எம் ‘ஐயர்’
சொற்கள் கற்பிதம் என்றானபோது அவற்றின் பொருளும் அவ்வாறே. படைப்பாளி என்ற பதத்துக்கு இன்று வழக்கிலிருக்கும் `இலக்கிய, கலைப் படைப்பை உருவாக்குகிறவர்’ என்ற பொருள் சற்றே நீட்சிப்பட, `ஒரு வழங்கு மொழியை அடிப்படையாகக் கொண்டு அமைந்த நுண்ணிய ரசனையின் பாற்பட்டுத் தொடங்கி, அந்த அடிப்படையையும் கடந்து விரியும் பரப்பில் நேர்த்தியான வாசிப்பு, காட்சி, கேள்வி அனுபவத்தை ஓர் இனக்குழு பெறவும், அதை முன்னெடுத்துச் செல்லவும், செழுமையுறப் பேணவும், அதன் வழி
யே பெற்ற ஊக்கத்தை ஊற்றுக் கண்ணாகக் கொண்டு சமுதாய வாழ்க்கையின் பன்முகப் பிரதிபலிப்பாக இலக்கியமும், கலையும் பெருமைக்குரிய இன அடையாளங்களாகத் தொடர்ந்து காத்திரமாகப் பெருகி வெளிப்படவும் வழிவகையை உருவாக்குகிறவரும் படைப்பாளியே’ என்று கொள்கிறேன். தூலமான படைப்பை உருவாக்கி அளிக்கும் முதல்வகைப் படைப்பாளியின் பணியை விட, இவ்விரண்டாம் வகைப் படைப்பாளியின் இயங்கு நெறியும்,களமும், செயல்பாடும் அறுதியிட்டு வகைப்படுத்த சற்றே கடினமானது.
திரு பத்மநாப ஐயர் இரண்டாம் வகையில் பட்ட அரிய படைப்பாளியாவார்.
சொல்கிறவர் மற்றும் கேட்கிறவர்கள் மனதில் சாதிய அடையாளங்களை எழுப்பாமல் ஓர் இடுகுறிப் பெயராக மட்டும் சுட்டும் வண்ணம், `ஐயர்’ என்று தமிழ் கூறும் நல்லுலகம் இதுவரை இரண்டு பேரையே அழைத்து வந்திருக்கிறது. ஐம்பெருங் காப்பியங்களையும், சங்க கால இலக்கியங்களையும் பல நூற்றாண்டுத் தமிழ்க் கரையானுக்கு முற்றிலும் இரையாவதற்கு முன் மீட்டெடுத்து தமிழ்ச் சமுதாயத்துக்கு வழங்கிய பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டினரான தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் முதலாமவர். இருபதாம் நூற்றாண்டு தொடங்கிய தற்காலத் தமிழ் இலக்கியத்துக்கு அப்படியான மீட்டெடுப்பு வருங்காலத்தில் தேவைப்படாமல், வெளியான காலகட்டத்திலேயே அவை குறித்த பிரக்ஞையைப் பரவலாக உருவாக்கி எழுத்தையும், ஆக்கியளிப்பவர்களையும் சிறப்பிக்க இடையறாது உழைக்கும் யாழ்ப்பாணம் பண்டாரவளை திரு இரத்தின ஐயர் பத்மநாப ஐயர் இரண்டாமவர்.
ஐயரவர்களின் பணி இரண்டு தளங்களில் முக்கியமானதாக அவதானிக்கப்பட வேண்டும் :
1) தமிழக – ஈழ – புகலிடத் தமிழ் இலக்கியப் பாலமாகச் செயல்பட்டு, எழுத்தாளர் மற்றும் வாசகர்களுக்கு இடையேயான ஊடாட்டத்தைச் செழுமைப் படுத்துதல்
2) தற்காலத் தமிழ் இலக்கியப் படைப்புகளின் பதிப்பாளராக, நல்ல நூல்கள், சஞ்சிகைகள் தீவிரவாசகர்களுக்கு அச்சு மற்றும் மின்பதிவு வடிவங்களில் கிடைக்க இடையறாது உழைத்தல்.
மாணவப் பருவத்திலேயே தீவிர இலக்கிய ஈடுபாட்டோடு தமிழக, இலங்கைத் தமிழ் எழுத்தாளர் படைப்புகள் மற்றும் மொழிபெயர்ப்புகளை வணிக இதழ்களில் தொடங்கி இலக்கிய இதழ்கள் வரை தேடித்தேடி வாசித்த ஐயரை அந்த வாசிப்பு எழுத உந்தவில்லை. ஆனால், நல்ல இலக்கியங்களை வாசிக்க வாசிக்க, வற்றை மற்றவர்களும் வாசித்து அனுபவிக்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு மேலோங்கியது. பல பிரதிகள் வாங்கி மற்றவர்களுக்குக் கொடுத்து அதன் மூலம் வாசிப்பு அனுபவத்தைப் பரவலாக்குவதை தன் முதற் கடமையாகக் கொண்டு செயல்படத் தொடங்கினார் அவர். புத்தகங்களுக்கும் இலக்கியச் செயல்பாடுகளுக்காகவுமே அவருடைய வருமானம் பெரும்பகுதி செலவழிந்தது குறித்து அவருக்குப் பெருமையே அன்றி ஒரு வருத்தமும் இல்லை.
அறுபதுகளில் (அப்போது ஐயரவர்கள் ஒரு புத்திளைஞர்) அவர் தமிழக – இலங்கை தமிழ் இலக்கியப் பாலமாகச் செயல்படத் தொடங்கினார். தமிழக எழுத்தாளர் படைப்புகளை இலங்கைத் தமிழினத்துக்கு அறிமுகம் செய்யும் ஒரு வழிப்பாதையல்ல ஐயருடையது. மாறாக, இலங்கைத் தமிழ் இலக்கியச் சூழலையும், படைப்பையும், படைப்பாளர்களையும் பற்றிய அறிதலும், புரிதலும், அனுபவப் பகிர்வும் இந்தியாவிலும் (குறிப்பாகத் தமிழகம்) உருவாக அவர் அயராது பாடுபட்டார்.
1965ல் தில்லியிலிருந்து இலக்கிய மாத இதழான `கணையாழி’ வெளியானது. இது நிகழ்ந்த இரு ண்டுகளுக்குள் கணையாழி மாசிகையை இலங்கையில் நூறு பிரதிகள் வரை வாங்கி யாழ்ப்பாணம், கண்டி, கொழும்பு என்று இலங்கை முழுவதும் பல நண்பர்களுக்கும் கிடைக்கச் செய்து தற்காலத் தமிழ் இலக்கியத் தேடலுக்குப் பேருதவி செய்தது ஐயர் என்ற இந்தப் பாலத்தின் ஊடாக நிகழ்ந்த பல்வேறு ஆக்கபூர்வமான செயல்களில் ஒன்று.
1965ல் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியின் வாசகர் வட்டம் புத்தக வெளியீட்டு திட்டங்களில் பங்கேற்று மேலும் உறுப்பினர்களை இலங்கையிலிருந்து சேர்க்க உதவினது எந்த நிறுவனமும் சாராத, ஐயர் என்ற தனிமனிதரின் தீவிரமும்
ஒருமுனைப்புமான இலக்கியத் தொண்டுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு.
காலம் சென்ற கே.கணேஷ், மு.ராமலிங்கம், தெளிவத்தை ஜோசப், யேசுராசா, ஏ.ஜே.கனகரட்னா என்று மூத்த தலைமுறை இலங்கைத் தமிழ்ப் படைப்பாளிகள், விமர்சகர்கள் தொடங்கி, இன்று புதிதாக எழுதத்
தொடங்குகிறவர்கள்வரை ஆழ்ந்த நட்பு கொண்ட, அவர்களின் முதல் வாசகரும் விமர்சகருமான ஐயரவர்களுக்குத் தமிழகப் படைப்பாளிகளான சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், கவிஞர் மீரா, சா.கந்தசாமியில் ஆரம்பித்து, அடுத்த தலமுறை எழுத்தாளர்களான ஜெயமோகன், பாவண்ணன், இரா.முருகன் மற்றும் புதிய தலைமுறைப் படைப்பாளிகள் வரை இலக்கியம் சார்ந்த நட்பு உண்டு.
லண்டனுக்கு 1996ல் புலம்பெயர்ந்த ஐயரவர்கள் அப்போது இலக்கிய நட்புப் பாராட்டுவதற்கான இவ்வெல்லைகளை விரித்து இலங்கை, இந்தியா என்ற இரு நாடுகளைக் கடந்து அனைத்துலகே வரம்பென்றாக்கினார். எந்த
நாட்டினர் ஆயினும், புகலிடத்தில், பிறந்த மண்ணில் தமிழ் இலக்கிய, கலைப் படைப்பில் ஈடுபடும் தமிழர் எல்லோரும் இவருடைய நட்பு வளையத்தில் அன்போடு இணைந்தார்கள்.
உலகு தழுவிய இலக்கிய உறவுப் பாலமாக அறுபத்து இரண்டு வயது பத்மநாப ஐயர் தளராது ற்றி வரும் அரும்பணி, தமிழில் அனைத்துப் படைப்பாளிகளும் செய்த, செய்து வரும் இலக்கியச் சேவையின் மொத்தக் கூட்டளவை விட அதிகமானது. அத்தனை எழுத்து அர்ச்சுனர்களுக்குமாக ஒரே ஒரு கண்ணபிரான் எம் ஐயர்.
இலக்கிய உலகில் ஒரு பெருமைக்குரிய தொகுப்பாசிரியராகவும் பதிப்பாசிரியராகவும் அறியப்பட்டவர் அவர்.
ஐயரின் முதல் தொகுப்பாசிரியர் பணி – 1968 வாசகர் வட்டம் அக்கரை இலக்கியம் நூலுக்காக இலங்கைத் தமிழ் எழுத்தாளர் படைப்புகளைத் தொகுத்து உதவியது.
பின்னர், திரு.மு.நித்தியானந்தனுடன் சேர்ந்து மலையக இலக்கியங்களை (சிறுகதைத் தொகுப்பு, நாவல்) பிரசுரம் செய்வதில் நிறைவான பங்களிப்பு. அதன் தொடர்ச்சியாக, எழுத்தாளர் யேசுராசாவோடு அலை வெளியீடுகளின் கணிசமான பங்களிப்பு ஐயருடையது. நண்பர்களின் அந்தக் கூட்டுறவு முயற்சிக்குப் பின்பலமாகவும், அதை வழிநடத்திச் செல்கிறவராகவும் செயல்பட்டார் அவர்.
திரு யேசுராசாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த `அலை’ இதழுக்கான ஆக்கங்களைப் பெற உதவுவது, விளம்பரம் சேகரிப்பது, இதழ் அச்சாவதைப் பார்வையிடுவது என்று இதழாக்கப் பணிகளின் ஆழந்து ஈடுபட்டு முழு
ஒத்துழைப்பை நல்கிய ஐயரின் வியர்வைத் துளிகள் அலை இதழ்ப் பிரதிகளின் அச்செழுத்து மையோடு கலந்து நிறைந்து நிற்பவை.
`அலை’ இதழைத் தமிழகத்திலும் அறிமுகம் செய்ய மறக்கவில்லை ஐயர். சிறுகதை, நவீன ஓவியம், திரைப்படம் குறித்த பிரக்ஞையை உருவாக்கியதில் 1975 – 1990 வரை வெளிவந்த அலைக்குப் பெரும்பங்கு உண்டு. தீவிர இலக்கிய வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தமிழ் இதழ்களின் வரலாற்றிலேயே முதன்முறையாக அலை இதழ்கள் மீள்பதிப்பு கண்டபோது, அந்த ஆக்கத்திலும் ஐயரின் பேருதவியும் உழைப்பும் இருந்தது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மறுமலர்ச்சிக் கழகத்தின் நூல்கள் மற்றும் தளிர் சஞ்சிகை வெளியீட்டிலும் பெரும்பங்களிப்புச் செய்தவர் ஐயர். தன்னுடைய குடும்ப நலத்தை விட இலக்கியச் பணியையே முன்நிறுத்தி, தன்
ஊதியத்தைச் செலவழித்தும், கடன் வாங்கியும் நூல் பதிப்புக்கு உதவிய பெருந்தகையாளர் அவர்
1980ல் முதன்முறையாகத் தமிழகத்துக்கு வருகை புரிந்தார் ஐயர். நிறையப் புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் எடுத்துக்கொண்டு தலைமன்னாரிலிருந்து ராமேஸ்வரம் வரை நீராவிப் படகில் பயணம். சென்னையில் க்ரியா
ராமகிருஷ்ணனுடன் தங்கி, அசோகமித்திரன், சுந்தரராமசாமி. ச.கந்தசாமி போன்ற தமிழ்ப் படைப்பாளிகளோடு தொடர்பு. 1982-ல் யேசுராசாவோடு அவருடைய அடுத்த பயணம் அமைந்தது. அன்னம் மீரா, ஞாநி, ஞானி, கி.ரா என்று அறிமுகம். க்ரியா, அன்னம், நர்மதா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் போன்ற பதிப்பகங்கள் மூலம் முக்கியமான ஈழப் படைப்பாளிகளின் புனைகதை – அபுனைகதை, கவிதை நூல்கள் வெளியிட முன்கை எடுத்தார் அவர். இலக்கியவாதியும் சீரிய சிந்தனையாளருமான மு.தளையசிங்கத்தைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்த உதவியதை ஐயரின் செயல்பாட்டில் ஒரு குறிப்பிடப்பட வேண்டிய கண்ணியாகச் சொல்லலாம்.
அரசியல் நெருக்கடி மிகுந்த 1981- 1984 சூழலிலும் ஏழு பதிப்பகங்கள் மூலம் இருபது நூல்கள் வெளியீடு காண ஏற்பாடு செய்தவர் ஐயரவர்கள். எந்த நெருக்கடியையும் எதிர்கொண்டு வெற்றிகாணும் ஒரு வாழும் சமுதாயத்தின் தொடர்ந்த இலக்கிய வெளிப்பாடே அதன் இருப்பையும், வாழ்க்கை பற்றிய நம்பிக்கையையும் அடையாளப் படுத்துவது என்ற முறையில் ஐயரின் இந்தப் பணியின் பரிமாணங்கள் பிரமிக்க
வைப்பவை. உன்னதமானவை.
ஐயரின் பெருமுயற்சியாலும், உழைப்பாலும், தமிழியல் வெளியீடு தமிழியல் வெளியீடாக நா.சபாரத்தினத்தின் தலையங்கங்கள் ‘ஊரடங்கு வாழ்வு’ சென்னையில் 1985ல் வெளியானது 1991 வரை தமிழகத்தில் ஏழு, மற்றும் ஈழத்தில் மூன்று தமிழ் நூல்கள் வெளியீடு கண்டன.
தற்போது ஐயரவர்கள் ஈழம், தமிழகம் எல்லைகளைத் தாண்டிப் புகலிடம் என்ற மூன்றாம் தளத்தையும் கைகொண்டு இயங்கி வருகிறார். 1990 •பெப்ரவரியில் லண்டனுக்குக் குடிபெயர்ந்த ஐயரின் தீவிர இலக்கியச் செயல்பாடுகளுக்கு எடுத்துக்காட்டு :
அ) ஈழத்திலிருந்தும் தமிழகத்திலிருந்தும் எழுத்தாளர்கள், நாடக, ஓவியக் கலைப் படைப்பாளிகள், பத்திரிகையாளர்கள், ஆய்வாளர்கள் லண்டன் வரும்போது சந்திப்புகளை ஒழுங்கு செய்வது
ஆ) செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும் அவரின் தனித்தன்மை கொண்ட விருந்தோம்பல்.
இ) இப்படி வரும் படைப்பாளிகளுக்கு, புலம்பெயர்ந்த தமிழர்களின் இலக்கிய முயற்சிகளை நேரடியாக அறிமுகப்படுத்துவது
ஈ) ஒருபோதும் பிரிட்டன் வர வாய்ப்பு இல்லாத படைப்பாளிகளைக் கலைப் பயணமாக வரவேற்றுவரவழைப்பது. (திருவாளர்கள் வில்வரத்தினம், யேசுராசா, தெளிவத்தை ஜோசப் ஆகிய சிறந்த படைப்பாளிகளின் கலைப் பயணங்கள் இவற்றில் அடங்கும்). இவர்கள் மூலம் இவ்வனுபவங்களை ஈழத்தில் தொற்றவைப்பதே தன்நோக்கம் என்கிற ஐயர் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளில் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களை இவர்கள் சந்திக்க வாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கவும் பேருதவியாற்றினார்.
லண்டன் நியூஹாம் தமிழர் நலன்புரி சங்கத்தில் 1994 முதல் 2000 இறுதிவரை கவுரவப் பணியாற்றிய ஐயர், 1996 சங்க ஆண்டு மலரில் புலம்பெயர்ந்த படைப்பாளிகளின் படைப்புகளும் ஆண்டறிக்கைக் கணக்குகளோடு வெளியாக வழிவகை செய்வதின் மூலம், நலன்புரி சங்கம் இலக்கிய நலனும் புரிய வைத்தார். தொடர்ந்து `கிழக்கும் மேற்கும்’, `இன்னுமொரு காலடி’, `யுகம் மாறும்’, `கண்ணில் தெரியுது வானம்’ என்ற சிறப்பான நான்கு தொகுப்புகளை வெளியிட்ட பெருமை ஐயருக்கே உரியது. உலகம் எங்கணும் வாழும் பரந்துபட்ட நிகழ்காலத் தமிழ்ச் சமுதாயம் தன்னைப் பன்முகங் கொண்ட வாழுமிடம் சார்ந்த, இழந்த, பெற்ற, பெற ஏங்கும் வாழ்க்கைப் பின்னணியில் அழுத்தமாக அடையாளம் காட்டிக் கொண்ட படைப்புகளைத் தம்மகத்தே கொண்ட இந்தத் தொகுப்புகள் சங்கத் தமிழ்த் தொகை நூல்களான புறநானூறு, அகநானூறு போல் இலக்கிய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.
திறமையான புலமையெனில் பிறர் வணக்கம் செய்ய ஏதுவாகத் தமிழிலிருந்து ங்கிலத்துக்கு நல்ல படைப்புகளை மொழிபெயர்த்து அறிமுகப்படுத்தும் ஐயரின் முயற்சிக்கு முதல் வெற்றி அவர் தொகுத்த `Lutesong and laments – translation of short stories, poems and essays from Tamil – 2001′ என்ற கனடியப் பதிப்பக வெளியீடு.
தேர்ந்த மொழிபெயர்ப்பாளரும், இலக்கிய ர்வலருமான திருமதி லக்ஷ்மி ஹோல்ஸ்ட்ராமோடு செயல்பட்டு மேலும் இத்தகு மொழிபெயர்ப்புகள் வெளிக் கொணரத் திட்டமிட்டிருக்கும் ஐயரவர்கள் இலக்கியம் பற்றிய ஆர்வத்தை ஊட்டுவதுடன் மொழிபெயர்ப்பையும் ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இலக்கிய ஆர்வலர்களுக்குப் பயிலரங்கம் நடாத்தி வருகிறார். பிரித்தனில் நடைபெற்ற இவ்வரங்கங்களை ஐரோப்பா முழுக்க எடுத்துச் செல்லவும் ஐயர் திட்டம் வகுத்துள்ளார்.
ஐம்பது வயதுக்கு மேல் கணினியையும், இணையத்தையும் ஓர் இளைஞரின் ஆர்வத்தோடு பரிச்சயம் செய்து கொண்ட ஐயர், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியையும் தமிழ் இலக்கியப் பரவலுக்காகப் பயன்படுத்துவதில் முன்நிற்பவர்.இணையத்தில் அவர்தம் தமிழ் இலக்கியப் பணி, மதுரைத் திட்டத்தில் தளையசிங்கம் நூல்கள் மற்றும் ஈழப் படைப்பாளிகளின் படைப்புகளை வலையேற்ற யெர்மனி திரு.நா.கண்ணனுடன் முன்கை எடுத்துச் செயல்பட்டதில் தொடங்கியது. பத்துக்கு மேற்பட்ட படைப்புகள் இங்ஙனம் வலையேற்றப்பட்டுள்ளன. உலகத்தில் எந்த மூலையிலும் உள்ள தமிழறிந்தவர்களும், கணினியின் சுட்டியைச் சொடுக்கி, வலைப்பரப்பில் மேய்ந்தால் இவை செலவின்றி நல் வரவாகக் கையில் உடனே கிட்டும்.
ஐயரின் இலக்கியச் செயல்பாடுகள் பேரின வாதத்தை எதிர்க்கும் சுய நிர்ணய உரிமையுடன் கூடிய தமிழ்த் தேசிய வாதத்தின் அடிப்படையில் தோன்றியவை எனினும், `இலக்கியம் என்று வரும்போது அரசியல் வேறுபாட்டை மறந்துவிட்டு ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். அப்போதுதான் நிறையச் சாதிக்கலாம்.’ என்ற அவரின் மனம் திறந்த அவா (பாலம் 1996 மற்றும் திண்ணை செவ்வி) அவரைத் தற்காலத் தமிழிலக்கியத்தின் `இளமையான தமிழ்த் தாத்தா’வாக, உ.வே.சா அவர்களுக்கு அடுத்து ஒரு மாமனிதராக முன் நிறுத்துகிறது.
(Era.Murukan 2004)