முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப் படம் இரா.முருகன்
அத்தியாயம் 7
’கனகாம்பரம்.. மல்லி.. பிச்சிப்பூ..’
எருமைக்காரன் தெருவில் அந்தி சாய்ந்து கொண்டிருந்தது. வீடு வீடாக நின்று போகிற பூக்காரி முத்தம்மா டீச்சர் வீட்டு ஜன்னல் பக்கம் ஒரு வினாடி நின்று குரல் கொடுத்தாள்.
இன்றைக்கு வெள்ளிக்கிழமை இல்லை. டீச்சர் கதம்பம் வாங்கி வீட்டில் படத்துக்கு எல்லாம் சார்த்துவது வெள்ளிக்கிழமை சாயந்திரம் தான்.
ஆனால் என்ன.. மற்ற நாளில் பூ வாங்கக் கூடாதா என்ன?
‘மல்லிப்பூ நாலு முழம் கொடு..’
டீச்சர் சினிமாவுக்குப் போகப் போகிறாள். சினிமா போகிற பெண்கள் தலையில் பூ வைத்துக் கொள்ள வேண்டும். வயதானாலும் அப்படித்தான்.
காம்போசிஷன் நோட்டுக்களைக் கயறு கொண்டு கட்டினாள். நாளைக்குப் பள்ளிக்கூடத்துக்கு எடுத்துப் போக வேண்டும்.
‘கர்த்தர் வருகிறார்.. என் மணவாளன் வருகிறார்..’
தெரசாள் மெழுகுதிரிக் கம்பெனியில் சாயந்திர ஒலிபரப்பு ஆரம்பமாகி இருந்தது.
முத்தம்மா டீச்சர் வெளியே வந்தபோது, சீராக வீசுகிற காற்று, எருமைச்சாண வாடையோடு கவிந்தது. ஒன்று இரண்டாகக் குன்று சரிந்ததுபோல படுத்திருந்த எருமைகள் அசை போட்டபடி கிடக்க, யார் வீட்டிலிருந்தோ புல்புல்தாரா வாசிக்கிற சத்தம்.
தியேட்டர் வாசலில் ஒரு கூட்டமும் இல்லை.
கையில் குடையும், நரைத்துப் போன தலையில் மல்லிகைப் பூவுமாக முத்தம்மா டீச்சர் படம் பார்க்க உள்ளே போனாள்.
‘என்ன டீச்சர்…இப்பவே வந்துட்டீங்களே.. ஆறரைக்குத்தானே படம்.. சரி.. உள்ளே வந்து உட்காருங்க.. என்னை ஞாபகம் இருக்கா.. உங்க ஸ்டூடண்ட் தான்..’
தியேட்டர் மேனேஜர் சிரித்துக் கொண்டே வரவேற்றான். எந்த வருஷத்து ஸ்டூடண்டோ?
‘மேலே பால்கனிக்குப் போங்க டீச்சர்.. டிக்கட் அனுப்பறேன்.. காப்பி சொல்லட்டுமா?’
‘வேணாம்பா … சாப்பிட்டுத்தான் வந்தேன்..இந்தா ஒண்ணரை ரூபா.. வேணாம்னு சொல்லிடாதே.. ஓசியிலே பாக்கக் கூடாது பாரு..’
‘டீச்சர், நீங்க எந்தக் காலத்துலே இருக்கீங்க..பால்கனி டிக்கெட் நாலு ரூபா இப்போ .. அது பரவாயில்லே.. என் பாஸ் தரேன்.. நீங்க பாருங்க..’
‘ரொம்ப நன்றி’ப்பா..ஃபேன் எல்லாம் போட்டிருக்கா?’
‘போடச் சொல்றேன் டீச்சர்.. மேலே போங்க..பாத்து படியேறுங்க..’
தியேட்டர் இருட்டும் தூசி வாடையுமாக இருந்தது. கதவை ஒட்டிய நாற்காலி வரிசையில் மெல்ல நடந்து கடைசிக்கு முந்திய நாற்காலியில் போய் உட்கார்ந்தாள் முத்தம்மா டீச்சர்.
கண்ணைப் பற்றிக் கவ்விக் கொண்டிருக்கும் இருட்டு. தலையில் வைத்த மல்லிகைப் பூ சுற்றிவர உதிர்ந்து வாசனை. குடையை மடியில் வைத்துக் கொண்டாள் டீச்சர்.
நாற்காலி வரிசை நிறைந்து கொண்டிருந்தது. இருட்டு கண்ணுக்குள் இட்டுக் கட்டிக் கொண்டிருந்தது.
மாப்பிள்ளை வந்து பக்கத்து நாற்காலியில் உட்கார்ந்தார்.
வாட்டசாட்டமாக, பட்டு வேட்டியோடும் வாயில் சுருட்டோடும்.
’உள்ளே சுருட்டு குடிக்கக் கூடாது’
மேனேஜர் பையன் டீச்சரைப் பார்த்துச் சொல்கிறான்.
’புகை மாதிரி வந்தேன்.. புகை மாதிரி போயிடறேன்.. ஒரே ஒரு சுருட்டு.. போவியா..’
மாப்பிள்ளை அவனை விலக்கியபடி முத்தம்மா டீச்சர் தலையில் வைத்த மல்லிப்பூ சரத்தில் மிச்சம் இருந்த பூவைக் கிள்ளுகிறார்.
’அது எனக்கு..’
கதிரேசன் வாத்தியார் இந்தப் பக்கம் நாற்காலியில் உட்கார்ந்து காலால் டீச்சர் காலை வருடிக் கொண்டே சிரிக்கிறான்.
‘அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாமய்யா..’
மாப்பிள்ளை சுருட்டை அணைத்துக் காதில் வைத்தபடி சொல்கிறார்.
கடலை மிட்டாய் ஸ்லைட் திரையில் நகர்ந்து போகிறது.
‘சேவை நாமும் செய்யலாமா?’
கதிரேசன் மெல்லப் பாடுகிறான்.
‘எச் எம் வரப் போறாரு.. ‘
டீச்சர் கதிரேசன் தோளைத் தொட்டுச் சொல்கிறாள்.
முட வைத்திய சாலை ஸ்லைட். உடைந்த கை, கால் நேராக, அறுந்த காது ஒட்ட வைக்க பாகனேரி முட வைத்திய சாலை.
ஸ்லைடில் கையில் கட்டுப் போட்டபடி முத்தம்மா டீச்சரும், பின்னால் குடையால் அவளை அடித்தபடி கதிரேசன் சம்சாரம் விசாலாட்சி டீச்சரும் சிரிக்கிறார்கள்.
’ரொம்ப வேர்க்குதே.. ஃபேன் போடலியா?’
கதிரேசன் மேலே பார்க்க, ராட்சச வேகத்தில் மின்விசிறி சுழல ஆரம்பிக்கிறது. அந்தக் காற்றில் கதிரேசன் வாத்தியார் உடம்பில் இருந்து ஜவ்வாது வாடை டீச்சர் மனசுக்கு இதமாக வீசுகிறது.
இந்தப் பக்கம் மாப்பிள்ளை சுருட்டு வாடையோடு மட்டன் கவாப் வாடையும் உக்ரமாக மூக்கில் தாக்குகிறது.
ரெண்டு பக்க வாடையும் வேண்டி இருக்கிறது டீச்சருக்கு.
ராவுத்தர் பேக்கரி ஸ்லைட்.
தம்பிக்கு ராவுத்தர் பேக்கரி பன்ரொட்டி ரொம்பப் பிடிக்கும்.
முத்தம்மா டீச்சர் முதல் மாதச் சம்பளத்தில் அவனுக்குப் பன்னும் கேக்கும் வாங்கிப் போனாள். எடுத்துச் சாப்பிடச் சாப்பிடப் பரிவோடு பார்த்துக் கொண்டு..
‘அக்கா.. பன்னு சாப்பிடறியா?’
பின் வரிசையிலிருந்து தம்பி குரல்.
‘சும்மா இருக்க மாட்டீங்களா.. பிள்ளைக்குன்னு வாங்கியாந்திருக்கேன்.. அக்கா அக்கான்னு உசிரை விடறீங்களே.. எங்கே…நம்ம புள்ளைக்கு அரை பவுன்லே மோந்திரம் பண்ணிப் போடச் சொல்லுங்க பார்ப்போம் உங்க அக்காளை..’
எலிசபெத் குரல் கீச்சு கீச்சென்று பின்னால் இருந்து வருகிறது. அவளும் அங்கே தான் இருக்கிறாளா..
‘ப்ராவிடண்ட் லோன் போட்டுப் பணம் வந்ததும்..’
முத்தம்மா டீச்சர் சொல்லிக் கொண்டிருக்க, ‘வீடு வாங்க, விற்க..’ ஸ்லைட்.
’வீடு விக்கப் போறோம்.. படம் பார்த்துட்டு அப்படியே எளுந்து போயிடு.. என்ன தெரியுதா?..’
எலிசபெத் மிரட்டுகிறாள். அவள் பிள்ளை அழுகிறது. பன்னு வேணாம்… மோதிரம் போடு..
நியூஸ் ரீல் ஆரம்பமாகிறது.
மூணு நாள் நல்லெண்ண விஜயமாக போலந்து போகிறார் பிரதமர்.
வரிசை வரிசையாகக் கொடி பறக்க நகர்கிற கார்கள்.
போலந்தின் தலைநகரம் வார்சா. முத்தம்மா எட்டாம் வகுப்புக்குப் பாடம் எடுத்திருக்கிறாள்.
பிரதமரின் கார் ஊர்ந்து வர, அவள் கையசைக்கிறாள். அவர் கனிவாகச் சிரிக்கிறார்.
‘நானும் உங்க கூட வார்சா வந்துடட்டுமா.. வீட்டை விட்டுப் போகச் சொல்றாங்க..’
டீச்சர் மன்றாடுகிறாள். பிரதமர் சிரித்தபடி போகிறார்.
‘வார்சா எல்லாம் போக வேணாம்.. பள்ளிக்கூடத்திலேயே தங்கிக்கலாம்..’
கதிரேசன் வாத்தியார் காதில் கிசுகிசுக்கிற சத்தம்.
‘ஆமாமா.. நாலு பலகையை இளுத்துப் போட்டா படுக்கை..’
மாப்பிள்ளை சிரித்தபடி முத்தம்மா தோளில் கை வைக்கிறார்.
’படத்தைப் பாக்காம வளவளன்னு என்ன பேச்சு..’
பின்னால் இருந்து அலமேலம்மாக் கிழவி சத்தம் போடுகிறாள்.
படம்.
ஆரம்பமாகி விட்டது.
முத்தம்மா டீச்சர் கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக் கொண்டு பால்கனியில் சுற்றிலும் பார்க்க, அவள் மட்டும்தான் அங்கே.
திரையில் பெயர்கள் நகர்ந்து போகின்றன.
திரை வெளிறி, சிகப்பும் பச்சையுமாக அங்கங்கே கீறல் விழுந்த பெரிய பங்களா.
கால்சராய் போட்டுக் கொண்டு காரில் ஏறும் கதாநாயகி.
‘முத்தம்மா.. நீயும் வாயேன்.. கடற்கரைக்குப் போறோம்..’
அவள் கூப்பிடுகிறாள்.
‘காம்போசிஷன் நோட்டு திருத்தணுமே..’
‘அந்த கவாப்பு மூஞ்சி தடியன் வந்து பாட்டொன்று பாடலாமான்னு ஆடுவானே.. உனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டாச்சே முத்தம்மா..’
யாரோ காலை விந்தி விந்தி நடந்து வந்தார்கள். நாயனா.
‘நாயனா, பீச்சுக்குப் போயிட்டு வரட்டா.. நாலணா கொடுங்க.. பொரிகடலை வாங்கணும்..’
முத்தம்மா நாயனா தோளில் தொங்கியபடி கேட்கிறாள்.
‘சும்மா சத்தம் போடாதேடி.. தம்பிக்காரன் வந்திருக்கான்.. ரெவின்யூ இன்ஸ்பெக்டர் வீட்டுலே பால் வாங்கிட்டு வந்து ஒரு வாய் காப்பித்தண்ணி வச்சுக் கொடேன்.. வீட்டு வாசல்லே பாக்கியலச்சுமி வந்து நின்னப்போ பிடிச்சுக் கறந்திருக்கலாமில்லே.. பொழைக்கத் தெரியாதவளே..’
அம்மாவும் பின்னால் தான் உட்கார்ந்திருக்கிறாள்.
‘நாயனா.. நான் பீச்சுலே கவாப்பு மூஞ்சிக்காரனோட பாடிட்டுத் திரும்பி வர்றதுக்குள்ளே தம்பி வீட்டை வித்துட்டான்னா நான் எங்கே போறது?’
நாயனா அவள் சொல்வதைக் கவனிக்காமல் தோளில் மாட்டிய பையில் இருந்து கத்தை கத்தையாகக் கடிதங்களை வெளியே எடுக்கிறார்.
‘அம்மா.. இண்டர்வ்யூவிலே நல்லா செஞ்சிருக்கேன்.. கட்டாயம் வேலைக்கு ஆர்டர் வந்துடும் பாரு.. அப்புறம் உன்னை கண் கலங்க விட மாட்டேன்..’
திரையில் கதாநாயகன் வெள்ளைச் சேலை கட்டிய அம்மா கையைப் பிடித்தபடி சொல்கிறான்.
நாயனா ஒரு கடிதத்தை எடுத்து பால்கனியில் மங்கிய வெளிச்சத்தில் கண்ணைக் கவிந்து கொண்டு படிக்கிறார்.
‘ராஜசேகர்னு போட்டிருக்கு..யாருக்கு வந்த கடுதாசின்னு தெரியலியே..’
‘அவர்தான் நாய்னா.. வேலைக்கு ஆர்டர்.. சொன்னாரில்லே.. பாட்டொன்று பாடலாமான்னு பீச்சுலே ஓடியாறப் போறாரு.. நானும் போகணும்.. காசு வேணும்..’
முத்தம்மா நாயனா தோளைப் பிடித்தபடி சிணுங்குகிறாள்.
‘பி.எப் பணம் வந்ததும் போயேன்..’
நாயனா காலை இழுத்துக் கொண்டு சைக்கிள் பக்கம் போகிறார்.
கடற்கரை.
சென்னை கடற்கரை உலகிலேயே இரண்டாவது பெரிய, அழகிய கடற்கரை. நாங்கள் சென்னைக்கு இன்பச் சுற்றுலா சென்றபோது, கடற்கரை, திருவல்லிக்கேணி, அண்ணா சமாதி என்று பல இடங்களுக்குப் போனோம். கலங்கரை விளக்கம் என்பது கப்பல்களை வழிப்படுத்தும் விளக்கு அமைந்த, கடற்கரையில் உயர்ந்து நிற்கும் கட்டிடமாகும். அங்கே யாரும் குடியிருக்க முடியாது. வாசலில் எருமை மாடு கட்டிப் பால் கறக்க முடியாது.
முத்தம்மா டீச்சர் காம்போசிஷன் நோட்டை மூடி வைத்துவிட்டுக் கடற்கரை மணலில் நடக்கிறாள். கையில் குடை,
நாயனா வேலைக்கான உத்தரவை பட்டுவாடா செய்ததும், தொப்பை வைத்த, சிவந்த உப்பிய உதடும், பூனை மயிர் மீசையும் உடைய கதாநாயகன் இங்கே வருவான்.
டீச்சர் மணலில் உட்கார்கிறாள்.
‘ப்பீப் .. ப்பீப்..’
விசில் ஊதிக்கொண்டு காக்கி டிராயரும், தொளதொளப்பான காக்கி சட்டையும் அணிந்த போலீஸ்காரன் மணலில் கால் புதைய நடந்து வருகிறான்.
‘யாரும்மா இங்கே தனியா உக்காந்துக்கிட்டு.. வீட்டுக்குப் போ..’
ஜோதி அக்கா வீட்டுக்காரன் அவன்.
‘வீடு இல்லையே.. உங்க கூட வந்துடட்டா..ரிடையர் ஆகி வ்ர்ற பணம்.. வீடு வித்ததுலே வர்ற பங்கு எல்லாம் கொண்டாறேன்.. ஒரு ஓரமா முடங்கிப்பேன்.. ஜோதி மகளுக்குப் புள்ளை பொறந்தா, பீ தொடப்பேன்.. மூத்திரம் அலம்பி வுடுவேன்.. வாய்ப்பாடு சொல்லித் தருவேன்.. தோசை சுடுவேன்.. கவாப்பு பண்ணுவேன்..’
போதும்பொண்ணு மாதிரி மணலில் இரண்டு கையையும் ஊன்றி அளைந்தபடி அவன் முகத்தைப் பார்க்கிறாள் டீச்சர்.
‘உனக்கு விசயமே தெரியாதா.. உங்கக்கா எனக்குச் சொல்லியிருக்காளே.. நீ ஒரு மாதிரிப்பட்டவளாம்… படி ஏத்தக் கூடாதாம்.. பணத்தை மட்டும் அப்பப்ப வாங்கிக்கிட்டு போஸ்ட் கார்டுலே நாங்க சுகம்.. நீ சுகமாவோட நிறுத்திடணுமாம்.. இல்லாட்ட நான் எப்பவோ கூட்டிப் போயிருப்பேனே.. இந்த மாப்பிள்ளப் பய ஆரம்பிச்சு வச்சான்.. வாத்தி மேல்கொண்டு போனான்.. நான் காதும் காதும் வச்ச மாதிரி முடிச்சிருப்பேனே..’
ஜோதி அக்கா வீட்டுக்காரன் லாத்தியைச் சுழற்றிக் கொண்டே சிரிக்கிறான்.
‘நான் அப்படிப் பட்டவ இல்லே..நாயனா கிட்டே கேட்டுப் பாருங்க..’
முத்தம்மா அழுகிறாள். அவன் சும்மா சிரிக்கிறான்.
‘பிரதமர் கிட்டே கேட்டுப் பாருஙக்.. போலந்து போய்ட்டு வந்திருப்பாரு.. ‘
அவன் லாத்தியை வீசியபடி நடந்து போகிறான்.
‘நான் அப்படிப் பட்டவ இல்லே’
முத்தம்மா டீச்சர் பெருங்குரலெடுத்துக் கத்துகிறாள்.
அவளுடைய சத்தம் கடல் இரைச்சலில் கரைந்து ஒன்றுமில்லாமல் போக, ஜோதி வீட்டுக்காரன் ஒரு வினாடி திரும்பிப் பார்த்து விட்டு விலகி நடக்கிறான்.
முத்தம்மா டீச்சர் திரையில் படகுப் பக்கம் உட்கார்ந்து கொண்டு நாற்காலி வரிசையைப் பார்க்கிறாள்.
கையில் மெழுகுதிரிகளோடு தெரசாள் வீட்டுக்காரர் முன் வரிசையில் உட்கார்ந்திருக்கிறார்.
‘உங்க நாயனா இறந்துட்டாரு.. இறங்கி வந்து உன் நாற்காலியிலே உக்காரு.. சடகோப மாமா கூட்டிப் போக வ்ரப் போறார் இப்ப.. கவலைப்படாதே.. தேவனை விசுவாசி.. ரெபக்காளை அழைத்து இந்த மனுஷ்யன் கூடப் போகிறாயா என்று கேட்டார்.. அவளும் சரியென்று சொல்லி..’
கணீரென்று தொடரும் குரலை அமுக்கி, ‘பாம் பாம்’ என்று கார் சத்தம்.
‘வா.. தேவன் அழைக்கிறார்’.
தெரசாள் வீட்டுக்காரர் மெழுகுதிரியைக் கொளுத்திப் பிடித்தபடி தலையசைக்கிறார்,
‘பாட்டொன்று பாடலாமா பாடிட்டு வந்துடறேன்..’
முத்தம்மா காம்போசிஷன் நோட்டை கடற்கரை மணலில் பரத்தி வைத்து திருத்த ஆரம்பிக்கிறாள்.
கடல் ஆழமானது. கடல் பீதியளிக்கக் கூடியது. பெரிய கண்டங்களைக் கடல் கொண்டுள்ளது. லெமூரியாவும் அவற்றில் ஒன்று. எருமைக்காரன் தெருவையும் கடல் கொள்ளும்.
முத்தம்மா எழுந்து நிற்கிறாள். கதாநாயகியும் தோழிகளும் படகை நெருங்கி அவள் பக்கம் வருகிறார்கள். கடல் பின்னால் இரைகிறது. அலையடிக்கிறது.
’என்ன பண்றே முத்தம்மா?’
கதாநாயகி பிரியத்தோடு விசாரித்தபடி அவளுடைய மூக்குக் கண்ணாடியை உருவுகிறாள். தோழிகள் சிரித்தபடி ஆடுகிறார்கள்.
இருங்கடி… கவாப்பு மூஞ்சிக்காரன் வந்து பாட்டுப் படிச்ச பின்னாடி தான் ஆடணும்’
கதாநாயகி கண்டித்தபடி தூரத்தில் மோட்டார் சைக்கிள் வருகிறதா என்று பார்க்கிறாள்.
முத்தம்மா காம்போசிஷன் நோட்டுகளை படகுக்குப் பின்னால் ஒளித்து வைக்கிறாள். கதாநாயகியும் தோழிகளும் விடாமல் தேடிப் பிடித்து ஒவ்வொரு காகிதமாகக் கிழித்துக் கப்பல் செய்து விளையாடுகிறார்கள். முத்தம்மாவும் சுவாரசியமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
மோட்டார் பைக் சத்தம்.
முத்தம்மா டீச்சர் இருதயம் ஒரு வினாடி நின்று போகிறது. அப்புறம் சந்தோஷத்தில் திக்குமுக்காடுகிறது.
‘பாட்டொன்று பாடலாமா..’
இழைந்து வருகிற குரல்.
கதாநாயகி ஓட ஆரம்பிக்கிறாள். தோழிகளும் ஓடுகிறார்கள். வரிசைக் கடைசியில் குடையைத் தூக்கிக்கொண்டு முத்தம்மாவும் ஓடுகிறாள்.
அவன் துரத்திக் கொண்டு வருகிறான். பவுடர் அப்பிய முகம் மட்டன் கவாப்பு போல ஊதிக் கிடக்கிறது.
கதாநாயகி வளைந்து நெளிந்து அவன் கையில் பிடிபடாமல் ஓட, முத்தம்மாவும் மற்றவர்களும் தாளத்துக்குத் தகுந்தபடி தொம்தொம் என்று குதித்துக் கொண்டு, மார்பைக் குலுக்கி ஓடுகிறார்கள்.
‘பருவச் சிட்டே.. எங்கே நீ போனாலும்..’
கதாநாயகியின் கையைப் பிடித்து இழுக்கப் போகிறான். அப்புறம் அவள் அவனுடைய மார்பில் சாய வேண்டும். கண்ணை மூடி சந்தோஷத்தை அவள் அனுபவிப்பாள்.
‘தேன் உண்ட வண்டாக..’
வேண்டாம் .. அவளுக்கு இதெல்லாம் கிடைக்க வேண்டாம்..’
முத்தம்மா பணம் கொடுத்திருக்கிறாள். அவள் ‘ஆடு’ என்றால் எல்லோரும் ஆட வேண்டும். ‘பாடு’ என்றால் பாட வேண்டும். கர்ணம் அடிக்கச் சொன்னால், கர்ணம் அடித்து வேடிக்கை காட்ட வேண்டும்.
‘போடி.. போய்த் தரையிலே விழுந்து புரளு.. தட்டுவாணிச் சிறுக்கி..’
முத்தம்மா குடையால் கதாநாயகி விலாவில் இடித்துத் தரையில் தள்ளிவிட, அவள் ஈர மண்ணில் புரள்கிறாள்.
முகம் சுருக்கம் தட்டி, முலை வற்றி, தலை நரைத்துக் கிடக்கும் கதாநாயகி. கண்ணாடி போட்டவள். புறங்கையில் சாக்பீஸ் பொடி அப்பியிருப்பவள்.
உருண்டு திரண்ட உடம்போடு, முகம் பளபளவென்று முத்தம்மா.
அவளுக்கு இருபது வயது. காலேஜில் படிக்கிறாள். காரில் கடற்கரைக்கு வந்திருக்கிறாள்.
முத்தம்மா டீச்சர் திரையிலிருந்து பால்கனியைப் பார்க்க, மாப்பிள்ளையைக் காணோம். கதிரேசனையும். அப்புறம் அம்மா, நாயனா, பினாங்கிலிருந்து வந்த தம்பி, எலிசபெத், மரியஜெகம்…
வேறு யாரும் இல்லாத நாற்காலி வரிசையில் கடையில் உட்கார்ந்து தலையைப் பிடித்தபடி முத்தம்மா டீச்சர் மட்டும்..
‘பாட்டொன்று பாடலாமா.. பக்கம் வந்து பேசலாமா..’
(நிறைவு)
1994 – ’புதிய பார்வை’ இலக்கிய இதழில் பிரசுரமானது. ‘பகல் பத்து ராப் பத்து’ குறுநாவல் தொகுப்பு 1997 நூலில் இடம் பெற்றது. தமிழ்ப் புத்தகாலயம் பிரசுரம்