முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம் இரா.முருகன்
அத்தியாயம் 5
இயற்கை மனிதனுக்கு அளித்த செல்வங்களில் மகத்தானவை நிலமும் நீரும் ஆகும். நிலத்தில் வளரும் செடிகொடிகளும், மரங்களும், மனிதனின் பசியைப் போக்க உணவையும், சுவாசிக்க நல்ல காற்றையும் வழங்குகின்றன. நிலத்தின் அடியிலும் இயற்கை பல்வேறு கனிம, படிவ வளங்களை வெகுமதியாகக் கொடுத்துள்ளது. நான் அவற்றில் ஒன்று. என் பெயர் நிலக்கரியாகும்.
முத்தம்மா டீச்சர் காம்போசிஷன் நோட்டு திருத்திக் கொண்டிருந்தாள்.
ஏழாவது வகுப்புப் பாடம். முப்பத்தாறு நோட்டுகளில் நிலக்கரி தன் வரலாறு கூறுகிறது.
கண் மெல்ல இருள்கிறது.
‘நாங்க ரொம்ப ஆசைப்படலே… ஒரு அம்பதாயிரம்.. அப்புறம் பத்திரம் பதியற செலவு..வீடு பழசா இருக்குன்னு பாக்காதீங்க.. இந்தக் கெளட்டு முண்டையைத் தூக்கி வெளியே எறிஞ்சிட்டு, துப்புரவா வெள்ளையடிச்சுக் கொடுத்துடறோம்….அடுத்த வாரம் நாங்க பினாங்கு திரும்பணும்..அதுக்குள்ளே பணத்தோட வந்துடுங்க..’
எலிசபெத் விசுக் விசுக் என்று இடுப்பை ஒடித்து நடந்தபடி வீட்டைச் சுற்றி வருகிறாள். கூடவே, வீடு பார்க்க வந்த யாரோ.
‘இருடி..அவசரப்படாதே.. அக்கா காம்போசிஷன் நோட்டு திருத்தி முடிக்கட்டும்..’
முத்தம்மா டீச்சரின் தம்பி சமாதானப் படுத்துகிற குரலில் சொல்கிறான்.
‘ஆமா.. முப்பது வருசமா நிலக்கரி கதை சொல்றது..நான் சென்ற இன்பச் சுற்றுலா..இந்த மொகரைக் கட்டைக்கு சுற்றுலா…எங்கேயாவது போயிருக்கியாடி?..’
எலிசபெத் இடுப்பில் கை வைத்தபடி கேட்கிறாள். குரலில் எகத்தாளம்.
‘ஒன்னிய மாதிரி ஓடுகாலியாடி..பாத்துப் பாத்து வளர்த்த புள்ளை..மதுரையிலே டீச்சர் டிரயினிங் படிக்கத் தனியா அனுப்பினபோது என் மனசு என்ன பாடு பட்டது தெரியுமா?’
படத்திலிருந்து அம்மா முட்டியைப் பிடித்தபடி மறுபடி இறங்கி வர முயற்சி செய்கிறாள்.
‘வாசல்லே கட்டின எருமையை வித்து பணம் புரட்டின வருத்தம்டி அது..’
நாயனா அவள் கையைப் பிடித்துக் கொண்டு ஒரே முட்டாகச் சிரிக்கிறார்.
‘சும்மா இருங்க.. நீங்களும் போய்ச் சேர்ந்துட்டீங்க..இவனானா சின்னப் பய…ஜோதியெ கடனோ உடனோ வாங்கிக் கட்டிக் கொடுத்தாச்சு..சம்பாதிச்சுக் கொட்ட முத்தம்மாவைத் தவிர வேறே யாரு இருந்தாங்க.. அப்பப் படிக்க வைக்காட்ட இப்படி சம்பாதிக்க முடியுமா..தோசைக் கடையும் போட வேணாம்னுட்டா.. ஜோதி பிரசவம்…தம்பி படிப்பு..நாங்க சாப்பிட.. துணிமணி..இவளுக்குக் கஞ்சிப் பசை போட்ட புடவை..மூக்குக்க் கண்ணாடி.. குடை.. சம்பளமும் லோனுமா இன்னும் வந்துட்டுத்தானே இருக்கு..எருமை எட்டு வருசத்துலே பால் மரத்துப் போயிடும்..’
அம்மா நீளமாகப் பேசி மூச்சு வாங்க படத்தில் உறைந்து போகிறாள்.
‘நீ ஒண்ணு.. ஜோதியோட மக கல்யாணத்துக்குக் குதிர்ந்துட்டா…அவ வீட்டுக்காரன் போலீஸ் உத்தியோகத்திலே பெரிய வயத்தைத் தவிர வேறே என்னத்தைச் சேர்த்து வச்சான்..முத்தம்மா பணம் வந்தாத்தான் வீட்டுலே சுப காரியம் நடக்கும்..சரி நான் கடுதாசி டெலிவரி பண்ணிட்டு வந்துடறேன்..ஏகமா கல்யாணக் கடுதாசு கொடுக்காம தங்கிப் போச்சு..’
நாயனா சைக்கிள் விடுகிறது போல கையை நீட்டி வைத்துக் கொண்டு சுற்றிச் சுற்றி வருகிறார்.
‘என் கல்யாணம் கூட வருதே நைனா.. பத்திரிகை அடிக்க வேணாமா?..’
சைக்கிள் மணிச் சத்தத்தில் முத்தம்மா குரல் அமுங்கிப் போகிறது.
‘என்ன இருந்தாலும் அக்கா பணத்தை எடுத்துக்கிட்டி நான் போயிருக்கக் கூடாது.. தப்புதான்.’
தம்பி மேசை விளிம்பில் உட்கார்கிறான்.
‘அதுனாலே என்ன.. வ்ட்டி வேணா போட்டு இவ மூஞ்சியிலே விட்டு எறிஞ்சிடலாம் .. அதுக்குத்தானே வந்தது..’
எலிசபெத் சொல்லும்போது தெரசாள் மெழுகுதிரிக் கம்பெனி ஒலிபெருக்கியில் மரிய ஜெகத்தின் குரல்..
‘வாருங்கள் … வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே…தேவன் அழைக்கிறான்.. இளைப்பாறுங்கள்..அற்புத சுகமளிக்கும் ஆத்தும சரீர பிரார்த்தனைக் கூட்டம் தொடங்கப் போகிறது . வாருங்கள்..’
‘அயித்தான் கூப்பிடறாரு பாருங்க.. எங்க தெரசாக்கா போனபோது கூட வர முடியாம போயிடுச்சு..வாங்க .. போய்ப் பார்த்துட்டு வரலாம்..’
வயதுக்குப் பொருத்தமில்லாமல் அழுக்கு கவுன் போட்டுக் கொண்டு மேசைக்குப் பின்னால் நிற்கிற எலிசபெத்.
முத்தம்மா டீச்சர் காம்போசிஷன் நோட்டின் அடுத்த பக்கத்தைத் திருப்பினாள்.
நான் தமிழ்நாட்டில் நெய்வேலியில் வெட்டி எடுக்கப் படுகிறேன். பீகாரில் தன்பாதில் பெரிய நிலக்கரிச் சுரங்கம் உள்ளது. என்னுடைய பலன்கள் பலப்பல. புகைவண்டிகளில் நீராவி எஞ்ஜின்களில் என்னை எரித்துத்தான் இயங்கத் தேவையான சக்தியைப் பெறுகிறார்கள்.
‘நீராவி எஞ்ஜின் எல்லாம் எப்பவோ ரிடையர் ஆயிடுத்து..நீயும் சீக்கிரம் ஆக வேண்டியது தான்..’
காம்போசிஷன் நோட்டுக்களைக் கட்டி எடுத்து வந்த கொச்சக் கயிற்றில் ஸ்கிப்பிங் விளையாடியபடி எலிசபெத் ஓட்டைப் பல் தெரியச் சிரிக்கிறாள்.
‘பினாங்குலே என்னடா யாவாரம்.. பேதியிலே போறவனே..’
அம்ம குரல் திரும்பப் படத்தில் இருந்து வருகிறது.
‘தோசைக் கடை.. எலக்டிரிக் அடுப்பிலே தோசை சுடறது.. ஒரே கல்லுலே ஆறு தோசை போடலாம்..’
‘மட்டன் கவாப்பு கூட போடறோம்..’
எலிசபெத் முத்தம்மா டீச்சரைப் பார்த்துக் கண்ணடிக்கிறாள்.
‘கடையை வேலையாளுங்க கிட்டெ விட்டுட்டு வந்திருக்கோம்.. அடுத்த வாரம் திரும்பிடணும்..’
முத்தம்மா திருத்தி முடித்த காம்போசிஷன் நோட்டுகளை ஓரமாக நகர்த்தினாள்.
‘இன்னும் ஒரு வாரம் தான்.. அதுக்குள்ளே நெலக்கரி, தெருப்புழுதி எல்லாம் வரலாறு சொல்ல வச்சுட்டு வீட்டைக் காலி பண்ணிடு.. தெரியுதாடி..’
எலிசபெத் கராறாகச் சொல்ல, முத்தம்மா டீச்சரின் தம்பி சும்மா இருக்கிறான்,
‘வீட்டை வித்துட்டு நான் எங்கே போறது அம்மா?..’
டீச்சர் கண் கலங்கியது.
அம்மாவும் படத்தில் புடவைத் தலைப்பால் கண்ணைத் துடைத்துக் கொள்கிறாள்.
‘ஜோதியக்கா வீட்டுலே போய் இருக்கலாமே..’
தம்பி நைச்சியமாகச் சொல்கிறான்.
‘இவ பங்குக்கும், உங்க பெரியக்கா பங்குக்கும் வித்து வர்றதிலேருந்துதான் விட்டெறியப் போறோமே…வச்சுக்கிட்டு குடிலோ குச்சோ பார்த்து முடங்க வேண்டியதுதான்..’
நிறுத்தாமல் பேசுகிற எலிசபெத். வீட்டுக்காரனைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே போகிறாள்.
முத்தம்மா டீச்சர் அடுத்த காம்போசிஷன் நோட்டைத் திருத்த எடுத்தாள்.
நான் சாதாரணமான நிலக்கரி. என் சகோதரனோ விலையுயர்ந்த வைரம். வியப்பாக இருக்கிறதல்லவா? ஆம்! பூமிக்கு அடியில் சில பௌதிக, ரசாயன மாற்றங்களால் என் சகோதரன் கண்ணைப் பறிக்கும் ஒளியும், நல்விலை மதிப்புமாக எங்கணும் போற்றப் படுகிறான். நானோ..
‘என்ன டீச்சர், இன்னும் எத்தனை நோட்டு பாக்கி இருக்கு?’
கதிரேசன் வாத்தியார் குரல்.
மேசைப் பக்கம் மசங்கலாகத் தெரியும் முகம்.
இவரெங்கே வந்தது? உயிரோடு தான் இருக்கார.. இல்லே, மாப்பிள்ளை மாதிரி…
முத்தம்மா டீச்சர் அவசரமாகப் புடவைத் தலைப்பைச் சரி செய்யக் கையை வைத்து, சும்மா விட்டுவிட்டு, புன்சிரிப்போடு, திருத்தி முடித்த நோட்டில் இனிஷியல் போட்டாள். ஓரமாக, சிவப்பு மையால் ‘நன்று’ என்று எழுதினாள்.
‘முத்தம்மா டீச்சர் கையெழுத்தும் முத்து தான்..’
துடித்து எழுந்து நின்ற மார்பையும் பின்புறத்தையும் பார்வையால் வருடியபடி கதிரேசன் கருப்பு வெள்ளைப் படமாகச் சுவரில் நகர, முத்தம்மா டீச்சரின் முகம் வெட்கத்தில் சிவந்து போனது.
‘சுறாப்புட்டு வேணுமா சார்?’
முத்தம்மா தரையைப் பார்த்துக் கொண்டு, சிரித்தபடி கேட்கிறாள்.
‘எல்லாந்தான் வேணும்.. கூட உக்காந்து சாப்பிட்டு, இப்படிக் கை போட்டு அணைக்க..பாட்டுப் பாடி.. உடம்பெல்லாம் முத்தி…தலைமுடியோட ஈரம் என்னமா இதமா இருக்கு..சந்தன சோப்பு போட்டுக் குளிச்சாப்பிலேயா டீச்சர்.. வாடை மனசைக் கெறக்கறதே..’
கதிரேசன் வசீகரமாகச் சிரிக்கிறான். சிகப்புச் சாயம் பூசிய உதடுகளோடு அவன் முகம் இப்போது கேவா கலரில் பிரகாசிக்கிறது. தொப்பை போட்டு பவுடர் அப்பியிருக்கிறான்.
நான்காம் வகுப்புக்கு வாத்தியார் கதிரேசன். முத்தம்மா ஐந்தாம் வகுப்பு டீச்சர்.
கதிரேசன் மனைவி விசாலாட்சி டீச்சர். பாதி நாள் லீவு. சீக்கு உடம்பு…
வாத்தியார் சாப்பிட ஒரு நாள் வீட்டிலிருந்து இன்னொரு டிபன் பாக்ஸில் சுறாப்புட்டு எடுத்துப் போனாள் முத்தம்மா டீச்சர்.
பாவம்.. நாக்கு செத்த மனுஷன்..
‘அய்யோ இம்புட்டுமா.. எப்படி சாப்பிடறதாம்?’
கதிரேசன் கேட்டான் அன்றைக்கு.
‘மீதி இருந்தா வச்சுடுங்க.. நான் சாப்பிட்டுக்கறேன்..’
சொல்லி முடிப்பதற்குள் வெட்கத்தில் உடம்பு சிலிர்த்துப் போனது.
‘டீச்சர்.. அடுத்த மாசம் ஆண்டு விழா வருது..ஒரு புரொகிராம் செய்யண்மெ.. டான்ஸ் வச்சுடலாமா… ‘
சாப்பிட்டபடி கேட்ட கதிரேசன் வாத்தியார் சுறாப்புட்டை மிச்சம் வைக்கவில்லை.
‘நீங்க ஆடப் போறீங்களா?’
முத்தம்மா கண்ணில் குறும்பு தெரிய விசாரித்தாள்.
‘நீங்க கூட நின்னு ஆடினா, நானும் ரெடி தான்.’
கதிரேசன் சளைக்காமல் சொன்னான்.
‘டீச்சர் .. இந்தப் பாட்டு எப்படி.. மெட்டு நல்லா இருக்குல்லே.. பழசுதான்..’
‘எந்தப் பாட்டு?’
‘பாட்டொன்று பாடலாமா?’
முத்தம்மாள் கண்கள் மின்னக் கதிரேசனைப் பார்த்தாள்.
தோழிகளோடு கடற்கரையில் நடந்து போகிற முத்தம்மா. பக்கத்தில் வந்து பாடிக் கொண்டு கதிரேசன்…
‘சேவை நாமும் செய்யலாமா.. சேர்ந்தே செய்யலாமா.. பாலர்களும் கூடியே பாங்கோடு செய்யலாமா..’
முழுப் பாட்டையும் ஒரே நாளில் எழுதி விட்டான் கதிரேசன். ஐந்தாம் வகுப்பு பிள்ளைகள் ஆட வேண்டும்.
‘முத்தம்மா டீச்சர்.. நீங்களும், கதிரேசன் சாரும் டிரெயின் பண்ணிடுங்க..’
எட்மாஸ்டர் சாதாரணமாகச் சொல்ல மற்ற வகுப்பு டீச்சர்கள் அர்த்த புஷ்டியோடு கள்ளச் சிரிப்பு சிரித்தார்கள்.
‘நாளைக்கு கடைசி ரிகர்சல் வச்சுக்கலாமா?’
‘நாளைக்கு ஞாயித்துக் கெளமையாச்சே சார்?’
‘அதான் சவுகரியம்.. வேறெ வேலையிருக்காப்பலே டீச்சருக்கு..’
‘இல்லே … அக்கா பிரசவத்துக்கு வந்திருக்கா.. அதான்..’
‘சீக்கிரமா முடிச்சுட்டுப் போயிடலாம்.. மதியம் சாப்பிட்டு கொஞ்சம் சீக்கிரமா வந்துட்டாப் போதும்.. கலர் ஜிகினா எல்லாம் கத்தரிச்சு ரெடியா ஒட்ட எடுத்து வச்சுடலாம்.. பசங்க காலையிலே வந்து ஒட்டிப்பாங்க..’
‘அப்போ ரெண்டு மணியைப் போல வரேன் சார்… காம்போசிஷன் நோட்டு வேறே திருத்த வேண்டியிருக்கு..’
முத்தம்மா டீச்சர் கடைசி நோட்டை மூடி வைத்து, மூக்குக் கண்ணாடியைக் கழற்றினாள்.
(தொடரும்)
1994 – ’புதிய பார்வை’ இலக்கிய இதழில் பிரசுரமானது. ‘பகல் பத்து ராப் பத்து’ குறுநாவல் தொகுப்பு 1997 நூலில் இடம் பெற்றது. தமிழ்ப் புத்தகாலயம் பிரசுரம்.