இரா.முருகனின் நாவல் ‘விஸ்வரூபம்’
————————————————————————–
(திரு பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய மதிப்பீடு)
விஸ்வரூபம் நாவலைப் பற்றி எழுத முற்படுவது ஐராவதத்தின் பெருமையைப் பற்றி சோடாப்புட்டிக் கண்ணாடியைத் தொலைத்து விட்டு அதைப் பார்க்கும் கிட்டப்பார்வைப் பேர்வழி விளக்க முற்படுவது போல இருக்குமோ என்று தோன்றுகிறது. It is a mastodon of a novel!
நாவலுக்கு துரைசாமி ஐய்யங்கார் பாணியில் ‘விஸ்வரூபம் அல்லது உலகம் சுற்றும் ஆவிகள்’ என்று பெயர் வைத்திருக்கலாம். ஆவிகள் உலகத்தைச் சுற்றுவது மட்டுமல்லாமல் என் கனவிலும் சுற்றி சுற்றி வந்து தொந்தரவு செய்கின்றன. விசாலாக்ஷிக்கு காசியில் விடுதலை கிடைத்ததா என்பதே சந்தேகமாக இருக்கிறது.
மொழி மிகக் கச்சிதமாக அமைந்திருக்கிறது. நாவலின் பாத்திரங்களுக்கு அமைந்திருக்கும் தனித் தன்மை வியக்கத்தக்க அளவில் இருக்கிறது. பக்கங்களை தள்ளி விட்டு படிக்கலாம் என்று நினைத்தால், குற்ற உணர்ச்சிப் பிடித்து ஆட்டுகிறது. ஒரு பக்கத்தைக் கூட ஒதுக்க முடியாது. இது நாவலின் வெற்றி என்றுதான் கூற வேண்டும். லண்டன், எடின்பரோ பக்கங்களை மிகவும் ரசித்துப் படித்தேன்.
எனக்கு நாவலில் பிடித்த பாத்திரங்கள் மகாலிங்கம், நாயுடு, கற்பகம், மற்றும் தெரசா.. மகாலிங்கம் எழுதும் கடிதங்களுக்குப் பதிலாக ஆசிரியரே இன்றைய மொழியில் எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம்.
நாவலில் முலைகள் அடிக்கடி திமிர்ந்து கொண்டு முன்னால் வர முயற்சிக்கின்றன. இடையிடையே ஸ்கலிதத்தின் பிசுபிசுப்பால் பக்கங்கள் ஒட்டிக் கொள்கின்றன. ஆண்கள், பெண்கள் பேச்சுக்களில் அனேகமாக குறிகளே குறியீடுகளாக இருக்கின்றன. அன்றைய மலையாள பிராமண சமூகத்தின் பேச்சு வழக்கு இவ்வாறுதான் இருந்திருக்க வேண்டும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. எங்கள் பக்கத்தில் வேறுமாதிரியாகப் பேசுவார்கள். குறிகளும் முலகளும் சற்றுக் குறைவாகப் புழங்கும் என நினைக்கிறேன். ஆனால் இவை இல்லாமல் வாழ்க்கை ஏது ? பேச்சுகளுக்கு உயிர் ஏது?
கதை நடக்கும் நாட்கள் வரலாற்றின் முக்கியமான நாட்கள். அவற்றை சாதாரண மக்கள் எவ்வாறு கடந்து போகிறார்கள் என்பது நாவலில் மிக நயமாகக் காட்டப் படுகிறது.
பெரிய நாவல். கொஞ்சம் குறைத்து எழுதியிருக்கலாமோ? எதைக் குறைப்பது என்று கேட்டால் பதில் சொல்ல முடியாது
———————
இரா.முருகன் –
(மகாலிங்க அய்யன் கடிதங்கள் – அந்த narrative உத்தியின் காரணம் பற்றி, ‘மகாலிங்கன் கடிதங்கள்’ என்று அந்தப் பகுதிகளை மட்டும் தொகுத்து நாடகமாகுவது குறித்து பிஏகே அண்ணாவோடு பேசிக் கொண்டிருக்கிறேன். நாடக அரங்கேற்ற மும்முரம்.. முடிந்து அதை இங்கே பகிரவும் தொடரவும் ஆர்வமுண்டு. ’