நேற்று மதியம் அலுவலகத்தில் பரபரப்பாக நேர்காணல் நடத்திக் கொண்டிருந்தபோது நண்பர் தொலைபேசியில் அழைத்தார். அவருடைய குரலில் உற்சாகம் என்றால் உடனே புரிந்து போகும் – அவர் ஒரு புதுப் புத்தகத்தைப் படித்திருக்கிறார்.
’Grey Wolf: The Escape of Adolf HitlerGrey Wolf: The Escape of Adolf Hitler’ படிச்சுட்டீங்களா?
இல்லியே சார், ஹிட்லர் இன்னும் மூச்சு விட்டுக்கிட்டு இருக்கார்னு சாதிக்கறாங்களா?
இல்லை. அவர் அர்ஜெண்டினாவுக்குத் தப்பி ஓடினதாகவும், அமெரிக்காவும் ஜெர்மனியும் இதுக்கு வழி செய்ததாகவும், அரசியல், பொருளாதார காரணங்கள் இதெல்லாம் என்றும் விவரிச்சு இருக்காங்க, புத்தக ஆசிரியர்கள் Gerrard Williams, மற்றும் Simon Dunstan.
Holocaust Denial வகையிலே வர்ற புத்தகம் போல இருக்கு.
நிச்சயமா இல்லே. படிச்சுப் பாருங்க. நாலைஞ்சு புத்தகம் கிடைச்சிருக்கு. இதை முதல்லே ஆரம்பிச்சு முடிச்சேன்.
இரண்டு நிமிடத்தில் ரத்தினச் சுருக்கமாக புத்தகத்தின் சாரத்தை அவர் சொல்ல மனதில் பதிவான ரெண்டு எண்ணங்கள் – இந்த மனுஷர் இத்தனை வேலைக்கு நடுவிலே எப்படி புதுசு புதுசா புத்தகத்தைத் தேடி வாசிக்கிறார் – 1; ஆழ்வார்பேட்டை போகும்போது இரவல் வாங்கி வரவேண்டிய புத்தக வரிசையில் ஒன்று கூடி விட்டது.-2
அடுத்த இரண்டு நிமிடம் உயிர்மை-100ல் என் கட்டுரை, நண்பர் ‘ஆயிஷா’ இரா.நடராசன் கட்டுரை என்று பேச்சு.
சரி, பார்க்கலாம்.
விடைபெற்றார்.
எழுத்தை ஒரு தவமாகச் செய்வது போல், வாசிப்பை ஒரு தவமாக, மனமுவந்து ஈடுபடும் கடமையாகச் செய்வதும், வாசிப்பு அனுபவத்தை நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதும் இவர் போல் சிலருக்கு வாய்க்கிறது.
விஸ்வரூபம் காணட்டும் நண்பர் கமல்ஹாசன்