இது நண்பர் சு.ரவி வரைந்த ஓவியம் -ரவிவர்மா படைப்பை அடிப்படையாகக் கொண்டு
இது நண்பர் கிரேசி மோகன் வெண்பா –
’’மரணா கதிக்கஞ்சி மார்கண்டன் செய்த
சரணா கதிகண்ட சம்பு, -முரணாகக்
கொன்றான் எமனையே, காப்பளித்து பக்திக்கு
என்றும் பதினாறாய் ஏற்பு’’….கிரேசி மோகன்….
இது என் வெண்பா –
என்றும் பதினா றெமக்கினிக் கிட்டாது
அன்றலரும் பூவாக ஓவியங்கள் பொன்பாக்கள்
மன்றாடீ நான்ரசிக்க மண்ணில்தா நட்பாக
என்றும் அறுபத்தொன் று.
——————-
செயல் மறந்து வாழ்த்துதுமே’, as ManoNmaNiiyam author Sundaram Pillai wrote.
I never knew the divine music gushing from Sri Krishna’s flute making the whole universe and beyond go in a dance on trance can be captured so beautifully in painting.
I am always astounded by the geometric and aesthetic symmetry of your works. This one simply surpasses all known attributes and bench marks for symmetry and aesthetics and sets its own, perhaps those of cosmic, divine standards.
நண்பர் கேசவ் வரைந்த இந்த ஓவியம் நிகரற்றது.
அச்சுதம் கேசவம் அன்றலர் பங்கயம்
மெச்சிடும் ஓவியம் மேன்மையே நிச்சயம்
வாழ்த்தவும் வார்த்தைகள் வாய்தனில் இல்லையே
தாழ்த்தி இருகை வணங்கு.
————————————–
மலையாள சாகித்ய சரித்திரம் படித்துக் கொண்டிருக்கிறேன்.
செறுச்சேரி நம்பூத்ரியின் கிருஷ்ண காத (மணிப்ரவாள காலம் – 14ம் நூற்றாண்டு முதல் 17ம் நூற்றாண்டு வரை) எழுதப்பட்ட கவிதைகள்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணன் தன் வயோதிக காலத்தில் நந்தகோபனையும் யசோதையையும் சந்திக்கிறான். அவர்களோ படு விருத்தர்கள் – தொண்டு கிழம், பழங்கிழம் என்ற கனிந்த வகை.
கண்ணன் என்ற முதியவன் அந்த வளர்ப்புத் தாய் – தந்தை மனதில் படவே இல்லை. அவர்களுக்கு இன்னும் அவன் கோகுலத்தில் ஆடித் திரிந்த சிறு குழந்தை.
நந்தகோபன் சொல்கிறான் –
என்முதுகேறி நின் ஆனக் களிப்பதின்
இன்னினியாமோ சொல்லு உண்ணி கண்ணா
திங்களச் சென்னு பிடிப்பதினாயிட்டு
என் கழுத்தேறுக வேண்டயோ சொல்?
ஓடி வன்னு என்னுடெ நன்மடி தன்னிலாய்
தாடி பிடிச்சு வலிக்கேண்டயோ?
(என் முதுகில் ஏறி யானை ஏற்றம் விளையாட
இன்று உனக்கு இயலுமோ சொல்லு குழந்தைக் கண்ணா
நிலாவைப் பிடிக்க என் கழுத்தில் ஏறித்
தோளில் அமர வேண்டாமா உனக்கு?
ஓடி வந்து என் மடியில் அமர்ந்து
என் தாடையைப் பிடித்து இழுக்க வேண்டாமா?)
யசோதா கண்ணனை ஆரத் தழுவிக் கொள்கிறாள். கண் கலங்குகிறாள்.
பாரிச்சு நின்னுள்ள பாழாய்ம செய்யயான்
பாசத்தெக் கொண்டு பிடிச்சுக் கெட்டி
திண்ணம் வலிச்சு முறுக்கி ஞான் நில்க்யா
உண்ணிப்பூ மேனியில் புண் இல்லல்லீ?
(தளர்ந்து இயலாமையோடு – மூப்போடு நான் என் பாசத்தைக் கொண்டு உன்னை இறுக்கக் கட்டிக் கொண்டேன். குழந்தைக் கண்ணா, உன் பூவுடல், கட்டியதால் புண் பட்டுப் போகவில்லையே?)
இந்த அருமையான காட்சி பாகவதத்தில் உண்டா? செறுச்சேரி நம்பூத்ரியின் சொந்தக் கற்பனையா?
————————————–
நண்பர் சிந்தாமணி சுந்தர்ராமன் சொல்கிறார் –
//கவிதைகளுக்கும், பாடல்களுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். பாடலாக்கும் எண்ணத்தில் இயற்றப்படாத எந்தக் கவிதையையும் எளிதில் பாடலாக்க முடிவதில்லை.
பாடல்களில் பிரபலமானவை என்று எடுத்துக் கொண்டால் அவை பெரும்பாலும் வாக்கியேயக்காரக்கள் எனப்படும் ‘பாடலும் எழுதி, அதனைப் பாடவும் தெரிந்த’ பாடகர்கள் எழுதிய பாடல்கள்தான். ஏனென்றால் அவர்களுக்கு அந்தப் பாடலை எப்படிப் பாடினால் நன்றாக இருக்கும் என்றறிந்து அதற்குத் தக்கவாறு மெட்டமைத்திருப்பார்கள்.//
போன நூற்றாண்டில் பாடப்பட்ட சில வினோதமான பல்லவிகள் –
கத்தரிக்கா கத்தரிக்கா
சும்மா சும்மா வருமோ சுகம்
உப்புமா கிண்டடி பெண்ணே நன்றாக
குத்தாலத்துக் குரங்கே மரத்தை விட்டு இறங்கே..
இதெல்லாம் கர்னாடக சங்கீத மேடைக்கு வரும்போது சித்தெறும்பு கடித்த சின்னராசா வந்தால் என்ன போச்சு?
———————————–
Sir, have you ever seen such an attempt in an Italian Opera? Classical music is meant for people who make the effort to appreciate it. In Philadelphia, audiences at the Kimmel Center have walked out if 20th century compositions are played by the conductor.//
நண்பர் ரமேஷ் ஆர்யா சொன்னார்.
உண்மை. இந்தப் புறக்கணிப்பே ’நான் இதை எதிர்பார்க்கிறேன். இதை மட்டும் எதிர்பார்க்கிறேன். அதைக் கொடு’ என்கிற ஒரு feudal characteristics .. mindset தான. கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால், மோசார்ட் காலத்தில், அவருக்குக் கொஞ்சம் பின்னால், வந்த இப்படியான ரசிகர்கள் மொசார்ட் சிம்ஃபனி என்று அறிவிப்பு வந்ததுமே இறங்கிப் போயிருக்க வாய்ப்பு உண்டு. மோசார்ட்டுக்கு அதில் இழப்பு இல்லை. போனவர்களுக்குத் தான்.
———————————————-
அப்புறம், இசைவிழா நேரத்தில், சென்னை சபாக்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள் –
இந்த சீசனில் இசை மழையில் மூழ்கி முத்துக் குளிக்க மாற்றுத் திறனாளிகளும் வர வாய்ப்பு உண்டு. வர வேண்டும். இசையும், இலக்கியமும் அவர்களுக்கும் நுகர உரிமையுள்ளவை தாம்.
ஒரு பெரிய சபாவில், மாற்றுத் திறனாளிகளுக்காக ஒரு ramp – சக்கர நாற்காலிகளை உருட்டிச் செல்ல வசதியாக – உண்டு. ஆனால் ஒரு சின்னத் தடங்கல். அதைப் பயன்படுத்துவது கொஞ்சம் சிரமமானது.
காரணம், சரிவுப் பாதை முடியும் இடத்தில் ஷட்டர் போட்டுக் கதவை மூடி வைத்திருப்பார்கள். அதன் திறவுகோல் சபா காவலர் ஒருவரிடம் இருக்கும். நீங்கள் கச்சேரி கேட்க வரும்போது அவர் இருப்பார் என்று அவசியம் இல்லை.. பாதிக் கச்சேரி வரை ‘பூங்கதவே தாள் திறவாய்’ என்று காத்திருந்து, அவர் வந்ததும் உள்ளே போகலாம் என்றால் உங்களுக்கு மனசு வராது.
காரணம், அந்த ஷட்டரை ஏற்றும்போது பெரும் சத்தம் உண்டாகலாம். ஆயிரம் பேர் ரசனைக்குக் குறுக்கே அந்த சத்தம் கீறிப் பிளந்து போகும்.
வேண்டாம் என்று தீர்மானித்து, மனதில் கச்சேரியைக் கற்பனை செய்து அனுபவித்துக் கொண்டு, அவ்வப்போது திறக்கும் பக்கத்து கதவுகள் வழியே ஒரு துணுக்கு சங்கீதம் செவிக்குள் விழ இதுவே போதும் என்று திரும்புவீர்கள்.
சக்கர நாற்காலி உருளும். சக்கரங்கள் நிற்பதில்லை.
சபா நிர்வாகிகள் தயை கூர்ந்து இதெல்லாம் நடக்காமல் பார்த்துக் கொண்டால் தியாகய்யரும், தீட்சிதரும், சியாமா சாஸ்திரியும், அருணாசல கவியும், முத்துத் தாண்டவரும் இன்னும் பல சாகித்ய கர்த்தாக்களும் உங்களை ஆசிர்வதித்தபடி இருப்பார்கள். நன்றி.
————————————————–
இசை விழா மேடைகளில் ஒரு பாடல் முடிந்ததும், ஒரு நிமிடம் அந்த ராகத்தில் அமைந்த திரை இசைப் பாடலை ஒரு வரி பாடிக் கோடி காட்டலாம் என்று எழுதியிருந்தேன். அது சங்கீத மும்மூர்த்திகளுக்குச் செய்யும் மரியாதை ஆகாது என்று ஒரு நண்பர் குறிப்பிட்டிருந்தார்.
இதில் அவமரியாதை எங்கே இருந்து வருகிறதென்று தான் தெரியவில்லை. மக்கள் இசையான திரை இசையைப் பற்றி, மரபிசையான கர்னாடக சங்கீத மேடையில் குறிப்பிடுவதே ஆசாரக் குறைவு என்று இசைக் கலைஞர்கள் பலரும் சபா நிர்வாகிகளும் கச்சேரிக்கென்று வரும் செவ்வியல் இசை ரசிகர் கூட்டமும் நினைக்கிறதாகப் புலப்படுகிறது.
‘பக்கத்தில் வந்தால் தீட்டு’ மனப்பான்மையின் வேறு வடிவங்களில் ஒன்று தேவாரப் பண்ணிசையை நட்டபாடைப் பண்ணாகவோ, பாலைப் பண்ணாகவோ வேறு எந்தப் பண் வடிவிலோ தேவாரமாகக் கர்னாடக இசை மேடையில் யாரும் பாடாதது. ’தேவாரப் பண்ணிசைக்கு தனி நிகழ்ச்சி உண்டே, கர்னாடக இசை மேடையில் ஏன் பாடணும்’ என்கிற இசைக் கலைஞர்கள் மராத்திய அபங்க்களை அதே பஜனை சம்ப்ரதாய பாணியில் கர்னாடக இசைமேடைகளில் தாராளமாகப் பாடுகிறார்கள். மீரா பஜன்களை எம்.எஸ் அம்மா பாடியது அதே படிதான்.
சரி, தேவாரம் வேண்டாம். பாரதி? பாடுகிறார்கள். பாரதிதாசன்?
எங்கே, ’துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ’ பாடலை அல்லது ’தமிழுக்கும் அமுதென்று பேர்’ அல்லது ’எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ அல்லது ‘நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து’ – இந்த சீசனில் பிரபல வித்வான் யாராவது இதில் ஏதாவது ஒன்றைப் பாடியதாகச் செய்தி வரட்டும். அவருக்கு நான் பாராட்டுக் கவியெழுதி வெளியிடத் தயார்.
——————————————————–
ஒட்டகம் ஆசீர்வதிக்கப் பட்டது
ஒன்பது கோணல்களால்
உருவானதால்.
பறக்கச் சிறகு முளைத்தால்
பத்தாம் கோணல்.
ஆசிகள்.
பாலைவனம் ஆசீர்வதிக்கப் பட்டது.
பாலைப்பூ வெடிக்கும் கனவுகள்
கானல்வரியாயினும் ஈச்சமரச்
சோலை நாளை வரும்.
பயணிகள் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள்.
நின்ற உடன் நகரவும்
நகர்வது நிலைக்கவுமாய்ப்
பாலை கடந்தும்
பயணம் தொடரும்.
(இரா.முருகன் டிசம்பர் 2013)