இரவு

 

சூர்யோதயம். எத்தனையோ வருஷம் கழிச்சு இதை ரசிச்சுப் பார்க்கறேன்.

திரைப்படத்துக்கு நான் எழுதிய முதல் வசனம் இது.

ராத்திரியில் எழுதியது. ஆபீஸ் முடிந்து வந்து சுக்கா ரொட்டிக்காக சாப்பாட்டு மேஜையில் காத்திருக்கும்போது வேட்டிக்கு மாறாமல், டையைத் தளர்த்தாமல் பஞ்ச பஞ்ச உஷத் காலத்தைப் எழுத வைத்தது ஒரு தொலைபேசி அழைப்பு. கைப்பேசி பெயர் சொல்லாமல் மறைத்தும் குரல் சொல்லிவிடுகிறது.

‘முடிஞ்சுதா சார்?’. யோகி கேட்கிறார்

‘முடிஞ்சுடும் சார்’.

சப்பாத்தியும் பருப்புக் கூட்டும் தட்டில் வந்து விழுந்ததும் சூர்யோதயத்தோடு முன்னால் போய்விட வேண்டியதுதான்.

அதுக்காக அந்த ராத்திரி கிட்டத்தட்ட முழுவதும் ஒதுக்க வேண்டி வந்தது.

முதல் கவிதை? அது ஒரு ராத்திரியில் தொடங்கியது. எமெர்ஜென்சி கால இரவு.

எழுபதுக்களின் மத்தி. அழகான சிவகங்கை நகரம். நடு ராத்திரி கடந்திருக்கும். ராப்பறவை எழுந்திருடா என்று அதட்ட, விழித்துக் கொள்கிறேன்.

அந்த ராப்பறவை கூப்பிடுவது பாதி இரவு போய்க் கழிந்த பிறகுதான். அதன் குரல் கேட்டு முழிப்பு தட்டுகிறதா அல்லது தூக்கம் கலைந்ததால் பறவைக் கூவல் காதில் அடர்த்தியாக விழுகிறதா என்று தெரியவில்லை. ஆனாலும் என்ன? இனிமேல் தூக்கம் போனது போனதுதான்.

வாசல் திண்ணையில் படுத்திருப்பதில் ஒரு சௌகரியம். எழுந்து கொஞ்சம் எக்கிப் பார்த்தால் வானம் தெரியும். தெரிந்தது. அந்தப் பறவை? அது வானத்தில் இல்லை. அழுது வடிந்தபடி தெருவிளக்கு எரியும் கம்பத்தில் உட்கார்ந்து கர்ம சிரத்தையாக என்னை விசாரித்துக் கொண்டிருந்தது.

என்ன வெட்டி முறிக்கப் போறேன்னு நட்டக் குத்த உக்காந்திருக்கே? தூ.குடிக்கி.

எமெர்ஜென்சி பத்தி நினைச்சுட்டு இருக்கேன். இப்படியுமா இந்த இந்திரா காந்தி மார்க்சிஸ்டுகளை உள்ளே தள்ளி கொடுமைப் படுத்துவாங்க?

எல்லாரையும் தான் அந்தப் பொம்பளை ஜெயில் களி தின்ன வச்சு வேடிக்கை பாக்குது. உங்காளுங்க மட்டும் என்ன மேனி வாடாம சீவிக்கிற சன்மங்களா?

இரு வந்து சொல்றேன். மூத்திரம் முட்டிட்டு வருது. நிலைக் கதவைத் தொறந்து பின் கட்டுக்குப் போனா, கதவு போடற சத்தத்திலே வீடு முச்சூடும் முழிச்சிக்கும்.

அட, படி எறங்கி குத்த வையப்பூ. வெள்ளென எளுந்து வாசத்தெளிக்கும்போது நாலு வாளி கூட கவுத்துவிட்டாப் போகுது. செம்மண் ஆச்சே. உள்வாங்கிடும்.

செம்மண் தலைமுறை தலைமுறையாக ரத்தத்தை மட்டும் உள்வாங்கவில்லை.

குத்த வைத்து எழுந்து பார்க்கும் போது ஒரு ரெட்டை மாட்டு வண்டி. மேலே திரை மாதிரி கூண்டு மூடிய கூட்டு வண்டி. ஜல் ஜல் என்று மாட்டுக் கழுத்தில் மணி ஒலிக்க தெருவோடு வருகிறது. கூடவே ஒரு லாந்தர் வெளிச்சம். வண்டிக்குப் பக்கத்தில் உயர்த்திப் பிடித்துக் கொண்டு, அவ்வப்போது அப்படியும் இப்படியும் லாந்தரை ஆட்டி அணையாமல் பார்த்துக் கொண்டு ஒருத்தன் நடந்து வருகிறான்,

நடு ராத்திரியில் தெருவில் நடக்கிறவர்கள் தவறாமல் முண்டாசு கட்டி இருப்பார்கள். வியர்த்து வடியும் சித்திரை இரவு என்றாலும் இப்படித்தான் என்று எங்கோ எழுதி வச்சிருக்கு. முண்டாசுக்காரா எங்கே போறே?

நான் மனசுக்குள் கேட்டதுக்கு அவனும் மனசுக்குள் பதில் சொல்கிறான். அது என்ன என்று கவனித்துக் கேட்பதற்குள் ராப்பறவை மறுபடி தூ.குடிக்கி என்கிறது.

எதுக்கு கெட்ட வார்த்தை எல்லாம் சொல்றே? நான் ஆத்திரத்தோடு கேட்க அது எக்காளமாகச் சிரித்துக் கொண்டே இருட்டில் மறைந்து போகிறது. அதோடு கூட நாற்பது வாட் தெருவிளக்கு பல்பும் உசிரை விட, நட்சத்திர வெளிச்சம், வண்டிக்காரன் லாந்தர் தவிர வேறே பிரகாசம் இல்லை. தெருக் கோடி போய் வண்டி திரும்பும் வரை அதையே பார்த்தபடி நிற்கிறேன்.

நான் தான் அந்த முண்டாசுக்காரன். வண்டிக்கு உள்ளே என் பெண்சாதி. எங்கே போய்க் கொண்டிருகிறோம்?

அவளுக்கு இடுப்பு வலி எடுத்துடுச்சுடா. ஓடி வா. டாக்டரம்மாவை எழுப்பணும்.

ராப்பறவை இப்போது தந்திக் கம்பத்தில் உடல் நடுங்க வார்த்தை சொல்கிறது. ராப்பறவைகள் இருட்டையும் குளிரையும் மொழி பெயர்த்துத் திட்டுகின்றன.

குளிர இது என்ன மார்கழியா? மார்கழி என்றால் நடுராத்திரிக்குக் கொஞ்சம் முந்தியே அடுத்த நாள் விடிந்து விடுமே? பனியில் நனைந்த தெரு முழுக்க கோலம், வீட்டு வாசல் மாடப்புறையில் அகல் விளக்கு, கோலம் போட்டபடி பகிர்ந்து கொள்ளும் பெண்பிள்ளைகளின் வம்பு (யாருடா வாசல்லே முட்டக் குத்தி வச்சுட்டு? இங்கே எங்கேயும் நீர்ப் பாசானம் பண்ணிடாதே. கொல்லைக்குப் போய்ட்டு வா) தெருவே பரபரப்பாக இயங்குமே? மார்கழி இல்லை. வாசலில் ஒரு கோலமும் இன்னும் மலரவில்லை. ஒரு வம்பும் சுவாரசியமாகக் காதில் முனகலிடவில்லை.

மாசி கடைசியா? பங்குனியா? பங்குனி என்றால் பத்து நாள் மண்டகப்படி என்று கோவில் ராத்திரி கழிந்து ரெண்டு, மூணு மணி வரை திமிலோகப் படும். அதிர்வேட்டும், நாதசுரக் கச்சேரியும், வெப்பமான பெட்ரோமேக்ஸ் விளக்கின் எண்ணெய் வாடையுமாக பங்குனி உத்திரம் இனிமேல்தான் வருமோ என்னமோ.

பெட்ரோமாக்ஸ் வாடையில் ஒரு சாவு வீட்டு துக்கம் தூக்கலாக இருக்கும். கோவில் உற்சவம் என்றாலும் இல்லாவிட்டாலும். சாவெல்லாம் ராத்திரி தான் நடக்கும். பெட்ரோமாக்சின் வாடை ராத்திரியின் துக்க வாடையும் கூடத்தான்.

இது பெட்ரோமாக்ஸ் இல்லை. லாந்தர். லாந்தர் வெளிச்சத்திலே கிராமத்து அப்பத்தா ராத்திரி கதை சொல்கிற மென்மை உண்டு. சுடாது. பகட்டத் தெரியாது.

கிராமத்திலிருந்து வருகிற கூட்டு வண்டி. உள்ளே நிறை கர்ப்பமான பெண். அவள் தான் இருக்கிறாள். ராப்பறவை சொன்னால் சரியாக இருக்கும் என்று தெருவில் குரைக்கத் தொடங்கிய நாய்கள் இரண்டு கருத்துத் தெரிவிக்கின்றன.

வாசல் அறையில் கதவைச் சாத்திக் கொண்டு, அலமாரியில் ஒரு நீண்ட டாக்குமெண்ட் உறையை எடுக்கிறேன். முழுக்க தனித்தனித் தாள்கள். எல்லாமே நான் போன வருடம் எழுதி வீணாகப் போன கவிதைகள். அந்தப் பச்சைப் பாவாடைக்காரி, பிச்சிப் பூவாடைக் காரிக்கு என்னைப் பிடிக்கவில்லை. நூறு பாட்டையும் என்ன செய்வது? பின் பக்கத்தில் புதுசாக எழுதப் பயன்படுத்தலாமா? மனசு வரவில்லை. மடக்கி வைத்து விட்டு, வேறே பேப்பர் தேடுகிறேன்.

தாளில் எப்போதோ நாலு வரி உரைநடையாகக் கதை எழுதி நிறுத்தியிருக்கிறேன். கதைக்குள் அமிழ ஆரம்பிக்காத நேரம் அது. தமிழ்ப் புனைகதை உலகம் இன்னும் கொஞ்ச நாள் நிம்மதியாக இருக்கட்டும்.

படித்துப் பழகிய பழக்கத்தில் கவிதையில் பேனா எழுத்தாக ஊர்கிறது.

தூ.குடிக்கி. ராப்பறவை இல்லை. நான் தான். ராத்திரி தான் என்ன மாதிரி எல்லாம் யட்சி வசியமாக நினைப்பையும், கற்பனையையும், பயத்தையும் அள்ளிக் கலந்து வண்ணத்தையும் வாடையையும் வசவையும் பூசுகிறது. பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் எனக்குள்ளே இருக்கிற இன்னும் யாரையெல்லாம் இழுத்து வந்து வெளியில் நடக்கவிட்டு வேடிக்கை பார்க்கச் சொல்லித் தூண்டுகிறது அது.

சும்மா கெட சவமே.

அதட்டியபடி எழுதுகிறேன்.

மூடுவண்டித் திரைக்குப் பின்
முனகிநீ புரண்டிருக்கக்
காற்றணைக்கும் லாந்தர்
கைப்பிடித்துக் கூட வந்து
ஊர் உறங்கும் வேளை
பேர்தெரியா மருத்துவச்சி
வாசலிலே நின்றபோது
பேச்சுக் குரலெழுந்து
நித்திரை கலைந்த
நாய்கள் அதட்டும்.

பத்து வரி எழுதியதும் சொல்லி வைத்தாற்போல் கரண்ட் போய்விடுகிறது. அது மட்டும் நாற்பது வருடமாக ஒரு குறைவும் இல்லாமல் கிரமமாக நடக்கிறது.

இனி எப்போது வரும் என்று தெரியாமல் பேப்பரை மடக்கி வைத்து விட்டு மீதிக் கவிதையை யோசித்தபடி திரும்பப் படுக்கிறேன். கொசுவின் ரீங்காரம். வாசல் பக்கம் அசுத்தம் செய்யாதேன்னா கேட்டாத்தானே. அது சொல்லும்போது கவிதையை முடித்திருக்கிறேன். தூங்கியும் இருக்கிறேன்.

ராத்திரி எழுதிய முதல் கவிதை ‘கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம்’. கனவையும் கவிதையையும் தனித் தனியாகக் கைவசப் படுத்தவும், கலந்து கட்டியாகக் கொடுத்து வேடிக்கை பார்த்து சிரிக்கவும் இரவுக்குத் தான் முடியும். அது ஒரு முழுப் போக்கிரி. போக்கிரிகள் சுருட்டுக் குடிப்பார்கள். நல்லவர்கள் அந்த வாடையை அனுபவிப்பார்கள். எனக்கு சுருட்டும் பிடிக்கும். ராத்திரியும் பிடிக்கும். போக்கிரிகளையும். நானே போக்கிரிதான். கவிதை எழுதறேனே.

மின்சாரம் போன இன்னொரு ராத்திரி. துருவப் பிரதேசக் குளிர் காலத்தில் சூரியன் முகத்தைக் காட்டாத இருட்டில், இரவில் மூழ்கித் துயிலும் ஒரு நாளிலிருந்து அடுத்த நாளும் இரவாகவே விடிவது போல், கவிதை ராத்திரி கதை ராத்திரியில் தொடர்கிறது. ராத்திரிகள் பூடகமானவை. தர்க்கத்துக்கு உட்படாதவை. அவற்றின் மர்மப் புன்னகை என்னைக் காதலிக்கச் சொல்கிறது. காமம் செப்பச் சொல்கிறது. நிற்பதை விட படுப்பது சுகம். படுப்பதோடு சுகிப்பது இன்னும் சுகம். சுகம் போகம் மட்டும் இல்லை. தூங்காமல் தூங்கி வாழாமல் வாழ்வதும் கதையாக நிஜத்தைக் காண்பதும், நிஜத்தில் புனைவை தரிசிப்பதும் கூட. என் முதல் கதையும் சுருட்டு வாடை அடிக்கும் ராத்திரியில் தான் பிறந்தது.

நடுராத்திரி தாண்டிய நேரம். வாசல் கதவைத் திறக்காமலேயே அழிக் கம்பிகளைப் பிடித்தபடி வானத்தைப் பார்க்கிறேன். வாசல் கம்பிகள் மிக மிகப் பாதுகாப்பானவை. பகலில் அவை கவனத்தில் படுவதே இல்லை. ராத்திரியில் அவை என் முன்னால் அணிவகுத்து நின்று மெய்க்காப்பாளர்களின் படைவரிசை போல் ஏதோ இனம் புரியாத அபாயத்தில் இருந்து என்னைக் காத்து ரட்சிக்கின்றன. ராத்திரி, அபாயங்களின் நேரம். இருட்டும் மௌனமும் அவற்றைப் பெரியதாக்கிக் காட்டுகின்றன. இருட்டு கருப்புத் திரவமாக கண்ணுக்கெட்டிய தூரம் வரை வழிந்து பரவி இதோ என்னையும் விழுங்க வந்து கொண்டிருக்கிறது. வானத்திலும் அது படர்ந்து நட்சத்திரங்களை தார் பூசி மறைத்து விட்டது. சந்திரன் விடுமுறை எடுத்துக் கொண்ட இரவு அது.

இரவு ஓய்வெடுக்கச் சொல்லி ஆசை காட்டுவது. அயர்ந்து உறங்கச் சொல்வது. உறக்கத்தில் உயிரைப் பறிப்பது. திரும்பக் கொடுத்து எழுப்பி வசவு உதிர்ப்பது.

மேற்குப் பக்கம் இருந்து இருட்டுக்கும் ராத்திரிக்கும் சவால் வந்தது. அது மெல்ல ஊர்ந்தது. ஆனால் முன்னேறிக் கொண்டிருந்தது. கால்கள். ஆம், கருத்த ஒரு ஜோடி கால்கள். உயரமானவை. மனிதக் கால்களா? சூட்சும சொரூபமா?

பேய்களும், பிரேத ரூபங்களும் ராத்திரியின் அழகான கற்பனை. அந்த ஒப்பனை இரவுக்கு இன்னும் அழகூட்டுகிறது. திரும்பத் திரும்ப இரவின் மடியில் முகம் புதைத்து, வாடையை நாசி விடைக்க, வெப்ப மூச்சு விட்டபடி உணர வைக்கிறது. பிறப்பின் வாடை. கவிச்சி வாடை. குருதி வாடை. இரவுக்கு இதுகளும் உண்டு.

நகர்ந்து வரும் வெளிச்சத்துக்குக் கட்டியம் கூறி மெதுவாக ஒலிக்கும் சத்தத்தைக் கவனிக்கிறேன். இரவு ஓசைகளை வெறுப்பது. குரல்கள் தாழ்த்தி ஒலிக்க ஒலிக்க இரவின் மௌனமான பேச்சு இந்த உலகமே முடியப் போகிறது என்றாலும் கவலை இல்லை என்ற தொனியோடு சூழ்கிறது. மெல்லப் பேசுங்கள். உதடு பிரியவே வேண்டாம். இரண்டு ஜோடி உதடுகள் என்றால் இரவுக்குக் கொண்டாட்டம் தான்.

தண்ணீர் தவிக்கிறது. உதடுகளை நாவால் ஈரப்படுத்திக் கொள்கிறேன். ராத்திரி, கானல்நீர் நிறைத்த ஒரு மாயக் குடுவையில் பொங்கிப் பிரவகிக்கும் வண்ணமயமான களியாட்டங்களுக்கு நடுவில் என்னை நிறுத்துகிறது. எனக்கு வேண்டாம். அவை இப்போது களைப்படையச் செய்கின்றன. முன்னே நகரும் வெளிச்சத்துக்கு விடை கண்டுவிட்டு திரும்பத் தூங்க வேண்டியதுதான். மின்சாரம் வராவிட்டாலும் சரி. இருட்டாக இருக்கத்தானே இரவு? இதைச் சொல்ல ஜப்பான்கார குரசோவா எதற்கு? அப்பத்தாவைக் கேட்டால் சொல்லியிருப்பாளே.

வெளிச்சம், கால்களைத் தழுவி இறங்கிப் பாதத்தில் விழ, நான் வார்ச் செருப்புகளைப் பார்க்கிறேன். சந்தையில் கடை போட்டு இதைத் தைத்துத் தரும் தொழிலாளியை எனக்குத் தெரியும். செருப்புக் கடைகள் குறைவான காலம். இருந்தாலும் அவை இப்போது அடைத்து இருக்கும். கடைத்தெரு இயக்கம் நிற்க ராத்திரிதான் முழுக் காரணம். இயங்கியவை நிற்கவும் நிலைத்து நின்றவை இயங்கவும் இரவே மந்திரப் பிரம்பு ஒன்றை இருட்டில் சுழற்றுகிறது.

நடுராத்திரியில் சுருட்டுப் பிடித்தபடி, ஒரு கையில் லாந்தர் விளக்கோடு விச்ராந்தியாகத் தெருவில் நீள நடந்து போனவன் யார்? எதற்காக அப்படிப் போனான்? விளக்கை வைத்து விட்டு அவன் சுருட்டை முழுக்க சுவாசம் இழுத்துப் பிடித்து விட்டு அப்புறம் நடையைத் தொடர்ந்திருக்கலாம். ஆனால் ராத்திரியில் பற்ற வைத்த சுருட்டுக்கள் அணைவதே இல்லை. மொட்டை மாடியில் அமாவாசை இருட்டில் தடதடவென்று ஓடுகிற முனி கூட அணையாத சுருட்டைப் பற்ற வைத்தபடி தான் ஓட்டத்தைத் தொடர்கிறது. மனிதனாக இருந்து ஒரு ராத்திரியில் மரித்த அல்லது கொல்லப்பட்டு தெய்வமாக்கி ஓடவைத்த கிராமத்து அப்பாவி மனிதன் அந்த ஆத்மா. இரவு சொன்ன ரகசியங்களில் இதுவும் ஒன்று.

மார்கழிக் காலையில் திருவெம்பாவை இசைத் தட்டு பின்னணியில் ஒலிக்க சுருட்டுக்காரன் என் தூக்கத்துக்குள் புகுந்து விடிகாலை எழுந்தபோது வெளியேறி இருந்தான். அப்படித்தான் நினைத்தேன். ஆனால் அதற்கு அப்புறம் பத்து வருடம் கழித்து மும்பையில் ஒரு கோடைக் காலப் பகலில் அவனைச் சந்திக்க வேண்டி வந்தது. மெரின் லைன்ஸ் பகுதியில் சந்தடி மிகுந்த அலுவலகங்களின் சந்தையொன்றில் பலமாடிக் கட்டிட லிப்டில் என்னோடு அவனும் நுழைந்தான்.

ராத்திரி வந்து கவிந்தது போன்ற நினைப்பு. இடமும், காலமும் குழம்பிய இதமான நினைப்பு. பதினொண்ணாம் மாடியில் லிப்ட் நின்றபோது மனசே இல்லாமல் டையை சரி செய்தபடி வெளியே வந்தேன். உள்ளே அவனைக் காணோம். அன்று ராத்திரி எழுதிய ‘தேர்’ சிறுகதையில் அவன் நீள நடந்து போக சுருட்டு இன்னும் அணையவே இல்லை. ராத்திரிகள் முனிகளை ஓடச் செய்து மனிதர்களை நடக்க வைக்கின்றன. இந்த இயக்கம் தொடர்வது நியதி என்று செய்தி தந்தது இரவுதான்.

முதல் கதை பத்திரிகையில் வெளியானதையும் இரவு தான் எனக்குச் சொன்னது. இரவு நம்பிக்கை தரும். இனம் புரியாத சந்தோஷத்தை ஒலி, இருட்டு, வாடை, உடல் நெருக்கம் மூலமாக, அவை தரும் போதை படர்ந்த கற்பனை மூலமாக மனதில் மெய்ப்படுத்தும்.

ஸ்டாண்ட் போட்ட வண்டியில் சிகரெட் பிடித்தபடி உட்கார்ந்து தில்லி கரோல்பாகில் கதை வந்த பத்திரிகையை தெரு விளக்கு வெளிச்சத்தில் படித்தபோது என்னை உரசிக் கொண்டு, திண்ணென்ற மார்போடு கடந்து போன பஞ்சாபிப் பெண்ணின் சிவப்புச் சாயம் பூசிய உதடுகளை இன்னும் மானசீகமாக முத்தமிட்டுக் கொண்டிருக்கிறேன். இரவு அவளை இத்தனை வருடம் கழித்தும் ரதியாகவே வைத்திருக்கிறது. அந்த உதட்டுச் சாயம் உலரவே இல்லை.

ராத்திரிகளில் நான் எப்போதும் பிறந்த மண்ணிலேயே இருக்கிறேன். எந்த இடத்தோடும் ஒட்ட முடியாமல் சுற்றிச் சுற்றி வருகிறவனை மானசீகமாகக் கட்டிப் போடும் வித்தை தெரிந்தது இருளும் ஒளியும் நிழலாட்டம் காட்டும் ராக்காலம்.

ராத்திரி தான் ரகு செத்துப் போனது. கோணல் கழுத்தம்மாவும், விமலியும் கதறி அழுத சத்தம் இரண்டு தெருமுனை தாண்டிக் கேட்டிருக்கும். வழக்கம்போல் பாங்க் சுந்தரராமன் தான் பிணம் தூக்க வந்தது. ஏதோ பாங்கில் வேலை பார்த்து, மோசடி கேசில் ஜெயிலுக்குப் போய்த் திரும்பி, பிழைப்புக்காகப் பிணம் தூக்குவது என்றாகிப்போனது சுந்தரராமனுக்கு. “சந்தானம் தாயாரை எரிச்சுட்டு வந்தா, நடுராத்திரியிலே வெட்டியான் வந்து வீட்டுக் கதவைத் தட்டற சத்தம். பாதியிலே அணைஞ்சு போச்சு. இன்னும் கொஞ்சம் விறகு வேணுமாம். ராத்திரியிலே விறகுக்கடை நாயக்கரை எழுப்பி…..” சுந்தரராமன் எங்கள் வீட்டுத் திண்ணைப் பக்கம் புகையிலை போட்டபடி சக பிணம் தூக்கிகளிடம் சொல்லி உரக்கச் சிரித்தது அந்த ராத்திரியில் கலவரமாக மனதில் பதிந்து விட்டது.

இது நடந்து நாற்பது வருடத்துக்குப் பிறகு கட்டுரையாகி ‘நெம்பர் 40, ரெட்டைத் தெரு’ அ-புதினத்தில் இடம் பெற்றது. புத்தகத்தில் சில அத்தியாயங்களைக் குறும் படமாக்கலாம் என்று பேச ஆரம்பித்தபோது இரவு அச்சம் சொல்லும் இந்தப் பகுதி தான் உடனடியாக எனக்கு நினைவு வந்தது. இயக்குனர் மங்கலகரமாகப் பொங்கலைத் திரையேற்றுவோம் என்று சொல்ல, கையில் கரும்போடு நானும் திரைப் பிரவேசம் செய்தேன். வசனங்களை நடு ராத்திரிக்கு ஒலிப்பதிவு செய்தபோது பிணந்தூக்கி சுந்தரராமனை பக்கத்தில் உட்கார வைத்தது அந்த இரவு தான் என்று அடித்துச் சொல்லுவேன். ரிக்கார்டிங் தியேட்டரின் ஏ.சி.குளிரையும் மீறி அவர் கம்புக் கூட்டில் இருந்து அடித்த வியர்வை வாடை கூட சாவு வாடையின் இன்னொரு ஆவர்த்தனம் தான். ராத்திரிக்கும் அது அடுத்த ஒரு வியாக்கியானம். ராத்திரிகள் பிணம் எரிக்க வேண்டி உருவாக்கப் பட்டவை.

நினைவைப் பகல் ஆக்கிரமித்துக் கொள்வது சுபாவம். ஆனால் ராத்திரியோடு ஒரு கள்ளக் காதல். மனம் திரும்பத் திரும்ப அங்கே தான் விழுகிறது. காமத்தின் எல்லாத் தளங்களிலும் இரவு ஆட்சி செய்வது நாவலிலும் என்னை மீறிய வேகத்தோடு வெக்கையைத் தணிக்கும் ராக்காலக் காற்றாக வீசிப் போகிறது.

நடுராத்திரிக்கு ஒரு காற்று புறப்பட்டது. ஆழப் பாய்ச்சி இருந்த கப்பலின் நங்கூரத்தைக் கெல்லி அது சளைக்காமல் அலைக்கழித்துப் பார்த்தது. நீலக் கருப்பில் கடல் அலைகள் வேறு உக்கிரமான காற்றுக்கு ஒத்தாசை செய்தபடி இருந்தன. எனக்கென்ன போச்சு என்று பவுர்ணமிக்குப் பக்கத்து மூளி நிலா சிரித்தபோது கப்பலின் மேல்தட்டில் நக்னமாக நடந்துகொண்டிருந்த சங்கரன் எனக்கும் தான் என்ன போச்சு என்றான்.

அவனுக்கு நேரம் மட்டுப்படவில்லை. பட்டு என்ன ஆகப் போகிறது? சமுத்திரம் போடும் இரைச்சலுக்கு மேலே தலைக்குள்ளே தேவதை, பிசாசு, பூதம், யட்சி, பசுமாடு, நாகநாதப் புள் என்று எல்லாம் கலந்து ஏதோ சத்தம். போதாக் குறைக்கு பிச்சை ராவுத்தன், சுந்தர கனபாடிகள், பகவதிக்குட்டியின் தமையன் கிட்டாவய்யன், காரியஸ்தன் தாணுப்பிள்ளை, தெலுங்கு பிராமணன் என்று புருஷர்கள் வேறே அவன் இடுப்புக்குக் கீழே கையைக் காட்டிக் காட்டி ஆவேசமாகக் கத்துகிறார்கள்.

உடுப்பை விழுத்துப் போட்டுட்டு அலையாதேடா அரசூர்ச் சங்கரா.

சங்கரனுக்கு உடுத்துக் கொள்ள ஆசைதான். இன்னொரு தடவை படுத்துக் கொள்ளவும் கூடத்தான். சீமைச் சாராயத்தை எவளோ தன் வாயில் அதக்கிக் கொப்பளித்து அவன் வாயைத் திறந்து தாம்பூல எச்சலாகத் துப்பி லகரி ஏற்றுவாள். போதும்டீ விடு என்று அவன் மன்றாடுவான். சாமிநாதன் போதாதுடா கபோதி, ஊஞ்சல் இருக்கான்னு பாரு. அதுலே கிடந்தாலும் கிடத்தினாலும் அம்சமாத்தான் இருக்கும் என்று அத்தியாயனம் பண்ணுகிறதுபோல் கணீரென்று சொல்வான். கப்பலுக்குக் கீழே சமுத்திர உப்புத் தண்ணீரில் குளித்தபடி மார்க்குவட்டில் தேமலோடு அந்த ராணிப் பெண்பிள்ளை அசூசையோடு பார்ப்பாள். அண்ணாசாமி ஐயங்காரின் யந்திரம் பழுக்காத்தட்டு போல் சுழன்று வைத்தி சார் குரலில் போகம் போகம் என்று உருவேற்றும். அதைக் காதில் வாங்கிக் கொண்டு கிடக்க வேணும் இன்னும் கொஞ்ச நேரம்.

எங்கே அப்படிக் கிடந்தது? கொஞ்ச தூரம் நடந்து இடது பக்கமோ வலது பக்கமோ இறங்கி அப்புறம் நீண்ட ஒழுங்கையில் ஈரவாடையை முகர்ந்தபடி கடந்தது எப்போது? மெழுகுதிரிகள் எரிகிற, அணைந்து புகைகிற வாடையும், சாராய வாடையும், மாமிச வாடையும் வெள்ளைத் தோல் வாடையுமாக அந்தக் குட்டிகளோடு சல்லாபித்தபடி கிடந்ததெல்லாம் சொப்பனமா என்ன?

கனவு என்றால் இடுப்பு வேட்டி எங்கே போனது? சுவாசத்தில் ஏறி அடித்துக் குடலைப் பிரட்டிக் கொண்டு மேலெழும்பி வருகிற நெடியெல்லாம் அவன் வயிற்றில் ஒரு சேரக் கனம் கொண்டு இறங்கினது எப்போது? தேகம் ஒரு நிமிடம் சோர்ந்தும் அடுத்த நிமிடம் பௌருஷத்தோடு விதிர்த்தும் மனதை, புத்தியைச் செலுத்திப் போவது எப்போதிலிருந்து?

அரசூர் வம்சம் நாவல் முழுக்கவே ராத்திரியில் இயங்கி இருக்கலாம் என்று இரவு என் காதோடு சொல்கிறது. காமம் மிக்கூற அதற்கு ஒரு முத்தம் தருகிறேன்.

இது இரவு இல்லைதான். மழை மேகம் கவிந்து வந்து பொழியக் காத்திருக்கும் முற்பகல். மழையோடு இரவும் ஊர்ந்து வரும்.

மழை ராத்திரிகளின் நிறம் நீலம். அப்புறம் நீலம். அதற்கப்புறம் நீலம். கனவுக்கும் நினைவுக்கும் நடு மத்தியில் கிடந்தபடி, காதில் மழைச் சத்தம் அடர்ந்து ஒலிக்க, அந்த நீலத்தில் நான் கரைந்து போய்க் கொண்டே இருக்கிறேன்.

நிசப்தம் நீலமாக;
அப்புறம்
ஒழுங்கு சிதைந்த சச்சதுரமாக.
மேலே அழுத்தும் ரப்பர்ப் பொதியாக.
நிறம் அதுவேயாக.

மசங்கலாகப் பழுப்புப் படகொன்று.
நிறம் மரித்த வௌிநோக்கிச்
செலுத்தப் பட்டேன்.

நீரின் துளியொன்று உதிர,
நீலம் இழைதொய்ந்து குழிய,
மேலும் துளிகள்; நின்று போனது.

புரண்டு படுத்த புலனும் மெல்லத்
துளிகள் விழுவதைப் புனைய முயல,
வேகங் கொண்ட படகின் உள்ளே
கருவாகக் கால்மடித்து, தலைகவிழ்த்து.

நிறங்கள் பற்றிக் கவலையில்லை –
இபோதைக்கு.

எதைப் பற்றியும் கவலை இல்லை என்ற பாதுகாப்பை ராத்திரி தருகிறது. நான் இருக்கும் வரை அது இருக்கும். நான் போனாலும் என் இரவுகள் இங்கே தொடர்ந்து கொண்டிருக்கட்டும்.

இரா.முருகன் –
(from the anthology ‘Iravu’ – thokuppaasiriyar Kavidhayini Madhumitha)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன