தந்தி வைத்தியம்

 

சென்னையில் இன்னும் தினசரி 100 தந்திகள் அனுப்பப் படுகின்றன / செய்தி.

1964 அல்லது 65. வீட்டு வாசல் தெளிக்க அதிகாலையில் வந்த பாண்டியம்மா அப்பத்தா ரேழிப் பக்கம் வாளியோடு நடந்தபோது காலில் ஏதோ வழுக்கியதாகச் சத்தம் போட எழுந்திருந்தோம். பத்து நிமிடத்தில் தகவல் பிழை கண்டறியப்பட்டு, ஏதோ பூச்சி கடித்தது என்று அடுத்த அறிவிப்பு. அப்பத்தாவுக்குத்தான் அன்றைக்கு வீட்டில் முதல் – புதுப்பால் டீகாஷன் காபி. அதைப் பாதி குடிக்கும்போதே மறு அறிவிப்பு. அரையடி நீளத்திலே சுருண்டு சுருண்டு போச்சு.

பாண்டியம்மாளை யாரோ பக்கத்துத் தெரு டாக்டரிடம் கூட்டிப் போக அவர் பார்த்து விட்டு காலில் சேற்றுப் புண் அதிகம் என்று சொன்னார். பாம்பு விஷயம் பற்றி அலட்டிக் கொள்ளவே இல்லை. பாண்டியம்மாளுக்கு இட்லி வார்த்துக் கொடுக்க அடுக்களையில் ஏற்பாடுகள் நடக்க, அப்பத்தா வாசலில் உட்கார்ந்து சாவகாசமாக சுருக்குப் பையில் இருந்து வெற்றிலைச் சருகை எடுத்து மென்றபடி எங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

அந்த நேரம் தான் ரிடையர்ட் ஸ்டேஷன் மாஸ்டர் வீட்டில் ரேடியோ பெட்டி பக்கத்தில் வைத்திருக்கும் பழைய ஹோ அண்ட் கோ டயரி நினைவு வந்தது. அதில் ஜனவரி ரெண்டாம் தேதிக்கு நேரே ‘பாம்பு கடிக்கு தந்தி அடிக்க’ என்று போட்டு ஒரு பெயர், விலாசம் போட்டிருக்கும். ஊர்ப் பெயர் கானாடுகாத்தான் என்று நினைவு.

அங்கே ஒரு நாட்டு வைத்தியர் இருந்தார். விஷக்கடிக்கு முக்கியமாக பாம்புக்கடிக்கு வைத்தியம் பார்ப்பதில் வல்லவர். வைத்தியம் மவுசு கூடிக்கூடி, அவர் வந்து பார்த்தாலே விஷம் இறங்கும் என்று அடிஷனல் அட்ரிப்யூட் சேர வைத்தியர் கூடுதல் பிரபலமானார். அதுக்குத் தொடர்ச்சியாக, வெளியூரில் இருக்கப்பட்டவர்களை பாம்பு கடித்தால், யாரை, எப்போது, எங்கே கடித்தது என்று அவருக்கு தந்தி அனுப்பினால் உடனே விஷம் இறங்கி விடும் என்று இன்னொரு அட்ரிப்யூட் சேர்ந்தது.

தந்தி ஆபீசுக்குப் போய் தந்தி அடிக்க ஆள் தேடினார்கள். குண்டுராஜு தான் வகையாக மாட்டியது. கூட நானும்.

நீ பேப்பர்லே எழுதிக்கொடுடா. இந்தா ரெண்டு ரூபா. அதுக்குள்ளே தான் டெலகிராம் சார்ஜ் வரும்.

நான் எழுத ஆரம்பித்தேன் – ஸ்நேக் பைட் பாண்டியம்மாள் அட் ஹவுஸ் ப்ரண்ட் ஏர்லி மார்னிங் பைவ் ஓ க்ளாக் டுடே. ப்ளீஸ் டூ மேஜிக் (மந்திரிக்கவும் என்பதன் ஆங்கில மொழிபெயர்ப்பாக்கும்).

டெலகிராம் அனுப்ப எழுதச் சொன்னா, இண்லண்ட் லெட்டர் எழுதி எடுத்து வரியே?

என் முதல் சென்சார் போர்ட்.

ஸ்நேக் பைட் எதுக்கு? சரி பாண்டியம்மாள் அட் ஹவுஸ் .. மெய்ட்னு போடு போதும்.. மெய்ட் பைட் ஹவுஸ் ப்ரண்ட் .. டுடே எதுக்கு.. போன வருஷம் கடிச்சதுக்கா இப்போ அடிக்கறோம்? சரி மெய்ட் பைட்… மெய்ட் பிட்டன்.. ஃபைவ். போதும். ஃபைவ் ந்ம்பர்லே போட்டா சார்ஜ் கம்மி. மேஜிக்னா மந்திரிக்கறதா? லிப்கோ டிக்‌ஷனரியிலே இருக்கா? ரென் அண்ட் மார்ட்டின்லே? அவங்களை எல்லாம் பாம்பு கடிக்காது.

ஆக நான் எழுதிய முதல் வசனம்’ Maid bitten 5′.

தந்தி ஆபீஸ் போய் எழுதிய தந்தியை அனுப்பி விட்டு வருவதற்குள் ஒரு ஈடு இட்லி சாப்பிட்டு விட்டு பாண்டியம்மாள் அப்பத்தா திடமாகக் கிளம்பி விட்டாள். ரேழியில் சிமெண்டில் கொத்திய தாயக் கட்டம் தொடங்கி கதவு வரை பளிச்சென்று மின்னியது. அப்பத்தா உபயம்.

எங்கள் ஊரில் இப்போது தந்தி ஆபீஸ் கிடையாது என்று நினைக்கிறேன். சென்னை தந்தி ஆபீஸில் நூறு தந்திகள் தினம் யார் அடிக்கிறார்கள்?

டெல்லியில் விஷக்கடி வைத்தியர் மன்மோகன் சிங்க் என்று ஒருவர் இருப்பதாகவும் இங்கே, சுற்று வட்டாரத்தில் ஏதாவது தகராறு என்றால் அவருக்குத் தந்தி அனுப்பினால் தீர்ந்தது பிரச்சனை என்று நினைக்கிற வயசாளிகளும் சென்னையில் இருப்பதாகவும் அறிகிறேன்.

2 comments on “தந்தி வைத்தியம்
  1. சரவணன் சொல்கிறார்:

    டெஸ்……….ட்

  2. சரவணன் சொல்கிறார்:

    அல்லது தநா காங் கமிட்டி தலைவரை மாற்றச் சொல்லி மாற்று அணித் தொண்டர்கள் அன்னை சோனியாவுக்கு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன