நான் வேக நடைக்காகப் போகிற பூங்காவில் ஒரு பெரிய மேடை உண்டு. முப்பது பேர் இருக்கலாம். ஐம்பது பேர் நிற்கலாம். மேடை யோகாசனப் பயிற்சிக்காகப் பயன்படுகிறது.
மேடைக்குத் தெற்கே நடைபாதைக்கு அப்பால் சிறு குழந்தைகள் விளையாட சறுக்கு மரம், ஊஞ்சல் மற்றும் உடற்பயிற்சி செய்ய நிலப்பரப்பு.
அதிகாலையில் குழந்தைகள் வருவதில்லையாதலால் அந்த இடத்தில் இளைஞர்கள் சிலம்பப் பயிற்சி செய்வார்கள். கறுத்து மெலிந்த இளைஞர்கள். தற்காப்புக்கலையும் கற்பார்கள்.
தமிழின் மரபுக் கலையான சிலம்பாட்டத்தின் கம்பீரம் மிகுந்த நாட்டிய மயமான அசைவுகளோடு அவர்கள் சிலம்பு சுற்றும்போது காற்றில் அவை எழுப்பும் ‘உஷ்ஷ்ஷ்’ என்ற ஓசை காதுக்கு இனிமையாக இருக்கும். கேட்டபடியே நடந்து வ்ருவேன்.
முன்பெல்லாம் யோகாசன மேடையில் ஒரு பெரியவர் நல்ல தமிழில் பேசி யோகாசனம் கற்றுக் கொடுப்பார். அவ்வப்போது திருக்குறள் விளக்கம், நாலடியார் என்றெல்லாம் விளக்கியபடி யோகப் பயிற்சி நடத்துவார்.
அவர் திடீரென்று காணாமல் போனார். இன்னும் யாரோ வந்தார்கள். கூடவே பெரிய போஸ்டரில் பாபா ராம்தேவ்.
இரண்டு நாளாகப் பார்த்தால் மேடையில் சில பேர் யோகம் கற்கிரார்கள். கொஞ்ச தூரத்தில் சிலம்பாட்டம் பயிலும் இடத்தில் பெரிய தார்ச்சீலை விரித்து அங்கேயும் பாபா ராம்தேவ படம். இன்னொரு கோஷ்டி யோகப் பயிற்சி.
ஓரமாக ஒண்டிக் கொண்டு சில இளைஞர்கள் சிலம்பாட்டம் பம்மிப் பம்மிப் பயில்கிறார்கள். அவர்களின் சிலம்பு காற்றில் ஒலி எழுப்புவதில்லை. மற்ற இளைஞர்கள் இடம் போதாமல் இன்னொரு ஓரமாக குரல் மெல்ல ஒலிக்க தற்காப்புக்கலை கற்கிறார்கள்.
பிரித்து விட்டார்கள். பிரிந்து விட்டார்கள்.
நாங்கள் சும்மா பார்த்துக் கொண்டு பூங்காவைச் சுற்றி வருகிறோம்.