முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம் – அத்தியாயம் 2
தெரசாள், முத்தம்மா, அழகு மீனா, ராசாத்தி, சாந்தா, போதும்பொண்ணு, செல்வி..
ஒரு கூட்டமே தரை டிக்கெட்டில்.
ராசாத்தியின் அவ்வா அலமேலம்மாக் கிழவி புகையிலைக் கட்டையை வாயில் அடக்கிக் கொண்டு தடுப்புச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருக்கிறாள்.
தடுப்புக்கு அந்தப் பக்கம் களவாணிப் பயல்கள். சினிமா கொட்டகைக்கு வருவதே குட்டிகளைப் பக்கத்தில் வைத்துப் பார்க்கத்தான். சமயம் கிடைத்தால் உரசியும் பார்ப்பார்கள். யாருமே எவனுமே யோக்கியமில்லை. காலம் கெட்டுக் கிடக்கிறது.
‘ஆட்ட பாட்டத்தைக் கொறச்சுக்கடி பேதியிலே போறவளே.. நீ எப்ப உக்காந்து வைக்கப் போறியோன்னு மனசு திக்கு திக்குன்னு அடிச்சுக்குது.. பெரியவ தெரண்டு ஆறு வருசமாச்சு .. அவளுக்கு இன்னும் ஒரு வழி பொறக்கலியேன்னு ராப்பூரா தூக்கம் இல்லே.. இவரானா ஒரு கவலையும் இல்லாம காக்கிப் பையை மாட்டிக்கிட்டு கடுதாசி கொடுக்கக் கிளம்பிடறாரு..சினிமா போறாளாம் சினிமா.. காசு என்ன கொட்டியா கிடக்குது .. தம்பி கையைப் பிடிச்சு ஆனா ஆவன்னா எளுத சொல்லித் தர்றது… வீடு கூட்டறது..நாயனா சட்டையிலே பொத்தான் தைக்கிறது..ஒண்ணாவது செய்ய வணங்குதாடி உனக்கு..’
‘எல்லாரும் படத்துக்குப் போறாங்க அம்மா.. தரை டிக்கெட்டு தான்.. நாலணா தான்.. ராசாத்தியோட் அவ்வா இருக்கில்லே.. அந்தக் கெளவியம்மா தொணைக்கு வருது..நாலணாக் கொடும்மா..’
அம்மாவிடம் பெயராத நாலணாவை நாயனா வந்ததும்தான் வாங்கிக் கொள்ள முடிந்தது.
போஸ்ட்மேன் பங்காருசாமிக்கு சின்ன மகள் முத்தம்மா செல்லம் தான்.
‘ஏண்டி புள்ளே முத்தம்மா.. உங்கம்மா ஒரு தாவணி போட்டு அனுப்ப மாட்டாளா.. அதும்பாட்டுக்கு நிக்குதே.. கண்ணுலே படலியா..’
முத்தம்மா போதும்பொண்ணு பின்னால் ஒண்டிக் கொண்டாள். கிழவி நேரம் காலம் தெரியாமல் உசிரை வாங்குவாள்.
‘எங்கேடி நிக்குது? இதுவா? கெளவி கண்ணுலே எருக்கம்பாலைத் தான் விடணும்..’
தெரசாள் முத்தம்மா கழுத்துக்குக் கீழே உற்றுப் பார்த்து விட்டு அழகுமீனா காதில் சொல்ல, ரெண்டு பேரும் பம்மிப் பம்மிச் சிரிக்கிறார்கள்.
தெரசாள் முத்தம்மாவுக்கு ரெண்டு வருசம் மூத்தவள். ராசாத்தி நாலு வருசம் போல மூப்பு. பெயிலாகிப் பெயிலாகி இந்த வருசம் முத்தம்மா கிளாஸ் தான்.
‘நம்ம சாதி சனமா இருந்துட்டு வேதத்துலே ஏறிட்டாங்க.. வேதத்துலே ஏறினா என்ன.. எருமை வளக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்கா என்ன .. மாட்டை வித்தது தான் வித்தாங்க.. சொல்லிட்டு வித்தா வாங்கியிருந்திருப்போமில்லே.. ‘
தெரசாள் வீட்டில் மாட்டை விற்றதும் மெழுகுதிரிக் கம்பெனி தொடங்கியதும் முத்தம்மா பிறக்க முந்தி என்றாலும் அம்மா இன்னும் சொல்வதை நிறுத்தவில்லை.
என்றாலும் தெரசா வீட்டில் முத்தம்மா சர்வ சாதாரணமாக வளைய வருவாள். தெரசாளும் இங்கேயேதான் எப்போதும்… சதா வடிகிற மூக்கைப் புறங்கையில் துடைத்துக் கொண்டு அழுக்கு கவுனோடு அவள் தங்கை எலிசபெத்தும்..
ராசாத்திக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகப் போகிறதென்று வீட்டில் பேசிக் கொண்டார்கள். ஈர்க்குச்சி உடம்பில் சீட்டிப் பாவாடையும், பச்சைத் தாவணியுமாக வளைய வருகிற அவளை நிச்சயம் புருஷன்காரன் இடுப்பில் இடுக்கிக் கொண்டு போய் ஊர்க் கோடிக் கிணற்றில் போட்டு விட்டு, நல்ல வடிவான ஒரு பொம்பளையைக் கல்யாணம் செய்து கொண்டு விடுவான்.
இது தெரசாள், ராசாத்தியோடு சண்டை வரும் நேரங்களில் மற்றவர்களிடம் சொல்வது.
தெரசாளுக்குப் புருஷனாக வரப் போகிற மரியஜெகம் வீட்டோடு இருக்கப்பட்டவன். மெழுகுதிரி வேலையையும் சுவிசேஷத்தையும் அவனுக்கு தெர்சாளின் அப்பா அடித்து அடித்துச் சொல்லிக் கொடுப்பது எருமைக்காரன் தெருவுக்கெல்லாம் கேட்கும்.
யாரோ யாரையோ கல்யாணம் செய்து கொள்ளட்டும். படம் எப்போது ஆரம்பிக்கும் என்று இருந்தது முத்தம்மாவுக்கு. பீடிப் புகை வாடையும், முறுக்கு வாடையும், வியர்வையும், செம்மண் கிளப்பிய நெடியுமாக டெண்ட் கொண்டகை மூச்சை முட்ட வைத்துக் கொண்டிருந்தது.
‘எல்லோரும் வாழ வேண்டும்..’
பாட்டு சத்தம். திரை தூக்கி விட்டார்கள்.
இந்தியன் நியூஸ் ரீல். ஜனாதிபதி பாபு ராஜேந்திர பிரசாத், பீகாரின் வறட்சிப் பிரதேசங்களைப் பார்வையிட்டார். துணைக்குப் போகிற ஒற்றைப் புல்லாங்குழல் சத்தம்.
சோவியத் வீராங்கனை வாலண்டினா தெரஷ்கோவா விண் கப்பலில் உலகைச் சுற்றிக் கொண்டிருக்க, முத்தம்மாளுக்கு அடி வயிற்றில் வலி ஆரம்பமானது.
பொரிகடலை மென்று கொண்டிருந்த போதும்பொண்ணுவின் தோளைத் தொட்டாள் முத்தம்மாள்.
‘வயித்தை வலிக்குதடி.. வீட்டுக்குப் போகலாமா?’
‘கிறுக்கோ… ஓரமாப் போய் ஒண்ணுக்கிருந்துட்டு வாடி.. எல்லாம் சரியாயிடும்..’
விளக்கு அணைந்து, மேலே ஆப்பரேட்டர் ரூமிலிருந்து படர்ந்த கிரணங்கள் வெள்ளைத் திரையை வண்ணமயமாக ஒளிவிடச் செய்ய, முத்தம்மா வயிற்று வேதனையைக் கொஞ்சம் மறந்தாள்.
‘அய்.. கலர்ப் படம்டீ..’
தெரசாள் தொடையில் நிமிண்டினாள்.
கேவா கலர். முகம் முழுக்க சிகப்பு அப்பிய கதாநாயகியும், தோழிகளும் கால்ச்ட்டை போட்டுக் கொடு கடற்கரையில் நடந்து போகிறார்கள். பின்னால் பாடிக்கொண்டு கதாநாயகன்.
‘அளகா இருக்கான் இல்லே.. அப்படியே புடிச்சுக் கடிச்சுத் திங்கணும் போல இருக்கு..’
போதும்பொண்ணு செம்மண்ணில் ரெண்டு கையையும் அளைந்து கொண்டு சொன்னாள்.
கொஞ்சம் பெண் சாயலாக, தொப்பை போட்ட கதாநாயகன்.
அவன் அழகுதான் என்று முத்தம்மாவுக்கும் பட்டது. கடித்தால் பவுடர் வாடை அடிக்குமோ என்னமோ…
‘பாட்டொன்று பாடலாமா.. பக்கம் வந்து பேசலாமா..’
கிண்டல் செய்து சீண்டுகிற பாட்டு.
கதாநாயகன் கூடவே, அவசரமாக மீசை வைத்த, கிழடு தட்ட ஆரம்பித்திருக்கும் காலேஜ் நண்பர்கள் வேடிக்கையாக ‘ஹோ ஹோ… ஹே.. ஹே..’ என்று குதித்துக் கொண்டு போகிறார்கள்.
கடைவாயில் புகையிலைச் சாறு வடிய அலமேலம்மாக் கிழவி ரசிக்கிறதை, மங்கின வெளிச்சத்தில் முத்தம்மா கையைக் கிள்ளித் தெரசாள் காட்டுகிறாள்.
கையைக் கிள்ளினால் திரும்ப அடி வயிறு வலிக்குமா? முத்தம்மாவுக்குப் புரியவில்லை.
தொப்பைக்காரன் கதாநாயகியை அணைத்துப் பிடிக்க யத்தனிக்கிறான். போதும்பொண்ணு உட்கார்ந்தபடிக்கே பாம்பு போல அப்படியும் இப்படியுமாக நெளிகிறாள்.
கதாநாயகி பொய்க் கோபத்தோடு விலகி ஓடுகிறாள். முத்தம்மாவுக்கு வலியும் சந்தோஷமுமாக இருக்கிறது. அவன் விடாமல் துரத்துகிறான்.
தொப்பை குலுங்க ஓடிக் கதாநாயகியைக் கட்டியணைத்து அப்புறம் மார்பில் சாய்த்துக் கொள்கிறான். அவள் கண்களை மூடிக் கொள்கிறாள்.
முத்தம்மாவும் கண்ணை மூடிக் கொண்டாள்.
‘பாட்டொன்று பாடலாமா?’
வயிற்றில் ஆயிரம் ஊசி குத்திய வலி. மெல்லக் கண்ணைத் திறந்தாள்.
கதாநாயகன் முகம் திரை முழுக்கப் பெரிதாகி முத்தம்மாவைப் பார்த்துக் கண்ணடித்தபோது அவள் அலறினாள்.
அலமேலம்மாக் கிழவியோடு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த அந்த ராத்திரியில் முத்தம்மா பெரிய மனுஷியாகி இருந்தாள்.
(தொடரும்)
1994 – ’புதிய பார்வை’ இலக்கிய இதழில் பிரசுரமானது. ‘பகல் பத்து ராப் பத்து’ குறுநாவல் தொகுப்பு 1997 நூலில் இடம் பெற்றது. தமிழ்ப் புத்தகாலயம் பிரசுரம்
I remember now that i have read the story in Puthiya Paarvai which was a notable magazine at that time
yes sir, you are right.