நாடக அரங்கேற்றம் நல்லபடியாக நேற்று முடிந்தது.
16,17,19 (சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை, வரும் செவ்வாய்க் கிழமை) ஆகிய தினங்களில் இந்த மூன்று நாடகங்களும் மீண்டும் நிகழ்த்தப்படும்.
காட்சி அனுபவத்தில் கலந்து கொள்ள நண்பர்களை அன்போடு அழைக்கிறேன்.
இது படைப்பாளி மௌனம் காத்துக் கருத்துக்களைப் படிக்க, காது கொடுத்துக் கேட்க வேண்டிய தருணம்.
நேற்று அரங்கேறிய என் மூன்று நாடகங்கள் பற்றிக் கருத்துகள் வர ஆரம்பித்திருக்கின்றன.
முதல் நாடகம் முடிந்த ஐந்தாம் நிமிடம் தொடங்கி, நேற்று நான் காரில் ஏற முற்படும்போது நாரதகான சபா வாசல் உட்லண்ட்ஸில் சாப்பாட்டைப் பாதியில் நிறுத்தி எழுந்து, ‘இரா.முருகனா? நான் …’ என்று அறிமுகப் படுத்திக் கொண்டு உற்சாகமாகவும் விவாதமுமாக பேசிய நண்பர் (அவர் தட்டில் ஆறி அவலாகிக் கொண்டிருந்தது வெங்காய ரவா தோசை என்று தோன்றுகிறது), இரவே தொலைபேசிய, இன்று காலை தொலை பேசிய, பேஸ்புக் இன் பாக்ஸில் செய்தி விடுத்த நாடக மேடை, இலக்கிய, பத்திரிகை, சின்னத் திரை, திரை மற்றும் பல துறை சார்ந்த நண்பர்கள், நாடகங்களைப் பார்க்க, அவை பற்றிப் பேச, எழுத இருப்பவர்கள் எல்லோருக்கும் என் நன்றி.
எங்கள் ஷ்ரத்தா குழுவினருக்கும் அவர்கள் என்னையும் நான் அவர்களையும் இனம் காண உதவிய நண்பர் ஆனந்த ராகவ்Anand Raghav அவர்களுக்கும் நன்றி.
சுஜாதா சார் பூரணம் விஸ்வநாதனின் கலாநிலையம் நாடகக் குழுவோடு அறிமுகம் ஆனபோது சொன்ன அதே சொற்களை நான் உரிமையோடு பயன்படுத்திக் கொள்கிறேன் – நேற்று நாடகம் காண வந்திருந்த எங்கள் அன்புக்குரிய திருமதி சுஜாதா ரங்கராஜன் அவர்களின் அனுமதியோடு –
Team Shraddha, ‘I have found my own team’.
Photo courtesy Mr.V.K.Srinivasan
நாடக அரங்கேற்றம் வெற்றி பெற வாழ்த்து சொல்லி தன் கவிதையைப் பகிர்ந்து கொண்டார் நண்பர்.
இப்படி முடியும் கவிதை –
நான் நீர்மேல் நடக்கிறேன்.
என் அகராதியில் நிலம்
உன் அகராதியில் நீர்.
என்னைப் புரிந்து கொள்ள
உன் அகராதியைத் தூக்கி எறி.
கவிதைகளைத் தொகுப்பாகக் கொண்டு வர வேண்டும் என்று நண்பர்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்துவதை இன்னுமொரு முறை செய்தேன். ‘பார்க்கலாம்’.
‘விஸ்வரூபம்’ திரைக்கதை நூல் (மலையாள வடிவம்) வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள அமீரகம் (United Arab Emirates) செல்லும் நண்பர் கமல் ஹாசன் அவர்களுக்கு ஷ்ரத்தா குழுவினர் சார்பில் வாழ்த்துகள், நன்றி.
எம் ஷ்ரத்தா குழுவினரால் அரங்கேற்றம் பெறும் என் முதல் மூன்று மேடை நாடகங்களை நவபாரதச் சிற்பி ஜவஹர்லால் நேருவுக்கு அர்ப்பணம் செய்கிறேன்.
————————————————————–
கிரேசிமோகன் வாழ்த்து-
அரவணை நீங்கி அவதரிக்கும் நீல
நிறமய மாலோலா நின்கழல் இராமுருகன்
நாடகத்தைப் பார்த்திட நாரத கானசபை
மேடையில் பூடகமாய் மேவு. (கிரேசி மோகன்)
மறு வாழ்த்தும் நன்றியும் –
சாக்லெட் கிருஷ்ணனே பாக்கொண்டு வேண்டுகிறான்
நோக்கிட வேறே நினக்குண்டோ போக்கிடம்
நாரத கானசபை நல்லபடி நாடகத்தால்
வாரம் முழுதும் நிரப்பு. (இரா.முருகன்)
——————————————