எம்டன் போர்க் கப்பல் சென்னை துறைமுகத்தில் குண்டு போட்டது செப்டம்பர் 22-ம் தேதி 1914-ம் ஆண்டில்.
இந்த ஆண்டு எம்டனுக்கு நூறு ஆண்டு!
இதைக் கொண்டாட கிட்டத்தட்ட 100 நிமிடம் நிகழும் ஒரு நாடகத்தை எழுதியிருக்கிறேன். 1914-ல் கொத்தவாசல் சாவடியை முக்கிய நிகழ் களனாகக் கொண்டு நடைபெறும் நாடகம் இது. பெயர் ‘சாவடி’ (கொத்தவால் சாவடி).
நாடகத்தை செப்டம்பரில் நிக்ழத்தினால் எத்தனை பேர் பார்க்க ஆர்வமாக உள்ளனர் என்று அறிய ஆவல். மற்ற தமிழக நகரங்களிலும் ஆர்வலர் விவரம் கிடைத்தால் நன்று.
நாடகத்தின் சில பகுதிகள் இங்கு தரப்படுகின்றன. நாடகம் எழுதுவதில் ஈடுபாடு உடையவர்கள் இவற்றை ஓர் உதாரணமாக எடுத்துக் கொண்டு தங்கள் படைப்புகளை உருவாக்க முயலலாம்.
சாவடி
காட்சி 1
காலம் காலை களம் வெளியே
Open – The stage darkens. The screen comes to life and with BBC style narrative -World War (First) time -Madras 1914- various locations move in a quick succession on the screen.
The ticker at the bottom of the screen displays September 22 1914 Tuesday.
Cut to the German ship Emden. Narration now switches to Tamil and is about Emden bombing Madras harbour, barrels of Burma Shell petrol and kerosene containers set to flame.. 6 causalities from a merchant ship anchored at the port.. some bombs falling in areas near Madras beach…
cut to Kothawal Chawadi of 1914 photograph or video. The date is September 24, 1914 Thursday (two days after Emden bombing Madras).
The frame freezes and the stage lightens. It is Kothawal Chawadi. The screen display is off.
Dawn; Kothawal chawadi; a group of head-load coolies unload vegetables from a cart – the cart is positioned on the stage in such a manner suggesting the twin bullocks which were pulling it are now tied to poles in the left corner -up north – of the stage, and the cart remains separated.The back portion of the cart with a clay and sand clad wheel jetting out is visible at the stage.
கூலி 1: ஒரே சென்ராயா …
கூலி 2: (குரல் மட்டும் திரை மறைவில் இருந்து) வந்தாச்சுய்யா
கூலி 1: அத்தயே சொல்லிக்கினு இரு.. எம்டன் அடுத்த குண்டு போட்டுடுவான்..
கூலி 2: மாட்டுக்கு வய்க்கல் போட்டுக்கினு இருக்கேன்பா
கூலி 1: ஊட்டி விட்டிக்கினு இருக்கியா..
கூலி 2 : ஆ.. நீ சேட்டு கடையிலே அலுவா வாங்கினு போய் தொடுப்புக்கு ஊட்டறாப்போல
கூலி 1: அடிங்கோத்..
மாடு அழைக்கும் சத்தத்தில் அவன் குரல் அமுங்கிப் போகிறது. இன்னும் இரண்டு கூலிகள் ஆளுக்கு ஒரு பெரிய பிரப்பங்கூடையோடு அவசரமாக வருகிறார்கள்
கூலி 1 : இன்னாடா ஊரு முச்சூடும் ரயிலைப் பிடி, பஸ்ஸைப் பிடி, வண்டியைக் கட்டு, நடராஜா சர்வீஸ்லே சவாரி விடுன்னு பேஜாரா கீது.. நாம மூட்டை தூக்கிக்கினு.. மாட்டுக்கு வைக்கல் போட்டுக்கினு..
கூலி 2 : வைக்கலோட வைக்கலா, மாட்டோட மாடா இங்கேயே கெடந்து சாகணும்னு விதி…
கூலி 1 : வூட்டுலே ஒரே அலப்பாரை.. இப்பவே கிளம்பறியா இல்லே உன்னிய வுட்டுட்டு புள்ளைங்களோட போவட்டுமாங்கறா..
கூலி 2 : நீ இன்னா சொன்னே?
கூலி 1 : இன்னாத்த சொல்ல? அவ சொல்றாப்பல கஞ்சீவரம் போய் மாமியார் தங்காச்சி வீட்டுலே ஒண்டிக்க வேண்டியதுதான்.. நீயும் கிளம்புய்யா.. உசிரு முக்கியமா.. மத்தது முக்கியமா
கூலி 2 : நான் எங்கேயும் போறாப்பல இல்லே.. எம்டனா, எமன் வந்தாக்கூட மயிரே போச்சு
கூலி 3 : (நடந்தபடி) ஒரே.. ஒரே.. விலகு.. விலகு.. நட்ட நடுவிலே நொட்டிக்கிட்டு நின்னா போறவன் வர்றவன் என்னா செய்யிறது .. தொப்பையைப் பாரு.. புள்ளாரு கணக்கா
கூலி 1 : புள்ளார் ஏண்டா கொத்தவால் சாவடியிலே மூட்டை தூக்கி கயிட்டப்படறாரு.. நமக்கு சாமி நாம தாண்டா..பேமானி
கூலி 4 : (கூலி 1-இடம்) யோவ்.. மேக்கத்தி மூலையிலே வண்ணாரப்பேட்டையார் கடை போடற இடம் காலி தானே? வேறே யாராவது பிடிச்சுட்டாங்களா?
கூலி 1 : டேய் பன்னாடை.. காய் வாங்க வர்ற சனத்தையே பாதி காணோம்.. எல்லாக் கூட்டமும் எயும்பூர் ஸ்டேஷன்லே பொட்டி சட்டியோட நிக்குது.. இங்கே கடை போட இன்னா கஷ்டம்?
கூலி 4 : (கூலி 3-இடம்) திரும்பி நேரே மேக்கு மூலைக்குப் போயிடு.. அந்த ஊமையன் எங்கேடா.. .பின்னாடியே வந்துக்கினு இருந்தான்.. ஆளக் காணோம்
கூலி 3 : மெல்லமா வந்துக்கினு கீறாண்டா..பட்டணத்தை முட்டாய்க்கடை மாதிரி பாத்துக்கினு
கூலி 4 : வேடிக்கை பாக்க இதானா நேரம் .. . அந்தப் பொண்ணு எங்கேடா பூடுச்சு, அவன் பொஞ்சாதி?
கூலி 3 : அது மட்டும் என்ன டாக்குடாக்குன்னு முந்திக்கிட்டு ஓடியாற முடியுமா என்ன? .புதுசாக் கட்டிக்கிட்டது போல (கூலி 1-இடம்) அண்ணே ஒரு ஊமையன் . கூடவே பரக்கப் பரக்க முளிச்சுக்கினு ஒரு பொண்ணு… இந்தாண்ட வந்தா..
கூலி 1 : பொண்ணா .. நானாச்சு அனுப்பி வைக்கறேன் பத்திரமா.. நீ போய் எறக்கு.. எந்த ஊருடா இதுங்க?
கூலி 3 : யாருக்குத் தெரியும்? சோடி பட்டணத்துக்குப் புச்சு
கூலி 1: நட்டு களண்ட கேசாடா? இவன் பட்டணத்துக்கு வர நேரம் காலம் இப்பத்தானா கிடச்சது..
கூலி 4 : எம்டன் குண்டு போட்டா கண்ணாலம் நிக்குமாண்ணே?
கூலி 1 : பகல்லே போட்டா அது நிக்குமோ என்னமோ நடு ராத்திரியிலே போட்டா மத்த எல்லாம் நின்னு போகும்..எலே சென்ராயா…. இன்னமாடா மாட்டைக் கட்டறே
கூலி 2 : (குரல்) முட்ட வருதுய்யா முட்டாக்கூ மாடு.. சே..கால்லே சாணி
கூலி 3 (குரல்): கூடையைப் பிடி.. கவுத்துடலாம்.. அடீங்க என்ன வாடைடா வெண்டிக்கா..
கூலி 4(குரல்) : கிராமத்து சரக்கு ஆச்சே.. நிமிந்து நீட்டி திம்முனு நிக்குது பாரு
கூலி 1: நிக்கும்டா நிக்கும்.. .
பெண் சிரிப்பு சத்தம். கையை கண்ணுக்கு மேலே ஷேடு கட்டிக் கொண்டு மேடையின் இடது பக்கம் பார்க்கிறார் கூலி 1
பெண்: (குரல் மட்டும் முன்னால் வருகிறது) முதல்லே விக்கற காசு காளியாத்தா கோவில்லே..சரி பாதி.. ஒத்த ரூபாயாவது.. சரிய்யா சரி.. மூஞ்சியிலே ஜெர்மன் காரன் குண்டு விழுந்த மாதிரி சுளிச்சுக்காதே காலங்கார்த்தாலே..
(மேடையில் நுழைகிறாள்)
பெண்: எங்கே போனாங்க இந்த ஆளுங்க..
கூலி 1: மேக்காலே திரும்பி நேரா போம்மா.. வெண்டிக்கா தானே.. மேக்குன்னா வடக்குலே திரும்பறியே.. அங்கே மாடு தான் கட்டி வச்சிருக்க்கும்..டேய் சென்ராயா..வா போகலாம்.. இன்னாடா மாட்டை முட்டிட்டியா..சென்ராயா..டேய்..
——————————————–
காட்சி -3
காலம் காலை காட்சி வெளியே
இடம் கொத்தவால் சாவடி முகப்பு (ஹைகோர்ட் பக்கம் – பிராட்வே – தற்போதைய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வீதி).
போலீஸ் ஹெட் கான்ஸ்டபிள் நாயுடு (வயது 58) உத்தியோக சின்னங்கள் ஏதும் தரிக்காமல், தட்டுச் சுற்று வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, மேலே பழைய காக்கி சட்டையோடு வருகிறார். கையில் கித்தான் பை.
நாயுடு கூலி 1, 2 வியர்வையைத் துடைத்த மேல் துண்டை தலைக்கு மேல் காய வைப்பது போல் விசிறியபடி நடந்து போவதைப் பார்க்கிறார்.
கூலி 1: சலாம் தொரே
கூலி 2: கும்புடறேன் சாமியோவ்
நாயுடு: ஏண்டா, ஊரே ஓடினு கீது.. நீங்க இங்கே இன்னாடா கோமணத்தை காயப்போட்டுக்கினு நிக்கறீங்க?
கூலி 1: சாமியோவ்..காசு இருந்துச்சுன்னா நானும் தான் ஓடுவேன்.. ஆயிரம் பேரு ஆர்பர்லே காலியாமில்லே
நாயுடு: டேய் பேக்கூ-தீ பிடிச்சது. ஆர்பர்லே. அங்கே ஆயிரம் பேத்துக்கு எங்கேடா போக? சீமெண்ணெயும் பெட்ரோலும் பீப்பா பீப்பாயா வச்சிருந்தான் பர்மாஷெல் காரன்.. ஜெர்மன்காரன் எறிஞ்ச குண்டுலே அதெல்லாம் தீவிளி மாதிரி கொளுத்திக்கிச்சு..
கூலி 2: போலீசு ஜீப்புக்கு எண்ணெய் கபால் ஆயிடுமா சாமியோவ்?
நாயுடு: போலீசு ஜீப்பை எல்லாம் இனிமே கொழும்புத் தேங்கா எண்ணெய் ஊத்தித்தான் ஓட்டணும்..பஜ்ஜி வாடை திம்முனு வரும்
கூலி 1: வெள்ளைக்காரன் பஜ்ஜி தின்பானா தொரே?
நாயுடு: ஆங்க்.. கீரை வடை துண்ணுவான்.. போடா…
கூலி 2 : வண்ணாரப்பேட்டையிலே ஒரு கெயவி நெல்லுக் குத்தினுருந்துச்சாம்..அதும் வயித்துலே குண்டு வுளுந்து அம்போவாமே..
நாயுடு : டே தற்குறிப் பயபுள்ளே.. ராத்திரி ஒம்போது மணிக்கு எவ’டா நெல்லுக் குத்துவா? அதது வூட்டுலே மல்லாந்து … வாயிலே வார்த்தை என்னமா வர வைக்கறே பாரு..கெரகசாரம்..
கூலி 1: சாமி வராங்க ஐயா
வாசலில் வண்டிகள் வந்து நிற்க கூலிகள் ஓடுகிறார்கள்.
குரல்: நாயுடுகாரு.. குட் மார்னிங்.. என்ன நேத்துக்கு ஆளைக் காணோம்.. எம்டன்னு சொல்லிடாதேயும்.. அவா நாயுடுவைத் தேடி வரலே.. சர்வ நிச்சயமாத் தெரியும்..
நாயுடு: (திரும்பப் பார்த்து) வக்கீலு.. வாருமய்யா….எம்டனோ எளவோ.. நாயுடு இங்கே தொழுத்துலே கட்டின மாடுதான்.. எல்லாப் பயக்களும் எவாக்கு என்னா அது
அய்யங்கார்: எவாகுவேஷன்.. மயிலாப்பூர்லே பாதி நேத்தே காலி.. மாம்பலம் பக்கம் திண்டுக்கல் பூட்டே கிடைக்கலியாம்.. வீட்டுக்கு ஒண்ணுக்கு நாலா பூட்டு போட்டுட்டு தெக்கு பக்கமா வண்டி பிடிச்சுப் போயிண்டிருக்கா..
நாயுடு: அட நீர் போலீஸ் விஜிலனுசை விட விவரமா இருக்கீரே.. அப்பாலிக்கி?
அய்யங்கார்: புளியந்தோப்புலே பகல்லே நரி ஓடுதாம்.. நீங்கள்ளாம் போலீசுலே என்ன பெரிசா கிழிக்கறேளோ
நாயுடு: ஏன்’யா ஆ ஊன்னா போலீசுதான் திருட்டுப்பய.. அதானே
அய்யங்கார்: அதி லேதய்யா.. சௌகார்பேட்லே எம்டன் கலாட்டாவை சாக்கா வச்சு, கடை கடையா ராத்திரி கன்னக்கோல் போட்டுட்டு இருக்கானாம்.. வீட்டுக்குள்ளே புகுந்து நகையைப் பறிச்சுண்டு ஓடுறதா வேறே பிரஸ்தாபம்..
நாயுடு: நாலே நாலு எம்டன் குண்டு விழுந்ததா.. ஊர்லே என்ன பேச்சுன்னு கணக்கு இல்லே..
அய்யங்கார்: ஊர் விஷயம் இருக்கட்டும். நீர் எங்கே நேத்து காணாமப் போயிட்டீர்னு கேட்டேனே.
நாயுடு: அதுவா? நேத்து விடிகாலையிலேயே ஆர்பர் டியூட்டின்னு தொரை அனுப்பிச்சுட்டாரு..
அய்யங்கார்: ஏன் ஹெட் கான்ஸ்டபிளுக்கு வேறே காரியம் இல்லியா மவுண்ட் ரோடு ஸ்டேஷன்லே?
நாயுடு: ஏட்டுன்னா நாய் மாதிரி.. ரன்னுனா ஓடணும்.. காட்ச்னா வாயிலே கவ்விட்டு காலடியிலே கொணாந்து போடணும்..ஆர்பர் நேத்து இருந்த களேபரத்துலே
அய்யங்கார்: பஞ்ச பஞ்ச உஷத் காலத்துலே ஆர்பர் போயிருக்கீர்.. சாதா நேரம்னா கப்பல்லே வந்தவன் வெளிக்குப் போக வழிச்சுண்டு நின்னிருப்பான்.. .. நேத்திக்கு ஆள் அரவமே இருந்திருக்காதே
நாயுடு: நீர் ஒண்ணு.. பேய்க் கூட்டம்..
அய்யங்கார்: யாருய்யா அது?
நாயுடு: ஓடறதுக்கு முந்தி ஒரு வாட்டி வேடிக்கை பாக்கணும்னு வந்த நம்ம மகா ஜனங்க தான்..
அய்யங்கார்: ஒரு கப்பல் ராபணான்னு மாட்டிண்டுடுத்தாமே..
நாயுடு: ஆமா.. வழியெல்லாம் என்ன பார்த்தேன்கிறீர்?
அய்யங்கார்: பொணமா?
நாயுடு: குண்டுய்யா.. தரையிலே சிதறிக் கிடந்துச்சு அங்கங்கே.. ஒரே ரோசனை..துண்டுலே போட்டுக் கட்டி எடுத்துப் போய் வூட்டுப் பரண்லே வச்சா நாளைப்பின்னே காயலாங்கடையிலே கொடுத்து காசு பொரட்டலாம்..
அய்யங்கார்: நீரும் உம்ம கணக்கும்.. வெடிச்சுத் தொலைக்கும் நம்ம போறாத நேரம்.. இன்னிக்கு இல்லாட்ட உம்ம பேரன் காலத்திலே வெடிக்கும்.. வேறே வினையே வேணாம்..
நாயுடு: கப்பல்லே ஏறிப் பாக்கலாம்னு பார்த்தா, எல்லாத்தையும் ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு வாரி எடுத்துக்கினு போய்ட்டானுங்களாம்..
(தலையில் காய்கறிக் கூடையும் இடுப்பில் பூசணியுமாக வேகமாக வந்த கூலி 4 இடம்) காலை மிதிக்காம போடா குருட்டுப் பயபுள்ளே
கூலி 4: ஏட்டையா தான் ஒதுங்கி நிக்கறது. பெரிய்ய்ய எம்டன் மாதிரி நட்டக்குத்தலா நடுவிலே நின்னா?
நாயுடு: அடீங்க..
(நடக்க ஆரம்பிக்கிறார்கள்)
————————————————————-
(தொடரும்)