முதல் நாள் காலேஜுக்கு சைக்கிள் பின் சீட்டில் அப்பளக் கட்டு அடுக்கிய பலகைப் பெட்டியோடு போய் இறங்கிய ஒரே ஆத்மா நானாகத்தான் இருக்கும். ரெட்டைத் தெருவைத் தொட்டுக்கொண்டு கிழக்கில் விரியும் சிவன்கோவில் தெருவில் அழ.அழ.ராம.அழ.வள்ளியப்பச் செட்டியார் வகை கைங்கர்யம் தான் அது.
அழகாபுரி அழகப்பச் செட்டியார் மகன் ராமநாதன் செட்டியார் திருமகன் அழகப்பச் செட்டியார் புதல்வர் வள்ளியப்பச் செட்டியார் என்ற மேற்படி அழ.அழ.அழ அப்பச்சி, பெயர் தோஷமோ என்னமோ, தொட்டாலே அழுது விடுகிற பதத்தில் தான் சதா இருப்பார். ரெட்டைத் தெருவில் எல்லா வீடுமே விற்கிற தோதில் இருந்தால் சப்ஜாடாக வாங்கிப் போடக் கூடிய பரம்பரைப் பணக்காரர் அவர் என்று தெரியும். எனக்கு வெகு அன்னியமான சமாசாரமான கருவாட்டுக்கடையை நாலு தலைமுறையாக வெற்றிகரமாக சந்தைப் பேட்டையில் நடத்துகிறவர் அவர். மீன் விற்ற காசு நாறுமா என்று கேட்டால் ஒரு பாட்டம் அழுதுவிட்டு ‘அது லட்சுமி தேவி வாசனை ஆச்சே’ என்பார் அழ.அழ. மேலும் அழ.
லட்சுமிதேவி கருவாடாகக் காசு அருளியது போதாதென்று அவருக்கு உபதொழிலாக மந்தித் தோப்பு மணிகட்டி சுவாமிகள் தைலம், ஒரிஜினல் ஆனையடி அப்பளம், சீவிலிப்புத்தூர் ஆண்டாள் ஸ்நான வாசனைப்பொடி இப்படியான அபூர்வ வஸ்துக்களில் விற்பனை ஏஜன்சியாகவும் கடாட்சம் பொழிந்திருந்தாள். மணிகட்டி சுவாமிகள் ஈசுவர சிந்தையில் மூழ்கிய நேரம் போக மிச்சப் பொழுதில் கடலெண்ணெயில் பூடகமான சேர்மானங்கள் சேர்த்துக் காய்ச்சி ‘வாரம் ஒரு முறை உடம்பு முழுக்க நீவிவிட்டுத் தேய்த்து ரெண்டு மணி நேரம் ஊறிய பின் மிதமான சூட்டில் பித்தளைப் பாத்திரத்தில் ஊற்றி வைத்த வென்னீரில் நீராட, உடம்பு உஷ்ணத்தை மட்டுப்படுத்தி குளிர்ச்சியை தேகம் முழுவதும் வியாபிக்கச் செய்யும்’ தைலம் தயாரிப்பதில் ஈடுபட்டதோடு அவற்றின் தென் மாவட்ட சில்லறை வினியோக உரிமையை ஏனோ கருவாட்டுக்கடை அழ.அழவுக்கு வழங்கி இருந்தார். வாசனைப்பொடி, அப்பளக்காரர்களும் அதேபடி. இதிலே அப்பளத்தை மட்டும் உள்ளூர் காலேஜ் ஹாஸ்டலுக்குக் குறைந்த விலையில் சப்ளை செய்ய அழ.அழ மொத்தக் குத்தகை எடுத்திருந்தார்.
பாழாய்ப் போகிற வேற்றூர்க்காரன் குண்டு ராஜு மேற்படி தகவலை நான் காலேஜ் போகிற அன்றைக்குக் காலையில் சொல்லி விட்டு காரைக்குடி பஸ்ஸில் ஏறிப் போயிருந்தான். அதுக்கு முந்திய நாள் நான் சிவன் கோவில் தெருவில் அப்பாவின் சைக்கிளை வைத்துக் கொண்டு அடுத்த நாள் காலேஜுக்கு ஏறிப் போக வெள்ளோட்டம் விடாமல் இருந்திருந்தால் நான் அப்பளத்தோடு காலேஜ் போக வேண்டி வந்திருக்காது. என்ன, தொப்பையைத் தடவிக் கொண்டு தோளில் குடையை மாட்டிக் கொண்டு கிழக்கு – வடகிழக்காக காந்திவீதியை நோக்கி ஊர்ந்து கொண்டிருந்த அழ.அழ மேல், ப்ரேக் பிடிக்காமல் வண்டியை இடித்து விட்டேன். மேற்படி விபத்தில் யாருக்கும் எந்த சேதமும் இல்லை, என்னைத் தவிர.
குலமுறை கிளர்த்திய பின் நான் காலேஜில் சேர இருக்கும் சந்தோஷச் செய்தியையும் பின் இணைப்பாகச் சொல்ல தோளில் மாட்டிய குடையோடு ஒரு பாட்டம் அழுது மகிழ்ந்த அழ.அழ ஒரு கோரிக்கையையும் கூடவே வைத்தார்.
‘தம்பி, காலையிலே காலேசு போக முந்தி நம்மூட்டுக்கு வாங்க. வெள்ளைப் பணியாரம், இடியாப்பம், சொதி சுடச்சுட ஆச்சியை எடுத்து வைக்கச் சொல்றேன். பசியாறிட்டு அப்படியே ஒரு கட்டு அப்பளப் பூவையும் உங்க வண்டி காரியர்லே வச்சு எடுத்துப் போய் காலேசு ஆசுடல்லே எறக்கிடுங்க. அம்புட்டுத்தேன்’.
குருசாமி டெய்லர் நான் எஸ்.எஸ்.எல்.சி படிக்கும்போது ரிடையராகி எருமை மாடு கட்டி தெருக்கோடியில் பால் கறந்து சப்ளை செய்கிற தொழிலுக்கு மாறி இருந்தபடியால், ரெட்டைத் தெரு ஹக்கீம் டெய்லரிங் ஹவுசில் காலேஜுக்குப் போட்டுப் போக கறுப்பு மட்டும் காக்கி பேண்ட் தைத்து வைத்திருந்தேன். ஹக்கீம் சாகிபு உத்தேசமாக அவர் சைசுக்குத் தைத்து வழங்கிய பேண்ட் இடுப்பைச் சுற்றி முன்னூற்று அறுபது டிகிரி சுலபமாக சுழன்று எந்த நேரமும் புவி ஈர்ப்பு விசையால் கீழ் நோக்கிப் பயணமாகிற அபாயத்தில் இருந்ததால், அவர் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு சங்கு மார்க் லுங்கி மேலே விஸ்தாரமாக அணிந்து போகிற எட்டு இஞ்ச் அகல பச்சை பெல்ட்டை அவரிடமே கடன் வாங்கி பேண்ட்டை யதாஸ்தானத்தில் இருந்தி இருந்தேன். ‘வெள்ளிக்கெளமை கொண்டாந்து கொடுத்துடு தம்பி’ என்று சாகிபு நூறு தடவை சொல்லி விட்டார். சிங்கப்பூர் செண்டும் அல்பாகா தொப்பியுமாக அவர் இந்த வெள்ளி தொழுகைக்குப் போகும்போது ஹாஜியார் பெல்ட் இல்லாமல் அவர் லுங்கியும் தரைக்கு நழுவலாம்.
காலேஜுக்குப் போகிற வழியில் சுப சகுனமாக எனக்கு ஒரு வருடம், ரெண்டு வருடம் சீனியர்களும் உள்ளூர் அழகிகள் பட்டியலில் இடம் பிடித்தவர்களுமான நடைப் பேரொளி, குட்டிச் சாத்தி, சூப்பம்மா போன்றோர் நாலு புத்தகமும் மறுகையில் குடையுமாக சினிமாவில் கல்லூரி போகிற தேவிகா போல் கடந்து போனார்கள். நடைப் பேரொளி, பெருமாள்கோவில் தெரு வால்மீகி வக்கீலின் செக்கச் செவேல் தகதகப்பு பெண். அக்கா ஸ்தானம் என்பதால் அவளுடைய ஒயிலான நடையை ஒரு ஆராதகனின் மனநிலையில் பாராட்ட மட்டும் செய்வது எங்கள் கோஷ்டி வழக்கம். குட்டிச் சாத்தி, தாலுக்கா ஆபீஸ் க்ளாஸ் ஒன் உத்தியோகஸ்தர் கேசவப் பணிக்கரின் ரெண்டாமத்து மோள். பணிக்கர் உபதொழிலாக கொல்லங்கோடு பகவதி தாயத்து, கள்ளியங்காட்டு யட்சி ரட்சைக் கயறு போன்ற அமானுஷ்ய சாதனங்களை விற்பனை செய்து வந்ததால், கொஞ்சம் உப்பிய கேரள உதடுகளோடு கூடிய அவருடைய மகள் பார்க்கவிக் குட்டி, மாந்த்ரீக குட்டிச் சாத்தானின் பெண்பால் சாத்தி ஆனாள். வேலாயுத சாமி கோவில் தெருவில் மண்பானை சமையல் மெஸ் நடத்தும் குடும்பத்தின் ஏக மகளான சுப்புலட்சுமி, மெஸ்ஸில் ரெகுலராக தக்காளி சூப் வைத்து வாழைச் சருகு தொன்னையில் பரிமாறுவதால் சூப்பம்மா எனச் சிறப்புப் பெயர் பெற்றவள்.
நல்ல சிந்தனைகளோடு, ஹாஜியார் பெல்டை மீறி பேண்ட் நழுவாத படியும், ப்ரேக் சொன்னபடிக்கு இல்லாவிட்டாலும் சராசரியாகப் பிடிக்கிற படியும், சைக்கிள் பின்னால் காரியரில் தாம்புக் கயிறு கொண்டு கட்டிய அழ.அழவின் அப்பளப் பெட்டி சரியாத படியும் எதிர்காற்றில் வண்டியை மிதித்து முன்னேறினேன். காலேஜ் போகிற நினைப்பே இல்லை. எங்கள் பிரியமான பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பி வழி மாறிப் போய்க் கொண்டிருப்பதாக அவ்வப்போது ஒரு சோகம் எட்டிப் பார்த்து, முன் பாரா சீனியர் தேவதைகள் தரிசனத்தால் மட்டுப்பட்டது. பி.யூ.சி படிக்க, கனவிலும் வரும் கருங்கல் கட்டிடமான ராஜா ஹைஸ்கூலை மறந்தே ஆகணும்.
மதுரை ரோடு ஜங்க்ஷனைக் கடந்து ஜெயவிலாஸ் பஸ்ஸுக்கு வழிவிட்டு இடது புறம் வண்டியை ஒடிக்க, ராஜா காலேஜ் வாசல். சைக்கிள் பெல் அடிக்காத காரணத்தால், மெல்லிய குரலில் விசில் அடித்துக் கொண்டே போகிற வழக்கம். பின்னாலிருந்து தெரியாவிட்டாலும், முகமறியாத புது தேவதைகள் முன்னால் போன படியால் சீட்டியை விடுத்து மௌனமாக சைக்கிளை நகர்த்தியபடி நடந்தேன்.
‘கருவாடு சப்ளையா? மெஸ் அந்தப் பக்கம் இருக்கு’. கல்லூரி அட்டெண்டர் கைகாட்டினார். பள்ளிக்கூடத்தில் அழகுக் கோனார், ராஜு போல் தார் பாய்ச்சிக் கட்டிய வேட்டி, காக்கி நிஜார் கோலத்தில் இல்லாமல் காலேஜ் அட்டெண்டரும் பேண்ட் போட்டுக் கொண்டிருந்தார். மேலே ஓவர்கோட் எதுக்குன்னு தெரியலை.
‘சப்ளையர் இல்லேப்பா, நான் படிக்க வந்திருக்கேன்’ என்றேன் கித்தாய்ப்பாக.
‘தென் யூ ஷுட் நாட் கம் இன் அ பிஷ் கார்ட்’.
என்ன எழவுடா இது, அட்டெண்டர் கூட இங்கிலீஷில் பேசறான் என்று ஒரு வினாடி திகைப்பு. அந்த மனுஷர் கடந்து முன்னால் போன பிறகுதான் மூளை தகவல் சொன்னது – முட்டாளே, அவர் ப்ரொபசரோ, லெக்சரரோ பிரின்சிபாலோ.
நான் அவசரமாக வண்டியை நகர்த்திக் கொண்டு ‘சாரி சார்’ சொல்ல பின்னால் ஓட அவர் கூட்டத்தில் கலந்து மறைந்தே விட்டிருந்தார். சைக்கிளை ஒரு பார்வை பார்த்தேன். பிஷ் கார்ட். என்றால் மீன் வண்டி. அழ அழ இப்படி அழ வைப்பார் என்று தெரிந்திருந்தால் சிவன்கோவில் தெருவுக்குப் போயே இருக்க மாட்டேன்.
‘என்னடா, முதல் நாள் காலேஜ் வர்ற லட்சணமா இது?’. கிரிதான். சீனியர், மற்றும் ரெட்டைத் தெருவில் மூத்த சிநேகிதன் என்ற உரிமையில் கோபித்துக் கொண்டபடி அவனுடைய சைக்கிளையும் நிறுத்தித் தள்ளிக்கொண்டு வந்தான்.
அவன் சொன்னபடி, ஹாஸ்டல் பக்கம் போய் அப்பளக் கட்டை இறக்கினேன். ‘பொரிச்சா செவந்து வளியுது தம்பி. நமக்கே வாயிலே வைக்க வழங்கலே. போதாக் குறைக்கு பாத்திரத்துலே வச்ச்சா அரைமணி நேரத்துலே துணி மாதிரி தொஞ்சு போகுது எளவு. காலையிலே கக்கூசுக்குப் போறபோது பின்னாலே தொடச்சுக்க இந்த அப்பளத்தை வச்சுடுங்கப்பூன்னு பசங்க நக்கல் பண்றாங்க. அப்பச்சி கிட்டே சொல்லுங்க மறந்துடாமே. நாளைக்கு நீங்க தலையெடுத்தாலும் சப்ளை தொடர வேணாமா?’ ஹாஸ்டல் சமையல்காரர் என்னை அழ.அழவின் அடுத்த தலைமுறை ஜூனியர் அழுவாச்சியாக்கியதைப் பொருட்படுத்தாமல் திரும்பினேன்.
‘ஏண்டா, முதல் நாள் காலேஜ் வர்றபோது ஒரு நோட்புக்காவது கொண்டு வரணும்னு சொன்னேனே. அப்புறம் மத்தியானம் சாப்பிட வீட்டுக்குப் போகப் போறியா என்ன? நேரம் பிடிக்கும் அதுக்கு. சாப்பாட்டுப் பாத்திரம் எங்கேடா?’
கிரி திரும்ப கோபித்துக் கொண்டான். அதுக்கு நியாயம் உண்டு. பள்ளிக்கூடத்தில் பாதி உபயோகப்படுத்தி, மிச்சப் பக்கத்தை மட்டும் பத்திரப்படுத்திய ஸ்கூல் காம்போசிஷன் நோட்டையும், மதியச் சாப்பாட்டு கேரியரையும் அப்பளப் பெட்டியில் விட்டுவிட்டு வந்திருந்தேன். திரும்ப ஓடிப் போய் எடுத்து வந்தேன்.
காலேஜ் விளையாட்டு மைதானத்தை நோட்டம் விட்டேன். பள்ளிக்கூட மைதானத்தை விட ஆகச் சிறியது. ஆனால் இங்கே கிரிக்கெட் பிட்ச் உண்டு. ரெட்டைத்தெரு பட்டாளத்தை அனுமதித்தால் ஆனந்தமாக விளையாடலாம். நானும் கிரியும் இங்கே மாணவர்கள் ஆச்சே. ஆனால் பஸ் டிரைவர் டிரெயினிங் எடுக்கும் குண்டுராஜு, கெஸ்ட் ப்ளேயர் மளிகைக் கடை ஜகாங்கீர், பண்ட் ஆபீஸ் சுவர் கரிக்கோடு பவுண்டரி மேட்ச் ரெப்ரி வக்கீல் குமாஸ்தா கோவிந்து போன்ற பிரகிருதிகள் உள்ளே நுழைய முடியுமோ என்னமோ தெரியவில்லை.
‘இதென்னடா, காலேஜுக்குள்ளேயே தொழிற்சாலை ஏதாவது வச்சிருக்கா?’
வலது புறம் கோடியில் புகைப் போக்கியும் மேலே பிரம்மாண்டமான சிலிண்டருமாக இருந்த கட்டிடத்தைக் காட்டிக் கேட்டேன்.
‘காஸ் ப்ளாண்டுடா அது. கெமிஸ்ட்ரி லேபுக்கு, கேண்டீனுக்கு அங்கே இருந்துதான் சப்ளை போகுது’.
அவன் ஏதோ புரியாத பாஷையில் பேசினான். காலேஜ் கெமிஸ்ட்ரி லாபில் பியூசி வகுப்புக்கும் வேலை இருக்கும். கரண்டியைக் கையில் கொடுத்து சமைக்க வைத்து காண்டீனில் வைக்கச் சொல்வார்களோ என்னமோ. அல்லது அழ.அழ கொடுத்தனுப்பிய அப்பளத்தை சிவக்காமல் பொரித்து அடுக்குகிற வேலை.
மணி அடிக்கிற சத்தம்.
‘ப்ரேயர் எங்கேடா?’
கேட்ட என்னை அற்பமாகப் பார்த்தபடி கிரி சொன்னது – ‘இது எல்லாம் பெரியவங்க புழங்கற இடம். குழந்தைப் பிள்ளையா டிரவுசர் போட்டுட்டுத் திரியற பேச்சை விடு. நோ ப்ரேயர். நேரே கிளாஸ்லே போய் உட்கார்ந்துக்கோ.’
சொல்லி விட்டு அவன் முதல் மாடிக்குக் கை காட்டி விட்டு கீழ்த் தளத்தில் பிரம்மாண்டமான அறை ஒன்றில் நுழைந்தான்.
நான் மாடி ஏறி இன்னொரு பிரம்மாண்டமான அறையில் ஆணும் பெண்ணுமாக மிரள மிரள விழித்துக் கொண்டிருந்த திருக்கூட்டத்தில் கலந்தேன்.
பிசிக்ஸா, இங்கிலீஷா, கெமிஸ்ட்ரியா தெரியவில்லை. டையும் கோட்டுமாக, ஒரு சீலிங் பேன் கூட இல்லாத அந்தக் கூட்டமான அரங்கத்தில் வியர்த்து விறுவிறுத்து நின்றபடி குரலை உயர்த்தி பேராசிரியர் பேச ஆரம்பித்தார். நான் முதல் வரிசைப் பெண்களின் தலையில் சூட்டிய மல்லிகைப் பூச்சரங்களை வரிசையாகப் பார்வையிட்டேன்.
‘எந்தப் பொண்ணையும் கண்ணெடுத்துப் பார்க்காதே. என்ன, நான் இருக்கேன் உனக்கு’.
மனதுக்குள் மேகலா தலையைச் சாய்த்துச் சிரித்தபடி சொன்னாள்.
அவள் உதட்டில் அழுந்த ஒரு முத்தம் கொடுத்தேன்.
yugamayini – Jan 2011