என்னளவில் ‘முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம்’ ஒரு முக்கியமான படைப்பாகும். சம்பிரதாயமான கதையாடலில் இருந்து விலகி மாய யதார்த்தத்தை நோக்கி நான் நகர்ந்தது இந்தக் குறுநாவல் மூலம் தான்.
பாவை சந்திரனை ஆசிரியராகக் கொண்ட புதிய பார்வை இதழில் பிரசுரமான இந்தக் குறுநாவலுக்குப் பிறகு, ‘மந்திரவாதியும் தபால் அட்டைகளும்’ தொகுப்பில் இடம் பெற்ற சிறுகதைகள் வழியே ‘அரசூர் வம்சம்’ வந்தடைந்தேன்.
——————————
முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம் இரா.முருகன்
அத்தியாயம் 1
பாக்கியலட்சுமி என்று பெயர் கொண்ட எருமையின் கரைச்சல். தெருவில் சினிமாப் பட வண்டிக்குள் கொட்டு சத்தம். தெரசாள் மெழுகுவர்த்திக் கம்பெனி ஒலிபெருக்கியிலிருந்து, ‘ஓசன்னா பாடுவோம்… தேவனைப் போற்றுவோம்’.
முத்தம்மா டீச்சரின் காலைப் பொழுது சகல சப்த அலங்காரங்களோடு விடிந்தது.
எருமைக்காரன் தெருவில் ஐந்தாவது வீடு முத்தம்மா டீச்சருடையது. எந்தப் பக்கத்திலிருந்து ஐந்து .. இடமா வலமா என்ற சம்சயங்கள் வர முடியாத தெரு அது.
ஒரே வசத்தில் வீடுகள். ‘அஞ்சுகல்’ சந்திப்பில் இருந்து கிழக்கே சரசரவென்று விரிந்து, மெழுகுவர்த்திக் கம்பெனியின் சுவரை முட்டி நிற்கிற தெருவில், எல்லா வீட்டிலும் எருமை வளர்க்கிறார்கள்.
வீட்டு வாசலுக்கு நேரே முளையடித்துக் கட்டி வைக்கும் எருமைகளுக்குப் பெயர் வைப்பதில்லை என்றிருந்த வழக்கம், ரெவின்யூ இன்ஸ்பெக்டர் பால் பாண்டியனால் போன மாதம் உடைக்கப் பட்டது. அவர் தெருவின் முதல் வீட்டை வாங்கிக் குடியேறியபோது, தெருவின் வளமுறை கருதி எருமை வாங்கியதோடு இல்லாமல், பாக்கியலட்சுமி என்று அதற்கு ஒரு வினோதப் பெயரும் வைத்தார்.
பாக்கியலட்சுமி கயிற்றை அறுத்துக் கொண்டு முத்தம்மா டீச்சர் வீட்டு வாசலில் நின்று கூப்பிட்டதில் டீச்சரின் ஞாயிற்றுக்கிழமைத் தூக்கம் கலைந்து போனது.
அது நல்லதுக்குத்தான்.
’வீட்டைக் காலி பண்ணிக் கொடுத்திடு.. நான் வித்துப் பணத்தை எடுத்துக்கிட்டு பினாங்கு போகணும்.. நிக்க நேரம் கிடையாது..’
முத்தம்மா டீச்சரின் தம்பி வாசலுக்கும் கூடத்துக்குமாக நடந்து கொண்டு சண்டை போட்ட கனவு பாக்கியலட்சுமி குரல் கொடுத்ததும் தான் முடிவுக்கு வந்தது. ஆனாலும் டீச்சரின் கண்ணில் இன்னும் இருந்தது அது.
சண்டை போடுகிற தம்பி.. பினாங்கிலிருந்து ஏரோகிராம் கடிதாசில் நுணுக்கி நுணுக்கி எழுதிச் சண்டை போடுகிறான் அவன். போன வாரம் தான் அந்தக் கடுதாசி வந்தது.
இருபத்தஞ்சு வருடம் முன்னால், ஜோதி அக்கா தலைச்சன் பெண் பிரசவத்துக்கு வந்திருந்த சமயம், டீச்சர் போட்டு வைத்திருந்த பிராவிடண்ட் ஃபண்ட் கடன் தொகையையும், மாதச் சம்பளத்தையும் எடுத்துக் கொண்டு, மெழுகுதிரி கம்பெனி வீட்டு எலிசபெத்தோடு ஓடியவன் தான் அவன்.
‘வீட்டை வித்துட்டா நான் எங்கேடா போவேன்? வேணாம்டா…சீக்கிரமா ரிடையர் ஆயிடுவேன்.. செத்தும் போயிடுவேன்.. வீடு மட்டுமில்லேடா.. பிஃஎப்.. கிராஜுவிட்டி..’
கனவில் முத்தம்மா டீச்சர் அவன் கையைப் பிடித்துக் கொண்டு அழுதாள்.
‘என்னாத்த வரும்.. உன் அக்காவோட எளைய மக கல்யாணத்துக்கு லோன் போட்டுக் கொடுக்கப் போறியே.. அதை அடைச்சுட்டு எம்புட்டுன்னு வரும்?’
தம்பி பெண்டாட்டி எலிசபெத் ரெட்டைச் சடையில் கலர் ரிப்பனும், ஓட்டைப் பல்லுமாக முகத்துக்கு நேரே கையை நீட்டிப் பழிப்புக் காட்டியபோது, கூடத்து ஃபோட்டோவிலிருந்த டீச்சரின் அம்மா விரலை மடக்கிக் கணக்குப் போட ஆரம்பித்தாள்.
‘பத்தொம்பதாயிரம்.. வட்டி ஒரு நாலாயிரத்துச் சில்லறை போக பதினஞ்சாயிரத்து முன்னூறு… வேண்டியிருக்கும்’டி முத்து…தோசைக்கல் வாங்க.. உன் அக்கா மவ கல்யாணம்.. பெறகு பிரசவம்.. காது குத்து. வரிசையா வந்துடும்..’
‘ஏம்மா, நானும் கல்யாணம் கட்டிக்கட்டா?’
முத்தம்மா டீச்சர் நாணிக் கோணிக்கொண்டு சொல்லும்போது எலிசபெத் கீச்சுக் கீச்சென்று இரைந்தாள்.
‘கெளவி..கெளவி.. கல்யாணம் கட்டிக்கிற மூஞ்சியாடி இது?..’
ரசம் போன கண்ணாடியில் முகம் பார்த்த முத்தம்மா டீச்சர் நரைத்துக் கலைந்து குத்திட்டு நின்ற தலைமுடியை ஒதுக்கிக் கொண்டாள்.
‘ஔவைக் கிழவி நம் கிழவி..’
எலிசபெத் சுற்றி வந்து குதித்து ஆடினாள்.
எப்போதோ பார்த்த எலிசபெத் முகம் இன்னும் ஐந்து வயசில் உறைந்து குழந்தைக் களையோடு இருக்க, உடம்பு மத்திய வயசுப் பெண்பிள்ளையாக ஊதித் தடித்திருந்த வினோதத்தை நினைத்தபடி டீச்சர் தெருவில் இறங்கினாள்.
பாக்கியலட்சுமி பின்னாலிருந்து கூப்பிட்டது.
ரெவின்யூ இன்ஸ்பெக்டர் வீட்டில் போய்ச் சொல்ல வேண்டும். மாடு ஓடிப் போய் பவுண்டில் அடைத்து விட்டால் அப்புறம் மீட்டுக் கொண்டு வர ஏகமாகச் செலவாகி விடும்..ரெவின்யூ இன்ஸ்பெக்டர் சர்க்கார் உத்தியோகஸ்தன் என்பதால் சும்மா கூட விட்டு விடுவார்கள் தான்..
என்றாலும் போய்ச் சொல்லாமல் முடியாது. பால்பாண்டியன் தயவு, ரிடையரானதும் ஏதாவது விதத்தில் தேவைப் படலாம். அதற்கு முந்தியும்..
‘சார்,, பினாங்குலேருந்து என் தம்பி கடுதாசி போட்டிருக்கான்.. என்னைப் பாக்கணும் போல இருக்காம்… அடுத்த மாசம் வரப் போறானாம் ..’
‘வரும்போது எனக்கு ஒரு காமிரா வாங்கியாறச் சொல்லுங்க டீச்சர்..’
‘அப்ப ஒண்ணு செய்யி.. பாக்கியலச்சுமி கூட நம்ம வீட்டு வாசல்லேயே தங்கிக்க.. மாடு கறக்க, சாணி அள்ளன்னு உபயோகமா இருக்கும்..எருமைச் சாணி.. வளிச்சு எடுத்துக் கூடையிலே கொண்டு போ மூதி..’
டீச்சர் தலையைக் குலுக்கிக் கொண்டாள். ஒரு கோப்பை சாயா குடித்தால் மனசு இப்படி எல்லாம் ஜோடித்துக் காட்டிக் கொண்டிருக்காது…
பின்னால் பலமாகக் கொட்டு சத்தம். டீச்சர் திரும்பிப் பார்த்தாள். சினிமா வண்டி நடுத் தெருவில் அடைத்தது போல் நின்றது. இனிமேல் முன்னால் வந்தால் மெழுகுவர்த்தி கம்பெனி சுவரில் தான் முட்ட வேண்டும்.
வண்டியில் இருந்து குதித்து இறங்கிய சின்னப் பையன் கையில் கலர் கலராக நோட்டீசுகளைப் பிடித்துக் கொண்டு முத்தம்மா டீச்சரைப் பார்த்துக் கையசைத்தான்.
‘என்ன எளவெடுத்த படமோ.. போய்த்தான் ஒரு நோட்டீசு வாங்கிட்டு வாயேன்..’
பாக்கியலட்சுமி மறுபடி சத்தம் போட்டது.
முத்தம்மா டீச்சர் மாட்டின் கயிற்றைப் பிடித்து இழுக்க, அது சிலுப்பிக் கொண்டது.
‘போடி கெளவி… போய்க் காம்போசிசன் நோட்டு திருத்து..’
ராத்திரி உடுத்தியிருந்த சாயம் போன, கிழிந்த புடவையோடு அயலார் வீட்டு வாசலில் போய் நிற்க முத்தம்மா டீச்சருக்குக் கூச்சமாக இருந்தது
போகாமல் முடியாது.
மூன்றாம் வீட்டு வாசல். நாற்பது வருடமாக இப்படித்தான் பச்சை வர்ணம் அடித்த இரும்புக் கதவு.
கதவில் சாய்ந்து கொண்டுதான் ராசாத்தி வீட்டுக்காரர் ஆலங்குச்சியால் பல் விளக்குவார்.
நாற்பது வருஷம் முன்னால் ராசாத்தி கல்யாணம் ஆன புதிதில் அப்படி..
‘பரலோக சாம்ராஜ்ஜியம் உங்களுக்காகக் காத்திருக்கிறது.. கடைத்தேற இதுவே கடைசி தருணம்..’
தெரசாள் மெழுகுதிரிக் கம்பெனி ஒலிபெருக்கியில் சுவிசேஷ பிரசங்கம் ஆரம்பமாகி இருக்கிறது. தெரசாள் புருஷன் மரியஜெகத்தின் குரல் ஒலிக்கிறது.
ராசாத்தி வீட்டுக்காரர் மாப்பிள்ளைராஜு என்ற மாப்பிள்ளை குரலும் இதேபோல் தான் கணீரென்று. பக்கத்தில் வந்து கிசுகிசுக்கும் போது மட்டும் பிசிறடிக்கும்.
‘பேரு என்ன?’
‘முத்தம்மா.. முத்துன்னு எல்லோரும் கூப்பிடுவாங்க..’
‘நானும் கூப்பிடட்டா?’
‘கூப்பிட்டு என்ன பண்ணப் போறீங்களாம்?’
முத்தம்மா டீச்சர் சிரிப்பை அடக்கிக் கொண்டு நடக்க, ரெவின்யூ இன்ஸ்பெக்டர் வீட்டுக்குள்ளிருந்து ஒரு தாட்டியான ஸ்திரி வெளியே வந்தாள்.
‘பாக்யலஷ்மி.. இக்கட ரா..’
தெலுங்கு தெரிந்த பாக்கிய லட்சுமி அவள் பக்கமாகத் திரும்பி நடக்கும்போது முத்தம்மா டீச்சரை உரசிக் கொண்டு போனது.
சினிமா வண்டிப் பையன் பறக்க விட்ட சினிமா நோட்டீஸ் டீச்சர் காலடியில்.
குனிந்து எடுத்தாள்.
காதல் சித்திரம்.. காதுக்கு இனிய கானங்கள் .. கேவா கலர்.. புத்தம் புதிய காப்பி…
‘பளய படத்துக்கு மடியைப் பிடிச்சு இளுத்து நோட்டீசு வச்சாலும் ஒரு பய வரமாட்டான்.. தெலுங்கு டப்பிங் போடச் சொல்லு.. டிக்கெட் கிளிச்சு மாளாது..’
சைக்கிள் ஓட்டியபடியே சொல்லிப் போகிறவன் முத்தம்மா தம்பி ஓடிப் போனபோது இருந்த வயசுக்காரன்.
பழைய படம்.. பழைய பாட்டு..
பாட்டொன்று பாடலாமா.. பக்கம் வந்து பேசலாமா ..கேட்டதும் கிடைத்திடுமோ இந்தத் தோட்டத்து ரோஜாப் பூ..
பாட்டொன்று …
முத்தம்மா டீச்சருக்கு அடி வயிற்றில் இருந்து வலி கிளம்பியது.
(தொடரும்)
1994 – ’புதிய பார்வை’ இலக்கிய இதழில் பிரசுரமானது. ‘பகல் பத்து ராப் பத்து’ குறுநாவல் தொகுப்பு 1997 நூலில் இடம் பெற்றது. தமிழ்ப் புத்தகாலயம் பிரசுரம்