காலைத் தொலைக்காட்சி தொல்லை குறைந்தது என்று நினைத்தால் –
சற்று முன் ஒரு சேனலில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றிய பேச்சுக் கச்சேரி.
பேச்சாளர் மைக்கைப் பிடித்ததும் ‘எல்லோரும் ஒரு நிமிடம் எழுந்து நில்லுங்க’ என்றார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து ஒளிபரப்பும் சேனலுக்கு கூட்டமாக நன்றி செலுத்த வேண்டுமாம்.
எதுக்கு என்ன என்று கேட்காமல் நம்மாட்கள் யாராவது வற்புறுத்தினால் என்ன செய்வார்களோ அதைத்தான் அரங்கில் இருந்த கூட்டமும் செய்தது.
எழுந்து நின்றார்கள் எல்லோரும்.
வயதானவர்கள் சிரமத்தோடும், மற்றவர்கள் கடமை உணர்வோடும் எழ, அரங்கில் இருந்த திருப்பூர் கிருஷ்ணனும் கொஞ்சம் திகைத்து எழுந்து நின்றதை மறக்க முடியாது.
அப்புறம் பேச்சாளர் பேச ஆரம்பித்தாரா என்றால் இல்லை. கொஞ்சம் முன்னால் குனிந்து தன் கழுத்தைத் தடவிக் கொண்டார்.
கழுத்தில் இருந்து ஒரு தங்க செயினை கழற்றி எடுத்து முன்னால் தொப் என்று போட்டார்.
’இது பிரபல திரை இசைக் கலைஞர் – பெயர் சொல்லி – எனக்கு அணிவித்தது’.
அதுக்கும் எழுந்து நிற்கச் சொல்வார் என்று எதிர்பார்த்தேன். நல்ல வேளையாக அப்படியெதுவும் நடக்கவில்லை.
செயின் ஆராதனை முடித்து சட்டை, பனியன் என்று அகற்றி அறிமுகப்படுத்த ஆரம்பித்தால் என்ன செய்வது என்று அடுத்த பயம். அதுவும் நிகழாமல் போனது அதிர்ஷ்டம் தான்.
நடுவில் ஸ்பான்சர் விளம்பரம். தங்க நகை விற்கும் கார்ப்பரேட் என்பதால் மும்பையில் உருவாக்கப்பட்ட sleek ஆன விளம்பரம். மும்பை மாடல் அழகி ஒவ்வொரு நகையாக அணிந்து சுமாரான lip sync-ல் நெல்லைத் தமிழில் பேசினாள். பேசாமல் நம்ம பேச்சாளரையே மாடலாக்கி இருக்கலாமே!
இதெல்லாம் முடிந்து புத்தகங்களை, கட்டுரைகளை மேற்கோள் காட்டி எம்.எஸ் பற்றிப் பேச ஆரம்பித்தபோது, டைம் அவுட். மீதி நாளைக்கு. அதிர்ஷ்டம் செய்தவர்கள் பார்க்கட்டும்.
எம்.எஸ்ஸை இப்படி evantualize செய்யணுமா?
————————————————————————-
Horror is watching ‘Karaikal Ammaiyar’ dubbed in Malayalam. P.Leela sings for an on screen K.B.Sundarambal
——————————————————-
வத்தலக்குண்டு ராஜமய்யர் எழுதிய தமிழின் முதல் நாவல்களில் ஒன்றான ‘கமலாம்பாள் சரித்திரம்’ கதையில், மதுரை மாவட்ட கிராமங்களில் பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியில் நடமாடிய மனிதர்கள் ஆணும் பெண்ணும் குழந்தையுமாக அச்சு அசலாக வந்து போவார்கள்.
அதில் ஒரு பாத்திரம் ‘பாப்பா பாட்டியகத்து வெட்டரிவாள்’ பாட்டி. இவள் பக்கத்து வீட்டு வாசலில் (அங்கேயும் ஒரு பாட்டி தான் குடியிருந்தாள்) காயப் போட்டிருந்த அடுப்பு விறகைத் திருடி விட்டு, அதை வெட்ட அரிவாள் கடன் வாங்க அவர்கள் வீட்டுக்கே போவாள். ஊர்ப் பசங்கள் இந்த விஷயம் தெரிந்து இந்தப் பாட்டியம்மா தலையைப் பார்த்ததுமே ‘பாப்பாப் பாட்டியாத்து வெட்டரிவாள்’ என்று அவள் முதுகுக்குப் பின் கூவி விட்டு ஓடும்.
பாட்டி திரும்பிப் பார்த்து நின்று நிதானமாக அதுகளை வசவு மழை பொழிந்து சபிப்பாள். அதைக் கேட்பதில் பசங்களுக்கு ஆனந்தம் என்றால் திட்டுவது பாட்டிக்குக் கொண்டாட்டம்.
சில நாள் எந்தப் பையனும் அவளைப் பார்த்துத் திட்ட மாட்டான். பாட்டி விட மாட்டாள். தெருவில் அவன் பாட்டுக்குப் போய்க்கிட்டிருக்கும் ஒரு பையனைப் பார்த்து, ‘அப்பா, நீ ரொம்ப நல்லவன்.. என்னை எப்பவுமே கேலி பண்ணினதே இல்லை..’ என்று சர்ட்டிபிகேட் வழங்குவாள்.
இவள் தெரு திரும்பும்போது அந்தப் பையன் ‘பாப்பாப் பாட்டியகத்து வெட்டரிவாள்’ என்று கத்தி விட்டு ஓட, பாட்டி படு குஷியாகத் திட்ட ஆரம்பிப்பாள். அதைத்தானே அவள் எதிர்பார்த்தது.
கமலாம்பாள் சரித்திரத்தில் மட்டுமா பாப்பாப் பாட்டியகத்து வெட்டரிவாள்கள்?
——————————————————–
நாளைக்கு கையில் ஒரு புத்தகமும் இருக்க விடாமல் பிடுங்கி அதில் நாலஞ்சாவது பூஜையில் வந்துடும். தி.ஜானகிராமன் சொல்ற ‘சரஸ்வதி பூஜையன்று தான் பல்பொடி மடித்த காகிதமாவது படிக்க வேண்டும்’ என்று ஆசை வரும்.
அதுக்கு முன்னால் இன்று டாக்டர் தி.சே.சௌ ராஜன் எழுதிய ‘வீட்டு வைத்தியர்’ மருத்துவ நூல் படிக்க ஆரம்பிச்சேன். 1945-ல் முதல் பதிப்பாம். சரளமான எளிய தமிழ். மருத்துவப் புத்தகத்திலும் தேசியம் தட்டுப்படத் தவறவில்லை.
தமிழ் நாட்டில் 1940-களின் விடுதலைப் போராட்டத்துக்கு சங்கு சுப்ரமணியன் சொற்பொழிவு, நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை கவிதை, பட்டம்மாளின் பாரதி பாட்டு, ராஜாஜியின் ஜெயில் டயரி, கல்கி – சுப்ரமண்யத்தின் ‘தியாக பூமி’ டாக்கி இப்படியான முகங்கள் தான் இருந்ததாக அவ்வப்போது தோன்றும். அதற்கு டாக்டர் ராஜன் மருத்துவம் – எழுத்து போல் இன்னொரு முகமும் இருந்திருக்கிறது. பெ.நா.அப்புஸ்வாமியின் அறிவியல் அறிமுகமும் இங்கே வரலாம் என்று நினைக்கிறேன்.
நான் தி.செ.சௌ. ராஜனின் ‘நினைவலைகள்’ புத்தகத்தை தற்போதுதான் படித்து முடித்தேன். (சந்தியா பதிப்பகம்). இந்த ‘வீட்டு வைத்தியர்’ நூலையும் படிக்க ஆசை. எந்த பதிப்பகம் என்று சொல்லுங்களேன்.
மக்கள் டிவி அலுவலகத்தில் என் பிரதி இருக்கிறது. விசாரித்துச் சொல்கிறேன்