பகல் பத்து ராப் பத்து – குறுநாவல் (இரா.முருகன்) – அத்தியாயம் 1
என் குறுநாவல்களில் மும்பாயைக் களனாகக் கொண்டது ‘பகல் பத்து ராப்பத்து’.
1990-களின் மத்தியில் மும்பை வங்கிக் கிளைகளில் கிளையண்ட் சர்வர் கம்ப்யூட்டிங்கில் யூனிக்ஸ் பிரதிஷ்டை செய்து சைபேஸ் டேட்டாபேஸ் கட்டி எழுப்புவது தொடங்கி நாங்களே உருவாக்கிய சி-மொழி அடிப்படையான மென்பொருளும், ஹப், டெர்மினல் கான்சண்ட்ரேட்டர் இன்னோரன்ன வன்பொருளும் சீராக நிறுவி வெற்றிகரமாக இயங்க வைக்க உயிரைக் கொடுத்துக் கொண்டிருந்த நேரம்.
நாளின் 18 மணி நேரம் கிளைகளிலும், மற்ற நேரம் செண்ட்ரல், வெஸ்டர்ன், ஹார்பர் என்ற மூன்று மின்சாரத் தடங்களில் பயணமும், கோழித் தூக்கமுமாகக் கழிந்த மறக்க முடியாத நாட்கள் அவை.
ராத்திரி பத்து மணிக்கு நாரிமன் பாயிண்ட், நடு நிசிக்கு சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தை ஒட்டிய வீதியில் நடமாட்டம், விடிகாலை நேர சர்ச்கேட், அமைதியும் ஆர்ப்பாட்டமுமாக நேரத்துக்கொரு முகம் காட்டும் அரபிக் கடல்.. பண்டிகைகள், அரசியல், சினிமா.. மராட்டியும் பாரதத்தில் புழங்கும் மற்ற மொழிகள் அனைத்தும் சுற்றிச் சூழ, காலையில் ஒரு திசையிலும் மாலையில் நேரெதிர் திசையிலுமாக ஜன சமுத்திரத்தின் பேரியக்கம் …
மும்பையின் ஒரு நாளில் – பகல் பத்து மணி முதல் இரவு பத்து வரை – நிகழும் குறுநாவல் ‘பகல் பத்து ராப்பத்து’.
சுஜாதா சார் குமுதம் ஆசிரியராக இருந்தபோது குமுதத்துக்கு அனுப்பி, அவர் பதவிக் காலம் முடிந்து வெளியானது.
தினம் ஒரு அத்தியாயத்தைப் பகிர்ந்து கொள்ளத் திட்டம். பார்க்கலாம்.
————————————————————————————————————-
பகல் பத்து ராப் பத்து இரா.முருகன்
அத்தியாயம் 1
ராமபத்ரன் நாக்கை நொந்து கொண்டார்.
கேடு கெட்ட புளியோதரை ஆசை. கர்ப்ப ஸ்திரி கேட்டாள் என்று செய்த புளியோதரை.
எதிர் ஃப்ளாட் சுதாகர் ஷிண்டே பெண்டாட்டி முழுகாமல் இருக்கிறாள். வயிற்றைத் தள்ளிக் கொண்டு ஸ்வெட்டர் பின்ன ஊசி வாங்க வந்த பொழுது சொன்னாளாம் –
‘மதராஸி ஸ்டைல் இம்லி சாவல் சாப்பிடணும் போல இருக்கு மிசஸ் அய்யர்..’
கரிசனமும், எள்ளுப் பொடியும், பெருங்காயமுமாக மணக்க மணக்க அகிலாண்டம் செய்து கொண்டுபோய்க் கொடுத்தது போக மீந்ததை உருளியில் மூடி வைத்திருக்க வேண்டாம் ..
நாற்பத்தேழு வயதில், ராத்திரி ஒன்பது மணிக்கு மேல், எண்ணெய் கசிகிற புளியோதிரை சாப்பிட்டு அஜீர்ணம், தூக்கமின்மை, மனைவியைச் சீண்டல், ஸ்கலிதம், அசதி, கண்ணயர்வு, நேரம் வெகுவாகத் தவறிக் கண்விழிப்பது, மலச்சிக்கல், ஆசன வாயில் எரிச்சல், தவறவிட்ட விரைவு ரயில்… ஸ்டேஷன் ஸ்டேஷனாக நின்று குசலம் விசாரித்துப் போகும் இந்த சாவகாச லோக்கல் டிரெயின் சனியன்.
ராமபத்திரன் கழுத்தை எக்கிப் பார்த்தார்.
இஷ்டர்களோ மித்திரர்களோ யாரும் தட்டுப்படவில்லை. அவர்கள் ஏழு ஐம்பத்தைந்து ஃபாஸ்ட் லோக்கலில் வழக்கம் போல புறப்பட்டுப் போயிருப்பார்கள். ராமபத்ரனைப் போல் முன்னூற்றுச் சில்லரை சதுர அடி இருப்பிடங்களில் முடங்குகிறவர்கள். எதிர் ஃப்ளாட்டில் கர்ப்பிணிகளோ, சித்ரான்னத்தில் இச்சையோ இல்லாதவர்கள். வருகிற தை மாதம் மகா கும்பாபிஷேகமாகப் போகிற சம்பாஜி காலனி சித்தி வினாயகர் கடாட்சத்தால் சகல சௌபாக்கியங்களும், தினசரி சீரான வாகன யோக சௌகரியங்களும் வாய்க்கப் பெற்றவர்கள்…
சராசரிக்கு மேற்பட்ட பம்பாய்த் தமிழர்கள்…
உள்ளேயும் போக முடியாமல் வெளியேயும் சாட முடியாமல் கம்பார்ட்மெண்டில் கூட்டம் முழி பிதுங்குகிறது. பக்கத்தில் உசரமாக நிற்கிறவன் குடம் குடமாகத் தோளில் வியர்வை வடித்துக் கொண்டிருக்கிறான். வெங்காய வாடையும், பூண்டு வாடையும், செண்டுமாக ஏக காலத்தில் மூக்கில் குடைகிறது. சட்டமாக காலை அகட்டி உட்கார்ந்து ‘லோக்சத்தா’ படிக்கிற வல்லபாய் பட்டேல் ஜாடை ஆசாமி தாதரில் இறங்குவானா என்று தெரியவில்லை.
எதற்கும் இருக்கட்டும் என்று கைப்பைய அவன் முதுகை மோப்பம் பிடிக்கிறதுபோல தொடுக்கி வைத்தார்.
‘சப்லோக் ஜாவேச்சே…’
குர்லாவில் ஏறிய இரண்டு குஜராத்திகள், இரைச்சலை மீறி சூரத் பட்டணம் காலியானதைப் பற்றிப் பேச ஆரம்பிக்க, ஏகப்பட்ட கைக்குட்டைகள் மூக்கைச் சுற்றி உயர்ந்தன.
ராமபத்ரன் அவசரமாகக் கைப்பையில் துழாவினார். கண்ணாடிக் கூடு, சீசன் டிக்கெட், வெற்றிலைப் பெட்டி .. துண்டு எங்கே தொலைந்தது?
பாழும் புளியோதரை ஆசை ப்ளேகில் கொண்டு விடுமோ?
இருபத்தைந்து வருட பம்பாய் வாசத்தில் எத்தனை அடைமழையும் கலவரமும் காய்ச்சலும் அனுபவித்தாகி விட்டது… ப்ளேக் தான் பாக்கி.
‘தாதரில் தேஷ்பாண்டே கிட்டே ஷேர் டிரான்ஸ்பர் ஃபாரம் கொடுத்திட்டு …’
யாரோ யாரிடமோ ஷேர் மார்க்கெட் அலசலுக்கு நடுவே சொல்ல , ராமபத்ரன் ஒரு நடுக்கத்துடன் தாதரை எதிர்பார்த்தார். இந்த ஜோதியில் கலக்க வரும் இன்னொரு ஜனக் கூட்டம் அங்கே காத்திருக்கும்.
பத்தரைக்குப் போக வேண்டிய ஆபீசுக்கு அரை மணி நேரம் கழித்துப் போய், யார் யாருக்கோ பதில் சொல்லி, சிரித்து மழுப்பி, கையெழுத்து போட்டு…
எகனாமிக்ஸ் டைம்ஸில் ஷேர் விலை பார்க்க நேரம் கிடைக்காது. மதியம் தான்.
மத்தியானம் போல வந்தால் சித்திவினாயகர் கோயில் நிதிக்கு கேசவ் ஷெனாய் முன்னூத்தியொண்ணு எழுதுவதாகச் சொன்னான். அவன்
பக்கத்தில் இன்னும் இரண்டு ஷெட்டியும், இரண்டு கினிகளும், ஒரு நாயக்கும் கூட எழுதக் கூடிய சாத்தியக் கூறுகள். கன்னடமும், பணமும் தாராளமாகப் புழங்குகிற பேங்க் அது.
ரசீதுப் புத்தகம்..
கைப்பையைத் திரும்பத் திறக்க முயற்சி செய்ய, ஸிப் பாதி வரை வந்து நகரமாட்டேன் என்றது.
ரசீதுப் புத்தகம் உள்ளே தான் இருக்கும் ..
எட்டு மாதமாக, ஆபீஸ் நேரம் போக கோயில் காரியம் தான் ..
எல்லாம் ஒரு சனிக்கிழமை சாயந்திர ரயில் பயணத்தில் தான் ஆரம்பமானது.
‘சம்பாஜி காலனி கோயில் சுவர் மழையிலே விழுந்துடுத்தாம்’.
சீட்டும், பஜனையும், அரட்டையும் அமர்க்களப்பட்ட கம்பார்ட்மெண்டில் திருமலாச்சாரிதான் பிரஸ்தாபித்தார்.
ரயிலில் இப்படிச் சேர்ந்து போய் வருகிறவர்கள் வசூல் செய்து, ஒரு ஐயாயிரம் பத்தாயிரம் ஏற்பாடு செய்தால் சுவர் எழும்பிவிடும் என்று தொடங்கியது.
சுவரிலிருந்து தளமும், தளத்திலிருந்து பிரகாரமும் என்று சேர, உற்சாகம் ஏறிக்கொண்டே போய் கும்பாபிஷேகத்தில் முடியப் போகிறது.
கமிட்டியும், கூட்டமும், ஆலோசனையும் எல்லாம் ரயிலில் தான்..
தாதர் வந்து விட்டது.
ராமபத்ரனை முழுதும் மறைத்த இரண்டு பேரின் பிருஷ்டங்களுக்கு இடையே ஒரு வினாடி தெரிந்த ஜன சமுத்திரம் வழக்கத்தை விடப் பெரியதாக இருந்தது. இதில் நாலும் ஒரு பங்கு உள்ளே நுழைந்தாலே நிற்பது கூடத் திண்டாட்டமாகி விடும்.
நுழைந்து கொண்டிருக்கிறார்கள்.
‘வெஸ்டர்ன் ரயில்வேயிலே தகராறு அண்ணாச்சி.. பயாந்தர்லே ஏதோ ஜகடா .. தாதரோட திருப்பி விடறானாம்.. எல்லாக் கூட்டமும் செண்ட்ரல் ரயில்வேயிலே தான்..’
கெச்சலாக ஒருத்தன் ஜன்னல் பக்கம் யாரிடமோ தமிழில் உரக்கச் சொல்கிறான்.
‘க்யா க்யா?’
வல்லபாய் பட்டேல் ராமபத்ரனைத் திரும்பப் பார்த்து விசாரித்தார்.
பின்னால் ஏழு யானை பலத்தோடு பதிகிற இறுக்கம்.
‘புளியோதரை’ என்றார் ராமபத்ரன்.
——————————
அத்தியாயம் 2
’பாஞ்ச் ரூப்யோ கோ தோ .. பாஞ்ச் கோ தோ ..’
சாந்தாபாய் யந்திரமாகக் கூவிக் கொண்டிருந்தாள். அவளுக்கு முன்னால் தவழும் கிருஷ்ணன்.
பொடிப்பொடியாகத் தரையில் விழுந்து கொண்டிருந்த கிருஷ்ணன் கோலத்தைச் சுற்றி விரையும் கால்கள்.
இது ஆபீஸ் போகிற கூட்டம். கொலாபாவும், நாரிமன் பாயிண்டும் இன்னும் சமுத்திரக் கரையை ஒட்டிய மகா உயரக் கட்டிடங்களுமே இவர்களின் காலை நேர லட்சியம். சாந்தாபாயும், கோலக் குழல் கிருஷ்ணனும், விக்டோரியா டெர்மினஸின் இதர இயக்கங்களும் தினசரி சகித்துக் கொள்ள வேண்டிய தொந்தரவுகளாக விரியும் அவர்கள் உலகம்.
சாந்தாபாய் கிருஷ்ணனை நம்புகிறாள். நூறு கோலக் குழலாவது விற்றால்தான் தாராவியில் குடிசை தங்கும்.
‘சாப்புடறே .. புடவையை வழிச்சுட்டுக் குத்த வைக்கறே.. படுக்கறே .. வாடகை எங்கேடி?..
காலையில் கிளம்புகிற பொழுது, ஜம்னாதீதி நாக்கைப் பிடுங்குகிறதைப் போல் கேட்டாள்.
கங்காதர் செயலாக இருந்தவரை ஒரு மாதமாவது வாடகை தவறி இருக்குமா?
இரண்டு கோலக் குழல் ஐந்து ரூபாய். யார் வாங்க வருகிறார்கள்?
பெரிய பெரிய மூக்குத்தியும் எல்லா வண்ணத்திலும் பாவாடையுமாக எதிரே பத்திரிகை ஆபீஸ் பக்கம் இருந்து கடந்து வரும் கூட்டத்தில் சாந்தாபாயின் பார்வை நிலைக்கிறது.
ராஜஸ்தானிகள்.
பாலைவனத்தில் கோலம் போடுவார்களா? இதுவரை போடாவிட்டால் என்ன? இனிமேல் பழகினால் போகிறது.
சாங்க்லி கிராமத்து சாந்தாபாய் பம்பாய் நடைபாதையில் குந்தி இருந்து கூவி விற்கப் பழகிக் கொண்டது போல ..
‘பாஞ்ச் கோ தோ…’
சாந்தாபாயின் குரல் பிசிறு தட்டுகிறது. காலையில் கிளம்பும்போது சாப்பிட்ட தீய்ந்த ஒற்றைச் சப்பாத்தியோடு காய்கிற வயிறு.
வந்ததிலிருந்து ஐந்து ரூபாய்க்குக் கூட விற்காமல் கொட்டிக் கொள்ள இப்போது என்ன அவசரம்?
எல்லாமே அவசரம் தான். விடியும் முன்னே அழுக்கு டால்டா டப்பாவோடு கழிப்பறைக்கு ஓட.. தண்ணீர் பிடிக்க… கங்காதருக்கு ரொட்டி எடுத்து வைத்துவிட்டு கித்தான் பையில் கோலக் குழலையும் மாவுப் பொடியையும் கட்டித் தூக்கிக் கொண்டு ஓடி வர.. தெருவோரம் இடம் பிடிக்க..
போன வருடம் வரை கங்காதர்தான் இந்த அவசரத்தோடு ஓடியது.
விடிந்தது முதல் இருட்டும் வரை தாராவியின் அழுக்கிலும் சகதியிலுமே சாந்தாபாயின் உலகம் அடங்கி இருந்தது அப்போது.
ரயிலில் தொங்கிக் கொண்டுபோய்த் தவறி விழுந்து இரண்டு காலும் கணுக்காலுக்குக் கீழ் துண்டிக்கப்பட்டு கங்காதர் குடிசையில் முடங்கி ஒரு வருடம் ஆகிறது.
’என்ன விலை இதெல்லாம்?’
வயதான ராஜஸ்தானி, சாந்தாபாயைத்தான் கேட்கிறாள்.
முன் தள்ளிய மார்பும், ஏக காலத்தில் பேச்சுமாக மற்ற வண்ணப் பாவாடைகள், தெருவோரம் நெயில் பாலீஷ் விற்கிற நசீமைச் சூழ்ந்து நிற்க, நகம் முறிந்து சுருக்கம் கண்ட கைகள் சாந்தாபாயைச் சுற்றி நீள்கின்றன.
‘கிருஷ்ண கன்னையா.. கோபால கிருஷ்ணா.. கோகுல கிருஷ்ணா..’
சாந்தாபாய் நேர்த்தியாக நடைபாதையில் இன்னும் இரண்டு கிருஷ்ணனைத் தவழ விட்டாள்.
சாங்க்லியில் எப்போதோ பார்த்த சினிமாவில் லதா மங்கேஷ்கர் இப்படி வரிசையாக வார்த்தை அடுக்கிப் பாட, ஆஷா பரேக்கோ, நூதனோ, கையில் பொம்மையை இப்படியும் அப்படியுமாக ஆட்டிக் கொண்டு வாயசைப்பார்கள்…
சினிமா… பம்பாய் வந்து பத்து வருஷத்தில் பார்த்த சினிமா எல்லாம் கல்யாணம் ஆன முதல் வருஷத்தில் தான்.
‘கடைசியா என்ன விலை?’
ராஜஸ்தானி கிழவி கேட்கிறாள். ‘என்னை யாரும் ஏமாற்ற முடியாது’ என்ற தீர்மானம் தெறிக்கிற குரல். தலை தன் பாட்டுக்கு இப்படியும் அப்படியும் அசைகிறது.
இவள் வீட்டில் ஒட்டகம் வளர்ப்பாள் என்று ஏனோ சாந்தாபாய்க்குத் தோன்றியது.
‘நாலு கொடு’.
கிழவி சுருக்குப் பையில் இருந்து ஐந்து ரூபாய் நோட்டை நாலாக மடித்தபடியே நீட்டினாள்.
‘கட்டி வராது அம்மா..’.
வாடகை ராத்திரி வராட்ட, உன்னோட தட்டு முட்டு சாமானை, உதவாக்கரை புருஷனை, கோலக் குழலை எல்லாம் வெளியே எரிஞ்சிடுவேன்.
ஜம்னாதீதியின் குரல் இன்னும் விரட்டிக் கொண்டே தான் இருக்கிறது.
‘காலையிலே முதல் வியாபாரம். கூடவே ஒண்ணு பிடியுங்க’.
சாந்தாபாய் மூன்று கோலக் குழலை எடுத்துக் கொடுத்துவிட்டு நிமிர்ந்த பொழுது, பஸ்ஸைப் பிடிக்கிற அவசரத்தில் யாரோ பக்கத்தில் இருந்த மாவு பக்கெட்டைத் தட்டி விட்டுப் போனார்கள்.
’சாப், உனக்குக் கண் இல்லையா?’
தெருவின் சத்தத்துக்கு நடுவே அவள் குரல் எடுபடவில்லை.
——————————————-
அத்தியாயம் 3
ப்ரீதி குளித்துக் கொண்டிருந்த பொழுது டெலிபோன் ஒலித்தது.
விக்ரம்… கோகுல் .. டெல்லியிலிருந்து பல்பீர் .. சீனாக்காரி அண்ணி..
பாத்டப்பிலிருந்து ஒரு கையை உயர்த்தி எடுக்க, ரிசீவர் தண்ணீரில் மிதந்தது.
‘மாதம் ஆறாயிரம் வாடகை… ஃப்ளாட்டில் ஃபோன், கீஸர்ம் பாத்டப், மைக்ரோ அவன் என்று சகலமானதும் ரொப்பியிருக்கிறேன்.. ரெண்டு மாதத்துக்கு ஒரு தடவை வந்து பார்ப்பேன் .. ஏதாவது ஒண்ணு நோக்காட்டில் விழுந்திருந்தால், உன் அட்வான்ஸ் ஒரு லட்சம் உன்னதில்லை..’
வீட்டுக்காரி மிசஸ் பாட்லி வாலா முதல் நாளே பயமுறுத்தி விட்டுப் போயிருக்கிறாள்.
என்ன இருந்தாலும், டெல்லியை விட பம்பாய் எவ்வளவோ மேல்…
ப்ரீதிக்கு இரண்டு வருஷ டெல்லி வாழ்க்கையை நினைத்தாலே எரிச்சலாக இருந்தது.
டெல்லி.. அது ஒரு ஜயண்ட் சைஸ் கிராமம்..
சின்ன வயசுப் பெண் வீடு வாடகைக்குக் கேட்டு வந்து நிற்கிறாள் என்றால் டிபன்ஸ் காலனியின் ஓய்வு பெற்ற மேஜர்களும், கர்னல்களும் ஹூக்கா புகைவிட்ட படி விசித்திரமாகத்தான் பார்ப்பார்கள்..
‘என்ன உத்யோகம்?’
வயதான சர்தாரிணிகள் விசாரிக்கும்போது, ‘மாடலிங்’ என்று பதில் சொன்னால், ‘பத்து நிமிஷம் முன்னால் யாரோடோ படுத்து விட்டு எழுந்து வந்த குட்டி’ என்கிறதுபோல சர்வ நிச்சயமாக சின்னச் சிரிப்போடு, ‘சின்னப் பெண்களைக் குடி வைப்பதில்லை’ என்று சொல்லிக் கதவைச் சாத்தி உள்ளே போவார்கள்.
பம்பாயில் பரந்த மனசு எல்லோருக்கும்..
‘மிஸ் ப்ரீதி அஹூஜா, மாடலிங் டீசண்டான தொழில் என்று எனக்குத் தெரியும்.. எல்லோரோடும் இழைவது தவிர்க்க முடியாதது .. ஒரு வரம்பில் மற்றவர்களை நிறுத்தினால் சரிதான் .. 1போன் இருக்கு .. டிராயிங் ரூமில், பாத்ரூமில், டாய்லெட்டில் எல்லாம் ஆர்ஜே லெவன் சாக்கெட் போட்டு இணைப்பு கொடுத்திருக்கேன் .. விடிய விடிய வேணுமானாலும் பேசு.. வர மட்டும் சொல்லாதே..’
‘இல்லை மிசஸ் பாட்லி வாலா.. எந்தத் தடியனும் வர மாட்டான். எனக்காகத் தோன்றுகிற வரை, என் கட்டிலில் நான் மட்டும் தான் ..’
‘ஏய் ப்ரீதி .. கூப்பிட்டது காதில் விழலியா?’
ஃபோன் ரிசீவரைத் திரும்ப எடுத்து சோப்புக் கையோடு காதில் வைக்க விக்ரம் குரல்.
‘குளிச்சிட்டிருக்கேன்’.
‘சே.. நாசமாப் போன இந்த நாட்டுக்கு வீடியோ போன் எப்போ வந்து சேரும்னு தெரியலே..’
‘அது வந்தாக் கூட முகம் மட்டும்தான் தெரியும்..’
ப்ரீதி கலகலவென்று சிரிக்க திரும்பவும் ரிசீவர் பிடி வழுக்கித் தண்ணீரில்.
‘சாரி விக்ரம் .. உன்னைச் சரியாப் பிடிச்சுக்கலே.. கீழே விழுந்துட்டே..’
‘கெட்டியாப் பிடிச்சுக்கற மாதிரி ஒரு விஷயம் சொல்லட்டா .. ரஷ்மி டிடர்ஜெண்ட் .. ஆரஞ்சு கலர் பவுட .. மேலே எல்லாம் நுரையைப் பூசிக்கிட்டு விக்கப் போறே… பெரைரா தெரியுமா.. அவன் தான் கேமராவிலே சுடறான்..’
குப்பென்று பொங்கிய சந்தோஷம் .. பிடரியில் குறுகுறுக்கும் ஈர மயிர்க்கால்கள்…
ப்ரீதி… நட்சத்திர அந்தஸ்தைப் பிடிக்கப் போகிறாய் ..
‘கான்செப்ட் டெவலப் பண்ணிட்டு இருக்கோம். சாய்ந்திரம் டிஸ்கஷனுக்கு வந்துடு .. பெரைரா உன் மூஞ்சியைப் பாத்துட்டுத்தான் ஷாட் கம்பொசிஷன் ஃபைனலைஸ் செய்வானாம்..’
’இப்பவே வேணும்னாலும் வரேன்..’
ஃபோனில் கண் அடிக்க முடியாது. வீடியோ ஃபோன் எப்போ வருமோ ..
‘வேணாம் .. டிராபிக் எல்லாம் ஜாமாயிடும்.. ஏதாவது உடுத்திக்கிட்டு சாயந்திரம் அஞ்சு மணிக்கு ரெடியா இரு.. என்ன சோப்பு தேச்சுக்கறே.. இங்கே வரைக்கும் வாசனை வர்றதே..’
’நாய்க்குட்டிக்குப் போடறது..’
ஃபோனை வைத்துவிட்டு பாத்டப்பில் இருந்து இறங்கினாள்.
கண்ணாடியில் முழுசாகத் தெரியும் ப்ரீதி.
‘யுரேக்கா ..’
உரக்கக் கூவியபடி டர்க்கி டவலை எடுத்துச் சுற்றியபடி வெளியே நிதானமாக நடந்தாள்.
கண்டுபிடித்தது இந்த உடம்பின் மகா வீர்யத்தை.
இரண்டு நிமிடக் கமர்ஷியல்களில், பார்க்கிறவர்கள் கண்ணைக் கட்டிப் போடும் வீர்யம்..
சோப்போ .. கரப்பான் பூச்சி மருந்தோ .. கார்பொரைஸ்ட் தீக்குச்சியோ .. இந்த வீர்யத்தால் எல்லாம் நினைவில் நிறுத்தப் படும். ‘ரீகால் பவர்’ கணிசமானது என்று மார்க்கெட் சர்வே சொல்லும்போது அடுத்த அசைன்மெண்ட் கதவைத் தட்டும்.
தட்டட்டும்… சமையல் உப்பில் தொடங்கி சானிடரி நாப்கின் வரை வந்தாகிவிட்டது.
டெல்லியில் திரும்பத் திரும்ப ஹவாய் செருப்பு, எட்டு லீவர் பூட்டு .. பல்பீர், ரந்தீர் என்று சதா ஜர்தாபான் குதப்பிக் கொண்டு உரக்கப் பேசுகிற சகாக்கள்..
அவர்கள் எடுக்கிற விளம்பரப் படங்களும் உரக்கச் சத்தம் போடும்.
ஜீன்ஸில் உடம்பை நுழைத்துக் கொண்ட போது, கதவிடுக்கு வழியே டைம்ஸ் ஆப் இந்தியா எட்டிப் பார்த்தது.
ஜீன்ஸ் உடம்பை இறுக்குகிறது போன தோணல்..
வென்னீரில் குளித்ததால் இருக்குமோ…
போன வாரம் கோகுலின் பார்ட்டியில் சாப்பிட்ட சாக்லெட்டா, ஐஸ்க்ரீமா..
எதுவாகவும் இருக்கட்டும்..
இனிமேல் ரெண்டு வாரம் தயிரும், ஆம்லெட்டும் கிடையாது.
சின்ன இடுப்பு.. வில்லாக வளையும் உடம்பு.. வசீகரமான சிரிப்பு ..
பெப்ஸியும் கோக்கும் கலர் டிவியும் வாஷிங் மிஷினும் உன் பாதையில் வரப் போகிறது பெண்ணே. மூக்குக்குள்ளே இருந்து எட்டிப் பார்க்கும் அந்த ஒற்றை ரோமத்தை மட்டும் அகற்றி விடு…
நாளை மறுநாள் ரோம நாசினி விளம்பர ஷூட்டிங்,
தொடை வரை மழித்துக் கொண்டு, சில்க் கைக்குட்டையை மேலே இழுத்துக் காட்ட வேண்டும்..
ப்ரீதி ஆஃப் தண்டரிங் தைஸ்..
நோ .. இது வடிவமான உடம்பு.. ப்ரீதி ஆஃப் லைட்னிங் ஸ்டெப்ஸ்..
சோபாவில் உட்கார்ந்து பத்திரிகையைப் பிரித்தாள்.
‘சூரத்தில் ப்ளேக்.. நகரம் காலியாகிறது..’
ஜாக்கிரதை தேவை.. குஜராத்திகள் பக்கம் போகவே கூடாது .. அவர்களின் ஒன்றுவிட்ட சித்தப்பாவோ, அத்தையோ சூரத்திலிருந்து கிளம்பி வந்திருக்கலாம்.. புறப்பட்டுக் கொண்டிருக்கலாம்..
இன்றைக்கும் ஆர்.கே.லக்ஷ்மண் கார்ட்டூன் புரியவில்லை.
டைம்ஸின் பக்கங்களை நிதானமாகப் புரட்டினாள்.
விளம்பரங்கள் .. பக்கம் பக்கமாக விளம்பரங்கள்..
குவைத்தில் கம்ப்யூட்டர் என்ஜினியர்களும், குதிரை பராமரிப்பவர்களும் தேவை..
முலுண்டிலிருந்து கொலாபாவுக்கு ஒரே காரில் வந்து திரும்பி, செலவைப் பகிர்ந்து கொள்ளக் கூடிய எக்ஸிக்யூட்டிவ்கள் தேவை …
செண்ட்டார் ஓட்டலில் செட்டிநாடு சாப்பாட்டுத் திருவிழா..
வீடு வாங்க.. விற்க ..
சீக்கிரம் ஒரு ஃப்ளாட் வாங்க வேண்டும். எப்பாடு பட்டாவது. யாரைப் பிடித்தாவது.
இனியும் சொந்த ஊர் திரும்ப அங்கே ஏதுமில்லை. அப்பா தன் பங்குக்கு விட்டுப் போன பத்து லட்சம் பாட்லி வாலாவுக்குக் கொடுத்த அட்வான்ஸ் போக பேங்கில் சமர்த்தாகக் குட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. அம்மா பாண்டிச்சேரி ஆசிரமத்தில் சேர்ந்து, கையால் தயாரான காகிதத்தில் மாதம் ஒரு தடவை, பச்சைக் காய்கறிகளும் பழங்களும் நிறையச் சாப்பிடச் சொல்லிக் கடிதம் எழுதுகிறாள்.
அண்ணன்கள் சிங்கப்பூரிலும் ஹாங்காங்கிலும் சீனாக்காரிகளைக் கல்யாணம் செய்து கொண்டு, செல்லுலாய்ட் பொம்மைகளைப் போல குழந்தை பெற்றுக் கொண்டு, டெலிஃபோனில் பிறந்த நாள் வாழ்த்து சொல்லிக் கொண்டு, சாப்ஸ்டிக்கால் சாப்பிடக் கற்றுக் கொண்டு சவுக்கியமாக இருக்கிறார்கள்.
இனிமேல் இங்கேதான்..
முகம் மெல்ல பரிச்சயமாகி வருகிறது. தெருவில் போனால் ஒரு வினாடி உற்றுப் பார்க்கிறார்கள்.
‘சொட்டு நீலம் படத்துலே வர்றது நீங்க தானே?’
எதிர் ஃப்ளாட் வேலைக்காரி நேற்று லிஃப்டில் கேட்டாள்.
இந்த மாதம் தொடர்ச்சியாக மூன்று விளம்பரம். ஆணுறை விளம்பரப் படத்தில் நடிக்கச் சம்மதமா என்று கோகுல் கேட்டான். யோசித்துச் சொல்வதாக வாய்தா வாங்கியிருக்கிறாள்.
பெரைராவின் கேமிரா இந்த உடம்பை வருடப் போகிறது.
அப்புறம்.. மேலே.. மேலே.. ஒரு செஷனுக்கு லட்ச ரூபாய் ..
பாந்த்ராவில் ஃப்ளாட் விற்பனைக்கு.. எட்டே கால் கோடி ரூபாய்.
சினிமாவில் நடித்தால் கூட பக்கத்தில் போக முடியாது..
சினிமா.. அது வேறு உலகம்.. அதுவும் இந்தி சினிமா.. தெரிந்தவர்களே தடுமாறுகிற பூமி … நிறைய மெனக்கெட வேண்டும்.
சாந்தாக்ரூஸ் .. ரெண்டு பெட்ரூம்.. கன்சீல்ட் வயரிங்.. லிஃப்ட் உள்ள ஃப்ளாட்.. தொண்ணூற்று எட்டு லட்சம்..
ஒரு கார் கூடத்தான் தேவை..
வேண்டாம்.. காருக்கு என்ன அவசரம்.. வரச் சொன்னால் வந்து காத்திருந்து கூட்டிப் போகிறார்கள். திரும்பக் கொண்டு வந்து இறக்கி விடுகிறார்கள்… சின்ன சில்மிஷங்கள்.. இதுவரை பெரிதாகாமல் சீராக எல்லாம் போகிறது .. இனிமேல் எப்படியோ..
’செஷனுக்கு லட்ச ரூபாய்க்கும் மேலே தர்றேன்.. மூணு நிமிஷக் கமர்ஷியல்…’
இல்லை மிசஸ் பாட்லி வாலா.. சில விஷயங்களை அனுமதித்துத்தான் ஆக வேண்டும். நீங்கள் ஆணுறை விளம்பரம் பார்த்திருக்கிறீர்களா?
அந்தேரி.. மூன்றாம் மாடி.. லிஃப்ட் இல்லை… ஒரு பெட்ரூம்.. ஏழு லட்ச ரூபாய் தான்..
அந்தேரியில் வாங்கலாமா?
அதற்கு, மெட்ராஸில் குடியேறி இரண்டு தமிழ்ப் படம் செய்யலாம்.
உடம்பு ஊதிப் போனாலும் பரவாயில்லை.
பிடித்துப் போனால் கோயிலே கட்டிக் கும்பிடுவார்கள்.
ப்ரீதிக்குக் கோயில் வேண்டாம். சொந்த ஃப்ளாட் போதும்.
திரும்பத் தொலைபேசி சத்தம்.
என்ன விற்க வேண்டும் கனவான்களே? எவ்வளவு பணம் தருவீர்கள்?
————————————-
அத்தியாயம் 4
ராமபத்ரன் ஓபராய் ஓட்டலை ஒட்டி நிழலில் நின்றார்.
டிபன்வாலா நேரம் தவறாமல் கொண்டு வந்து கொடுத்த காரியரில் வத்தல் குழம்பும் தயிர் சாதமும் சாப்பிட்ட திருப்தி.
நல்ல வேளையாக அகிலாண்டம் புளியோதரை வைக்கவில்லை.
‘சூனாம் தே..’
தட்டுக்கடைக்காரன் டூத் பேஸ்ட் போல ட்யூபில் அடைத்த சுண்ணாம்பை நீட்டினான்.
கடற்காற்று மெரின் டிரைவ் பக்கமிருந்து சீராக வீச ஆரம்பித்திருக்கிறது.
மணி பார்த்தார். இரண்டு முப்பது.
இன்னும் ஒரு பதினைந்து நிமிஷம் நிம்மதியாக ‘முறுக்க’லாம்.
தஞ்சாவூரிலிருந்து இருபத்தைந்து வருஷம் முன்னால் கிளம்பி வந்தபொழுது நாக்கில் புரண்ட தமிழில் ‘முறுக்குவது’ இல்லை. ‘வெற்றிலை போடுவது’ தான்.
பிரக்ஞையில் உரைக்காமலேயே தஞ்சாவூர்த் தமிழ் பாலக்காடாகி விட்டது. .. ‘கேட்டியா?..’ …’’ட்டேளா’ … ‘ வந்துட்டில்லே..’ …’சவட்டித் தள்ளு..’…
எதிர்த்த பேங்கில் முகப்பை இடித்துக் கொண்டிருந்தார்கள்.
கம்ப்யூட்டர் வைக்கப் போகிறார்களாம்.
சகலத்துக்கும் கம்ப்யூட்டர்.
கண்பத்ராவ் மளிகைக் கடையில் சுக்கு வாங்கினால் கூட, கம்ப்யூட்டர் பில்லைக் கிழித்து நீட்டுகிறான்.
கண்பத்ராவும் ராமபத்ரனின் குடியிருப்பில், முன்னூற்றுச் சொச்சம் சதுர அடியில் சுவாசித்துக் கொண்டிருந்தவன் தான். அது இருபது வருஷம் முன்னால்…
அரண்மனை போல வீடும், ஆஸ்துமாவுமாக அமர்க்களமாக இருக்கிறான் இப்போது..
சுக்கும் மிளகும் விற்றுக் கட்டின வீடு..
ராமபத்ரன் பற்றுவரவு நோட்டில் பதிந்து மளிகை வாங்கி, மாதம் பிறந்ததும் அடைத்துக் கொண்டு, அதே குச்சில் தான் சுகவாசம்.
அரைகுறையாக உடையணிந்த பெண்கள், டர்க்கி டவலால் லேசாக மாரை மறைத்து, வெளிநாட்டுக் காரில் வந்து இறங்கியதை வெற்றிலையைக் குதப்பிக் கொண்டே பார்த்தார்.
நாரி ஸ்தனபார தர்சனம் என்று இந்த நிமிஷத்துக்கு ஜாதக பலன் போல… எல்லோருக்கும் குளிர் விட்டுவிட்டது.
டெலிவிஷனில் பாதி நேரம் சதைபிடிப்பான முலைகளும் பிருஷ்டங்களும் தான் குலுங்கிக் கொண்டிருக்கின்றன.
கண்ணியமானவர்கள், ‘எனக்குப் பிடித்த பிருஷ்டங்கள் உள்ள அழகி இவள்’ என்று கொடுத்த தகவலை, பளபளப்பான இங்கிலீஷ் பத்திரிகைகளில் மூணு பக்கம் சர்வேயாக, உறுதி செய்கிற புகைப்படங்களோடு போடுகிறார்கள்..
கையில் நாலு பலூன்களைப் பிடித்தபடி, அராபிய ஷேக் பின்னால் ஓடி விற்க முயன்ற கந்தல் சட்டை குழந்தை, அவன் ’வேண்டாம்’ என்றதும், வயிற்றைத் தொட்டுக் காட்டி கையை விரித்து நீட்டுகிறது.
தொளதொள உடுப்பில் எங்கேயோ தேடி எடுத்து பைசாவை வீசிவிட்டுப் போகிறவன் ஒரு பார்வைக்கு தப்ளாம்புதூர் பஞ்சாபகேச சாஸ்திரி ஜாடையில்..
தஞ்சாவூரும் தப்ளாம்புதூரும் எப்போதாவது நினைப்பில் தலைகாட்டுவதோடு சரி. தப்ளாம்புதூர் காரைவீடு விற்று வந்த தொகை இங்கே ஃப்ளாட் வாங்கியதில் கரைந்து விட்டது. தஞ்சாவூரிலிருந்து இருபத்தைந்து வருஷம் முந்தி மடிசார் கட்டோடு கல்யாணம் பண்ணிக் கூட்டி வந்த அகிலாண்டம், சரளமாக மராத்தியில் பொரிந்து தள்ளுகிறாள்.
புனாவில் படிக்கிற ஒரே பிள்ளை லீவில் வரும்போது, ஆவக்காயோடு தமிழையும் தொட்டுக் கொள்கிறான்.
ஆபீஸில் சகல லோனும் வாங்கி, முதல் வருடப் படிப்பு முடிந்து என்ஞினியரிங் இரண்டாம் வருடம்.
முழுசும் முடிந்த பிறகும் இந்த உத்தியோகம் சீராகத் தொடர வேண்டும்.
அப்புறம்… அப்புறம் என்ன..
ஆயுசு முடிகிறவரை இனிமேல் இங்கேதான்.
முன்னூற்று ஐம்பது சதுர அடியில் காலண்டர் மாட்டிக் கிழித்து, விநாயக சதுர்த்திக்கு ஊரோடு பத்து நாள் கொண்டாடி, சௌபாத்தியில் சமுத்திரத்தில் கரைக்க விசர்ஜன் ஊர்வல லாரியில் வைத்து, தீபாவளிக்கு யாரோ கொடுத்த வாதுமைப் பருப்பும் கெட்டி அல்வாவும் தின்று வயிறு பொருமி, மழைக் கோட்டு கிழியக் கிழியத் தைத்துக் கொண்டு, கம் பூட்ஸுகளைப் பத்திரிகை சுற்றி அடுத்த மழைக் காலத்துக்குப் பாதுகாப்பாக முடக்கி, பேப்பரில் சுற்றித் தரும் பொடேடோ வடா, இஞ்சி அதக்கிக் கலந்த சாயாவோடு ருசித்து, கனவிலும் வரிசை தப்பாது வரும் ஸ்டேஷன்கள் வழியே தினசரி போய் வந்து, கோயில் கட்டி, கும்பாபிஷேகம் நடத்தி, பங்கு மார்க்கெட்டில் சின்னதாகக் கோட்டை விட்டு, கேபிள் டிவியில் இந்தி டப்பிங்கில் ‘ரோஜா’ படம் தூக்கம் வருகிறவரை பார்த்து..
மழைக்காலத்தில் எல்லாம் யார் யாருக்கோ சாவு விழ, குடை பிடித்துக் கொண்டு போய் வந்த இந்த ஊர் மசானம்.. ஈர விறகு.. இந்தியில் சண்டை பிடிக்கிற, மாடுங்கா சங்கர மடவாசல் புரோகிதர்கள்… சூனாம்பட்டில் பத்தாம் நாள் காரியம் நடக்கிற இடம். கால் அலம்பி திரும்ப நுழைகிற ராமபத்ரனின் மூன்றாம் மாடி ஃப்ளாட்… இரண்டு பேர் சேர்ந்து நடக்க முடியாதபடி குறுகிய மாடிப்படி..
மூச்சு நின்றால் அந்தப் படி வழியே எப்படி இறக்குவார்கள்? ஒருக்களித்தாற்போல் பிடித்துக் கொண்டு.. ஜாக்கிரதை.. ஜாக்கிரதையா..
யோசித்தபடியே தெரு திரும்பி, ஏர் இந்தியா கட்டடம் வரை வந்து விட்டார்.
போன வருஷம் மார்ச் பனிரெண்டாம் தேதி இந்த நேரத்தில் பம்பாய் பற்றி எரிந்தபோது இங்கே வெடிகுண்டு வெடித்துக் கருகிய உடல்களை வரிசையாகத் திணி மூடி எடுத்துப் போனது சட்டென்று நினைவின் விளிம்பில் எட்டிப் பார்த்தது.
அப்படி எல்லாம் போகக் கூடாது.. இறக்கி எடுத்துப் போகச் சிரமப் பட்டாலும் பரவாயில்லை..சொந்த வீட்டில் தான்..
ஸ்டேட்டஸ் ஓட்டலில் நுழைந்து, ஒரு காப்பி குடிக்கலாம என்று தோணல்..
வேண்டாம்.. சரிப்படாது.. பத்து ரூபாய் பழுத்து விடும்.. காண்டீன் சாயாவே போதும்.
திரும்ப ஆபீஸில் நுழைந்தபோது ‘சின்ன கோகலே சாப்’ கூப்பிடுவதாக அட்டெண்டர் தாய்டே வந்து சொன்னான்.
சின்ன கோகலே நாளைக்கு ஸ்விட்சர்லாந்து போகிறான். வர ஒரு மாதம் ஆகும். மூத்த கோகலே கிட்டத்தட்ட சாய்வு நாற்காலியும் கட்டிலுமாக முடங்கி விட்டார். நடுவாந்திர கோகலேவுக்கு பிசினஸ் ஒரு எழவும் தெரியாது.
‘மிஸ்டர் அய்யர்.. நீங்க தான் கூட இருந்து பார்த்துக் கொள்ளணும்..’
ஜாதகத்தில் அடிமை உத்யோகம் என்று தீர்க்கமாக எழுதியிருக்கிறது.
இருபத்தெட்டு வருஷம் முன்பு தஞ்சாவூரிலிருந்து டிரங்க் பெட்டிக்குள் பிட்மென்ஸ் ஷார்ட் ஹேண்ட், சவுந்தர்ய லஹரி, சர்ட்டிபிகேட்கள், ட்வீட் பேண்ட், கோவிந்தா மஞ்சள் சட்டையோடு கிளம்பி வந்து, மாடுங்கா கன்சர்னில் மோர்க் குழம்போடு சாப்பிட்டுக் கொண்டு, முன்னூறு ரூபாய் சம்பளத்தில் ‘கோகலே அண்ட் கம்பெனி’யில் சேர்ந்ததிலிருந்து, தலைமைக் குமஸ்தனானது வரை அதேபடி தான்…
அப்போது ஆபீஸ் ஜி.பி.ஓ பக்கம் வெட்டிவேர்த் தட்டியும், நாலைந்து பெடஸ்டல் ஃபேனும், ரெமிங்டன் டைப்ரைட்டருமாக ஒரு பழைய கட்டடத்தில்…
‘மிஸ்டர் அய்யர்.. கம்ப்யூட்டர் செக்ஷன் பிள்ளைகள் என்ன கேட்டாலும் சாங்க்ஷன் செஞ்சுடுங்க.. காலம் மாறிக் கொண்டிருக்கு.. இந்தக் கம்பெனியையே அவங்க தான் தாங்கறாங்க..’
சின்ன கோகலே தங்கப் பல் தெரிய சிரித்துக் கொண்டே சொன்னான்.
டைப்பிஸ்டாகச் சேர்ந்து, விரல் நுனிகளில் கம்பெனியைத் தாங்கிய ராமபத்ரன்…
கண்ணாடிச் சுவர் தடுப்புக்கு அந்தப் பக்கம் தெரியும் டெர்மினல்களையும், மல்ட்டிப்ளக்ஸர்களையும் அவற்றோடு இழையும் ‘வாண்டுப் பசங்களை’யும் அசிரத்தையாகப் பார்த்தபடி ஷார்ட் ஹேண்ட் புலி வெற்றிலை மெல்லுகிறது.
புலிக்குப் பிறந்ததும் நாளை அவர்களின் பாஷை பேசும்.
’பழைய டைப்ரைட்டரை எல்லாம் ஏலத்தில் விடச் சொன்னேனே.. மறந்துட்டீங்களா? சும்மா கொடுத்தாலும் பரவாயில்லே.. சதுர அடிக்கு இருபதாயிரத்துக்கு மேலே விலை கொடுத்து வாங்கின இடத்தை அடைச்சுக்கிட்டு.. அடுத்த வாரம் இன்னும் நாலு கம்ப்யூட்டர் வருது.. உள்ளே வைக்கணும்..’
சின்ன கோகலே சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு ராமபத்ரனுக்கும் நீட்டினான்.
‘வேணாம்’.
எந்த துர்ப் பழக்கமும் இல்லாமல் நாற்பத்தொன்பது வயது கடந்து விட்டது. வெற்றிலை அந்தப் பட்டியலில் வராது.
‘உங்க கோயில் கட்டி முடிச்சாச்சா?’
வாய் நிறையப் புகையை விட்டுக் கொண்டு சின்ன கோகலே கேட்டான்.
‘வேலை நடக்குது..’
‘சார்’ என்று சேர்க்கத் தோன்றவில்லை.
‘திரும்பினதும் ஐம்பதாயிரத்து ஒண்ணு ரூபாய்க்கு செக் போட்டுத் தரேன்.. போகிற காரியம் ஜெயமாகட்டும்.. இந்த சாஃப்ட்வேர் பிபிஓ மட்டும் க்ளிக் ஆனா நாம எங்கேயோ போயிடுவோம்..’
‘விஷ் யூ ஆல் தி பெஸ்ட்.. தேங்க் யூ சார்’.
‘அய்யர் .. உங்க டேபிள்ளேயும் ஒரு கம்ப்யூட்டர் வைக்கச் சொல்றேன்.. நேரம் கிடைக்கறபோது வேர்ட் ப்ராசசிங்.. எக்செல் ஸ்ப்ரெட் ஷீட் இப்படிச் சின்னச் சின்னதா கத்துக்கிட்டா உபயோகமா இருக்கும்.. பசங்க யாரைக் கேட்டாலும் பொறுமையா சொல்லிக் கொடுப்பாங்க.. இவங்க எல்லாரோட அப்பன்மாரும் உடுப்பைக் கழட்டின நேரம் வெகு விசேஷமானது போல.. ஒருத்தன் விடாம தலையெல்லாம் மூளை..’
ராமபத்ரன் இருபது வருஷம் முந்திய, அடைமழை பெய்து வெள்ளக்காடாகி, ரயில் போகாததால் ஆபீஸ் போகாமல் வீட்டில் தங்க வேண்டி வந்த அந்த அதி விசேஷமான பகல் பொழுதை நினைத்துக் கொண்டார்.
‘ஏதாவது முக்கியம்னா ஈ-மெயில் செஞ்சுடுங்க.. பொடியன்கள் கிட்டே சொன்னா க்ஷணத்தில் தட்டி விட்டுடுவாங்க..’
கதவை மூடுகிறபோது சின்ன கோகலே சொன்னான்.
வெளியே அட்டெண்டர் தாய்டே சாவகாசமாக வெற்றிலை போட்டுக் கொண்டு, விரலில் மீந்த சுண்ணாம்பை டைப்ரைட்டர் ஓரமாகத் தடவிக் கொண்டிருந்தான்.
——————————
அத்தியாயம் 5
’மணி என்ன நசீம்பாய்?’
சாந்தாபாய் பின்கழுத்து வியர்வையைத் துடைத்தபடி கேட்டாள். யாருக்கோ பாட்டில் கழுவுகிற பிரஷ் எடுத்துக் கொடுத்தபடி மூன்று விரலைக் காட்டினான் அவன்.
மூன்று மணி.
ஏதாவது சாப்பிட்டால்தான் கொஞ்சம் போலாவது தெம்பு வரும்.
பணம் வைக்கிற தகர டப்பாவைப் பார்த்தாள். பரவாயில்லை…அறுபத்தைந்து ரூபாய்க்கு வியாபாரமாகி இருக்கிறது.
கிளம்புகிறதுக்குள் ஒரு இருநூறு தேறினால், ஜம்னாதீதி முகத்தில் விட்டெறியலாம்.
சாப்பிடறே.. புடவையை வழிச்ச்சுட்டுக் குத்த வைக்கறே..
சாப்பிடாத வயிறு இரைகிறது. கத்திக் கத்தித் தொண்டை வரண்டு, கொண்டு வந்த தண்ணீர் எல்லாம் குடித்து முட்டிக் கொண்டு வருகிறது.
‘எந்த நிமிஷத்தில் என்னப் பெத்தியோ ..என் அம்மா.. வெய்யிலிலும் மழையிலும் தெருவில் கிடந்து லோல்படுகிற ஜன்மமாகிப் போனேனே… கண்டவளும் வாய்க்கு வந்தபடி பேசும்படியா…தலைக்கு மேலே கூரை கூட சொந்தம் இல்லே..காசு தராட்ட அதுவும் கிடையாது.. வெளியே விரட்டினா, கால் இல்லாத புருஷனோடு எங்கே போய் ஒதுங்க?’
குடிசை தங்க வேண்டும். கால் இல்லாவிட்டால் பரவாயில்லை. கங்காதரை ஆயுசு வரை வைத்துக் காப்பாற்ற எந்த ஏச்சு கேட்டாலும் பரவாயில்லை.
‘வெளியே எறிவேன்.. உன் தட்டுமுட்டு சாமானை.. உதவாக்கரை புருஷனை..’
கங்காதரா உதவாக்கரை? ஜம்னாதீதியின் நாக்கு அழுகிப்போக. கங்காதரின் அருமை சாந்தாபாய்க்குத் தான் தெரியும்.
‘மாதா சந்தோஷி.. கருணை காட்டு…ரொம்ப அதிகமாக் கேட்கலை.. வீட்டு வாடகை.. அப்புறம் அரை வயிறு சாப்பிட.. வேறே எதுவும் வேணாம்…’
என்ன கஷ்டம் அனுபவிக்க வேண்டி இருந்தாலும் சரிதான்..
பொதுக் கழிப்பறை ரொம்ப தூரம். வேறு வழியே இல்லை. போயே ஆக வேண்டும்.
இந்த தாட்டியான சிந்திக்காரியோ மதராஸியோ கோலக்குழல் வாங்குவாளா?..இல்லை.. இவள் ரயிலைப் பிடிக்க ஓடுகிறவள்..
‘நசீம்பாய்..கொஞ்சம் பாத்துக்க.. பத்து நிமிஷத்திலே வரேன்..’
‘கல்லா பணத்தை எடுத்துட்டுப் போ.. கடையை மட்டும் பாத்துக்கறேன்..ரூபாய்க்கு நாலுன்னு தரட்டா?’
நசீம் கண்ணைச் சுருக்கிக்கொண்டு சிரிக்கிறான். முகத்தின் அம்மை வடுக்களை மீறி, அந்த சிரிப்பு வசீகரமாக இருக்கிறது.
‘ஏன் …எல்லாத்தையும் சாக்கோட தந்து கையிலேயும் பத்து ரூபா வச்சுக் கொடுக்க வேண்டியதுதானே.. ‘
பணத்தை மடியில் முடிந்தபடி சொன்னாள்.
‘சாந்தாபாய்..இருபத்தஞ்சு பைசா சில்லறையா வச்சுக்க.. முழு ரூபா கொடுத்தா மீதி கிடைக்காது..’
சாந்தாபாய் போகிற காரியம் உலகத்துக்கே தெரியும் இப்போது.
நசீம் சமையத்தில் இப்படித்தான். சின்னப் பிள்ளை போல. மனசு நல்ல மாதிரி. களங்கம் தெரியாத கண். சாந்தாபாய் குனிந்தாலும் நிமிர்நதாலும் மற்றவர்களின் பார்வை போகிற போக்கு அவன் பார்ப்பதில் இல்லை..
‘வாயை மூடிட்டு வியாபாரத்தைப் பாரு நசீம்..’
‘வாயை மூடிட்டு வியாபாரமா? அதுக்கு ராத்திரி ஒன்பது மணிக்கப்புறம் இங்கே பவுடர் அப்பிக்கிட்டு ஒரு கூட்டமே நிக்கு.. உனக்கு ஒண்ணும் தெரியாது பாவம்..போற ஜோலியை முடிச்சுட்டு சீக்கிரம் வா..’
சாந்தாபாய் தலையில் அடித்துக் கொண்டு நடந்தாள்.
வெய்யில் மசமசவென்று முதுகில் ஊர்கிறது. விக்டோரியா டெர்மினஸின் சாயங்காலப் பரபரப்புக்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது.
வரிசையாக வந்த மூன்று லாரிகள் போக வழிவிட்டு ஒதுங்கி நின்றாள்.
லாரி நிறைய ஜனம். ஆஸாத் மைதானம் பக்கம் மெல்லக் குவிகிற கூட்டம்…
என்ன தலை போகிற விஷயமோ…
பத்திரிகை ஆபீஸ் வாசலில், உள்ளே இருந்து வருகிற எல்லோரையும் கைப்பையைத் திறந்து காட்டச் சொல்லிப் பரிசோதித்து அனுப்பிக் கொண்டிருந்தவன் சாந்தாபாயைப் பார்த்ததும் சிநேகமாகச் சிரிக்கிறான்.
சாங்க்லியானால் என்ன.. பம்பாய் ஆனால் என்ன.. எங்கேயும் மனுஷர்கள் தான்.. பரிச்சயமானால் சிநேகமாகிறார்கள்.
பஸ் ஸ்டாப்பில், மஹாலட்சுமி கோயில் போவதற்காகப் பழுத்த மராத்திய சுமங்கலிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எப்போது தான் மஹாலட்சுமி கோவில் போனது? சாந்தாபாய் நினைத்துப் பார்த்தாள்.
சினிமா போல, அதுவும் கல்யாணமான முதல் வருஷம் தான்.
பிரபாதேவியில் கூட்டத்தில் நெருக்கியடித்து சித்தி வினாயகர் கோயிலுக்கும் அப்புறம் மஹாலட்சுமிக்கும்…
ஐந்து நிமிடத்தில் கும்பிடுகிறேன் என்று பெயர் பண்ணி, கோயிலுக்குப் பின்பக்கம் அவசரமாக இழுத்துக் கொண்டு போய்…
சுடுகிற பாறையும், கலங்கி முடைநாறும் கடல் நீரும், இரையும் கடலுமாக இதுபோல ஒரு பகல் நேரத்தில் பாறை மறைவில் சரித்து…
தாராவியில், சகதி நாறும் குடிசையில் எத்தனையோ தடவை அப்புறம் முழுசாக அரங்கேறிய லாவணிதான் அது…
இரண்டு காலும் போனாலும், தவழ்ந்தபடி வந்து ஆழ்ந்து தூங்குகிறவளைத் தட்டி எழுப்பி, மேலே படர்ந்து.. இன்னும் அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது..
கோபி கிருஷ்ணா.. கோகுல கிருஷ்ணா.. வீட்டில் கங்காதர்தான் தவழ்ந்து கொண்டிருக்கிறான்.
வீடு.. இருக்கிற குடிசையே நித்திய கண்டத்தில்.. தவழ குழந்தைதான் பாக்கி…
கங்காதருக்குக் கால்போகும் வரை பெரிசாகத் தெரிந்த விஷயம்.. இப்போது மூச்சு நின்று விடாமல் இழுத்துப் பிடிப்பதே பிரச்சனை..
ஒரு பிள்ளை.. செயல் ஓய்ந்து போன வயதில் வைத்துக் காப்பாற்ற ..நாலு எழுத்து படித்து.. நல்லதாக உத்தியோகம் பார்த்து.. செருப்பு போட்டுக் கொண்டு.. டக்டக் என்று கம்பீரமாக..
‘என்ன தீதி .. சாயாவிலே லால்பரி ஊத்திக் குடிச்சியா?’
ஷூ பாலீஷ் செய்கிற பையன். தடுமாறி மேலே விழுந்தவளைப் பார்த்துப் பல்லெல்லாம் தெரியச் சிரித்தான். வயசுக்கு மீறின பார்வை…
‘சீஸ் படி ஹை மஸ்த் மஸ்த்..’
அவன் பக்கத்தில், மீசை முளைக்கத் தொடங்கியிருந்த விடலை, கை இரண்டையும் கிண்ணம் போல் குவித்துக் கொண்டு பாடியது, கழிப்பறை வாசல் வரை கேட்டது.
சாந்தாபாய் காறி உமிழ்ந்தாள்.
—————————————————
அத்தியாயம் 6
ப்ரீதி வெராண்டாவில் வந்து நின்றாள்.
ஐந்து மணிக்குக் கார் அனுப்புவதாக விக்ரம் சொல்லியிருக்கிறான். பெரைரா நேரே ஓட்டலுக்கு வந்து விடுவானாம்.
பெரைரா சரி என்றால் எல்லோருக்கும் சரி தான்.
பெரைரா ஆர்ட் பிலிம் எடுக்க என்.எப்.டி.சிக்கு கடன் கேட்டு மனுப் போட்டிருக்கிறானாம்.
யார் கண்டது, எல்லாம் கூடி வரும் பட்சத்தில் ஷபானா ஆஸ்மி போல, தீப்தி நவ்வால் போல, ஸ்மிதா பட்டீல் போல… ப்ரீதி அஹூஜா…
வேண்டாம்.. ஊருக்கு நாலு ஜோல்னாப்பை தாடிக்காரர்கள் நடுராத்திரியில் கண்விழித்து தூர்தர்ஷனில் தேசிய நிகழ்ச்சியில் பார்த்து, இரண்டு வருடம் விடாமல் உணர்ச்சி பொங்க சர்ச்சை செய்வார்கள்.
தூக்கம் வராத கிழவர்கள் வெள்ளிக்கிழமை பத்திரிகை இணைப்பில் இரண்டு வரி எழுதுவார்கள் …
உலகம் தன் பாட்டுக்குப் போய்க் கொண்டிருக்கும்.
தெருவைப் பார்த்தாள்.
நெருக்கியடித்து ஊர்கிற டாக்சிகள். இரண்டு வசமும் அழுக்குச் சுவரோடு நிற்கிற பழைய மாடி வீடுகள். மழைக்காலம் முடிந்தாலும் ஈரம் பூரித்துத் தெரியும் கட்டிடங்களின் ஜன்னல் தோறும் கொடி கட்டிக் காயும் துணிகள்.
பிளாட்பாரத்தில் தார்ப்பாய் மறைப்புக்கு வெளியே குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிற பெண்.
கட்டடங்களில் இருந்து வெளிப்பட்ட, பொதிக்குகளில் ஆயிரம், இரண்டாயிரம் என்று விலை வைத்து விற்கிற டிசைனர் உடை அணிந்த ப்ரீதி வயதுப் பெண்கள், தெருவில் தேங்கிய தண்ணீரைக் கவனமாகத் தவிர்த்து ஓரமாக நிறுத்திய கார்களை நோக்கிப் போகிறார்கள்.
அந்தப் பெண் அடுத்த குழந்தையைக் குளிப்பாட்ட இழுத்து வருகிறாள்.
அந்தேரியில் ஏழு லட்சம் விலையில் நானூறு சதுர அடி ஃப்ளாட்…
காலையில் டைம்ஸில் பார்த்த விளம்பரம் மனதிலேயே சுற்றுகிறது.
வரும்போது விக்ரமோடு போய்ப் பார்த்தால் என்ன?
தாராவி தாதாக்களிலிருந்து மலபார்ஹில் மகாராஜாக்கள் வரை அவனுக்கு எத்தனையோ பேரைத் தெரியும். இந்த மூன்று மாதத்தில் சின்னதும் பெரிசுமாக ஆறு அசைன்மெண்ட் அவன் மூலமாகத்தான். ஒரு ஃப்ளாட்டா கஷ்டம்?
நிறைய மாடல்கள் பேயிங் கெஸ்ட்டாகத்தான் ஏதாவது குடும்பத்தோடு ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு எல்லாம் ஊரில் மணியார்டரை எதிர்பார்த்து ஒரு குடும்பம் காத்திருக்கும்.
ப்ரீதிக்கு இருக்கிற விலாசம் தவிர வேறு விலாசம் கிடையாது.
முகவரி அவசியப்படாமல், முகத்தை வைத்தே அடையாளம் தெரியப் போகிற நாள் வெகு தொலைவில் இல்லை.
அதற்கு முன் சொந்தமாகக் கால் ஊன்ற ஒரு இடம் வேண்டும்.
தெருமுனையில் நீலமும் சிவப்புமாகக் கூடாரத் துணிகளோடு வேன் நிற்கிறது.
கூடாரம் எழும்பிக் கொண்டிருக்கிறது. நவராத்திரி வரப் போகிறது. தாண்டியா நடனம் என்று விடிய விடிய ஆடித் தூங்க விடாமல் அடிப்பார்கள்.
கீழே ஒரு சிவப்பு மாருதி கார் மெல்ல வந்து நிற்கிறது.
‘ஏய் பொண்ணு ஓடி வா… டாட்டா போகலாம்..’
விக்ரம்.
இது அவன் கார் இல்லை. எங்கே தொலைந்தது அந்தப் பழைய ஃபியட்?
ப்ரீதி கதவைப் பூட்டிக் கொண்டு இறங்கி வந்தாள்.
நல்ல சிவப்பும், நீலக் கண்ணுமாக ஸ்டியரிங் பிடித்தபடி உட்கார்ந்திருந்தவன் ‘ஹலோ’ என்றான்.
பெரைராவா?
இல்லை.. பெரைரா சிம்பன்ஸி போல, கைகால் முழுக்க ரோமமும், முகத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ தாடியுமாக டில்லியில் ஏதோ பார்ட்டியில் ஒரு வினாடி நேரம் பார்த்த நினைவு..
இவன் தலையைத் தவிர முகத்திலோ, கையிலோ ஒரு முடி கூட இல்லாமல் மொழுமொழு என்று…
‘மீட் ஜெயந்த் காலே.. மண்டையில் நிறைய மசாலா உள்ள கோப்ரா பையன்…’
விக்ரம் தோளில் தட்டிக் கலகலவென்று சிரிக்க, ப்ரீதியின் கைகளைப் பற்றி மென்மையாகக் குலுக்கினான், கோப்ரா என்று செல்லமாக விளிக்கப்பட்ட கொங்கண பிராமணனான ஜெயந்த்.
‘பம்பாயைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை… கிள்ளினால் ரத்தம் தெறிக்கும் சிவப்பாக இருக்கப் பட்டவனை காலே என்கிறார்கள். அட்டைக் கருப்பனை கோரே என்கிறார்கள்..
ப்ரீதி சொன்ன போது ஜெயந்த் காலே நீலக்கண் மின்ன வசீகரமாகச் சிரித்தான்.
‘ஜெயந்த் ராஷ்மி டிடர்ஜெண்ட் படத்துக்கு ஆம்பிளை மாடலா?’
பக்கத்தில் வந்து உட்கார்ந்த விக்ரமை மெல்லக் கேட்டாள்.
‘ஜெயந்த் இதுவரை மாடலிங் செய்யவில்லை. சரி என்றால் மில்க் சாக்லெட்டுக்கும், பால்புட்டி நிப்பிளுக்கும் தரச் சொல்லலாம். இப்போதைக்கு அவன் பெரைராவின் வலது கை. அனிமேஷன் எக்ஸ்பெர்ட். இந்த வருஷம் பெரைரா சுட்ட எல்லாப் படத்துக்கும் ஸ்டோரி போர்ட் இவன் கைங்கர்யம் தானாம்.’
விக்ரம் உரக்கச் சொல்லிக் கொண்டிருக்க, ஜெயந்த் ஸ்டியரிங்கிலிருந்து ஒரு கையை அவசரமாக எடுத்து மறுத்தான்.
‘ஸ்டோரி போர்டா .. எந்த யுகத்ஹ்டில் இருக்கே விக்ரம்… என் லேப் பக்கம் ஒரு நடை வந்து போ.. இண்டராக்டிவ் மல்ட்டி மீடியா… சவுண்ட் ப்ளாஸ்டரோட ஆப்பிள் மேக் .. கிராபிக் எடிட்டர்.. கம்ப்யூட்டர் தெரியுமா ப்ரீதி?..’
’போடா சர்த்தான்..’ ப்ரீதி நினைத்துக் கொண்டாள்.
‘ப்ரீதிக்கு உன் கம்ப்யூட்டர் வேணாம்.. தலைக்கு மேலே கூரை தான் வேணும்..’
விக்ரம் ப்ரீதியின் கைகளைப் பற்றி விரல்களை நெரித்தபடி சொன்னான்.
தோபிதாலோவில் திரும்பிக் கொண்டிருக்கும் கார்.
ஓவர்டேக் செய்து போன மாருதி ஜிப்சியில் தலையில் ஆரஞ்சு உருமால் கட்டிக் கொண்டு நாலைந்து பேர்.
‘மத்தியானத்திலிருந்து பார்க்கிறேன்.. இப்படி நிறையப் பேர் ஆரஞ்சு முண்டாசோட அலையறாங்க.. என்ன ஆக்டிவிஸ்ட் க்ரூப்போ தெரியலே..’
ஜெயந்த் காரின் வேகத்தைக் குறைத்தபடி சொன்னான்.
‘விக்ரம் … முடிஞ்சா அந்தேரி போய்..’
அவன் விரல்களாஇ மெல்ல உதட்டில் உரசியபடி ப்ரீதி கெஞ்சும் குரலில் கேட்டாள். அவள் முடிக்கும் முன் ஸ்டியரிங் பிடித்த கோப்ரா பையன் பேசினான்.
‘அந்தேரி.. மூணாவது மாடி… லிப்ட் இல்லே.. ஒற்றை பெட்ரூம்.. ஏழு லட்ச ரூபாய்..’
சொல்லியபடி காரின் வேகத்தைக் குறைத்து ஜெயந்த் பின்னால் திரும்பி ப்ரீதியைப் பார்த்துப் புன்னகை செய்தான்.
‘அதேதான்..’
ப்ரீதி வேகமாகச் சொன்னாள்.
‘என்னோடதுதான்.. அப்பா எப்பவோ வாங்கிப் போட்டது.. அங்கே இருந்து பாந்த்ரா வந்து எத்தனையோ காலம் ஆச்சு.. ஒரு மலையாளி வாடகைக்கு இருந்து போக மாட்டேன்னு கலாட்டா பண்ணினான்..இப்ப போய்ட்டான்.. எப்படின்னு கேக்காதே.. ஃப்ளாட்டை வித்துட்டு சின்னத் தொகைன்னாலும் லேபில் முடக்கப் போறேன்..அததுக்கு உபயோகம்.. சரி, நீ வாங்கிக்கறியா அந்த ஃப்ளாட்டை?’
ப்ரீதிக்கு ஒரு வினாடி மூச்சு எழும்பவில்லை.
‘ஃபைனான்ஸ் வேணும்னா ஃபாரின் பேங்கில் ஏற்பாடு செஞ்சிடலாம்.. கையிருப்பை முழுக்க செலவழிக்க வேணாம்.. சம்பாதிக்க சம்பாதிக்க தானா கடன் அடையும்..’
விக்ரம் உற்சாகமாகச் சொன்னான்.
‘ஃபாரின் பேங்கா? டாலர்லே பணம் கட்டச் சொல்லுவாங்களோ?’
ப்ரீதி விக்ரம் விலாவில் செல்லமாக நிமிண்டினாள்.
‘காண்டோம் விளம்பரம் பண்ணு.. காசு கொட்டும்.. ரூபா பைசாவிலேயே பாதி கடன் அடச்சுடலாம்.. வட்டிக்கு வேணும்னா க்ளிவேஜ் தெரியறது போல ஒரு ஷவர பிளேடு படம் வாங்கித் தரேன்.. பிளேடு விக்கவும் இதெல்லாம் தேவைப்படறது..’.
ப்ரீதி அவன் கையை விலக்கினாள்.
மாடல் என்றால் களிமண் பொம்மை.
ரப்பர் செருப்பைக் கூடக் கையில் தூக்கி, கன்னத்தில் இழைத்தபடி போக சுகம் போலக் கண் கிறங்க, முத்தம் கொடுக்க வைத்து கமர்ஷியல் பண்ணலாம்.
‘இப்படியே ஓரமா நிறுத்து ஜெயந்த்’.
விக்ரம் ஃப்ரீப்கேஸை எடுத்துக்கொண்டு இறங்க, இருட்ட ஆரம்பித்திருந்தது.
———————————
அத்தியாயம் 7
டங்கல்.
இது ஒரு மனிதனின் பெயரா இல்லை ஏதாவது வஸ்துவா என்று சாந்தாபாய்க்குப் புரியவில்லை.
மதியத்திலிருந்து சாரிசாரியாக வந்த ஆரஞ்சு நிறத் தலைப்பாகைக் காரர்கள் விக்டோரியா டெர்மினஸ் முன்னால், மலைப்பாம்பு கிடப்பது போல, நீள வளைந்து போகிற சங்கிலி போல, கையைக் கோர்த்து நின்றபோது, உரத்த குரலில் திரும்பத் திரும்பச் சொன்னது ‘டங்கல்’.
ஆஸாத் மைதானத்தில் அப்புறம் அவர்கள் பிரம்மாண்டமான கூட்டமாகக் கூடி இந்தியிலும், மராத்தியிலும் இன்னும் என்னென்னமோ பாஷையிலும் ஒலிபெருக்கி வைத்துப் பேசியபோது, தெரு இரைச்சலை மீறிக் காதில் அடிக்கடி விழுந்தது ‘டங்கல்’.
யாராக, எதுவாக இருந்தாலும் நன்றி. டங்கல் புண்ணியத்தால் சாந்தாபாய்க்கு முன்னூற்று நாற்பது ரூபாய்க்குப் பிய்த்துக் கொண்டு போன வியாபாரம்.
எத்தனை ஆரஞ்சுத் தலைப்பாகைக் காரர்கள் ஊர் போய்ச் சேரும் வரை டங்கலை நினைவு வைத்திருப்பார்கள் என்று சாந்தாபாய்க்குத் தெரியவில்லை. ஆனால், அவர்களில் சிலர் வீட்டிலாவது சாந்தாபாயின் கிருஷ்ணன் கோலமாகத் தவழப் போகிறான்.
காலிச் சாக்கோடு, வழக்கத்தை விட வெகு சீக்கிரமாகக் கிளம்பும்போஹ்டு சாந்தாபாயின் மனது ஏகப்பட்ட கற்பனைகளில் மிதந்தது.
சின்னச் சின்னதாக, உட்காருகிற தோதில் பூப்போட்ட பிளாஸ்டிக் விரிப்பு..
ஒரு நூறு, ஐம்பது வாங்கி அடுக்கிக் கொள்ள வேண்டும்…
அப்புறம் ஜிகினாத் தோரணம், தரையில் சதுரம் சதுரமாக ஒட்டுகிற சிவப்பு கோல ஸ்டிக்கர். பிளாஸ்டிக் மாவிலைக் கொத்து. பீங்கான் ஜாடி…
நசீமுக்குத் தெரிந்த சேட் வட்டிக்குப் பணம் தருகிறான். அவனுக்கு மாமன் முறையான ஒரு கிழவன் கோவாண்டியில் இதெல்லாம் மொத்த விலைக்குத் தருகிறான்.
கங்காதருக்கு மெல்லச் சொல்லிக் கொள்ளலாம். நசீமோடு போய்ப் பார்த்து ஏற்பாடு செய்ய வேண்டியதுதான்.
சாந்தாபாய்க்கு வாயில் சாதுரியமான வார்த்தை இருக்கிறது. யாரிடம் எப்படிப் பேசினால் சரக்கு விலை போகும் என்று படிந்து வருகிறது…
கங்காதருக்கும் சேர்த்து சொந்தக் காலில் நிற்கப் போகின்ற சாந்தாபாய்…
அவள் தாராவியில் ஒன்றுக்கு இரண்டாக இருக்க இடம் வாங்குவாள்.
சிமெண்டும், காரையுமாக எடுத்துக் கட்டிய வீடு. சாங்க்லியில் பஞ்சாயத்துத் தலைவர் வீடு போல முகப்பில் மகாலட்சுமி படம் பதித்தது.
வி.டியில் பிளாட்பாரத்தை ஒட்டி, ஷெல்பும் கதவும் வைத்த கடை போடுவாள்.
உதவிக்கு யாரையாவது வைத்துக் கொண்டு கல்லாவில் சில்லறையை வாங்கிப் போட்டுக் கொண்டு, ஜம்னாதீதி போல சதா வாயில் ஜர்தாபான் மென்று கொண்டு.. ஜர்தா வேணாம்.. உள்நாக்கு வரை இனிக்க இனிக்க மீட்டா பான்..
கங்காதருக்கு ஒரு மோட்டார் வைத்த மூன்று சக்கர சைக்கிள் வாங்கிக் கொடுப்பாள்.
இஷ்டம் போல சுற்றட்டும். கணக்கு வழக்கை எல்லாம் கவனித்துக் கொள்ளட்டும்.
சேட் போல பணம் வட்டிக்குத் தந்து, வாடகை வசூல் செய்து கழுத்தில் சங்கிலி பளபளக்க..
முதலில் கங்காதருக்கு நல்லதாக இரண்டு ஜிப்பா வாங்க வேண்டும். ..
ஒரு நீலப் புடவை.. இது மாதிரி இல்லாமல் நல்ல வடிவான கச்சு..
இதற்கே பாட்டு பாடுகிறான்.
புடவையை இப்படிக் கச்சம் வைத்துக் கொலிவாடிக்காரி போல் கட்டிக் கொள்ளக் கூடாது.
தெரு இருட்டில் கிடந்தது.
இன்றைக்காவது சூடாக அரிசிச் சோறு பொங்கி கங்காதருக்குப் பிடித்த ஆம்டி புளிக்கீரை செய்து .. தெருக் கோடியில் பொறித்த மீன் விற்கிறார்கள்… நாலு துண்டம் வாங்கி வந்து..
எல்லா சந்தோஷத்தையும் கங்காதரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு அவன் தவழ்ந்து மேலே படரும் வரை சாந்தாபாய் பார்த்துக் கொண்டிருக்க மாட்டாள். அவள் தான் பக்கத்தில் மெல்ல நகர்ந்து..
‘நான் சாப்பிடுவேன் ..குந்த வைப்பேன்.. படுப்பேன்.. இரு நூறு ரூபாய் அந்த ஜம்னாதீதி முகத்தில் எறிந்தால் என் குடிசைக்குள் என்னைக் கேட்காமல் காற்று கூட நுழைய முடியாது..
நாளைக்குச் சீக்கிரம் கிளம்பிப் போய் மோரேயிடம் இன்னும் இருநூறு கோலக் குழல் வாங்கிக் கொண்டு மாதக் கடைசியில் கொடுத்து விடலாம்.. நர்த்தனமாடும் கணபதி கூடச் செய்ய ஆரம்பித்திருக்கிறான்..
வயிறு சுருட்டி வலிக்க, பசி உள்ளே பந்தாக உருண்டது.
தொடர்ந்து வியாபாரம் வந்து கொண்டே இருந்த மும்முரத்தில் மந்தமாகிப் போன நித்திய அவஸ்தை அது.
மலையாளி ஓட்டலில் மதியம் கழிந்து வெகு நேரம் போய், வறட்டுத் தோலாகக் காய்ந்து கிடந்த பரோட்டாவை டீயோடு விழுங்கி, தினம் அதை தாஜா செய்கிற வழக்கம்…
அவசரமாகப் பிய்த்துத் தின்ற ஒற்றை பன்னோடு காய்கிற வயிறு..
பொங்கல வீடுகளைக் கடந்து வலப்புறம் திரும்ப ஜம்னாதீதியின் ‘கண்பத் மெஸ்’.
மின்னி மின்னி அணையும் ஒற்றை ட்யூப்லைட் வெளிச்சத்தில் செருப்பு இரைந்து கிடக்கிற படிக்கட்டு.
ஓரமாகக் காலிச் சாக்கை வைத்துவிட்டு நின்றாள்.
கூப்பிடலாமா?
வேண்டாம். தரையில் நெருக்கியடித்து நிறையப் பேர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பொங்கல் வீடுகளில் தங்கி இருக்கிற தனிக் கட்டைகள் எல்லோரும். நடை வழியே உள்ளே போக, பார்வைகள் உயர்ந்து தாழ்ந்தன.
சாந்தாபாய்க்கு சந்தோஷம் தான். ஒரு வினாடிக்காவது எதிர்ப்படுகிறவனின் பார்வையைக் கட்டி நிறுத்த அவளால் முடிகிறது.
‘ஜம்னாதீதி..’
திரையை மெல்ல விலக்கியபடி கூப்பிட்டாள்.
’வெளியே போயிருக்கா..’
கட்டிலில், இடுப்புக்கு மேலே வெற்றுடம்போடு படுத்து, கேபிள் டிவியில் தாதா கோண்ட்கே படத்தை ரசித்துக் கொண்டிருந்தவன், லுங்கியைத் தழைத்தபடி எழுந்து வந்தான்.
ஜம்னாதீதியின் தம்பி.
பட்டாளக்காரனான ஜம்னாவின் வீட்டுக்காரன் கண்காணாத சிலோனில் கண்ணிவெடி வெடித்ததில் நகம் கூட முழுசாகக் கிடைக்காமல் சிதறிப்போன பிறகு, வந்த பணத்தில் மெஸ் எடுக்க முன்கை எடுத்தவன் இவன் தான்.
மெஸ் நாலே வருஷத்தில் நாலு குடிசை வாங்கிப் போட வைத்தது. வட்டிக்குக் கடன் கொடுக்க வழி செய்தது. இவன் கழுத்தில் மைனர் செயின் இப்படிப் பளபளக்க வைத்தது.
‘தீதிக்குப் பணம் தரணுமா?’
சாவதானமாக சாந்தாபாயின் உடம்பில் மேய்கிற பார்வை..
சாந்தாபாய் தலையைக் குனிந்தபடி பணத்தை எடுத்து நீட்டினாள்.
‘உட்காரேன்.. தீதி வந்துடுவா..’
‘பரவாயில்லை..’
‘வியாபாரம் எல்லாம் எப்படிப் போறது?’
கழுத்துக்குக் கீழே நிலைத்த கண்கள் தகிக்கின்றன…
சாந்தாபாய் ஓரமாகத் திரும்பி நின்றாள். சீக்கிரம் போய்விட வேண்டும் இங்கிருந்து என்று மனது அடித்துக் கொண்டது.
டி.வியில் ரவிக்கை மேல் பக்கத்துக்கு ஒரு பானையாகப் படம் எழுதியிருக்கும் பெண்கள் தாதா கோண்ட்கேயைச் சுற்றி ’மட்கா மட்கா’ என்று பாடியபடி குலுக்கி ஆட, ஜம்னாதீதியின் தம்பி டி.வியில் ஒரு கண்ணும் சாந்தாபாய் மேல் இன்னொன்றுமாக நமட்டுச் சிரிப்போடு பார்த்தபடி பக்கத்திலேயே நின்றான்.
சூழ்நிலை சரியில்லை. இவன் கண்ணாலேயே அசிங்கப்படுத்தி விடுவான்.
’வியாபாரம் விருத்தியாக பணம் வேணும்னா நான் தரமாட்டேனா சாந்தா.. நீ நினைச்சா இந்த சில்லுணிட் சாமானை எல்லாம் கடாசிட்டு, பெரிசா ஆரம்பிக்கலாம்… தாதர்லேயோ மாஹிம்லேயோ கடை போட்டுத் தர ஏற்பாடு பண்ணட்டா…’
‘நேரமாச்சு.. வீட்டுக்குப் போய் அடுப்பு பத்த வைக்கணும்..’
வழியை அடைக்கிறது போல் நிற்கிறான்.
‘ஒரு நாளைக்குத் தான் வெளியே சாப்பிடறது..’
அவன் சிரிப்பு வீடு வரை தொடர்ந்து வந்தது.
கங்காதரிடம் இதெல்லாம் சொல்ல வேண்டாம்.. கால் இல்லாவிட்டாலும் முரட்டுத் தனத்துக்குக் குறைச்சல் இல்லை.
ஒன்று கிடக்க ஒன்று நடந்து முதலுக்கே கூட மோசமாகி விடலாம்..
இருட்டில் அமிழ்ந்து கிடக்கிறது வீடு.
விளக்கு கூட வைக்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறானோ?
கதவைத் திறக்கப் போனவள் நின்றாள். உள்ளே மொணமொணவென்று பேச்சுச் சத்தம்.
‘மூணு மாச வாடகை என்னாச்சுன்னு கேக்க வந்தவளை இப்படியா.. படுபாவி.. இதோட மூணு தடவை.. நியாயமாடா இது.. பொறுக்கிப் பயலே..’
மெல்லச் சிரிக்கிற பெண் குரல்..
‘காலு போன வெறும் பயன்னு தெரியாமே வந்துட்டேண்டா பரதேசி.. டேய் விடுடா.. உடம்பு பூரா வலிக்குதுடா கபோத்.. உன் வீட்டுக்காரி வந்து தொலைக்கப் போறா..’
’அவளா.. இன்னும் ஒரு மணி நேரமாகும் அவ வர்றதுக்கு.. அதுக்குள்ளே..’
‘எந்துருக்க விடுடா நொண்டிப் பயலே.. டாக்டர் கிட்டே போக வச்சுடுவே போலேயிருக்கே..’
’கவலைப் படாதே.. ஆபரேஷன் பண்ணிக்கிட்டிருக்கேன்.. அவளுக்குக் கூடத் தெரியாது..’
’படுடா பேசாம ..’
இரண்டு பேரும் சேர்ந்து சிரிக்கிற சத்தம். அப்புறம் நிசப்தம் மட்டும்.
சாந்தாபாய் காலிச் சாக்கை வாசலில் எறிந்துவிட்டு நடந்தாள்.
பசி.
கண்பத் மெஸ் திறந்து இருக்கிறது.
————————————–
அத்தியாயம் 8
‘ஆவிக்னான் பட்டணத்துக்காரிகள்.. கேள்விப் பட்டிருக்கியா ப்ரீதி?’
பெரைரா காரை ஓட்டிக் கொண்டே கேட்டான்.
சோடியம் வேப்பர் விளக்குகளின் சீரான வெளிச்சத்தில் மஞ்சள் குளித்துக் கொண்டிருந்தது விக்டோரியா டெர்மினஸ்.
பரபரப்பெல்லாம் ஓய்ந்து வெறிச்சோடிக் கிடந்த தெருவில் வாழைப்பழ வண்டிக்காரர்களின் குரல் தான் மிச்சம் இருந்தது.
‘ஆவிக்னான்.. பிகாஸோ வரைஞ்ச ஓவியம் தானே? தெரியும். காலேஜ்லே ஆர்ட் அப்ரிசியேஷன் ஒரு பாடம் எடுத்துப் படிச்சதுலே தான் பிகாஸோ, வான்கோ, சால்வடார் டாலின்னு சில பேர் பரிச்சயம் ஆனது… இல்லாட்ட எங்கே?’
ப்ரீதி ஜன்னல் வழியே தெருவைப் பார்த்தபடி சொல்ல, அங்கே பெண்கள்.
அடைந்து கிடந்த கட்டிட வாசலில் தூணில் சாய்ந்தபடி ..வரிசை கலைந்து நின்ற டாக்ஸி பானெட்டில் கையை ஊன்றிக் கொண்டு…மார்பைத் தூக்கி நிறுத்திய கச்சும், அழுத்தமான கண்மையும், அழைக்கிற பார்வையுமாக மெல்லத் தெருவில் நடந்தபடி.. இறுக்கமாக ஸ்கர்ட் அணிந்து, ஒயிலாக சிகரெட் புகைத்துக் கொண்டு…
வாழைப்பழம் தின்றபடி ஜெனரல் போஸ்ட் ஆபீஸ் வாசலில் காவல் இருக்கிற போலீஸ்காரர்களை சீண்டிச் சிரிக்கிற பெண்கள்…
‘ஆவிக்னான் வேசிகளையும் வி.டி வேசிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கலாமா?’
ஜெயந்த் ஓவென்று பெரிதாகச் சிரித்தான். ப்ரீதியின் தோளில் முகத்தை அழுத்திக் கொண்டான்.
மெல்லிய யூதிகோலோன் வாசனையோடு மென்மையாகப் படிந்த அவன் ஸ்பரிசம் ப்ரீதிக்கு இதமாக இருந்தது.
உள்ளே போயிருக்கும் திரவம் வேலையைக் காட்டிக் கொண்டிருந்தாலும், இவன் கை இதுவரை சும்மா தான் இருக்கிறது.
ப்ரீதி கொஞ்சம் முன்பு கடந்து போன சாயங்காலத்தை நினைத்தாள்..
முழுக்க முழுக்க பேச்சிலேயே போன நேரம்.. பாதிக்கு மேலே, இவள் மற்றவர்களை வெறுமனே பார்த்துக் கொண்டு..
பெரைராவுக்கு இவளைப் பார்த்ததுமே பிடித்துப் போனது.
‘இது சலவை சோப் விற்க ஏற்பட்ட முகமில்லை… வைரத்தை, பிளாட்டினத்தை, குறைந்த பட்சம் கம்ப்யூட்டரை விற்க யோக்யதை உள்ளது..’
ப்ரீதியின் கன்னத்தில் கருப்பு – வெள்ளை தாடி ரோமங்கள் வருட, மென்மையாக முத்தமிட்டு விட்டு, ப்ளடிமேரியை உறிஞ்சியபடி பெரைரா சிலாகித்த பொழுது, ப்ரீதி ஏழாம் சொர்க்கத்தில்…
‘லிரிலுக்கு ஒரு கனல் ல்யூனல்.. ராஷ்மி டிடர்ஜெண்டுக்கு ஒரு ப்ரீதி.. எமோஷனலான ப்ராண்ட் இமேஜ் கொண்டு வரணும்..’
ப்ரீதிக்கு ஜின் ஆர்டர் செய்தார்கள்.
‘ப்ராண்ட்… அமெரிக்காவிலே காட்டுப் பிரதேசத்திலே குதிரைகளை அடையாளம் காட்டப் போட்ட சூடு தான் ப்ராண்டிங்க்..’
ஜெயந்த் விஸ்கியை ஒரு மிடறு விழுங்கியபடி சொன்னான்.
’இப்போ இந்த ஃபைவ் ஸ்டார் ஓட்ட்ல்லே, விஸ்கியும் ஜின்னுமா இந்த வடிவான பெண் குதிரைக்கு சூடு போடப் போறோம்..’
கிளாஸை உயர்த்தி விக்ரம் சிரிக்க, ப்ரீதிக்கு வெறுப்பாக இருந்தது.
எடுத்தெறிய முடியாது. ப்ரீதிக்கு இவன் சகவாசம் தேவை.
கோவாக்காரன் பெரைராவும், கோப்ரா பையன் ஜெயந்தும் இனிமேல் இவனை விட அதிமுக்கியமாகப் போகிறார்கள்… யார் கண்டது.. இதில் யாராவது ஒருத்தரோடுதான் இனிமேல் சகலமும் என்று கூட..
‘குதிரை கழுதை என்றெல்லாம் சொல்லாதே.. வருங்கால மிஸ் யூனிவர்ஸ்.. உலக சமாதானத்துக்காக, நூறு அழகிகளோடு மேடையேறி, மார்பைக் காட்டப் போகிறவள்.. சல்லிசா என் ஃப்ளாட்டை வாங்கப் போற குழந்தைப் பொண்ணு.. ஆறு லட்சம்..’
ஜெயந்த் உரக்கச் சிரித்தது அழுவது போல் இருந்தது. இரண்டு கோப்பை அவனுக்குள்ளே போய்ச் சிரிப்பைக் கெல்லிக் கொண்டிருந்தது.
நீஷ் மார்க்கெட்டிங், இமேஜ் செமாண்டிக்ஸ் என்றெல்லாம் அவர்கள் தங்களுக்குள் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருக்க, ப்ரீதி ஆறு லட்சம் ரூபாய்க்கு வரும் ஃப்ளாட் பற்றிக் கனவு கண்டு கொண்டிருந்தாள்.
’எங்கேயோ போறது டெக்னாலஜி .. வெர்ச்சுவல் ரியாலிட்டி.. சாஃப்ட் லேசர்கள் மூலமா கண்ணுக்குள்ளேயே கனவைப் போட ரெட்டினல் இமேஜிங்..’
ஜெயந்த் கம்ப்யூட்டருக்குத் தாவி இருந்தான்.
’ஃப்ரீதிக்கு என்ன கனவு? நல்ல ஆண் துணையா, மலபார் ஹில்ஸ் பங்களாவா?’
பெரைரா சரளமான பஞ்சாபியில் கேட்க, ப்ரீதிக்குச் சின்ன ஆச்சரியம்.
நல்ல ஆண் துணை… பெரைரா போல கம்பீரமாக, அறிவு ஜீவியாக .. ஜெயந்த் போல கை நிறையப் பணமும், வசதியான இருப்பிடமும், கம்ப்யூட்டர் மூளையுமாக…
‘தாடிக்காரா.. நீ இப்படியே பேசிக்கிட்டிருந்தா வீட்டுக்குப் போக வேணாமா? நான் பெண்டாட்டிக்குப் பயந்தவன்..’
விக்ரம் பெரைரா விலாவில் இடித்துவிட்டு எழுந்து நின்றான்.
’ராத்திரி ஒன்பதேகால் மணி.. உன் வீட்டுக்காரி சப்பாத்திக் கட்டையால் தான் தலையிலே மொத்தப் போறா.. சாப்பிட்டுப் போ..’
————————————
மூவாயிரத்துச் சில்லரை பணம் அழுது ஆளுக்கு இரண்டு என்று சாப்பிட்ட மேத்தி ரொட்டியும் சர்சோன் – கா – சாகும் .. அப்புறம் ப்ரீதிக்கு மட்டும் ஐநூறு ரூபாய்க்கு, பெரிய படகு போன்ற கிண்ணத்தில், நடுவே தீப்பற்றி எரிய எடுத்து வந்த ஐஸ்க்ரீம்…
விக்ரம் அங்கிருந்தே டாக்ஸி பிடித்துப் போய்விட்டான்.
‘ஜெயந்த்.. நீ காரை ஓட்டாதே.. ஒண்ணு நரகத்துக்குப் போவோம்.. இல்லே போலீஸ் ஸ்டேஷனுக்கு ..நகரு.. நான் ஓட்டறேன்..’
பெரைரா ஓட்டிக் கொண்டிருக்கிறான்.
‘இங்கேயே இறக்கி விடுங்களேன்.. டாக்ஸி பிடித்துப் போயிடறேன்..’
ப்ரீதி சொன்னாள். சர்ச்கேட்டைக் கடந்து போகிற கார்.
‘வேணாம்..நீ உருப்படியாப் போய்ச் சேர்ந்தால் தான் அடுத்த வாரம் ஷூட்டிங்குக்கு ரிப்போர்ட் செய்ய முடியும்..’
பெரைரா பின்னால் திரும்பிப் பார்த்துச் சொல்லி விட்டு, கையில் கொண்டு வந்திருந்த சின்ன பாட்டிலை வாயில் கவிழ்த்துக் கொண்டான்.
‘நாளை மறுநாள் இவள் த்ரிதீப் பானர்ஜிக்குக் காலைக் காமிக்கணுமாம்.. ரோம நாசினி விளம்பரம்.. சர்வ நாசமாயிடும் எல்லாம்..’
‘வலமா.. இடதா..’
பெரைரா கேட்டான்.
தெரு முனையில் காரை நிறுத்தி இவர்களிடமிருந்து நழுவிக் கொண்டால் என்ன?
‘வலது பக்கம் மூணாவது கட்டிங்.. ஓரமா நிறுத்தினா நடந்துடுவேன்..’
ப்ரீதி கைப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டாள்.
‘இவ்வளவு தூரம் வந்து உன்னை நடுத் தெருவிலே தூக்கிப் போடறதுக்கா .. மகாராணி போல கூட்டிப் போய் அரண்மனையிலே விட்டுட்டு, குனிஞ்சு கும்பிடு போட்டபடி பின்னாலேயே நடக்கப் போறேன்..’
ஜெயந்த் தீர்மானமாகச் சொன்னான். தலை இப்படியும் அப்படியுமாக ஆடிக் கொண்டிருந்தது.
ஆக, ரெண்டு பேரும் கூட வரப் போகிறார்கள்.
யாராவது ஒருத்தர் என்றால் சரி..ரெண்டு பேருமா..
ப்ரீதிக்கு லேசாக பயம் எட்டிப் பார்த்தது.
ஹோலிக்கு கலர்ப் பொடி பூச வரேன் என்று ஹோலி கழிந்த மூணாம் நாள் ராத்திரி வண்ணப் பொடியும், பீச்சாங்குழலுமாகக் கதவைத் தட்டிய டெல்லிக்கார பல்பீரை விட இவர்கள் முரடர்கள் இல்லை. ஆனால் அவனைவிட அதிகமாகவே உள்ளே இறக்கி இருக்கிறார்கள்..
பல்பீரைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளிய பஞ்சாபிக் குதிரை ப்ரீதி. ஆனால் இவர்களுக்குச் சூடு போட முடியாது.
ப்ரீதிக்கு இவர்கள் தேவைப்படுகிறார்கள். நிறையவே.
‘இந்த இடம் தான்..’
ப்ரீதி கதவைத் திறந்து இறங்கினாள்
பெரைரா கையில் பாட்டிலோடு இறங்க, ஜெயந்த் ப்ரீதியின் தோளை இறுகப் பற்றியபடி நடந்தான்.
‘லிப்ட் வேலை செய்யலே.. மூணாம் மாடி.. நடக்க கஷ்டமா இருக்கும்..’
ப்ரீதி கடைசி அஸ்திரத்தைப் பிரயோகித்தாள்.
’லிப்ட் இலாட்ட என்ன.. உன்னை அப்படியே அலாக்காத் தூக்கிட்டுப் போய் உன் படுக்கையிலே போடணுமா சொல்லு..’
ஜெயந்த் எத்தனையாவது தடவையாகவோ உரக்கச் சிரித்தான்.
லிப்ட் விளக்கு எரிந்து காத்துக் கொண்டிருந்தது. சனியன்.
‘லிப்ட் சரியாயிடுத்து போலே இருக்கு’
ப்ரீதி லிப்டில் நுழைந்தாள்.
மூணு மாடியும் ஏறி, ஏகப்பட்ட பேரின் பார்வையில் பட்டு.. ராத்திரி பத்து மணிக்கு யார் இருக்கப் போகிறார்கள்.. ஜெயந்த் தடுமாறி விழுந்து வைப்பான்.. எதுக்கு வம்பு..
ஃப்ளாட் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள்.
‘ப்ரீதி, கொஞ்சம் தண்ணி கொடேன்.. கண்ணில்லேயா..’
ஜெயந்த் கேட்டபடி சோபாவில் சரிந்தான்.
கடைசியாக ஒரு யோசனை. இது பலிக்கலாம்..
‘கசகசன்னு இருக்கு.. குளிச்சிட்டு வரேன்.. நீங்க வெயிட் பண்ண வேணாம்.. போகிறபோது கதவை மட்டும் சாத்திட்டுப் போங்க, ப்ளீஸ்..’
ஃப்ரிட்ஜிலிருந்து தண்ணீர் ஜக்கை வெளியே எடுத்தபடி சொன்னாள் ப்ரீதி.
‘மில்ஸ் அண்ட் பூன்ஸ் படிச்சே கிழவியாயிடப் போறே.. எரிக்கா ஜாங் படி.. ஃபீமேல் ஈனக்னு ஜெர்மெய்ன் கீர் எழுதியிருக்கா… தரேன்.. படிச்சுப் பாரு..’
அலமாரி ஓரமாக அடுக்கியிருந்த ஒற்றை வரிசைப் புத்தகங்களைப் பார்த்தபடி பெரைரா ஒரு ஹவானா சுருட்டைப் பற்ற வைத்தான். குழறத் தொடங்கிய குரல்.
‘தள்ளிக்கோடா பையா..’
சோபாவில் ஜெயந்தை ஓரமாகத் தள்ளிவிட்டு உட்கார்ந்து பெரைரா கசமுசவென்று பிரிந்து டேபிளில் கிடந்த டைம்ஸைப் புரட்டத் தொடங்க, ஜெயந்த் சின்னக் குரலில் பாட ஆரம்பித்திருந்தான். கொங்கணி லாவணி அது என்று ப்ரீதிக்குத் தெரியும்.
குளியல் அறை.
ப்ரீதி உள்ளே நுழைந்தாள்.
ப்ரீதி வினாடிகளை எண்ணிக் கொண்டிருந்தாள்.
யுகமாக நகர்கிற பொழுது. நகரட்டும். இவர்கள் போகட்டும்..
யாராவது ஒருத்தர் தங்கினாலும் பரவாயில்லை.. சீண்டல் கடைசி வரை போகாமல் சமாளித்து விடலாம்.
போனால் தான் என்ன? சொந்தமாக ஃப்ளாட்.. செஷனுக்கு லட்ச ரூபாய் கொட்டித் தரும் மாடலிங் அசைன்மெண்ட்கள்..
எல்லாவற்றுக்கும் ‘மறைந்திருக்கும் விலை’ இருக்கிறது.
இருக்கலாம்.. ஆனாலும்..
யாராவது ஒருத்தர் போயே ஆக வேண்டும்..கட்டாயமாக..
கதவு சத்தம்.
யார் போகிறது? இரண்டு பேருமா?
நல்லதுதான்.
இல்லை.. ஒருத்தர் மட்டும்..
வெளியே போய்ப் பார்க்கலாமா?
வேணாம்.. உடனே போகக் கூடாது..பொறுமையாக இரு பெண்ணே..
கையில் ஒரு மில்ஸ் அண்ட் பூன்ஸ் எடுத்து வந்திருக்கலாம். எதையாவது படித்துக் கொண்டிருந்தால் இப்படிக் கஷ்டமாகத் தெரியாது.. இப்போ வெளியே போகலாமா..
மெல்லக் குளியல் அறைக்கு வெளியே வந்தாள்.
யார் போனது?
பெரைராவா?
பெரைரா படுக்கையில் இருந்தான்.
ஜெயந்தும்.
‘யூ.. யூ..யூ..gay lords.. இதுக்கு என் படுக்கை தானா கிடைச்சுது?’
அவள் சத்தம் போட நினைத்து வேண்டாம் என்று தீர்மானித்து பால்கனிக்குப் போனாள்.
பால்கனிச் சுவரை ரொம்ப நேரம் எட்டி உதைத்துக் கொண்டிருக்க, மெல்லிய கடல் காற்று அவளைச் சுற்றி சிரிப்பாணி கொட்டிச் சிரித்துக் கொண்டிருந்தது.
————————————-
அத்தியாயம் 9
’முன்னூற்று முப்பத்தஞ்சு ரூபாய்’.
ராமபத்ரன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.
மொட்டை மாடி அரை இருட்டு.
காரை பெயர்ந்த தரையில் நேர் கோடாகக் கிடக்கும் தண்ணீர்க் குழாய்களைத் தாண்டித் தவிர்த்தபடி.
ராமபத்ரன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.
நீளக் கட்டிய பிளாஸ்டிக் கயிற்றுக் கொடியில் உலர்த்தி எடுக்க மறந்துபோன மார்க் கச்சையின் கொக்கி காதில் பிறாண்ட ..
யாரோடது இத்தனை பெரிசா..
லேசான ஈர வாடையை முகர்ந்தபடி.
ராமபத்ரன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.
வரிசையாகத் தூக்கி நிறுத்திய ராட்சச சிண்டெக்ஸ் தொட்டிகளின் பின்னால் வளைச் சத்தத்தையும் சிணுங்கலையும் காதில் வாங்கியபடி..
‘நேரமாயிடுத்து..வத்தக் குழம்பு கொதிச்சு வத்தியிருக்கும்.. குக்கர் வைக்கணும்.. .. சிஞ்ச்வாட் அத்திம்பேர் கலம் சாதம் சம்ப்ரமமா சாப்பிடுவார்.. குழந்தைகள் வேறே சமையல்கட்டுலே டப்பா ஒண்ணு விடாம திறந்து பார்த்து உப்பு பிஸ்கெட்டை எல்லாம் தின்னு தீர்த்தாச்சு.. ராச்சாப்பாடு முடிச்சுத்தான் சகுடும்பம் டோம்பிவிலி போற ஏற்பாடாம்..கையை எடுங்கோ..’
‘சத்தம் போடாதேடீ.. ’
உடம்பே இத்து விழுந்துடும் போல இருக்கு..சொல்லிண்டே இருக்கேன்.. கை எங்கெல்லாம்..
‘அஞ்சே நிமிஷம்..’
’அதுவே உங்களுக்கு ஜாஸ்தி’
பந்து ஜனம் வந்து நிறைந்த ஃப்ளாட்டிலிருந்து கிளம்பி மேலே ஊர்ந்து வந்த, இடது தோளில் பல்லி விழுந்த யாரோ…
ராமபத்ரன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.
’முன்னூத்து முப்பத்தஞ்சு ரூபாய்..’
மனதில் பலமாகக் கவ்விப் பிடித்த முன்னூத்து முப்பத்தஞ்சு ரூபாய் விசாரம்.
கோயில் கும்பாபிஷேக வசூல் பணத்தில் குறைகிறது. சாயந்திரத்துக்கு அப்புறமான பட்டுவாடாவில் கை மாறி இருக்கிறது. யாரிடம்?
சாய்ந்திரம்..
ஆறு பதினைந்து லோக்கலைப் பிடிக்க வி.டி நெரிசலில், பவுண்டன் பெப்ஸி ஸ்டால் எதிரே பிளாஸ்டிக் கோப்பையைக் கொஞ்சூண்டு கருப்புத் திரவத்தோடு ராமபத்ரனின் பேண்டில் குளிர விசிறியடித்துப் போன குட்டைப் பாவாடைக்கார சிகப்பியை – இன்னும் மனசில் நடக்கிற கால் அவளுக்கு – சபிப்பதில் தொடங்கியது அது.
ஏற்கனவே வந்து சேர்ந்து, கம்பார்ட்மெண்டில் அரட்டை போட்டுக் கொண்டிருந்த ஜமா, ‘என்ன ஓய் .. இருட்ட மின்னாடியே இந்தியா மேப்போட வர்றீர்..?’ என்று உற்சாகமாக வரவேற்று உட்கார்த்தி வைக்கக் களை கட்டியது.
சாந்தர்ஸ்ட் ரோடு நெருங்கும்போது, காலையில் வராத காரணத்தைத் துருவி விசாரிக்க மழுப்பி, தொடர்ந்து கெல்லியதில் பைகுல்லாவில் புளியோதரை மகாத்மியம் அரங்கேறியது.
பரேல் தாண்டியானதும் அவரவர் வசூல் கணக்கைப் பிரித்து வைத்துக் கொள்ள, தகவல் அறிவிப்பு, கூட்டல் கழித்தல் என்று கிரமமாக சூடு பிடித்தது.
குர்லா ஸ்டேஷனில் வைத்து நாச்சியப்பன், தச்சு வேலைக்குக் கொடுக்கக் குறைகிறது என்று ஆயிரத்து முப்பது வாங்கிக் கொண்டான்.
‘கோயில் பள்ளியறைக் கதவு ஞாயித்துக்கிளமை முடிச்சிருக்க வேண்டியது… விஸ்வகர்மா பூஜைன்னு ஏறக்கட்டி வச்சிட்டான் சார்.. இப்ப முடிச்சிருப்பான்..’
பாண்டுப்பில் சடாரென்று நினைவு வர, திருமலாச்சாரி முன்னூறு ரூபாய் கொடுத்தார். கொத்தனார் கணக்கு அவர் வசம்தான். பத்து நாள் முன்னால் செங்கலுக்காக வாங்கிக் கொண்டதில், கணக்குத் தீர்ந்தது.
நாகராஜன் தாணாவில் இறங்குவதற்கு முன், துவஜஸ்தம்பத்து மேற்கே சுவர் நெடுக ட்யூப் லைட் போட்டுத் தருவதாகச் சொன்ன ஒரு தெலுங்குக்காரர் தொடர்ந்து ஒரு மாசமாகக் கண்ணில் படாததால், வசூல் பணத்தில் அந்தக் கைங்கர்யத்தை முடித்து விடலாம் என்று எல்லோரிடமும் இருநூறு ரூபாய் வீதம் வாங்கிக் கொண்டு போனான்.
அப்புறம் டோம்பிவிலியில்..
‘வயத்துக்குக் கொட்டிண்டு போய் மாடியிலே லாந்தக் கூடாதா.. பிராணனை வாங்கறேளே .. தலைக்கு மேலே ஜோலித் தெரக்கு..’
அகிலாண்டம் மூச்சிரைக்கப் படி ஏறி வந்தாள்.
‘உஷ்.. மெல்லப் பேசுடி.. மனுஷா இருக்கா..’
சிண்டெக்ஸ் தொட்டிப் பக்கம் கையைக் காட்டியபடி ராமபத்ரன் படி இறங்கினார்.
‘சாப்பிட்டுப் போய் தீபம் பிடிங்கோ ..’
மாடிப்படி வளைவில், இடுப்பில் இறுக்க முற்பட்ட கையை வெடுக்கென்று தள்ளினாள்.
இல்லாவிட்டாலும், ராமபத்ரன் கஷ்டப்பட்டுத்தான் வளைத்திருக்க முடியும்.
‘திருமலை நாயக்கர் மஹால் தூண் மாதிரி..’
டைனிங் டேபிள் மடக்கி சுவரில் தொங்க, தரையில் சாப்பாட்டுத் தட்டு.
‘என்னது?’
அகிலாண்டம் பீங்கான் ஜாடியை நகர்த்தினாள்.
‘வழுவழுப்பைச் சொன்னேன்..’
‘இந்த எளப்பம் தானே வேணாங்கிறது.. நீங்க மட்டும் அன்னிக்கு கண்ட மேனிக்கு அழியாம இருக்கறதா நெனைப்பா.. கண்ணாடியை முழுசாப் பாருங்கோ.. ஷிண்டேயாத்துக்காரியை விட பெரிசா தொப்பை..’
செல்லமாக வயிற்றில் குத்தினாள்.
‘புளியோதரை எப்படி இருந்ததாம்?’
சம்பிரதாயமாக விசாரித்தார்.
‘காலம்பற முக்கி முனகிண்டு மாடியிலே துணி உலர்த்த வந்தா.. இம்லி சாவல் நாக்குக்கு ருஜியா இருந்ததாடி பொண்ணேன்னு கேட்டேன்.. அந்த ஷிண்டே கடன்காரனே பாதியும் மொசுக்கிட்டானாம்.. அவனுக்கா மசக்கை? ..புளிக்காய்ச்சல் போடட்டா?.’
அவசரமாக மறுத்தார்.
‘மாடியிலே காயப் போட்ட துணியை எல்லாம் எடுத்தாளோ?’
மனசு எங்கெங்கோ அலை பாய்கிறது.
ராமபத்ரா.. சத் விஷயங்களில் மனசைக் கட்டிப் போடு.. கோயில் கைங்கரியம்.. கும்பாபிஷேக வசூல்.. கணக்கு முன்னூத்துச் சில்லரை ரூபாய் இடிக்கிறது.. நேராக்க வேணாமா?
வாஷ்பேசினில் கையலம்பி விட்டு வர, டேப் ரிக்கார்டரில் காத்திரமாக சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் குரலில் மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ரம்.
‘டி.வி போடலாம்னு பார்த்தேன்..’
மெல்ல முனகினார்.
‘பத்து நாள் பொறுத்துக்குங்கோ.. பாட்டுப் பாடறேன்னு இந்திப் படக் கடன்காரன் ஒத்தொருத்தனும் மாருக்கு நடுவிலே தாடையை வச்சுத் தேய்க்கறதை சாவகாசமாப் பார்த்துக்கலாம்..’
‘பத்து நாள் என்ன கணக்கு?’
ஃப்ரிட்ஜைத் திறந்து வெற்றிலை எடுத்தார்.
‘கொலு ஆரம்பிக்கறதே.. ஞாபகம் இல்லையோ..?’
டைனிங் டேபிள் மடக்கப்பட அதுதான் காரணம். டி.வியும் ஓரமாக ஒதுங்கி, துணி போர்த்திக் கொண்டு தூங்கி விடும்.
இருக்கிற இடத்தில் கொலு வைத்துவிட்டு, சட்டமாக மேஜை நாற்காலி போட்டுச் சாப்பிட, ஸ்டார் டிவியில், சமுத்திரத்தில் குளிக்கப் போகிற வெள்ளைக்காரிகளை நிதானமாகப் பார்க்க என்று சுகம் கொண்டாட முடியாது.
‘கொலுப்படியை எறக்கிக் கொடுத்துட்டு மாடி ஏறுங்கோ.. சினிமா முடிஞ்சிருக்காது..’
சாதத்தில் தயிர் குத்தியபடியே விரட்டுகிற அகிலாண்டம்.
‘காலம்பர எறக்கித் தரேனே’
நைச்சியமாகக் கேட்டார்.
‘நாளைக்குப் பாட்டிம்மை.. ஐயர் ஏந்திருக்கறதுக்குள்ளே அமாவாசை போயிடும்..’
விழுதாக அவள் புளிக் காய்ச்சலை அவள் தட்டில் போட்டுக் கொண்டதை சின்ன நடுக்கத்தோடு பார்த்தார். இவளுக்கு எதுவும் வாதாபி ஜீரணம் ஆகிவிடும்.
‘வயத்தை லவலேசம் வலிக்கறதுடி..கான்ஸ்டிபேட் ஆகியிருக்கு.. புளியோதரை..’
‘ஆமா.. நான் கேட்டா கான்ஸ்டிபேட், ஹைட்ராசில்னு ஏதாவது சாக்கு சொல்ல வேண்டியது.. கோயில் கட்டறேன்.. கும்பாபிஷேகம் பண்றேன்னு சுத்த எதேஷ்டமா நேரம் கொழிக்கும்… காண்டிவ்லியிலே சேட்டைப் பார்த்து சிமெண்ட் வாங்கணுமா.. தோ வந்துட்டேன்னு ஓடலாம்..விரார்லே சூவனீருக்கு அட்வர்டைஸ்மெண்ட் தரேன்னானா ஒரு தீத்தாராண்டி… அவனை தட்சணமே தரிசனம் பண்ண குதிச்சுண்டு போகலாம்.. மாடுங்காவிலே சங்கர மடத்துலே சாஸ்திரிகளை குரூப் புக்கிங் பண்ண பையைத் தூக்கிண்டு லோக்கல் பிடிக்க சாடலாம்..ஐயர்வாளுக்கு இதெல்லாத்துக்கும் எம்புட்டு அலைஞ்சாலும் உடம்பு சொன்னபடி சலாம் போட்டுக் கேக்கும்.. ஒரு ஞாயித்துக் கிழமை வீடு தங்கினதுண்டா இந்த மூணு மாசத்துலே…?’
ராமபத்ரன் அயிகிரி நந்தினியைப் பெரிதாக்கினார். அபானவாயு விட்டால்கூட அடுத்த ஃப்ளாட்டில் கேட்கும்.
‘ஸ்டூலை நகர்த்து..’
வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு ஸ்டூலில் ஏறி பருந்துப் பார்வை பார்க்க, அலமாரி மேல் தட்டில் பச்சை வாழைப்பழச் சீப்பு.
இரண்டு பிய்த்துத் தின்றால் நாளைக்கு பிரம்மசௌசம் கலகலவென்று கவலையில்லாமல் ஆகும்.
எடுத்தால் இவள் கத்துவாள்.. ‘காலம்பற பூஜைக்கு வச்சிருக்கேன்.. எடுக்காதீங்கோ..’
ஒரு பெருமூச்சோடு கொலுப்படிகளை மெல்ல இறக்கிக் கீழே வைக்க பனியன் முழுக்க ஒட்டடை.
அகிலாண்டம் பனியனைக் கழற்றி, புடவை முந்தானையால் நெஞ்சிலும் முகத்திலும் துடைத்து விட்டாள்.
மெனோபாஸ் தொட்டுவிடும் தூரத்தில் இருந்தாலும், கட்டுக் குலையாத அகிலாண்டம். ராமபத்ரன் இந்திப் படக் கதாநாயகனாகத் தாடையைத் தடவிக் கொண்டு பார்க்க, விலகிப் போனாள்.
‘இன்னிக்குப் பேப்பர் எங்கே.. காலம்பறயே சரியாப் படிக்கலே.. ‘
‘அலமாரியிலே பாருங்கோளேன்.. எல்லாத்துக்கும் அகிலாண்டம் வரணும்.. அங்கே மேல் தட்டுலே கேலா வாங்கி வச்சிருக்கேன்.. ரெண்டு எடுத்துக்குங்கோ.. நல்ல கான்ஸ்டிபேஷன்.. ஆசமனம் பண்ற மாதிரி தண்ணி குடிச்சா வராம என்ன பண்ணும்..’
தரையில் உட்கார்ந்து பேப்பரைப் பிரிக்க, அகிலாண்டம் படுக்கையை இறக்கி வைத்துவிட்டுப் பொம்மைப் பெட்டியைத் திறந்தாள்.
‘ஐயா…. வெஸ்டர்ன் ரயில்வேயில் தினசரி தாமதத்தைத் தவிர்க்க, போரிவலியில் ஒரு ஓவர் பிரிட்ஜ் கட்ட வேண்டிய அவசரத்தையும் அவசியத்தையும்..’
யாரோ ஜோஷி ஆசிரியருக்கு எழுதிய கடிதம்..
புளியோதரை சாப்பிடாமலேயே தினசரி ஆபீஸுக்குத் தாமதமாகப் போகிற பேர்வழி..
‘கொலு எடுத்து வச்சுட்டு, மொறிச்சுனு துடைக்கப் போறேன்.. தரையெல்லாம் பிசுபிசுன்னு ஒட்டறது… பாயும் தலகாணியும் தூக்கிண்டு வராந்தாவுக்குப் போய்ச் சேருங்கோ..’
’வராந்தாவா?’
ராமபத்ரன் பேப்பரை மடக்கி வைத்துவிட்டு எழுந்து நின்றார்.
‘புதுசாக் கேக்கறேளே .. வருஷா வருஷம் பண்றது தானே.. நவராத்திரி முடியற வரை இங்கே படுக்கை விரிக்க முடியுமா?.. ஒரு பத்து நாளாவது அட்டுப் பிடிக்காம ஆசாரத்தோடு இருந்தா ஒண்ணும் குறைஞ்சுடாது.. லட்சுமணன் வில்லு எங்கே விழுந்து தொலச்சது? பெட்டியிலேயே கிடக்கான்னு பாக்கணும்..’
தும்மிக் கொண்டே ராமர் பட்டாபிஷேக செட்டை எடுத்துத் தூசி தட்ட ஆரம்பித்தாள்.
‘நாளைக்கு வரச்சே கொஞ்சம் மாடுங்காவிலே எறங்கி சந்தன வில்லையும், கல்ப்பூரமும் வாங்கிண்டு வரேளா? பாலடைப் பிரதமன் பண்ண ரெண்டு பாக்கெட்..’
வராந்தாவுக்கு வந்து படுக்கையை விரித்தார். முன்னூத்து முப்பத்தஞ்சு ரூபாய்.. எங்கே போயிருக்கும்?
திருமலாச்சாரி கொடுத்தாரா.. கொடுக்கப் போவதாகச் சொன்னாரா?
ஓபராய் நீச்சல் குளத்தில் ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்தா நீந்துவார்கள்?
நாளைக்கே கேசவ் ஷெனாயைப் போய்ப் பார்த்து வசூல் செய்து..
மாடிக் கொடியிலே யாருடைய துணி.. மேலே புதுசாகக் குடி வந்த மலையாளி நர்ஸ்.. சுநந்தா நாயரா.. என்ன பெயர்.. கருப்புதான்.. உடம்பு…
சின்ன கோகலே வாக்கு தத்தம் பண்ணிய அம்பதாயிரம் வந்தால், துவஜஸ்தம்பத்தில் வெள்ளித் தகடு பதித்து விடலாம்..
சிண்டக்ஸ் தொட்டி பின்னால் தண்ணீர்க் குழாய் நிறையப் போகுமே.. படுக்க முடியுமோ.. உக்கார்ந்த படிக்கே எப்படி.. யார் அது..?
கும்பாபிஷேக சமயம் ஒரு வாரமாவது லீவு போட்டு விட்டு யாக சாலையில் போய் உட்கார்ந்து விட வேண்டும்..
இத்தனை வயசுக்கு மேல் வேர்ட் பிராசசிங் படித்து என்ன கிழிக்கணும்?
புரண்டு படுத்தார்.
சுவரில் கால் இடித்தது. காதில் கொசு பாடியது.
இந்தப் பக்கம் நகர்ந்தால் கதவில் கால் தட்டும்.
முன்னூற்றுச் சில்லரை சதுர அடியில் இதுக்கு மேல் தோதுப்படாது.
அட்ஜஸ்ட் பண்ணிக்கத்தான் வேணும்.. போகிற வரைக்கும்..
ஆயிரத்து ஐநூறு சதுர அடி.. பரபரவென்று விரியும் பிரகாரம்.. வினாயகர் சந்நிதி.. சுப்ரமணியர்.. சின்னதா நவக்கிரக சந்நிதி.. பூந்தோட்டம்.. அங்கப் பிரதட்சணம் செய்ய வசதியா கோயில் நடை.. வழுவழுன்னு பாளம் பதிச்சு.. உள்ளே கருங்கல் சுவர் .. தோட்டத்தில் நந்தியாவட்டை.. துளசி.. மாமரம்.. அரச மரம்.. ஜிலுஜிலுன்னு காத்து..
அவர் தூங்கியிருந்தார்.
(முற்றும்)
(குமுதம் 1995; ‘பகல் பத்து ராப் பத்து’ குறுநாவல் தொகுப்பு – தமிழ்ப் புத்தகாலயம் 1997)