
உளந்து கெடந்தேன், பொச்சாய
ஆத்தா வந்து பாத்தா!
ராக்கி நெனப்பு ராக்கி சிரிப்பு-
அது என்ன போடா-
ராப்பவலா எந்நேரம்
வேறே நெனப்பு இல்லே!
பாக்கி நாளு என்னா செய்வேன்
சொல்லு பாப்பம் சொக்கா!
சப்புன்னு இருக்கு சீவன்
செத்துப் போனாத் தேவலாம்.
(ஐம்பது வருடம் முன் எழுதப்பட்ட புதுக்கவிதை இது. கு.ப.ராவையும் ந.பிச்சமூர்த்தியையும் தமிழ்ப் புதுக்கவிதையின் வளமான தொடக்கத்துக்காக நன்றியோடு நினைத்துக் கொள்ள வேண்டும்.)