வாய் நிறைய மனம் நிறைய அவரே அன்போடு வரவேற்றார் ‘தலைமுறைகள்’ ஃபோர் ஃப்ரேம்ஸ் ப்ரீவ்யூ தியேட்டரில் சிறப்புக் காட்சியின் போது. சமீபத்திய நாவல் பிரதிகளைக் கொடுத்தேன். வாங்கி ஒரு நிமிடம் குழந்தை கன்னத்தை வருடுகிற மாதிரி வாஞ்சையோடு வருடி விட்டுப் பின்னால் நின்ற நண்பரிடம் கொடுத்தார்.
‘ஸ்கிரீனுக்கு ரொம்ப் பக்கத்தில் உட்கார்ந்திடாந்திங்க’ என்று பக்கத்து இருக்கையைக் காட்ட, அருகே எங்கள் மதிப்புக்குரிய தோழர் ஜி.ஆர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் தமிழ்நாடு செயலர்).
ஜி.ஆர் இன்னும் படத்தின் பாதிப்பில் இருந்து முற்றாக விடுபடவில்லை. தமிழ் சினிமாவின் சிறந்த முயற்சிகளில் ஒன்றாகத் தலைமுறைகள் படத்தைச் சுட்டிக் காட்ட அவர் எப்போதும் முன்வருவார்.
இரண்டு நாள் சென்று கமல் அவர்களுடன் இதே படம் இன்னொரு சிறப்புக் காட்சி.
படம் முடிந்து நிறை – குறை பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, என்னையறியாமல் ‘ஸ்வான் சாங்’ என்று சொல்லி விட்டேன். என்னமோ திருத்திக் கொள்ளத் தோன்றவில்லை.
மனம் சரியாகத் தான் கணித்திருக்கிறது.
பாலு சார்,
தலைமுறைகள் கடைசி மழைக் காட்சி அதன் செண்டிமெண்ட் தன்மையை மீறி அழ வைத்ததற்குக் காரணம் நான் அங்கே உங்கள் கதாபாத்திரத்தைப் பார்க்கவில்லை. நீங்கள் தான் நிறைந்து நின்றீர்கள். ‘மறந்துடாதே’ என்று நாத் தழுதழுக்கச் சொல்லி விடை பெற்றீர்கள்.
கோகிலா, அழியாக கோலங்கள். வீடு, சந்தியாராகம், யாத்ரா, தலைமுறைகள்..
என் 25-ம் வயதிலிருந்து இன்று 60-ம் வயது வரை, இன்னும் மனதில் நிறைநதிருக்கும் வெகு சில அபூர்வமான திரைக் கலைஞர்களில் நீங்களும் ஒருவர்.
பாலு சார், RIP